வில்லி பாரதம் - ஆண் தோற்கும் இடம்
ஒரு பெண்ணின் அன்பை பெற ஆண், அவளிடம் கெஞ்சி, கொஞ்சித்தான் பெற வேண்டியிருக்கிறது.
மிரட்டி உருட்டி புஜ பல பராகிரமங்களை காட்டி "என்னை லவ் பண்ணலேனா பிச்சிபுடுவேன் பிச்சி "என்று அவளின் காதலை பெற முடியாது.
பெண்ணின் அழகின் முன்னால் ஆண் மண்டியிடுவது அவளின் அழகுக்கு பெருமை, அவனின் ஆண்மைக்கு பெருமை.
வில்லிபுத்ராழ்வார் எழுதிய பாரதத்தில் ஒரு இடம்.
திரௌபதியை நீராட்டி ஆடை அணிகலன்கள் அணிவித்து திருமண மண்டபத்துக்கு அழைத்து வருகிறார்கள்.
அவளின் அழகை பார்த்த ஆண்களின் ஆண்மை (வீரம்) தேய்ந்ததாம்...
கோண்பிறைநுதலாடன்னைக் கோதையர்பலருங்கூடிச்
சேண்புனல்பலகொண்டாட்டிச் செழுந்துகிறொழுதுசேர்த்திப்
பூண்பனவிசையப்பூட்டிப் புகைகமழ்தாமஞ்சூட்டிக்
காண்பவராண்மைதேயக் காமவேள்கலகஞ்செய்தார்.
கொஞ்சம் சீர் பிரிக்கலாம்
கோண் பிறை நுதலாள் தன்னை கோதையர் பலரும் கூடி
சேண் புனல் பல கொண்டு ஆட்டி செழும் துகில் தொழுது சேர்த்தி
பூண் பல இசையப் பூட்டி புகை கமழ் தாமம் சூட்டி
காண்பவர் ஆண்மை தேயக் காமவேள் கலகம் செய்தார்
பொருள்:
கோண் பிறை = வளைந்த பிறை (நிலவை போன்ற)
நுதலாள் தன்னை = நெற்றியையை உடையவளை
கோதையர் = (பணிப்) பெண்கள்
பலரும் கூடி = பலரும் கூடி
சேண் புனல் பல கொண்டு = பல இடங்களில் இருந்து கொண்டு வந்த நீரை கொண்டு
ஆட்டி = நீராட்டி
செழும் துகில் = சிறந்த ஆடைகளை
தொழுது சேர்த்தி = வணங்கி அவளுக்கு அணிவித்து
பூண் பல = அணிகலன்களை
இசையப் பூட்டி = அவள் உடலின் அழகுக்கு ஒத்து போகும் படி அணிவித்து (matching )
புகை கமழ் தாமம் சூட்டி = நறுமண புகை எல்லாம் காட்டி
காண்பவர் ஆண்மை தேயக் = காணும் ஆண்களின் ஆண்மை தேய
காமவேள் = மன்மதன்
கலகம் செய்தார் = ஒரு பெரிய கலகத்தை செய்தான் (அவர்களின் மனத்தில்)
No comments:
Post a Comment