Wednesday, October 7, 2015

அபிராமி அந்தாதி - சாதித்தவர்கள் என்ன செய்தார்கள் ?

அபிராமி அந்தாதி - சாதித்தவர்கள் என்ன செய்தார்கள் ?


வாழ்வில் பெரிய சாதனைகளை செய்ய என்ன செய்ய வேண்டும் ? வாழ்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?

ஆண்டாண்டு காலமாய் இதைப்  பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது ?

கடின உழைப்பு, அதிர்ஷ்டம், சூழ்நிலை, தொலை நோக்கு பார்வை, மனிதர்களை வழி நடத்தும் தலைமை குணம், என்று எத்தனையோ சொல்கிறார்கள்.

ஆனால், இவை இல்லாதவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். படிக்காமல், கல்லூரிக்கு கூட போகாத பெரிய பெரிய பணக்காரர்கள் உண்டு. அவர்களிடம் கை கட்டி வேலை செய்யும் பெரிய படிப்பு படித்தவர்கள் உண்டு.

அப்படி என்றால் சாதனையாளர்களிடம் பொதுவாக காணப் படுவது எது ? எல்லா சாதனையாளர்களும் செய்யும் ஒன்று என்ன ?

அபிராமி பட்டர் சொல்கிறார் - அப்படி சாதித்த பெரியவர்கள் எல்லோரும் அபிராமியை போற்றினார்கள்.

சாதித்தவர்கள் என்றால் ஏதோ கொஞ்சம் பணம் சேர்த்தவர்கள், சண்டை பிடித்து நாடுகளை பிடித்தவர்கள் அல்ல. அதுக்கும் மேலே, அதுக்கும் மேலே....

பட்டியல் தருகிறார் பட்டர் ...

பாடல்

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே


பொருள்

ஆதித்தன் = சூரியன்

அம்புலி = சந்திரன்

அங்கி = அக்கினி கடவுள்

குபேரன் = செல்வத்தின் அதிபதியான குபேரன்

அமரர் தம் கோன் = தேவர்களின் தலைவனான இந்திரன்

போதிற் பிரமன் = மலரில் இருக்கும் பிரமன் (போது = மலர்)

புராரி = முப்புரங்களை எரித்த சிவன்

முராரி = திருமால்

பொதியமுனி = அகத்தியர்

காதிப் பொருபடை கந்தன் = பெரிய படைகளை கொண்ட கந்தன்

கணபதி = கணங்களுக்கு அதிபதியான கணபதி

காமன் = அழகில் சிறந்த மன்மதன்

முதல் = அவர்களில் இருந்து


சாதித்த புண்ணியர் = இன்று வரை உள்ள சாதனை செய்த புண்ணியம் செய்தவர்கள்

எண்ணிலர் = கணக்கில் அடங்காதவர்கள்

போற்றுவர் தையலையே = போற்றுவார்கள் அபிராமியையே

செல்வம் வேண்டுமா ? செல்வத்தின் அதிபதியான குபேரன் அபிராமியை போற்றுகிறான்.

பதவி வேண்டுமா ? தேவ லோகத்தின் தலைவனான இந்திரன் அவளைப் போற்றுகிறான்.

வீரம் வேண்டுமா ? சிறந்த சேனாதிபதியான முருகன் அவளைப் போற்றுகிறான்.

அறிவு விடுமா ? அகத்தியர் அவளைப் போற்றுகிறார். 

அழகு வேண்டுமா ? அழகிற் சிறந்த மன்மதன் அவளைப் போற்றுகிறான் 

உலகை வழி காட்டும் ஒளியாக இருக்க வேண்டுமா ? சூரியன் அவளைப் போற்றுகிறான். 

மக்கள் மேல் கருணை செலுத்த வேண்டுமா ? குளிர்ந்த சந்திரன் அவளைப் போற்றுகிறான்.

அவர்கள் எல்லாம் அவளைப் போற்றி அந்த நிலையை அடைந்தனர். 

எல்லா பெண்ணுக்குள்ளும் அபிராமியின் ஒரு பகுதி உண்டு. 

பூத்தவளே , புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே என்பார் பட்டர்.

உலகில் உயிர்களை கொண்டு வந்து அவற்றை காக்கும் எந்த பெண்ணும் அபிராமியின் அம்சம்தான். 

பெண்ணைப் போற்றுங்கள். பெருமை வரும்.

அபிராமி....அபிராமி...அபிராமி....

நான் எப்போதும் சொல்வது போல, அபிராமி அந்தாதி படித்து, அருஞ்சொற் பொருள் புரிந்து அறிந்து கொள்வது அல்ல.

அதையும் தாண்டி, பட்டரின் மனம் உணர்ந்து பாடல்களை உணர வேண்டும். 



1 comment:

  1. "அபிராமியைப் போற்று" என்றார் பட்டர். "எல்லாப் பெண்களையும் போற்று" என்கிறாய் நீ! ஹ்ம்ம்...!

    ReplyDelete