Thursday, September 20, 2018

கம்ப இராமாயணம் - விளையாட்டு உடையார்

கம்ப இராமாயணம் - விளையாட்டு உடையார் 


சில பாடல்களை ஒவ்வொரு தரம் படிக்கும் போதும் புது புது அர்த்தம் தோன்றிக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு பாடல் கம்ப இராமாயணத்தின் முதல் பாடல். கடவுள் வணக்கம்.

பாடல்

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

பொருள்

உலகம் யாவையும் = அனைத்து உலகங்களையும்

தாம் = தான்

உளவாக்கலும் = உள்ளத்தால் ஆக்கி

நிலைபெறுத்தலும் = அவற்றை காத்து

நீக்கலும் = பின் அவற்றை நீக்கி (அழித்து)

நீங்கலா = இடை விடாத

அலகு இலா  = அளவற்ற

விளையாட்டு உடையார் = விளையாட்டை கொண்டவர்

அவர் தலைவர்; = அவர்தான் தலைவர்

அன்னவர்க்கே = அவருக்கே

சரண் நாங்களே. = நாங்கள் சரண் அடைந்தோம்


கோபம் எப்படி வருகிறது ? நமக்கு தேவையான ஒன்றை யாராவது அல்லது ஏதாவது  தடை செய்தால், நமக்கு அதன் மேல் அல்லது அவர் மேல் கோபம் வருகிறது.

அப்பாவிடம் பைக் வேண்டும் என்று கேட்டு அவர் வாங்கித் தர மறுத்தால், அவர் மேல் கோபம் வருகிறது.

நகை வேண்டும், புடவை வேண்டும், ஒரு நல்ல வீடு என்று கேட்டு கணவன் வாங்கித் தர மறுத்தால் கணவன் மேல் கோபம் வருகிறது.

பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று நாம் ஆசைப் படும்போது மேலதிகாரி தரவில்லை என்றால் , அவர் மேல் கோபம் வருகிறது.

எனவே, அனைத்து கோபத்துக்கும் காரணம் ஆசை. ஆசை மறுக்கப் படும்போது கோபம் வருகிறது.

அப்படி என்றால் கோபம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

ஆசைப் படக் கூடாது. சரி தானே?

ஆம். சரிதான்..ஆனால் ஆசை இல்லாத வாழக்கை ஒரு வாழ்க்கையா ? ஆசைப் பட வேண்டும், அதற்காக முயற்சி செய்ய வேண்டும், உழைக்க வேண்டும்....அது தானே வாழ்க்கை. ஆசை அற்ற வாழ்க்கை உப்பு சப்பு அற்ற ஒரு வறண்ட வாழ்க்கையாக அல்லவா இருக்கும் ?

ஆசைப் பட வேண்டும். ஆனால், அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சி. வேறொன்றை தேடுவோம் என்று ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆசைப் பட்டது கிடைக்கவில்லை என்றால் மனம் ஒடிந்து, விரக்தி அடைந்து , சோர்ந்து இருந்து விடக் கூடாது. அது பலவிதமான மன நோய்க்கு வழி வகுக்கும்.

கம்பர் சொல்கிறார் "அலகிலா விளையாட்டு உடையான்".

ஆண்டவனுக்கு எல்லாம் விளையாட்டுதான். ஆக்குதல், காத்தல், அழித்தல் எல்லாம் ஒரு விளையாட்டுதான்.

ஆசைப் படுகிறீர்கள். கிடைக்கவில்லை, சந்தோஷம்.

கிடைத்தது. சநதோஷம்.

கிடைத்தது காணாமல் போய் விட்டது. சந்தோஷம்

விளையாட்டு என்றால் என்ன ? உண்மை போல இருக்கும். பந்து போடுவதும், அடிப்பதும், ஓடுவதும் எல்லாம் ஏதோ பெரிய முக்கியமான வேலை போல இருக்கும். ஒன்றும் கிடையாது. வெற்றி தோல்வி இரண்டையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆட்டத்தில் தோற்ற யாரும், உலகே இருண்டு விட்டது, முடிந்து விட்டது என்று இருப்பது இல்லை.  இன்னும் கொஞ்சம் பயிற்சி  எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் விளையாடுவார்கள்.

அது போல, வாழ்க்கையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தோல்வி வந்தால், தூசியை தட்டி விடுவது மாதிரி தட்டி விட்டு விட்டு நாளை மீண்டும்  களத்துக்கு வந்து விட வேண்டும்.

எல்லாமே விளையாட்டுதான் இங்கே.


உறவுகள், வேலை, நட்பு, சுற்றம், வெற்றி, தோல்வி, சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, எல்லாமே விளையாட்டுதான்.

சந்தோஷமாக விளையாடுங்கள். இன்று தோல்வியா? பரவாயில்லை.  நாளை இன்னும் சிறப்பாக விளையாடலாம்.

இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை படைத்து காத்து அழித்து செய்யும் வேலைகளை விளையாட்டாக செய்ய முடியும் என்றால், நாம் செய்யும் வேலைகள் என்ன அதைவிட பெரியதா?

Seriousness is a sickness. 

கடு சிடு என்று முகத்தை வைத்து கொண்டு எப்போதும் சீரியசாக இருக்காதீர்கள். தளர விடுங்கள். மனமும், உடலும் தளர்ந்து இருக்கட்டும்.


1 comment: