Thursday, September 13, 2018

தாயுமானவர் பாடல் - இரவல் ஞானம்

தாயுமானவர் பாடல் - இரவல் ஞானம்


நாம் பேசும் வார்த்தைகளை உற்று நோக்கினால் தெரியும்...நாம் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு இருக்கிறோம். நாம் சொன்னதை மட்டும் அல்ல, மற்றவர்கள் சொன்னதையும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

கீதையில் அப்படி சொல்லி இருக்கிறது, தேவாரத்தில் இப்படி சொல்லி இருக்கிறது, அவர் அப்படி சொன்னார், இவர் இப்படி சொன்னார் என்று மேற் கோள் காட்டிக் கொண்டே இருக்கிறோம்.

மற்றவர்கள் சொல்லாத எதையாவது நாம் சொல்லி இருக்கிறோமா ? நாமே அறிந்த உண்மை என்று ஏதாவது இருக்கிறதா ?

எல்லாம் இரவல் ஞானம்.

பாடல்

சொன்னத்தைச் சொல்வதல்லாற் சொல்லறவென் சொல்லிறுதிக்
கென்னத்தைச் சொல்வேன் எளியேன் பராபரமே.

பொருள்

சொன்னத்தைச் = ஏற்கனவே சொன்னதை

சொல்வதல்லாற் = சொல்வது அல்லால். சொல்வதைத் தவிர

சொல்லறவென் = சொல் + அற + என் = சொல் அறவே இல்லாமல்

சொல்லிறுதிக் = இறுதிச் சொல்லுக்கு

கென்னத்தைச் சொல்வேன்  = எதைச் சொல்வேன்

எளியேன் = நான் எளிமையானவன்

பராபரமே = உயர்ந்த கடவுளே

பேச நினைக்கும் போதெல்லாம் ஒரு கணம் யோசியுங்கள். நீங்கள் சொல்லப் போவது  புதிதான ஒன்றா ? நீங்கள் கண்டு பிடித்ததா ? அனுபவத்தில் கண்ட உண்மையா ? அல்லது யாராவது , எப்போவாவது சொன்னதா ?

சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்காமல் சற்று மௌனமாக இருந்து பாருங்கள்.

சொல் நின்றால், எண்ண ஓட்டம் நிற்கும். மன ஓட்டம் நிற்கும்.

சொல்லை துறவுங்கள். மனதுக்குள் எப்போதும் ஓடும் எண்ண ஓட்டம் நிற்கும். மனம் ஓரிடத்தில் நிற்கும்.  மனம் வசப்படும்.

மௌனம் ஞான வரம்பு என்பது ஒளவை வாக்கு.

மௌனம் என்றால் வாய் பேசாமல் இருப்பது மட்டும் அல்ல. மனமும் பேசாமல் இருக்க வேண்டும்.


http://interestingtamilpoems.blogspot.com/2018/09/blog-post_13.html

2 comments:

  1. மனதின் மௌனம் என சொல்லலாமோ!

    ReplyDelete
  2. இந்த BLOGஏ , யாராரோ எழுதியதை ஆராய்வதுதானே!

    மற்றவர் சொல்வதைக் கேட்பதிலோ, திரும்பிச் சொல்வதிலோ ஒரு பிழையும் இல்லை. அடுத்தவர் சொல்வதை அப்படியே ஒப்புக்கொள்வதில்தான் பிழை இருக்கிறது.

    ReplyDelete