Thursday, January 17, 2019

108 திவ்ய தேசம் - திரு ஊரகம்

108 திவ்ய தேசம் - திரு ஊரகம் 


தேவாரம், திருவாசகம், பிரபந்தம் இவற்றை எல்லாம் படிக்கும் போது, இதில் என்ன இருக்கிறது. கடவுள் பற்றிய வர்ணனை, அவர் இப்படி இருப்பார், அப்படி இருப்பார், இன்னது செய்வார், என்று கடவுள் பற்றிய குறிப்புகள் இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வாழ்க்கை தத்துவங்கள் இருக்கும். என்னை காப்பாற்று, என்னை உன்னோடு அழைத்துக் கொள் , என்னை மன்னித்துக் கொள் என்ற பிரார்த்தனைகள் இருக்கும்.

இவற்றை நீக்கி விட்டுப் பார்த்தால், அதில் வேறு ஒன்றும் தேறாது.  அப்படியே தேர்ந்தாலும் , ஏதோ கொஞ்சம் இருக்கலாம்.

எப்படி இந்தப் பாடல்கள், பாசுரங்கள் காலம் கடந்து நிற்கின்றன? கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களையும் வசீகரிக்கின்றன?  அதில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.

திருமங்கை ஆழ்வார், தன்னை ஒரு தாயாகவும், காதல் வயப்பட்ட தன் மகளை பார்த்து பாடுவது போல ஒரு பாசுரம் எழுதி இருக்கிறார்.

படித்துப் பாருங்கள், மகளுக்காக உருகும் ஒரு தாயின் மனம் தெரியும்.

ஒரு தந்தை எவ்வளவுதான் பாசத்தை மகள் மேல் கொட்டினாலும், ஒரு தாயின் அளவுக்கு தந்தையால் மகளை நெருங்க முடியாது. ஒரு பெண்ணின் உடல் கூறுகள், உணர்ச்சி கொந்தளிப்புகள், இவற்றை இன்னொரு பெண் தான் அறிந்து கொள்ள முடியும். கூச்சப் படாமல் எளிமையாக பேச முடியும்.

மகளின் உடல் கூறுகளைப் பற்றி ஒரு தந்தை பேசுவது நாகரீமாக இருக்காது.

தாயின் இடத்தில் இருந்து, திருமங்கை ஆழ்வார் பாடுகிறார்....மனதை என்னவோ செய்யும் பாடல்....

பாடல்

கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும்,

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே. என்றும்,

அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும்,

சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.

பொருள்


கல்லெடுத்துக் = மலையை எடுத்து

கல்மாரி = கல் மழையில் இருந்து

காத்தாய் என்றும் = காப்பாற்றினாய் என்று கூறும் (கூறுகிறாள்)

காமருபூங் = விரும்பும் பூவைப் போன்ற

கச்சியூ ரகத்தாய் = காஞ்சி ஊரகத்தில் உள்ளவனே

என்றும் = என்று கூறும்

வில்லிறுத்து  = வில்லினை அறுத்து

மெல்லியல் தோள் = மென்மையான தோள்களை கொண்ட சீதையை

தோய்ந்தாய் = அடைந்தாய்

என்றும் = என்றும் கூறும்

வெஃகாவில் = திரு வெஃகா என்ற இடத்தில்

துயிலம ர்ந்த = துயில் அமர்ந்த

வேந்தே. = தலைவனே

என்றும், = என்றும் கூறும்

அல்லடர்த்து = இருள் சூழ்ந்த (கொடுமை நிறைந்த)

மல்லரையன் றட் டாய்  = மல்லரை அன்று வென்றாய்

என்றும் = என்றும் கூறும்

மாகீண்ட கை தலத்து என்  = கேசி என்ற அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அவனை அழித்தாய்

மைந்தா என்றும் = மைந்தனே என்றும் கூறும்

சொல்லெடுத்துத் = சொல் எடுத்துக் கொடுத்து

தங்கிளியைச் = தன்னுடைய கிளியை

சொல்லே என்று = சொல் என்று கூறும்

துணைமுலைமேல் = துணையான இரு முலைகள் மேல்

துளிசோரச் = விழி நீர் வடிய

சோர்க்கின் றாளே = சோர்ந்து போகின்றாளே , என் மகள்.


அவளுக்கு அவன் மேல் காதல். அவனைப் பற்றி யாராவது உயர்வாகச் சொன்னால், அவளுக்கு மகிழ்ச்சி. அதற்காக எல்லோரிடமும் போய் கேட்கவா  முடியும்.

அவன் நினைவு அவளை வாட்டுகிறது.

அந்தப் பெண்ணின் தாய்க்குத் தெரிகிறது.  தன் மகள் காதல் வசப் பட்டு இருக்கிறாள் என்று  தெரிகிறது. மகளைப் பார்த்து, தாயும் உருகுகிறாள்.

மகளுக்கும், தாயிடம் சென்று நேரே சொல்ல வெட்கம். தயக்கம்.

தன்னுடைய கிளியை எடுத்து மார்பின் மேல் வைத்துக் கொண்டு, அவன் பெயரை சொல்லுகிறாள். அந்த கிளியும் திரும்பிச் சொல்லுகிறது. அவள் சிலிர்த்துப் போகிறாள்.

ஆயர் பாடியில், இந்திரனின் ஏவலால் வருணன் கல் மழை பொழிந்தான். அங்கே இருந்த மலையை கையில் எடுத்து குடை போல பிடித்து அந்த மக்களை கண்ணன் காப்பாற்றினான்.

அவன் தூக்கியது மலையை. அவளுக்கு அது சாதாரண கல் போலத் தெரிகிறது.

அவன் திறமைக்கு முன்னால், இது எல்லாம் சாதாரணம் என்பது போல.


"கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்" என்கிறாள்

யாராலும் தூக்கக் கூட முடியாத வில். சீதையின் மெல்லிய தோள்களை சேர விரும்பி, அவ்வளவு பெரிய வில்லை எடுத்து அதை முறித்தான்.


"வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்"

பெண் மென்மையானவள் தான். ஆனால், அந்த மென்மை தான், ஆணுக்கு அவ்வளவு பலத்தைத் தருகிறது.

பாலில் ஒரு துளி தயிரை விட்டு உறைய விடுவார்கள். அதற்கு தோய்தல் என்று பெயர். பாலும் தயிரும் ஒன்று சேர்ந்து முழுவதும் தயாராகி விடும்.

சீதையின் தோள்களோடு இராமன் தோய்ந்தான் என்கிறாள். பிரியாமல் இருந்து , இருவரும் இரண்டற கலந்தார்கள்.

இவள் அவன் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கிறாள். அதைக் கேட்ட கிளியும் அதையே சொல்கிறது.

இது போன்ற பாடல்களை சொல்லி விளக்க முடியாது.

அந்த உணர்ச்சிகளை அப்படியே உள் வாங்கினால், அந்தப் பாடலை உணரலாம்.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தைப் படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/01/108.html

2 comments:

  1. சில பதிவுகள் உடல் நலமில்லாததால் படிக்க தவறி விட்டேன். இது அருமையான விளக்கம். அதை படித்தவுடன் பாசுரத்தின் நயம் நன்றாக புரிகிறது.

    ReplyDelete
  2. "துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே" - இதுதான் தூள்! கிளியைக் கையில் பிடித்து, மார்பில் கண்ணீர் சோர்வது போன்ற சிற்பம் மனதில் தெரிகிறது.

    ReplyDelete