Wednesday, March 1, 2017

இராமாயணம் - பரதன் குகன் - மனத்தே நினைந்து செய்யும்

இராமாயணம் - பரதன் குகன் - மனத்தே நினைந்து செய்யும்


பரதன் தன்னுடைய தாயார்கள் கோசலையையும் , சுமித்திரையையும் குகனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

அடுத்து, அருகில் இருந்த கைகேயியை  பார்த்து "யார் இவர்"  கேட்கிறான்.

கம்பனின் கவித்திறமைக்கு உதாரணமான பாடல்.

"சுடுகாட்டுக்கு துணையான தசரதனை அனுப்பி விட்டு, துன்பக் கடலில் பெற்றெடுத்த மகனைத் தள்ளி விட்டு, கொடுமையான காட்டுக்கு இராமனை அனுப்பி விட்டு,  திருமால் அன்று தன்னுடைய நீண்ட வடிவாள் அளந்த மூன்று உலகத்தையும்  , இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னுடைய கொடுமையால் அளந்தாளை பார்த்து யார் இவர் " என்று கேட்டான் குகன்.

பாடல்

சுடும் மயானத்து இடைத் தன் துணை ஏகத்
    தோன்றல் துயர்க் கடலின் ஏகக்,
கடுமை ஆர் கானகத்து இடைக் கருணை ஆர்
    கலி ஏகக் கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம்
    தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால் அளந்தாளை‘‘ ‘யார் இவர்? ‘என்று
    உரை‘‘ என்னக் குரிசில் கூறும்.

பொருள்


சுடும் மயானத்து இடைத் = எரிக்கின்ற  மயானத்துக்கு

 தன் துணை ஏகத் = தன்னுடைய துணைவனான தசரதன் போக

தோன்றல் = தன்னிடம் தோன்றிய பரதன்

துயர்க் கடலின் ஏகக் = துயரமான கடலில் செல்ல

கடுமை ஆர் கானகத்து இடைக் = கடுமையான கானகத்துக்கு

கருணை ஆர்  கலி ஏகக் = கருணை வடிவான இராமன் செல்ல

கழல் கால் = வீரக் கழல் அணிந்த

மாயன் = திருமால்

நெடுமையால் = பெரிய உருவத்தால்

அன்று  = அன்று

அளந்த உலகு எல்லாம் = அளந்த உலகை எல்லாம்

தன் மனத்தே = தன்னுடைய மனத்தினால்

நினைந்து செய்யும் = நினைத்து செய்யும்

கொடுமையால் அளந்தாளை = கொடுமையால் அளந்தாளை

‘‘ ‘யார் இவர்? ‘என்று = யார் இவர் என்று

 உரை‘‘ =கூறு

என்னக்  = என்ன

குரிசில் கூறும் = அரசன் கூறினான் (பரதன் கூறினான் ...கூறத் தொடங்குகிறான்)

பெண்ணின் மனதில் ஒன்று தைத்து விட்டால் , அது எவ்வளவு பெரிய விஷயமானாலும் அவள் அதை சாதிக்காமல் விட மாட்டாள்.

பெண் என்பவள் உடல் அளவில் ஆணை விட பலகீனமானவள் தான்.

எப்படி ஒரு புலன்  சரியாக வேலை செய்யாவிட்டால் மற்ற புலன்கள் மிக அதிகமாக வேலை செய்து  அந்த சரியாக வேலை செய்யாத புலனின் குறையை நிறைவு செய்யுமோ அது போல, பெண்ணின் உடல்  பலகீனத்தை அவளின் மன பலம் சரி செய்கிறது.

திருமாலுக்கு கூட, பாற்கடலை விட்டு , பூமிக்கு வந்து, வாமனனாக உருவெடுத்து, மூவடி தானம் பெற்று, பின் உலகளந்த பெருமாளாக வடிவு கொண்டு, மூன்று உலகத்தையும் அளக்க வேண்டி இருந்தது.

கைகேயியோ, இருந்த இடத்தில் தன்னுடைய மனதால் நினைத்த மாத்திரத்திலேயே அளந்தாள்.

பெண்ணின் மனம் அவ்வளவு வலிமை வாய்ந்தது.

சீதை , இலங்கையில் சிறை இருக்கிறாள்.

அவளை மீட்டு வர, இராமனுக்கு வானர சேனையின் துணை தேவைப் பட்டது.  பாலம் அமைத்து, இலங்கை போய் , சண்டை போட்டு, பின் சிறை மீட்டான்.

சீதை சொல்கிறாள், இந்த இலங்கை என்ன பெரிய பிரமாதம். எல்லாம் இல்லாத இந்த உலகம் அனைத்தையும் , என்னுடைய சொல்லால் சுடுவேன். அது தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் என்றாள்.

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ 
எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என் 
சொல்லினால் சுடுவேன் அது தூயவன் 
வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன் என்றாள்

இராமனுக்கு இவ்வளவு வேலை செய்ய வேண்டி இருத்தது. சீதைக்கு அது ஒரு சொல். அவ்வளவுதான். யாருக்கு வலிமை அதிகம் ?

இவ்வளவு சக்தியை தனக்குள் வைத்துக் கொண்டு, தன்னிடம் அவ்வளவு சக்தி இருக்கிறது என்று தெரிந்த பின்னும், அதை உபயோகிக்காமல் , இராமன் வரட்டும் என்று இருக்கிறாள் என்றால் அவளின் மன உறுதி எவ்வளவு இருக்கும்  ?

கைகேயி கொடியவளாக மாறிப் போனாள். அதை சொல்லும் போது கூட, பெண்ணின் மிகப் பெரிய சக்தியை கம்பர் படம் பிடித்து  காட்டுகிறார்.

அவள்  அடங்கி , அமைதியாக இருக்கிறாள் என்பதால் சக்தி இல்லாதவள் என்று  அர்த்தம் அல்ல. அளவிட முடியாத ஆற்றல் அவளிடம் புதைந்து கிடக்கிறது என்று இராமாயணம் நமக்கு சுட்டி காட்டுகிறது.

அந்த சக்தியை வணங்குவோம்.

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் 
  நிறைந்த சுடர்மணிப்பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் இவள் 
  பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
  வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர் சக்தி 

  ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

என்று பாரதி சொன்னது போல , அவளே தஞ்சம் என்று உரைப்போம்.

அவள் பேர் ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்












2 comments:

  1. பரதனோடு கைகேயி இராமனைத் தேடி வரக் காரணம் என்ன? அதற்குள் அவள் மனம் மாறி, வருந்தித் திருந்தி விட்டாளா?

    ReplyDelete
  2. கைகேயி மட்டுமல்ல, கூனியும் வந்திருந்தாள் என்கிறான் கம்பன். எதற்கு என்று தெரியவில்லை.

    ReplyDelete