Thursday, December 10, 2015

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம்

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் 



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

தெரிந்த குறள் தான். இதில் என்ன புதிதாக இருக்கப் போகிறது ?

அ என்ற எழுத்து எல்லா எழுத்துகளுக்கும் முதலாவது எப்படியோ அப்படியே இந்த உலகுக்கு எல்லாம் இறைவன் முதல்.

இந்த குறள் யாருக்குச் சொல்லப் பட்டது ? ஏன் சொல்லப் பட்டது என்று சிந்திப்போம்.

உலகில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. கலை, கவிதை, நாடகம், அறிவியல், மொழி, சரித்திரம் என்று எத்தனையோ புத்தங்கள் இருக்கின்றன.

அத்தனை புத்தகங்களும் ஏதோ ஒரு வழியில் பகுக்கப் பட்டிருக்கிறது. பலப் பல அத்யாயங்களாகப் பிரித்து எழுதப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு  அத்யாயதிலும் பல  பத்திகளாகப் (para ) பிரிக்கப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு பத்தியும் பல வாக்கியங்களை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வாக்கியமும் பல எழுத்துகளை கொண்டிருக்கும்.

அத்தனை எழுத்துக்கும் மூல எழத்து 'அ' என்ற எழுத்து.

அ என்ற எழுத்து வாயைத் திறந்தாலே வந்து விடும்.அதை நீட்டினால் ஆ. உதட்டை குவித்தால் உ. குவிந்த உதட்டை இன்னும் சுருக்கினால் ஊ என்று அனைத்து எழுத்துகளும் அதில் இருந்து பிறக்கிறது.

எனவே, ஒரு புத்தகம் என்றால் அதைப் பகுத்துக் கொண்டே போனால் அ வில் வந்து நிற்கும்.

அதே போல, இந்த உலகை பகுத்துக் கொண்டே வந்தால், அது இறைவனில் வந்து நிற்கும்.

அ என்ற எழுத்துக்கு முன் எதுவும் இல்லை. அது போல இறைவனுக்கு முன் எதுவும் இல்லை.

அ என்ற எழுத்து தானாகவும் இயங்கும், மற்ற எழுத்துகளை இயங்க வைக்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்.

அது போல, இறைவனும் தானாகவே இயங்குவான், மற்ற உயிர்களை இயக்குவான், அவற்றுள் இருந்தும் இயங்குவான்.

சரி, இந்த எழுத்து, அதன் பிறப்பு, அதன் சேர்க்கை, அதன் வடிவம் எல்லாம் மொழி அறிவு உள்ளவனுக்குப் புரியும். படிப்பு அறிவு இல்லாதவனுக்கு அ வும் தெரியாது, உ வும் தெரியாது.

அவனுக்கு எப்படி கடவுளை உணர்த்துவது ?

வள்ளுவர், படித்தவனுக்கு மட்டுமே குறளை எழுதினாரா ? படிக்காதவன் குறளை அறிந்து அதன் படி நடக்க வேண்டாமா ? அப்படி என்றால் படித்தவன் , படிக்காதவன் எல்லோருக்கும் புரியும்படி வேறு ஏதாவது உதாரணத்தை எடுத்திருக்கலாமே வள்ளுவர் . ஏன் எடுக்கவில்லை ?

படிக்காதவன் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று நினைத்து விட்டாரா ?

சிந்திப்போம்.








2 comments:

  1. உலகில் எல்லா ஓசைகளுக்கும் மூலம் ஓம் என்பதாகும் என்பது நினைவுக்கு வருகிறது. இந்த மாதிரி எண்ணம் நம் இந்தியாவில் மட்டும் இருக்கிறதா, அல்லது பிற மொழியினரும் இப்படியே எண்ணுகிறார்களா என்று தெரியவில்லை. வேறு மொழியினர் எல்லா ஓசைகளும் "எ" என்ற எழுத்தில் இருந்து வருவதாக எண்ணினால், இதில் யார் சரி என்று எப்படிச் சொல்வது?!

    ReplyDelete
    Replies
    1. Tholkaapiyar explains how the words come. All the vowels come from the throat. In that, அ, ஆ both will come by just opening the mouth. Nothing else to be done. Other letters in vowel will come by using the lips. Of the two, அ comes without any friction or without any other movement.

      IF any other language starts with other than அ, we have to think. Do we know any such language ?

      அவற்றுள்.

      அ, ஆ, ஆயிரண்டு அங்காந்து இயலும்.

      Delete