Monday, May 4, 2015

திருக்குறள் - ஒழுக்கம் - பாகம் 1

திருக்குறள் - ஒழுக்கம்  - பாகம் 1 


பாடல்

நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க 
மென்று மிடும்பை தரும்.

பொருள்

(http://interestingtamilpoems.blogspot.in/2015/05/1.html)

நன்றிக்கு = நல்லவற்றிற்கு

வித்தாகு = விதையாகும்

நல்லொழுக்கந் = நல்ல ஒழுக்கம்

தீயொழுக்க = தீய ஒழுக்கம்


மென்று மிடும்பை தரும் = என்றும் இடும்பைத் தரும். இடும்பு = துன்பம்

நல்லொழுக்கம் நன்மை பயக்கும். தீய ஒழுக்கம் தீமை பயக்கும்.

மேலோட்டமான அர்த்தம் அவ்வளவுதான்.

ஆழ்ந்து சிந்தித்தால் பல அர்த்தங்கள் தோன்றும்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்....

நன்மைக்கு விதையாகும் நல்ல ஒழுக்கம்.  அது ஏன் விதை ?

விதை மிக மிகச் சிறியது. ஆனால் அது வளர்ந்து பெரிதானால் , அதில் இருந்து ஒரு ஆல மரம், அரச மரம் கூட வரும். இந்த சின்ன விதையில் இருந்து இவ்வளவு பெரிய  மரமா என்று வியப்போம்.

அது மட்டும் அல்ல, அந்தப் பெரிய மரத்தில் இருந்து பல பழங்கள் தோன்றும். அதில் இருந்து ஆயிரக்கணக்கான விதைகள் தோன்றும்.

ஒரு நல்ல ஒழுக்கம் இருந்தால் அதில் இருந்து ஆயிரக் கணக்கில் பலன் உண்டாகும்.

மேலும், விதை மரமாகிறது. மரத்தில் இருந்து இன்னொரு விதை உண்டாகிறது. இது விதைக்கும் , அந்த மரத்திற்கும் கிடைத்த பலன். மரம் பெரிதாக இருக்கும் போது அதில் பல பறவைகள் வந்து கூடு கட்டி வசிக்கும். அதன் நிழலில் பலர் இளைப்பாறுவார்கள். அதன் இலையும், கிளையும் பயன் படும். இப்படி, விதை தனக்கு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் பயன் தருவதைப் போல நல்ல ஒழுக்கம் நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் பயன் தரும்.

மேலும், ஒரு விதை  மரமாகி, அதில் இருந்து காயாகி, கனியாகி பின் ஒரு விதையாகி மீண்டும் ஒரு மரமாகி..இப்படி பல நூற்றாண்டுகளுக்கு அது பயணிக்கும். முதல் விதை மறைந்து போன பின்னும் அதன் பலன் காலம் கடந்தும் நிற்கும்.

அது போல, ஒரு நல்ல ஒழுக்கம் இருந்தால் அது இன்று மட்டும் அல்ல, பல நூற்றாண்டுகள் தாண்டியும் நிற்கும்.

எப்படி ?

ஒருவன் நல்ல ஒழுக்கத்துடன் படித்து, கடுமையாக உழைத்து ஒரு மருந்தை கண்டு பிடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்குப் பின்னும், காலம் காலமாக  அந்த மருந்து மற்றவர்களின் நோயைத் தீர்த்து சுகம் அளிக்கும். அது போல, நம்முடைய நல்ல ஒழுக்கம் நம்மையும் தாண்டி, பலருக்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பலன் தரும்.

இது   பற்றி மேலும் சிந்திப்போம்.







2 comments:

  1. உங்கள் விளக்கங்கள் மிக மிக அற்புதமானவை. பால், பழம், தேன் என்று எல்லாச் சுவைகளையும் உண்ட ஆனந்தம் எமக்கு. உங்கள் மின்னஞ்சல் விலாசம் தர முடியுமா ?

    ReplyDelete