Friday, December 18, 2015

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 2

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 2



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

தெரிந்த குறள் தான். இதில் என்ன புதிதாக இருக்கப் போகிறது ?

அ என்ற எழுத்து எல்லா எழுத்துகளுக்கும் முதலாவது எப்படியோ அப்படியே இந்த உலகுக்கு எல்லாம் இறைவன் முதல்.

இந்த குறள் யாருக்குச் சொல்லப் பட்டது ? ஏன் சொல்லப் பட்டது என்று சிந்திப்போம்.

உலகில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. கலை, கவிதை, நாடகம், அறிவியல், மொழி, சரித்திரம் என்று எத்தனையோ புத்தங்கள் இருக்கின்றன.

அத்தனை புத்தகங்களும் ஏதோ ஒரு வழியில் பகுக்கப் பட்டிருக்கிறது. பலப் பல அத்யாயங்களாகப் பிரித்து எழுதப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு  அத்யாயதிலும் பல  பத்திகளாகப் (para ) பிரிக்கப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு பத்தியும் பல வாக்கியங்களை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வாக்கியமும் பல எழுத்துகளை கொண்டிருக்கும்.

அத்தனை எழுத்துக்கும் மூல எழத்து 'அ' என்ற எழுத்து.

அ என்ற எழுத்து வாயைத் திறந்தாலே வந்து விடும்.அதை நீட்டினால் ஆ. உதட்டை குவித்தால் உ. குவிந்த உதட்டை இன்னும் சுருக்கினால் ஊ என்று அனைத்து எழுத்துகளும் அதில் இருந்து பிறக்கிறது.

எனவே, ஒரு புத்தகம் என்றால் அதைப் பகுத்துக் கொண்டே போனால் அ வில் வந்து நிற்கும்.

அதே போல, இந்த உலகை பகுத்துக் கொண்டே வந்தால், அது இறைவனில் வந்து நிற்கும்.

அ என்ற எழுத்துக்கு முன் எதுவும் இல்லை. அது போல இறைவனுக்கு முன் எதுவும் இல்லை.

அ என்ற எழுத்து தானாகவும் இயங்கும், மற்ற எழுத்துகளை இயங்க வைக்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்.

அது போல, இறைவனும் தானாகவே இயங்குவான், மற்ற உயிர்களை இயக்குவான், அவற்றுள் இருந்தும் இயங்குவான்.

சரி, இந்த எழுத்து, அதன் பிறப்பு, அதன் சேர்க்கை, அதன் வடிவம் எல்லாம் மொழி அறிவு உள்ளவனுக்குப் புரியும். படிப்பு அறிவு இல்லாதவனுக்கு அ வும் தெரியாது, உ வும் தெரியாது.

அவனுக்கு எப்படி கடவுளை உணர்த்துவது ?

வள்ளுவர், படித்தவனுக்கு மட்டுமே குறளை எழுதினாரா ? படிக்காதவன் குறளை அறிந்து அதன் படி நடக்க வேண்டாமா ? அப்படி என்றால் படித்தவன் , படிக்காதவன் எல்லோருக்கும் புரியும்படி வேறு ஏதாவது உதாரணத்தை எடுத்திருக்கலாமே வள்ளுவர் . ஏன் எடுக்கவில்லை ?

படிக்காதவன் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று நினைத்து விட்டாரா ?

சிந்திப்போம்.

================= பாகம் 2 ===============================================

கடவுள் வாழ்த்தில் ஆரம்பிக்கிறார் வள்ளுவர்.


அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

இதில் எங்கே வாழ்த்து இருக்கிறது ? வாழ்க என்று சொல்லவே இல்லையே ?

நமச்சிவாய வாழ்க என்று மணிவாசகர் ஆரம்பித்தார் 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்றார் தெய்வப் புலவர் சேக்கிழார் 
தலைவர் அன்னவர்க்கே  சரண் நாங்களே என்றார் கம்பர் 

வணங்குதலும் இல்லை, வாழ்த்தும் இல்லை ...வள்ளுவரில். 

பின் எப்படி இது ஒரு கடவுள் வாழ்த்து ஆகும் ?

கடவுளை வாழ்த்துவதற்கு முன், கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்த நினைக்கிறார் வள்ளுவர். 

கடவுள் என்று ஒன்று இருந்தால் அல்லவா அதை வாழ்த்த முடியும். 

கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன நிரூபணம் ? அதை உறுதிப் படுத்தி விட்டு, பின் அந்த கடவுளை வாழ்த்தலாம்.

எல்லோரும் கடவுள் இருக்கிறார் என்று மனதில் கொண்டு, நம்பிக்கையின் அடிப்படையில்  கடவுள் வாழ்தை சொன்னார்கள். 

வள்ளுவர் அப்படி செய்யவில்லை. அப்படி செய்திருந்தால், "சரி தான், இது ஏதோ வள்ளுவரின்   நம்பிக்கையின் பாற்பட்ட ஒரு புத்தகம் " என்று மக்கள் இதை ஒதுக்கி விடக் கூடும். 

எனவே, வள்ளுவர் கடவுள் ஒன்று உண்டு என்பதற்கு ஒரு வாதத்தை முன் வைக்கிறார். 

நாம் நாளும் பேசும், எழுதும் மொழிக்கு ஒரு எழுத்து முதலில் இருப்பதை போல , நாம் வாழும் இந்த உலகுக்கும் ஏதோ ஒன்று முதலாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். 

அவர் அகர முதல எழுத்து என்றார். இன்னொரு மொழிக்காரன் உகர முதல என்று சொல்லலாம். மற்றொருவன் எகர முதல என்று சொல்லலாம். எந்த எழுத்து  ஆதி எழுத்து என்பதல்ல வாதம். ஏதோ ஒரு எழுத்து அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பதைப் போல , உலகுக்கு இறைவன் ஆதாரமாக இருக்கிறான் என்கிறான். 

மொழியைப் பகுத்துக் கொண்டே போனால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். 

அதைப் போல உலகை பகுத்துக் கொண்டே வந்தால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். அந்த புள்ளி இறைவன்.

"ஆதி பகவன்  முதற்றே உலகு" பகவன் என்றால் பகுப்பவன். பிரிப்பவன். அவனில் இருந்து எல்லாம் பிறந்து பிரிந்து பிரிந்து இந்த நிலைக்கு வந்தது. 

மொழியைப் பிரித்தால் அகரத்தில் வந்து நிற்பதைப் போல, உலகைப் பிரித்தால் இறையில் வந்து நிற்கும். 

பிரித்துக் கொண்டிருக்கிறார்கள், இன்றும், 

சரி, இந்த மொழி, சொல், எழுத்து எல்லாம் படித்தவனுக்கு புரிந்த உதாரணங்கள். 

ஏன் வள்ளுவர் படித்தவனுக்கு புரிந்த மாதிரி ஒரு உதாரணத்தை சொல்கிறார்.  படிக்காத  பாமரன் இதை எப்படி புரிந்து கொள்வான் ? என்ற பழைய கேள்விக்கு மீண்டும் போவோம். 

....தொடரும்.







No comments:

Post a Comment