Sunday, March 23, 2014

சுந்தர காண்டம் - இதுவா தேடியது ?

சுந்தர காண்டம் - இதுவா தேடியது ?


 நாம் எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் ?

பணம், புகழ், அதிகாரம், ஆரோக்கியம், அன்பு, புலன் இன்பங்கள்,  மோட்சம்...இதில் எது வேண்டும் நமக்கு ? எல்லாம் வேண்டுமா ?

இந்த நிமிடத்தில், இன்று, இந்த வாரம் எதைத் தேடி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று நமக்குத் தெரியுமா ?

நாம் விரும்புவது ஒன்று, வேலை செய்வது மற்றொன்றுக்காக .

உடல் ஆரோக்கியம் பெற வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று நினைக்கிறோம்...ஆனால் உணவு விடுதிக்கு சென்று வேண்டாததை எல்லாம் உண்கிறோம்.

இது என்ன மதியீனம்.

அனுமன், சீதையைத் தேடி இலங்கை நோக்கிப் புறப்பட்டான்.

போகிற வழியில் வானவர் நாட்டை ( துறக்க நாடு) கண்டான்.  பொன்னும், பொருளும் நிறைந்த இடம், அழகான இளம் பெண்கள், இனிய இசை, கற்பக மரம் நிறைந்த சோலைகள்.

நாமாக இருந்தால், கொஞ்சம் தங்கி , அந்த ஊரையெல்லாம் சுற்றி பார்த்து விட்டு, நிதானமாக போய் இருப்போம்.

அனுமன்  அறிவாளி.

இது அல்ல நம் நோக்கம் என்று உடனே அறிந்து கொண்டு அங்கிருந்து விலகுகிறான்.


பாடல்

ஆண்தகை, ஆண்டு, அவ் வானோர் துறக்க நாடு அருகில் கண்டான்;
'ஈண்டு, இதுதான்கொல் வேலை இலங்கை?' என்று ஐயம் எய்தா,
வேண்டு அரு விண்ணாடு என்ணும் மெய்ம்மை கண்டு, உள்ளம் மீட்டான்;

'காண் தகு கொள்கை உம்பர் இல்' என, கருத்துள் கொண்டான்.

பொருள்

ஆண்தகை = ஆண்மையில் சிறந்த அனுமன்
ஆண்டு = அங்கு

அவ் வானோர்  = அந்த வானவர்கள் (தேவர்கள்)

துறக்க நாடு = விண்ணோர் உலகம் (சொர்க்கம்)

அருகில் கண்டான் = பக்கத்தில் பார்த்தான்

'ஈண்டு, = இங்கு

இதுதான்கொல் = இதுதான்

வேலை = கடல் சூழ்ந்த

இலங்கை? = இலங்கை

என்று ஐயம் எய்தா = என்று ஐயம் கொண்டான்

வேண்டு = எல்லோரும் விரும்பும்

அரு விண்ணாடு = அருமையான சுவர்க்கம்

என்ணும் மெய்ம்மை கண்டு = என்ற உண்மையை கண்டு கொண்டு

உள்ளம் மீட்டான் = அதன் பின் சென்ற தன் உள்ளத்தை மீட்டுக் கொண்டான்


'காண் தகு கொள்கை உம்பர் இல்' என = காண வேண்டிய கொள்கை, அதாவது சீதை, இந்த இடத்தில் இல்லை

கருத்துள் கொண்டான் = என்று கருத்தில் கொண்டான்.

நாம் ஒரு கொள்கை நோக்கி செல்லும் போது , நடுவில் இந்த மாதிரி சபலங்கள் , குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். அவற்றில் மயங்கி நாம் நின்று விடக் கூடாது. நாம் எங்கு செல்ல வேண்டுமோ அதில் குறியாக இருக்க வேண்டும்......

சுந்தர காண்டம் தரும் முதல் பாடம் இது....



No comments:

Post a Comment