Tuesday, October 20, 2015

இராமானுசர் நூற்றந்தாதி - பழியும் புகழும்

இராமானுசர் நூற்றந்தாதி - பழியும் புகழும் 


எதைச் செய்தாலும் குற்றம் காண்பதற்கு என்றே சிலர் இருப்பார்கள். நல்லவற்றை விட்டு விட்டு , குறைகளையே தேடி கண்டு கொள்ளும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


பாடல்

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள்

எனக்குற்ற = எனக்கு உற்ற = எனக்கு கிடைத்த

செல்வம் = செல்வம்

இராமா னுசனென்று = இராமானுஜன் என்று

இசையகில்லா = ஏற்றுக் கொள்ளாத

மனக்குற்ற = மனதில் குற்றம் உள்ள

மாந்தர் = மக்கள்

பழிக்கில் = பழி சொன்னால்

புகழ் = அதுவும் புகழே

அவன் = இராமானுஜரின்

மன்னிய = நிலைத்த

சீர் = சிறந்த

தனக்குற்ற = அவனுக்கு உரிய

அன்பர் = அன்பர்கள்

அவந்திரு நாமங்கள் = அவனுடைய திரு நாமங்களை

சாற்றுமென்பா = சாற்றும் + என் + பா = சொல்லும் என் பாடல்கள்

இனக்குற்றம் = இந்த குற்றங்களை

காணகில் லார் = காண மாட்டார்கள்

பத்தி = பக்தி

ஏய்ந்த  இயல்விதென்றே.= ஏற்ற இயல்பு இது என்று சொல்லுவார்கள்

ஏன் பழி போடுகிறார்கள் ? இந்த பாடல்களில் அப்படி என்ன பழி சொல்லும் படி இருக்கிறது ?


அமுதனார், வேதம், சாஸ்திரம், போன்றவற்றில் சொன்னவைகளை எல்லாம் விட்டு விட்டார். இராமானுசர் ஒருவரே எல்லாம் என்று அவரைப் பற்றிக் கொண்டார். ஆசாரியனே எல்லாம் , ஆண்டவன் கூட கிடையாது என்று அவர் கூறியதை பெரும்பாலோனோர் ஏற்றுக் கொள்ளாததில் வியப்பு இல்லை.

ஆசாரியன், குரு இல்லாமல் இறைவனை, உண்மையை அறிய முடியாது.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று பாடினார் அருணகிரிநாதர்.

தாயாய் வருவாய் அருள்வாய் குகனே என்று சொல்லி இருக்கலாம்.

தந்தையாய் வருவாய் அருள்வாய் குகனே என்று சொல்லி இருக்கலாம்.

ஏன் குருவாய் வருவாய் என்றார் என்றால் குரு தான் நமக்கு இறைவனை காட்ட முடியும்.

தாய்தான் நமக்கு தந்தையை காட்டுகிறாள். "அப்பா பாரு..." என்று பிள்ளைக்கு அப்பாவை அறிமுகப் படுத்துபவள் தாய். தாய் சொல்லாவிட்டால் , தந்தை யார் என்றே தெரியாமல் போய் விடும்.

தந்தை, கைபிடித்து அழைத்துப் போய் பள்ளியில் சேர்த்து குருவை அறிமுகப் படுத்துகிறார். எனவே தான் "தந்தையோடு கல்வி போம்" என்று சொன்னார்கள்.

குருதான், நமக்கு இறைவைனை அறிமுகப் படுத்த வேண்டும்.

அப்படி இராமானுசரையே எல்லாம் என்று கொண்டாடிய என் பாடல்கள் பிழை என்று சொன்னால்  அதுவே கூட அதற்கு புகழ் தான் என்கிறார்.

அது எப்படி பழியே புகழாகும் ?

என்ன பழி போடுகிறார்கள் - ஆசாரியனே எல்லாம் என்று இந்த அமுதனார் கூறுகிறார், ஆண்டவனே ஆசாரியனுக்கு அடுத்தபடிதான் என்று கூறுகிறார் என்றெலாம்  பழி போடுவார்கள்.

அமுதனாருக்கு சந்தோஷம். அது தானே அவருக்கு வேண்டும். இப்படி எல்லோரிடமும் போய் சொல்லி ஆசாரியனின் புகழை  பரப்ப இந்த பழி கூட உதவும் என்கிறார்.

பக்தி உள்ளவர்களுக்கு அது புரியும் என்கிறார். பக்தி உள்ளவர்கள், இராமானுசரின் மேல் அன்பு கொண்டவர்கள் இந்தப் பாடல்களில் குறைகளை காண மாட்டார்கள் என்கிறார்.

மாலுமி இல்லாத கப்பல், ஓட்டுனர் இல்லாத வண்டி போல ஆகிவிடும் ஆசாரியன் இல்லாத  வாழ்கை.







No comments:

Post a Comment