Friday, May 15, 2015

திருக்குறள் - எல்லாவற்றையும் நிறுத்தி விடலாம்

திருக்குறள் - எல்லாவற்றையும் நிறுத்தி விடலாம் 


உலகிலேயே பெரிய முட்டாள் யார் என்று கேட்டால், படிக்காதவன் , படிப்பு அறிவில்லாதவன் அல்ல பெரிய முட்டாள்.

படித்து, அதை நன்கு உணர்ந்து, மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்லி தான் அடங்காதவன் தான்  முட்டாள்களில் பெரிய முட்டாள் என்கிறார் வள்ளுவர்.

செவிட்டில் அறைந்தது மாதிரி இருக்கிறது.

எத்தனையோ படிக்கிறோம். புரியவும் செய்கிறது. புரிந்ததை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் படித்ததை கடைபிடிக்கிறோமா என்றால் இல்லை.

பாடல்

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான்அடங்காப்

பேதையின் பேதையார் இல்.

பொருள்

ஓதி = படித்து

உணர்ந்தும் = உணர்ந்து. படித்ததில் உள்ள பலன்களை உணர்ந்து. 

பிறர்க்குரைத்தும் = பிறர்க்கு உரைத்து

தான் அடங்காப் = தான் அடங்கா


பேதையின் பேதையார் இல். = முட்டாளை விட பெரிய முட்டாள் இல்லை

இனிப்பு சேர்ப்பது உடலுக்கு தீங்கு என்று படிக்கிறோம். அதன் காரணம் புரிகிறது.  மற்றவர்களுக்குக் கூட எடுத்துச் சொல்கிறோம். ஆனால், அந்த இனிப்பை நாம்  சாப்பிடாமல் இருக்கிறோமா என்றால் இல்லை. நாக்கு சுவை வேண்டுகிறது. புலன் அடக்கம் இல்லை.

பொறாமை கொள்வது தவறு. பேராசை கொள்வது தவறு. கோபம் கொள்வது தவறு  என்று தெரிகிறது. இருந்தும் மனம் அடங்குகிறதா ? இல்லை.

புலன் அடங்கவில்லை.

மனம் அடங்கவில்லை.

பொய் பேசக் கூடாது. புறம் கூறக் கூடாது. பயன் இல்லாத சொற்களை பேசக் கூடாது  என்று படித்து அறிகிறோம். செய்யாமல் இருக்கிறோமா ? இல்லை.

மொழியும் அடங்குவது இல்லை.

மன, மொழி, மெய் அடங்குவது இல்லை.

பின் படித்து என்ன  பலன்.

படிக்காமல் இருந்திருந்தால் அந்த நேரமாவது மிச்சமாகி இருக்கும்.

சிறந்த நூல்களை படிக்கிறோம்.

அதன் படி நடப்பது இல்லை "அது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது" என்று  சொல்லிவிட்டு பழைய வழியிலேயே செல்கிறோம்.

பின் படிப்பது எதற்கு ?

நம்மால் முடியவில்லை என்றால் மற்றவர்களால் எப்படி முடியும் ? எதற்காக மற்றவர்களுக்கு சொல்ல நாம் படித்ததை சொல்ல வேண்டும் ?

இந்த ப்ளாக் எழுதுவதை நிறுத்தி விடலாமா என்று யோசிக்கிறேன்.

ஒன்று, நான் படித்ததன் வழி நின்று என் மன, மொழி , மெய்கள் அடங்க நான் வழி காண  வேண்டும்.

 அல்லது,படிப்பதையும், எழுதுவதையும் விட்டு விட வேண்டும்.

கடந்த சில நாட்களாக காதில் மீண்டும் மீண்டும் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்கிறது இந்த குறள் ...

யோசிக்கிறேன்....நீங்களும் யோசியுங்கள்.


2 comments:

  1. "Ad hominem" என்று சொல்வார்கள். "சொல்லும் செய்தியை விட்டு விட்டு, சொன்னவனைப் போய் எடை பார்ப்பது" என்று பொருள் கொள்ளலாம்.

    நாம் கடைப் பிடிக்கிறோமோ இல்லையோ, அடுத்தவனுக்காவது எடுத்துச் சொல்லலாமே?

    தயவு செய்து Blog எழுதிவதை நிறுத்திவிட வேண்டாம். இந்த blog படித்து எத்தனை பேர் என்னவெல்லாம் செய்தி உணர்ந்தார்களோ?

    ReplyDelete
  2. கார்மேகம் கதிரவனை மறைக்கின்றது என்பதால் கதிரவன் மயங்கலாமா?
    பாதை வகுத்த பின் பயந்தென்ன இலாபம் !

    ReplyDelete