Saturday, September 1, 2012

தேவாரம் - மந்தி மலர் சிந்தும் மயிலாடு துறை


தேவாரம் - மந்தி மலர் சிந்தும் மயிலாடு துறை


சின்ன குழந்தைகளுக்கு குரங்கு என்றால் ரொம்ப பிடிக்கும். அது செய்யும் சேட்டைகளை பார்த்து வியந்து இரசிப்பார்கள்.

ஞானசம்மந்தர் சிறிய வயதில் ஞானம் பெற்றவர் என்று வரலாறு பேசும்.

அவர் மாயவரம் என்று இன்று அழைக்கப்படும் மயிலாடு(ம்)  துறைக்கு சென்றார்.

அங்கே காவிரி ஆறு சுழித்துக்கொண்டு ஓடுகிறது. 

அந்த நீர் பிரவாகம் வரும் வழியில் சந்தனம், அகில், மலர்கள் எல்லாம் அடித்துக் கொண்டு வருகிறது. 

அப்படி வரும் போது அந்த ஆற்றின் நீர் கரையில் மோதி நீர் திவலைகள் தெறிக்கிறது.

தெறிக்கும் நீர் துளிகளோடு ஆற்றில் வந்த மலர்களும் அருகில் உள்ள 

மரங்களின் மேல் உள்ள குரங்குகளின் மேல் விழுகிறது.

அந்த குரங்குகள் அதனால் கோவம் அடைந்து மரத்தில் இருந்து மலர்களை பறித்து ஆற்றின் மேல் எறிகின்றன...

அப்படிப்பட்ட ஊரான மயிலாடுதுறையில் சிவன் வசிக்கிறார் 
 
அந்தண்மதி செஞ்சடைய ரங்கணெழில் கொன்றையொ டணிந்தழகராம்
எந்தமடி கட்கினிய தானமது வேண்டிலெழி லார்பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்துமயி லாடுதுறையே.

சீர் பிரித்த பின் 

அந்தண்மதி செஞ் சடையர்  அங்கண் எழில் கொன்றையோடு அணிந்த அழகராம் 
எம் தம் அடிகளுக்கு இனிய  தானம் அது வேண்டில் எழிலார் பதியதாம்
கந்த மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரும் காவிரி உள்yu
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடு துறையே 

பொருள்

அந்தண்மதி = அந்த + தண் + மதி = அந்த குளிர்ந்த நிலவை

செஞ் சடையர் =  தன்னுடைய சிறந்த சடை முடியில் அணிந்த

அங்கண் = அந்த சடையில்

எழில் கொன்றையோடு = அழகான கொன்றை மலரை

அணிந்த அழகராம் = அணிந்த அழகராம்

எம் தம் அடிகளுக்கு = எம்முடைய கடவுளான சிவா பெருமானுக்கு

இனிய  தானம் = இனிமையான இருப்பிடம்


அது வேண்டில் = அதை தெரிந்து கொள்ள வேண்டினால்  

எழிலார் பதியதாம் = எழிலார்ந்த இடமாம் 

கந்த மலி = மணம் நிறைந்த (கந்தம் = நறுமணம்)

சந்தினொடு = சந்தனத்தோடு

கார் அகிலும் = அகில் என்ற வாசனை பொருளும்

வாரி வரும் காவிரி உள் = வாரி வரும் காவிரி ஆற்றின்

வந்த திரை  = வந்த அலை (திரை கடல் ஓடியும் திரவியம் தேடு )

உந்தி எதிர் = மேல் வந்து எதிரில் தெறிக்க, அதை எதிர்த்து

மந்தி மலர் சிந்தும் = மந்தி மலரை எடுத்து வீசும்

மயிலாடு துறையே  = மயிலாடு துறையே 


1 comment:

  1. இருந்தாலும் இந்தக் கற்பனை கொஞ்சம் ஓவர்தான்!

    ReplyDelete