Wednesday, January 16, 2019

திருப்பாவை - பேச்சு அரவம் கேட்டிலையோ?

திருப்பாவை - பேச்சு அரவம் கேட்டிலையோ?





பாடல்

கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.


பொருள்

கீசுகீசு = கீச் கீச்

என்று = என்று

எங்கும் = எல்லா இடத்திலும்

ஆனைச்சாத் தன்  = ஆனை சாத்தன் என்பது ஒரு வகை பறவை. காகம், புறா மாதிரி

கலந்து = தங்களுக்குள் கலந்து

பேசின = பேசிக் கொண்ட

பேச்சரவம் = பேச்சு சத்தம்

கேட்டிலையோ = நீ கேட்கவில்லையா ?

பேய்ப் பெண்ணே = பேய் போன்ற குணம் கொண்ட பெண்ணே

காசும் பிறப்பும் = காசு பிறப்பு போன்ற ஆபரணங்கள்  (பெண்கள் அணியும் ஆபரணம்)

கலகலப்பக் = கல கல என்று

கைபேர்த்து = கை அசைத்து

வாச நறும்குழல் = வாசம் வீசும் கூந்தலைக் கொண்ட

ஆய்ச்சியர் = ஆயர் பாடி பெண்கள்

மத்தினால் = மத்தினால்

ஓசை படுத்த = ஓசை உண்டாக்கும்

தயிரரவம் = தயிர் கடையும் சப்த்தம்

கேட்டிலையோ = கேட்கவில்லையா ?

நாயகப் பெண்பிள்ளாய் = முக்கியமான பெண் பிள்ளையே

நாரா யணன்மூர்த்தி = நாராயண மூர்த்தி

கேசவனைப் = கேசவனைப்

பாடவும் = பாடுவதையும்

நீ கேட்டே கிடத்தியோ = நீ கேட்டுக் கொண்டே படுத்துக் கிடக்கிறாயா ?

தேச முடையாய் = தேமல் உடையவளே

திறவேலோர் எம்பாவாய் = திறப்பாய் என் பாவையே

இது என்ன பாட்டு ? இதுக்கு எதுக்கு பெரிய உரை , வியாக்கியானம் எல்லாம்?

பறவைகள் கூட்டில் கத்துகின்றன. பெண்கள் தயிர் கடைகிறார்கள். பக்த கோடிகள் இறைவன் பெயரை உச்சரிக்கிறார்கள். இந்த சத்தத்தை எல்லாம் கேட்டுக் கொண்டு தூங்குகிறாயா? எழுந்து வா.

இதுதான் பாடல். இதில் என்ன இருக்கிறது தெரிந்து கொள்ள? இதை தெரிந்து நமக்கு  என்ன பயன் ?

ஒன்றும் இல்லாமலா இத்தனை நாள் இந்தப் பாசுரங்கள் நிலைத்து நின்றிருக்கும் ?

நமது சிக்கல் என்ன என்றால் நம்மிடம் நிறைய சாவிகள் இருக்கின்றன. ஆனால், அந்தச் சாவிகள் எந்தப் பூட்டைத் திறக்கும் என்று நமக்குத் தெரியாது. சாவிகளை தூக்கிக் கொண்டு திரிகிறோம்.

இது போல ஆயிரம் பாடல்கள், ஆயிரம் வழி முறைகள் இருக்கின்றன. ஏன் செய்கிறோம்  என்று அறியாமலேயே செய்து கொண்டிருக்கிறோம்.

சரி, பாசுரத்துக்கு வருவோம்.

நம்மைச் சுற்றி பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. நல்லது மட்டும் அல்ல, அல்லாததும் நடக்கிறது. நாம் பலவற்றை கேட்பதே இல்லை. அப்படியே கேட்டாலும், நல்லதை விட்டு விட்டு அல்லாதவற்றை கேட்கிறோம். நல்லதை கேட்டாலும், புரிவது இல்லை. புரிந்தாலும், "இதெல்லாம்  நடை முறைக்கு சாத்தியம் இல்லை ..கேக்க நல்லா இருக்கும் , ஆனால் வாழ்க்கைக்கு ஒத்து வருமா என்று தெரியாது " என்று தள்ளி வைத்து விட்டு நம் வேலையை பார்க்கப் போய் விடுகிறோம்.

முதலில் தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும். நம்மைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்று அறிய வேண்டும். சூழ்நிலையை அறிந்தால் அல்லவா நம்மை அறிய முடியும்.

பறவைகள் கத்துகின்றன. தயிர் கடையும் சத்தம் கேட்கிறது. நகைகள் ஒன்றோடு ஒன்று உரசும் சப்த்தம் கேட்கிறது.

இதெல்லாம் தேவை இல்லாத சத்தங்கள். டிவி செய்திகள் போல. எங்கோ யாரோ யார் கூடவோ ஏதோ செய்தார்கள் என்றால் அதை ஏன் நேரம் செலவழித்து கேட்க வேண்டும். அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள்  உட்கார்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

இது ஒரு வகை சத்தங்கள்.

இன்னொரு புறம், வாட்ஸாப்ப், youtube , instagram , facebook என்று இடைவிடாத சத்தங்கள். அதையும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த சத்தங்களினால்  ஏதாவது ஒரு பலன் உண்டா என்றால் ஒன்றும் இல்லை.

அவற்றையும் தாண்டி, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல விஷயங்கள் நடக்கின்றன.

இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தரும் செய்திகள் இருக்கின்றன. அவற்றை கேட்க வேண்டும்.

ஆண்டாள் கையாளும் சொற்களைப் பாருங்கள்:

- பறவைகள் பேசும் பேச்சு - அரவம் (ஓசை)
- தயிர் கடையும் ஓசை - தயிரரவம்
- கேசவனை பாடவும் - கேசவனை பற்றி சொல்லும் போது அது அரவம் இல்லை, பாடல்.

இவற்றை எல்லாம் கேட்காமல் படுத்து உறங்குகிறாயே "பேய் பெண்ணே" என்கிறாள்.

பேயின் குணம், பிடித்தால் விடாது. பேய் பிடித்தவர்கள் என்று சொல்லுவதை கேட்டு இருப்பீர்கள்.

சிலர் தான் கொண்டதே சரி என்று இருப்பார்கள். அது பேய் குணம். ஆராய வேண்டும். அறிந்து கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்தது மட்டும்தான் சரி என்று நினைப்பது பேய் குணம்.

மூட நம்பிக்கைகளை விட்டு வெளியே வா, என் பாவாய் என்று அழைக்கிறாள்  ஆண்டாள்.

தேவை இல்லாததை கேட்பதை நிறுத்த வேண்டும். நம் வாழ்க்கை நல்ல சொற்களினால், இசையால், உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் பேச்சுக்களால்  நிறையட்டும்.

தேவை இல்லாத குப்பைகளை மண்டைக்குள் போட்டு திணிப்பானேன்?

முதலில், மண்டைக்குள் இருக்கும் குப்பைகளை அள்ளி வெளியே போடுங்கள்.

இனி குப்பை சேர்ப்பதில்லை என்று முடிவு செய்யுங்கள்.

நல்லதை மட்டுமே சேர்ப்பது என்று முடிவு செய்யுங்கள்.

வாழ்வு சிறக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/01/blog-post.html





1 comment:

  1. எதோ ஆயர்களின் கிராமத்தில் வசிப்பது போன்ற எண்ணத்தைப் படிப்பவர் மனதில் உண்டாக்குகிறது இந்தப் பாடல்!

    ReplyDelete