Tuesday, March 25, 2014

நீத்தல் விண்ணப்பம் - மலை போன்ற வல் வினைகள்

நீத்தல் விண்ணப்பம் - மலை போன்ற வல் வினைகள்  


நீங்கள் ஒரு பெரிய சம வெளியில் நிற்கிறீர்கள். உங்களைச் சுற்றி தூரத்தில் பெரிய மலைகள் இருக்கின்றன. திடீரென்று அந்த மலைகள் எல்லாம் ஒன்று சேர்த்து உங்கள் மேல் சண்டைக்கு வருகின்றன.

ஒரு மலையோடு சண்டை போட்டு வெல்வதே முடியாத காரியம். பல மலைகள் ஒன்று சேர்ந்து வந்தால் என்ன செய்வீர்கள் ?

ஓடவும் முடியாது. ஓரிடத்தில் நிற்கவும் முடியாது....

அது போல ....நீங்கள் இது வரை சேர்த்து வைத்த வினைப் பயன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வருகின்றன....மலை போல ....

கொஞ்சமாகவா செய்திருக்கிறோம்...

அப்படி மலைகள் ஒன்று சேர்ந்து வந்தால் எனக்கு பயமாக இருக்கிறது. என்னை "பயப்படாதே" என்று சொல்லி என்னை காப்பாற்று.

அந்த சமயத்தில் என்னை கை விட்டு விடாதே...என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று இறைவனை வேண்டுகிறார் மணிவாசகர்.

பாடல்

அரைசே, அறியாச் சிறியேன் பிழைக்கு `அஞ்சல்' என்னின் அல்லால்,
விரை சேர் முடியாய், விடுதி கண்டாய்? வெள் நகை, கரும் கண்,
திரை சேர் மடந்தை மணந்த திருப் பொன் பதப் புயங்கா,
வரை சேர்ந்து அடர்ந்து என்ன, வல் வினை தான் வந்து அடர்வனவே.





பொருள் 

அரைசே = அரசே

அறியாச் சிறியேன் = அறியாத சிறியவன்

பிழைக்கு = செய்த, செய்கின்ற பிழைகளுக்கு

`அஞ்சல்'  = அஞ்சாதே

என்னின் = என்று

அல்லால் = சொல்வதை அல்லால்
,
விரை சேர் = நறுமணம் மிக்க

 முடியாய் = முடியை உடையவனே

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

வெள் நகை = வெண்மையான புன்னகை

கரும் கண் = கருமையான கண்

திரை சேர் மடந்தை = பாற்கடலில் உள்ள பெண் (திருமகள்)

மணந்த = திருமாலை மணந்த, மணக்க உதவி செய்த. ஒரு முறை திருமகள் திருமாலை பிரிந்து இருந்த போது , சிவனை நோக்கித் தவம் இருந்து பின் திருமாலை மணந்ததாக ஒரு வரலாறு உண்டு

திருப் பொன் பதப் புயங்கா = சிறந்து பொன் போன்ற பாதங்களை உடையவனே

வரை = மலை

சேர்ந்து = ஒன்றாக சேர்ந்து

அடர்ந்து = சண்டைக்கு வந்தால்

என்ன = என்ன செய்வேன்

வல் வினை தான் = நான் செய்த வல் வினைகள்தான்

வந்து அடர்வனவே = வந்த சேர்ந்தனவே

பாவம் செய்யும் போது கொஞ்சம் கொஞ்சமாக செய்கிறோம். அவை வரும் போது  மொத்தமாக வரும்.

1 comment:

  1. "பாவம் செய்யும் போது கொஞ்சம் கொஞ்சமாக செய்கிறோம். அவை வரும் போது மொத்தமாக வரும்." - நல்ல வரி.

    ReplyDelete