Sunday, September 7, 2014

இராமாயணம் - பாவம் நீ, தர்மம் நீ

இராமாயணம் - பாவம் நீ, தர்மம் நீ


வாலி வதை.

அது வாலிக்கு வதை.

நமக்கு வாதை.

தொண்டையில் சிக்கிய முள்ளாக , மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் ஒரு அவஸ்தை. இராமன் தவறு செய்தானா ? இராமன் தவறு செய்வானா ? இதுவா இராமன் காட்டிய அறம் , இதுவா இராமனின் வழி என்று இராம பக்தர்கள் சங்கடப் படும் இடம். 

காலம் காலமாக பேசப் பட்டு வரும் ஒரு சிக்கலான இடம். வால்மீகியை தழுவி எழுதிய கம்பன் பல இடங்களில் தன் காப்பியத்தில் மாற்றம் செய்திருக்கிறான்.

ஆனால், இந்த வாலி வதையை  மட்டும் அப்படியே எடுத்தாண்டிருக்கிறான்.

கம்பன் விரும்பி இருந்தால், அதில் ஒரு மாற்றம் செய்திருக்க முடியும். இராமன் மறைந்திருந்து கொல்லவில்லை. நேரில் நின்றுதான் போரிட்டான் என்று மாற்றி அமைத்திருக்க வேண்டும்.

ஏன் செய்யவில்லை ?

மாற்றாமல் தந்ததில் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்.

அது என்ன காரணம் ? அப்படி அந்த கதையில் என்ன தான் இருக்கிறது ?

வலி மனிதனின் சிறந்த நண்பன் என்று சொல்லுவார்கள். ஏன் என்றால், வலி இருந்தால் தான் நாம் அந்த வலியைப் பற்றி சிந்திப்போம், மருத்துவரிடம் போவோம், மருந்து சாப்பிடுவோம்....அந்த வலி போகும் வரை அதற்கு சிகிச்சை செய்வோம்.

வாலி வதை ஒரு வலி. நம்மை அங்கு இங்கு அலைய விடாமல் மீண்டும் மீண்டும் அதை சிந்திக்க வைக்கிறது.

ஏதோ

இராமனின் அம்பால் அடி பட்டு கிடக்கிறான் வாலி.

இராமன் மேல் பல குற்றச்சாட்டுகளை சொல்கிறான், வாதம் செய்கிறான். இறுதியில் இராமனைப்  போற்றுகிறான்.

இராமனை பாராட்டும் போது மூவர் நீ, முதல்வன் நீ, முற்றும் நீ, மற்றும் நீ, பாவம் நீ, தருமம் நீ, பகை நீ, உறவு நீ என்று கூறுகிறான்.

ஏதோ ஒன்று அதில் இருக்கிறது. அது என்ன ? அதை அறிந்து கொள்ளும் வரை, இந்த வலி இருந்து கொண்டே தான் இருக்கும்.

மீண்டும் ஒரு முறை வாலி வதம் பற்றி சிந்திப்போம்.

வாலி, இராமனின் அம்பால் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான்.

இராமனை திட்டுகிறான், பழிக்கிறான். வாதம் புரிகிறான். கடைசியில் இராமனே பரம்பொருள் என்று அறிகிறான்.

இராமா, நீயே மூவரும், நீயே முதல்வன், அனைத்தும் நீ, மற்றவைகளும் நீ, பாவம் நீ, தருமம் நீ, பகை நீ, உறவு நீ என்று சொல்கிறான்.

எளிமையான பாடல்


பாடல்

ஏவு கூர் வாளியால்
      எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய்,
      அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ!
      முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ!
      பகையும் நீ! உறவும் நீ!

பொருள்

ஏவு கூர் வாளியால் = ஏவப் பட்ட கூர்மையான அம்பால்

எய்து = என் மேல் எய்து

நாய் அடியனேன் = நாய் போன்ற அடியவனான என்னை

ஆவி போம் வேலைவாய் = ஆவி பிரிகின்ற வேளையில்

அறிவு தந்து அருளினாய் = அறிவு தந்து அருள் செய்தாய்

மூவர் நீ! = முமூர்த்திகளும் நீ

 முதல்வன் நீ! = அனைத்திற்கும் மூலம் நீ

முற்றும் நீ! மற்றும் நீ! = அனைத்தும் நீ, அவை இல்லாதவைகளும் நீ

பாவம் நீ! தருமம் நீ! = பாவம் நீ, தர்மம் நீ

பகையும் நீ! உறவும் நீ! = பகையும் நீ, உறவும் நீ

வாலி மிகப் பெரிய அறிஞன். இறக்கும் தருவாயில் அவன் தரும் வாக்கு மூலம் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்.

வாலியை கம்பன் " செவி உறு கேள்விச் செல்வன்" என்பான்.

வாலி இராமனை பற்றிக் கூறியதில், எல்லாம் சரி, அது என்ன பாவம் நீ, பகை நீ ?

இறைவனை எப்படி பாவம் என்று சொல்ல முடியும் ? அவன் எப்படி பகையாவான் ?

அந்த கேள்வி அப்படியே இருக்கட்டும். பின்னால் பார்ப்போம் அதன் விடையை.

இராமன் கானகம் வந்தது தவம் செய்ய.

"தாங்கரும் தவம் மேற் கொண்டு பூழி வெங்கானம் நல்கி, புண்ணிய துறைகள் ஆடி"

அதற்குத்தான் வந்தான்.

ஆனால் , வந்த இடத்தில் கவந்தன், வாலி, கும்ப கர்ணன், இராவணன் ஆகியோரை  கொன்றான். இவர்களை கொல்லவா இராமன் கானகம் வந்தான் ? இல்லை. பின் ஏன் இவர்களை கொன்றான் ?

அவர்கள் தங்கள் முடிவை தாங்களே தேடிக் கொண்டார்கள்.

அவர்களின் பாவம். அவர்களின் அறம் பிறழ்ந்த வாழ்கை முறை அவர்களுக்கு அந்த முடிவை தேடித் தந்தது.

அறம் அல்லாதது பாவம்.

அறம் பாவம் என்னும் அருங்கையிற்றால் கட்டி என்பார் மணிவாசகர்.

அவர்கள் செய்த பாவம் இராமன் வடிவில் வந்து அவர்களுக்கு முடிவை தேடித் தந்தது.

அவர்கள் செய்த பாவம் இராமனை அவர்களுக்கு பகையாக நிறுத்தியது.

இராமன் அவர்களின்  பாவமாக,அவர்களின் பகையாக  நின்றான்.

பிறன் மனை கவர்ந்த பாவம் இராவணனுக்கு இராமனை அவனின் பகையாக மாற்றியது.

அறம் தவறி நிற்பவர்களை அந்த அறமே  அழிக்கும்.

பாவம் நீ ! பகையும் நீ !


(தொடரும் )

No comments:

Post a Comment