Saturday, January 29, 2022

குறுந்தொகை - தாகம்

குறுந்தொகை  - தாகம் 


பசி கூட பொறுத்து விடலாம், தாகம் பொறுக்க முடியாது. 


தாகம் வந்து விட்டால், உடம்பு தவித்துப் போய் விடும். நா வறளும். கண் மயங்கும். காது அடைக்கும். மயக்கம் வரும். 


ஓரிரண்டு நாள் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகாது. நீர் குடிக்காமல் இருக்க முடியாது. 


அந்த தாகத்தையும் மீறியது காதல் உணர்வு. 


தலைவன் பிரிந்து போய் விட்டான். எப்போது வருவான் என்று தெரியாது. வருவானா மாட்டானா என்றும் தெரியவில்லை. தலைவி தவிக்கிறாள். தோழியிடம் தன் தவிப்பை சொல்கிறாள். 


தோழி, அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள். 


"கவலைப்படாதே அவர் கட்டாயம் வருவார். வேலை நிமித்தமாக அவர் உன்னை மறந்தால் கூட, அவர் போகிற வழி உன்னை அவருக்கு ஞாபகப் படுத்தும். அவர் போகிற வழி பாலை நிலம். வெப்பம் அதிகமாக இருக்கும். தண்ணீர் கிடைப்பது அரிது. அங்கு ஆண் யானைகளும், பெண் யானைகளும் திரியும். அப்போது, பெண் யானைக்கு தாகம் எடுக்குமே என்று ஆண் யானை, அங்குள்ள மரப் பட்டைகளை உரித்து, அதில் வடியும் நீரை தன் தும்பிக்கையில் ஏந்தி, தான் குடிக்காமல் , பெண் யானைக்கு ஊட்டி விடும். அதை பார்க்கும் போது தலைவனுக்கு உன் நினைவு கட்டாயம் வரும்"


என்று. 


பாடல் 


"நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழியவர் சென்ற வாறே."


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_26.html


(please click the above link to continue reading)


"நசை = அன்பு, நட்பு 


பெரி துடையர் = நிறைய உள்ளவர் 


நல்கலு நல்குவர் = உனக்கு அவர் காதலைத் தருவார் 


பிடி = பெண் யானையின் 


பசி = தாகத்தை 


களைஇய = போக்க 


பெருங்கை = பெரிய கையை உடைய 


வேழம் = ஆண் யானை 


மென்சினை = மென்மையான கிளைகளை 


யாஅம் = யா என்ற மரத்தின் 


பொளிக்கும் = உடைத்து, முறித்து 


அன்பின = அன்பினால் 


தோழி = தோழி 


யவர் =அவர் 


சென்ற வாறே." = சென்ற ஆறே = சென்ற வழியே 


யதார்த்தமான கவிதை. 


நிலவு போல் முகம், மூங்கில் போல் கை என்று பெண்ணின் உடலை வருணனை செய்யாமல், பிரிவு, காதல், ஏக்கம், நம்பிக்கை, என்று மனித உணர்வுகளை படம் பிடிக்கும் பாடல். 


"இதோ இருக்கிறது மரம். நான் இந்தப் பக்கம் கிளைகளை முறித்து நீர் அருந்துகிறேன். நீ அந்தப் பக்கம் குடி" என்று சொல்லாமல், பெண் யானைக்கு நீர் ஊட்டி விடுமாம் ஆண் யானை. 


அம்புட்டு காதல். 


ஒரு யானைக்கே இவ்வளவு காதலா என்று தலைவன் மனதில் தோன்றும் தானே. 


பொருளீட்டிக் கொண்டு , அதை அவள் கையில் கொடுத்து, அவள் முகம் மலர்வதை பார்க்க அவனுக்கும் அவனுக்கும் ஆசை வரும் தானே. 


சும்மா காதல் காதல் என்று சொல்லிக் கொண்டு இருக்கவில்லை. மரப் பட்டைகளை உரித்து, நீர் எடுத்து, பெண் யானைக்கு ஊட்டி விடுகிறது. அது காதல். 


இப்படி பல விடயங்களை நம் கற்பனைக்கு விடுகிறது இந்தப் பாடல். 


இப்படி நிறைய பாடல்கள் இருக்கின்றன.  


ஆர்வம் உள்ளவர்கள்,  தேடிப் பிடியுங்கள், படியுங்கள். 

2 comments:

  1. மனித உணர்வுகளை படம் பிடிக்கும் பாடல். நன்றி.

    ReplyDelete