இராமாயணம் - வாலியின் குற்ற உணர்வு
வாலி இறக்கும் தறுவாயில், இராமனிடம் சுக்ரீவனை அடைக்கலப் படுத்துகிறான். என் தம்பி தவறு செய்தால் அவனை தண்டித்து விடாதே என்று வேண்டுகிறான். அனுமனை இராமனிடம் அறிமுகம் செய்து வைக்கிறான். "உன் கையில் உள்ள வில்லைப் போன்ற ஆற்றல் உள்ளவன் இவன் "என்று அனுமனைப் பற்றி கூறுகிறான்.
பின் தன் மகன் அங்கதனை அழைத்து வரச் சொல்கிறான்.அவனை இராமனிடம் அடைக்கலப் படுத்துகிறான்.
பின் இறந்து போகிறான்.
எல்லோரும் அந்த இடத்தை விட்டு கிளம்பிப் போகிறார்கள். வாலி இறந்த செய்தி கேட்டு அவன் மனைவி தாரை வந்து அவன் மேல் விழுந்து ..புலம்புகிறாள்...
பாடல்
வாலியும் ஏக, யார்க்கும் வரம்பு
இலா உலகில் இன்பம்
பாலியா, முன்னர் நின்ற பரிதி
சேய் செங் கை பற்றி,
ஆல் இலைப் பள்ளியானும்,
அங்கதனோடும், போனான்;
வேல் விழித் தாரை கேட்டாள்;
வந்து, அவன் மேனி வீழ்ந்தாள்.
பொருள்
வாலியும் ஏக = வாலி வானகம் ஏக
யார்க்கும் = எவருக்கும்
வரம்பு இலா உலகில் = எல்லை அற்ற உலகில்
இன்பம் பாலியா = இன்பத்தை நல்கும்
முன்னர் நின்ற = முன்னால் நின்ற
பரிதி சேய் = சூரியனின் மகன் (சுக்ரீவன் )
செங் கை பற்றி = சிவந்த கைகளைப் பற்றிக் கொண்டு
ஆல் இலைப் பள்ளியானும் = ஆல் இலையில் பள்ளி கொண்ட அந்த பரந்தாமனும்
அங்கதனோடும், போனான் = அங்கதனையும் அழைத்துக் கொண்டு போனான்
வேல் விழித் தாரை கேட்டாள் = (வாலி இறந்த செய்தியை) வேல் போன்ற விழியைக் கொண்ட தாரை கேள்விப் பட்டு
வந்து, அவன் மேனி வீழ்ந்தாள் = போர்க் களத்துக்கு வந்து அவன் மேல் விழுந்தாள்
இதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய இடம் எது என்றால்....
சுக்ரீவனை அடைக்கலப் படுத்தினான் வாலி
அனுமனை அறிமுகம் செய்து வைத்தான்
அங்கதனை அழைத்து வரச் செய்து இராமனிடம் ஒப்புவித்தான்
ஆனால் ....தன் மனைவி தாரையை அழைத்து வரச் சொல்லி ஒரு வார்த்தை பேசவில்லை.
ஏன் ?
சொல்லி அனுப்பி இருந்தால் அவளும் வந்திருப்பாள் தானே ? கடைசியாக அவளிடம் ஒரு வார்த்தை பேசி இருக்கலாம் தானே ? ஏன் அவளை வாலி சந்திக்க வில்லை ?
கதைப் போக்கிற்கு அது தேவை இல்லை கம்பன் நினைத்து இருப்பானோ என்றால் அப்படியும் நினைக்க முடியவில்லை. வாலி இறந்த மறு நாள் சூரியன் எப்படி உதித்தான் என்பது வரை நிறுத்தி நிதானமாக கதையைக் கொண்டு போகிறான். பின் ஏன் வாலி தாரையை வரச் சொல்லவில்லை ?
பிறர் பழியும் தன் பழியும் நாணுவார் என்ற குறளை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திப் பார்ப்போம்.
வாலியை சுக்ரீவன் போருக்கு அழைத்த போது தாரை வாலியை தடுக்கிறாள். " "இராமன் என்பவன் துணையாக இருக்கும் தைரியத்தில் சுக்ரீவன் உங்களை போருக்கு அழைக்கிறான். போகாதீர்கள் " என்று தடுக்கிறாள்.
கேட்காமல் போகிறான். தாரை சொன்ன படியே நடந்தது.
இப்போது , தாரையின் சொல்லை கேட்காமல் வந்தததிற்கு வாலி நாணுகிறான். அவள் முகத்தில் எப்படி விழிப்பது என்று வெட்கப் படுகிறான். எனவே கடைசியாக அவளை காணமலேயே விண்ணுலகம் போய் சேர்கிறான்.
வாலி வதம் நமக்குச் சொல்லிப் போகும் பாடம் என்ன ?
ஒன்று, தவறு என்று தெரிந்த ஒன்றை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள்.
இரண்டு, பிறர் பழியை தன் பழியாக எண்ணி நாணுங்கள்
மூன்று, நீங்கள் செய்யும் பழிக்கும் நாணம் கொள்ளுங்கள்
நான்கு, துன்பங்கள் பிறர் தந்து வருவது இல்லை. மறைந்து நிற்காமலேயே கூட இராமன் வாலியை கொன்றிருப்பான். வாலி கொல்லப் பட்டது இராமனால் நிகழவில்லை. அது வாலியின் அறம் பிறழ்ந்த வாழ்க்கையால் வந்தது. துன்பம் வரும் போது மற்றவர்களை ஏசாதீர்கள். மற்றவர்கள் மேல் பழி போடாதீர்கள். நீங்கள் செய்த மறம் உங்களை வாட்டுகிறது என்று எண்ணுங்கள். இராமனை குறை கூறிய வாலி கடைசியில் உண்மையை உணர்கிறான்.
எல்லாம் சரிங்க, பாடம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு....எதுக்காக மறைந்து இருந்து அம்பு எய்ய வேண்டும் ? அதுக்கு என்ன பதில் ?
great lessons are taught in ramayana and mahabharath. very essential for today generation.
ReplyDeleteநன்று
ReplyDelete