Tuesday, March 11, 2014

நீத்தல் விண்ணப்பம் - களையாய் களை ஆய குதுகுதுப்பே

நீத்தல் விண்ணப்பம் - களையாய் களை ஆய குதுகுதுப்பே


நமக்கு ஏதாவது மிக மிக மகிழ்ச்சியான ஒன்று நிகழ்ந்து விட்டால் நமக்கு தலை கால் புரியாது அல்லவா ? லாட்டரியில் ஒரு கோடி விழுந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்...எப்படி இருக்கும் நம் நிலை.

இறைவன் திருவருள் கிடைத்து விட்டாலோ ?

உன் கருணை என்ற தேனைப் பருகி தலை கால் தெரியாமல் களிப்பு கொண்டு கண்டதையும் செய்து  அலைகிறேன்.  நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் பித்து பிடித்து அலைகிறேன். அதுக்காக என்னை கை விட்டு விடாதே. முன்பு எனக்கு உன் திருவடிகளை தந்து அருள் செய்தது போல மீண்டும் உனக்கு பணி செய்ய என்னை கூவி அழைத்துக் கொள். சும்மா கூப்பிட்டால் எனக்கு காது கேக்காது. கூவி, சத்தம் போட்டு கூப்பிடு. அது மட்டும் அல்ல, அருள் பயிருக்கு நடுவே வளர்ந்துள்ள உலக இன்பம் என்ற களையை நீக்கி விடு என்று வேண்டுகிறார் மணிவாசகர்.

பாடல்

கண்டது செய்து, கருணை மட்டுப் பருகிக் களித்து,
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்? நின் விரை மலர்த் தாள்
பண்டு தந்தால் போல் பணித்து, பணிசெயக் கூவித்து, என்னைக்
கொண்டு, என் எந்தாய், களையாய் களை ஆய குதுகுதுப்பே.


பொருள் 

கண்டது செய்து = கண்டதையும் செய்து.

கருணை மட்டுப் பருகிக் = மட்டு என்றால் தேன். கருணை என்ற தேனைப் பருகி

களித்து = இன்புற்று

மிண்டுகின்றேனை  = இன்பத்தில் தத்தளிக்கும் என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடாதே

 நின் = உன்

விரை  = மணம் பொருந்திய

மலர்த் தாள் = மலராகிய திருவடி

பண்டு தந்தால் போல் = முன்பு தந்தது போல

பணித்து = என்னை பணி கொள்ளுமாறு செய்தது போல

பணிசெயக் கூவித்து = மீண்டும் என்னை பணி செய்யுமாறு கூவி அழைத்து

என்னைக் கொண்டு = என்னை கொண்டு (பணி செய்வித்து )

என் எந்தாய் = என் தந்தையே

களையாய் = களைந்து விடு

களை ஆய = களை ஆன

குதுகுதுப்பே = சிற்றின்பங்களையே



No comments:

Post a Comment