Wednesday, April 2, 2014

திருக்குறள் - அறிவும் நட்பும்

திருக்குறள் - அறிவும் நட்பும் 


அறிவு என்ன செய்யும் ?

கணக்குப் போடுமா ? கவிதை எழுதுமா ?  பெரிய பெரிய காரியங்களைச் செய்யுமா ? ஒருவன் அறிவுடையவன் என்றால் அவன் என்னென்ன காரியங்கள் செய்வான் ?

அது தெரிந்தால் நாமும் அதுபோல செய்யலாம் ....

வள்ளுவர் சொல்லுகிறார் - நல்லவர்களை , உயர்ந்தவர்களை ஒன்றி இருக்கும் அறிவு. அப்படி சிறந்தவர்களை நட்பாகக் கொண்ட பின் , அதை விட்டு விலகாமல் இருக்கும்.

பாடல்

உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங் 
கூம்பலு மில்ல தறிவு.

 சீர் பிரித்த பின்

உலகம் தழுவியது ஒட்பம் மலர்தலும் 
கூம்பலும் அல்ல அறிவு 


பொருள்

உலகம் = உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது நிகண்டு. உலகத்தில் உள்ள உயர்ந்தவர்களை, சிறந்தவர்களை, அறிவுள்ளவர்களை

தழுவியது = அவர்களோடு ஒன்றாக இருப்பது

ஒட்பம் = கூரிய அறிவு

மலர்தலும் = அப்படி நட்பு கொண்ட பின்

கூம்பலும் = அந்த  நட்பை விட்டு வில்குதலும்

அல்ல = செய்யாதது

அறிவு = அறிவு

அறிவுள்ளவன் எப்போதும் உயர்ந்தவர்களை சேர்ந்து இருப்பான். அப்படி சேர்ந்த பின் அவர்களை விட்டு விலக மாட்டான்.

நீரில் பூக்கும் தாமரை, அல்லி மலர்கள் ஒரு சமயம் பூக்கும், மறு சமயம் கூம்பும். மீண்டும் மலரும், பின்  வாடும்.

நல்ல நட்பு என்பது எப்போதும் மலர்ந்து இருக்கும்.

நீங்கள் யாரைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்று ஒரு பட்டியல் இடுங்கள்.

அவர்களோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது ?  சில சமயம் நன்றாக இருக்கிறது...மற்ற சமயங்களில் கொஞ்சம் இழு பரியாக இருக்கிறதா ?

அப்படி என்றால் அது அறிவின்பாற்பட்ட செயல் அல்ல.

தேர்ந்தெடுங்கள்....யாரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று.


அது அறிவின் முதற்படி.


2 comments:

  1. அம்மா, அப்பா, அண்ணன் , தம்பி, மனைவி, கணவன், பிள்ளைகள் இவர்கள் யாரையும் நாம் தேர்ந்து எடுப்பது இல்லை. ஆனாலும் இவர்களை சார்ந்துதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டி இருக்கிறது. இதற்க்கு வள்ளுவர் என்ன சொல்கிறார்?

    ReplyDelete
    Replies
    1. கணவன் , மனைவி - இவர்களை நாம் தேர்ந்தெடுக்கலாமே ? மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, தந்தை மகற்கு ஆற்றும் உதவி, ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தாய், ஈன்றாள் பசி கண்டாலும் செய்யத் தகாத வினை என்று பல சொல்லி இருக்கிறார்.

      உயர்ந்தவர்களை சார்ந்து வாழ வேண்டும் என்று சொன்னால், வள்ளுவர் மற்றவர்களைப் பற்றி என்ன சொன்னார் என்ற கேள்வி எனக்குப் புரியவில்லை.

      Delete