திருவாசகம் - ஊர் நாய்
தெருவிலே சில நாய்கள் திரியும். பார்த்து இருப்பீர்கள். stray dogs என்று சொல்லுவார்கள்.
அது காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை மிக சுறு சுறுப்பாக இருக்கும்.
ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவுக்கு ஓடும். அங்கே உள்ள மற்ற நாய்களை பார்த்து குலைக்கும். பின் வேறொரு தெருவுக்கு ஓடும். அங்கே உள்ள உணவைத் தின்னும். தெருவில் செல்லும் வாகனங்களை துரத்தும். பயந்த மாதிரி யாராவது வந்தால் , அவர்களை குலைத்து விரட்டும். யாராவது கல்லை எடுத்தால் வாலை சுருட்டிக் கொண்டு பம்மி ஓடும்.
இப்படி நாள் எல்லாம் அலைந்த பின் , தளர்ந்து போகும் . சரி இவ்வளவு அலைந்தாயே நாயே, நீ உருப்படியாக என்ன செய்தாய் என்று கேட்டால் ஒன்றும் இருக்காது. ஆனால், ஓட்டத்துக்கும், அலைச்சலுக்கும் ஒரு குறைவும் இல்லை.
அந்த நாய்க்கு உடையவன் என்று யாரும் கிடையாது. அது பாட்டுக்குத் திரியும். அலையும். அடி வாங்கும். கடிக்கும். கண்ட இடத்தில் சாப்பிடும், கண்ட இடத்தில் தூங்கும்.
என்ன ஒரு வாழ்க்கை.
அந்த நாயைப் பார்த்தால் பாவமாகவும், கேவலமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது அல்லவா.
சற்று நம்மை பற்றி யோசிப்போம்.
வேலை வேண்டும் என்று அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே ஓடுகிறோம். அந்த முதலாளி, இந்த முதலாளி என்று யார் சொன்னாலும் கேட்கிறோம். மேலே உள்ளவன் சொன்னால் வாலை ஆட்டிக் கொண்டு பணிந்து போகிறோம். கீழே உள்ளவனை, வீட்டில் வேலை செய்பவர்களை அதட்டுகிறோம். அங்கே கல்யாணம், இங்கே பிறந்த நாள் விழா என்று ஓடுகிறோம்.
சரி, எல்லாம் முடிந்து , ஆடி ஓடி மரணப் படுக்கியில் இருப்பவனிடம் நீ என்ன சாதித்தாய் என்று கேட்டால் , கண்ணீர் தான் மிஞ்சும். என்னென்னெவோ செய்ய நினைத்தேன். ஒன்றும் செய்யவில்லை. இன்னும் சொல்லப் போனால் மனதுக்குப் பிடித்த மாதிரி சந்தோஷமாகக் கூட வாழ வில்லை என்ற ஏக்கமே அவனிடம் நிறைந்து இருக்கும்.
பெரிய வித்தியாசம் இருக்கிறதா ?
ஊர் நாய் போல ஆகி விட்டேனே என்று உருகுகிறார் மணிவாசகர்.
"என்னை உடையவனே, உன்னை நினைத்து, வரும் பெரும் காதலால் உன் தொண்டர்கள் உன் திருவடி அடையக் கண்டும், ஊர் நாயை விட கேவலமான நான் இந்த உடலை பேணிக் கொண்டு இங்கே இருக்கட்டும் என்று என்னை விட்டு விட்டாயே " என்று மருகுகிறார் மணிவாசகப் பெருந்தகை.
பாடல்
உடையா னேநின் றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதம் சேரக் கண்டிங் கூர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக முடித்தாயே.
சீர் பிரித்த பின்
உடையானே நின்தனை உள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதம் சேரக் கண்டிங்கு ஊர் நாயில்
கடையானேன் நெஞ்சு உருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக் கூடி இது காத்து இங்கு இருப்பதாக முடித்தாயே.
பொருள்
உடையானே = என்னை உடையவனே
நின்தனை = உன்னை
உள்கி = மனதில் நினைத்து
உள்ளம் உருகும் = மனம் உருகும்
பெருங்காதல் = பெரிய காதல்
உடையார் = உடையவர்கள், உன் அடியார்கள்
உடையாய் = உடையவனே
நின்பாதம் = உன் திருவடிகளை
சேரக் கண்டிங்கு = சேரக் கண்டு இங்கு
ஊர் நாயில் = ஊர் நாயை விட
கடையானேன் = கீழான நான்
நெஞ்சு உருகாதேன் = மனம் உருக மாட்டேன்
கல்லா மனத்தேன் = கல் போன்ற கடின மனம் உடையவன்
கசியாதேன் = மனம் கசிய மாட்டேன்
முடையார் = முடை நாற்றம் அடிக்கும் (புலால் நாற்றம்)
புழுக் கூடி இது = புழுக்கள் நிறைந்த கூடான இந்த உடலை
காத்து = காவல் பண்ணிக் கொண்டு
இங்கு இருப்பதாக = இங்கேயே இருக்கட்டும் என்றும்
முடித்தாயே = முடிவு செய்து விட்டாயே
நின்தனை = உன்னை
உள்கி = மனதில் நினைத்து
உள்ளம் உருகும் = மனம் உருகும்
பெருங்காதல் = பெரிய காதல்
உடையார் = உடையவர்கள், உன் அடியார்கள்
உடையாய் = உடையவனே
நின்பாதம் = உன் திருவடிகளை
சேரக் கண்டிங்கு = சேரக் கண்டு இங்கு
ஊர் நாயில் = ஊர் நாயை விட
கடையானேன் = கீழான நான்
நெஞ்சு உருகாதேன் = மனம் உருக மாட்டேன்
கல்லா மனத்தேன் = கல் போன்ற கடின மனம் உடையவன்
கசியாதேன் = மனம் கசிய மாட்டேன்
முடையார் = முடை நாற்றம் அடிக்கும் (புலால் நாற்றம்)
புழுக் கூடி இது = புழுக்கள் நிறைந்த கூடான இந்த உடலை
காத்து = காவல் பண்ணிக் கொண்டு
இங்கு இருப்பதாக = இங்கேயே இருக்கட்டும் என்றும்
முடித்தாயே = முடிவு செய்து விட்டாயே
"நெஞ்சு உருகாதேன்" ...நம் மனம் எப்போதும் இரும்பு போல இறுகி கிடக்கிறது. மனம் உருக வேண்டும்.
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரிநாதர்
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.
நெஞ்சம் உருகும் அன்பு படைத்தனை என்பார் அபிராமி பட்டர்
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.
என்பது அபிராமி அந்தாதி
உள்ளம் உருகி வரும் பெரும் காதலால் அடியவர்கள் அவனை அடைந்தார்கள். ஊர் நாய் போல குறிக்கோள் இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தால் அவனை அடைய முடியாது.
யார் என்னதான் பாட்டு எழுதினாலும், மாணிக்கவாசகர் பாட்டில் ஒரு உருக்கம் இருக்கத்தான் செய்கிறது. மிக்க நன்றி.
ReplyDelete