Wednesday, January 30, 2019

திருக்குறள் - சொற் குற்றம்

திருக்குறள் - சொற் குற்றம் 


நாம் பல விதங்களில் குற்றங்கள் புரிகிறோம்.

மனதால், செயலால், சொல்லால் குற்றங்கள் புரிகிறோம்.

வள்ளுவருக்கு இந்த சொல் குற்றத்தை கண்டாலே பிடிப்பது இல்லை. ஏழே வார்த்தைகளில் குறள் கூறிய வள்ளுவருக்கு வள வள என்று பேசுவது பிடிக்காமல் இருப்பது நாம் புரிந்து கொள்ளக் கூடியதே.

பொதுவாகவே, நம் பண்பாட்டில், வெட்டிப் பேச்சை யாரும் மதிப்பது இல்லை. ஒருவனின் அறிவுத் திறம் என்பது அவன் எவ்வளவு குறைவாக பேசுகிறான் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது.

மௌனம் ஞான வரம்பு என்று சொல்லுவார்கள்.

பயனில சொல்லாமை என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

ஒருவன் நல்லவனா, அறிஞனா, படித்தவனா, நீதிமானா, அறத்தின் பால் பட்டவனா என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்றால் அவன் பயன் இல்லாத ஒன்றை நீட்டி முழக்கி சொல்லுவதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் என்கிறார் வள்ளுவர்.

ஒண்ணும் தெரியாது. ஆனால், எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி பெரிதாக பேசுவான். சின்ன விஷயத்தை கண்ணு காது மூக்கு வைத்து நீட்டி முழக்கி பேசுவான்.

பாடல்


நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை

சீர் பிரித்த பின்

நயனில்லன் என்பது சொல்லும் பயன் இல்ல
பாரித்து உரைக்கும் உரை


பொருள்

நயனில்லன் = நயம் இல்லாதவன்

என்பது = என்பது

சொல்லும் = அவன் சொல்லுகின்ற

பயன் இல்ல  = பயன் இல்லாத

பாரித்து = விரித்து

உரைக்கும் உரை = சொல்லும் உரையில் இருந்து தெரியும்

பயன் இல்லாத என்றால் என்ன என்பதற்கு பரிமேல் அழகர் மற்றொரு குறளில் உரை சொல்லி இருக்கிறார்.

"தனக்கும், பிறருக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தராத " என்று.


பேசுவதற்கு முன், whatsapp பண்ணுவதற்கு முன், மெயில் அனுப்புவதற்கு முன்,  அதனால் நமக்கோ அல்லது யாருக்கு அனுப்புகிறோமோ அவர்களுக்கோ என்ன பயன்  என்று அறிந்து பின் அதை செய்ய வேண்டும்.

அதே போல் நமக்கு பயன் இல்லாத ஒன்றை நமக்கு ஒருவர் சொல்லுகிறார் அல்லது  அனுப்புகிறார் என்றால் அவரின் அறிவின் ஆழத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். நல்லதா சொல்ல ஒன்றும் இல்லாததால் இந்த மாதிரி வெட்டித் தனமாக எதையோ சொல்லிக் கொண்டு அலைகிறார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.  அப்படி பட்டவர்களின் பேச்சை, அவர்கள் அனுப்பும் செய்திகளை  படித்தோ, கேட்டோ நமது நேரத்தை வீணடிக்கக் கூடாது.

பயன் இல்லாதை சொல்லுவதே தவறு. அதிலும் அதை விரிவாக விவரித்து வேறு சொல்லுவது என்றால் , சகிக்க முடியுமா.

நல்லதை, பயனுள்ளதை சொல்லுங்கள், கேளுங்கள் என்கிறார் வள்ளுவர்.

இது பயன் உள்ளதா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/01/blog-post_30.html

1 comment:

  1. பயன் இல்லாதை சொல்லுவதே தவறு. அதிலும் அதை விரிவாக விவரித்து வேறு சொல்லுவது இன்னும் தவறு. அதை கேட்பதோ படிப்பதோ மிகப்பெரிய தவறு!! வள்ளுவரின் இந்த குறள தற்காலத்திற்கு சால பொருந்தும்

    ReplyDelete