Saturday, January 8, 2022

திருக்குறள் - மோப்பக் குழையும் அனிச்சம்

 திருக்குறள் - மோப்பக் குழையும் அனிச்சம் 


அனிச்சம் மலர் என்று ஒரு மலர் இருந்ததாம். அந்த மலரை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தால் வாடிவிடுமாம். அவ்வளவு மென்மையான மலர். மூச்சு சூடு பட்டாலே வாடி விடும் மென்மை கொண்டது. 


வள்ளுவர் சொல்கிறார் 


"விருந்தினர்கள் அனிச்சம் மலரினும் மென்மையானவர்கள். அனிச்ச மலராவாது முகர்ந்தால் தான் வாடும். விருந்தினர்களோ, முகம் மாறு பட்டு நோக்கினாலே வாடி விடுவார்கள்" என்கிறார்.


பாடல் 


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_8.html


(please click the above link to continue reading)


மோப்பக் =முகர்ந்து பார்த்தால் 


குழையும் = வாடும் 


அனிச்சம் = அனிச்சம் மலர் 


முகந்திரிந்து = முகம் மாறுபட்டு 


நோக்கக் = பார்த்தால் 


குழையும் விருந்து. = விருந்தினர் வாடி விடுவர் 


இதற்கு பரிமேலழகர் உரை மெய் சிலிர்க்க வைக்கக் கூடியது. 


இந்தக் குறளுக்கு இதற்கு மேல் என்ன இருக்க முடியும் என்று நாம் நினைக்க முடியும். 


பரிமேலழகர் உரையைப் பார்ப்போம். 


"அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது."


அது அவர் செய்த உரை. சற்று இறுக்கமான உரை. 


பிரித்துப் படிப்போம். 


"அனிச்சம் ஆகுபெயர்": ஒன்றின் பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது ஆகு பெயர். அனிச்சம் மலரின் மென்மையை அனிச்சம் என்று கூறினார். எனவே அது ஆகு பெயர். அனிச்சம் என்பது மென்மைக்கு ஆகி வந்தது. 


விருந்தினரை எப்படி உபசரிக்க வேண்டும் என்று கூறுகிறார். 


முதலில் அவர்கள் தூரத்தில் வரும் போதே இன் முகம் காட்ட வேண்டும். எனவே தான் "முகம் திரிந்து நோக்க" என்றார். விருந்தினரைக் கண்டவுடன் நம் முகம் மலர வேண்டும். அவர்கள் வருவது நமக்கு மகிழ்ச்சி என்று முகத்தில் காட்ட வேண்டும். இல்லை என்றால், தூரத்தில் இருந்து அப்படியே போய் விடுவார்கள். 


அதைத்தான் 


"சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும்" என்றார். சேய்மை என்றால் தூரம் என்று பொருள். அண்மைக்கு எதிர்பதம். 


அடுத்தது, விருந்தினர் அருகில் வருகிறார். நாம் பேசுவது, சொல்வது அவருக்கு கேட்கும். அப்போது இன்சொல் சொல்லி வரவேற்க வேண்டும். 


அதைத்தான் 


"அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், "


நண்ணுதல் என்றால் அருகில் வருதல். அருகில் வரும்போது இன் சொல் கூற வேண்டும். 


சரி, அருகில் வந்து விட்டார். வீட்டுக்குள் வந்து விட்டார். அப்புறம் என்ன செய்வது?


அவர்கள் மனம் மகிழும்படி செயல்கள் செய்ய வேண்டும். 


அதைத்தான் 


"அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும்": நன்றாற்றல் என்பது ஒரு செயல்.நல்ல செயல். 


இன்முகம் காட்டி, இனிய சொல் கூறி, இனியவை செய்து விருந்தினரை உபசரிக்க  வேண்டும். 


இந்த அதிகாரத்தின் இறுதிக் குறளில் இன்முகம் காட்டுவது பற்றி கூறியிருக்கிறார். 


அப்படி என்றால் அடுத்த அதிகாரம் என்னவாக இருக்கும்?


"இனியவை கூறல்"


எப்படி அதிகாரம் ஒன்றில் இருந்து ஒன்று தொடர்ந்து வருகிறது. ஆச்சரியமான விடயம். இப்படி கூட ஒரு மனிதனால் யோசித்து எழுத முடியுமா என்று. 


பரிமேலழகர் அதை எடுத்துச் சொல்கிறார் 


"விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது."


முதற்கண் இன்முகம் கூறப்பட்டது என்பதால் இனி இன்சொல்லும், இனிய செயலும் வரப் போகிறது என்று நாம் அறிந்து கொள்ளாலாம். 


இதற்கு மேலும் இதை தெளிவாக கூற முடியுமா? இதற்கு வெளியில் விருந்தோம்பல் பற்றி என்ன இருக்க முடியும்? 


வள்ளுவம் என்ற பிரமாண்டம் நம்மை பிரமிக்க வைக்கிறது. 


இதை எல்லாம் படிக்க என்ன புண்ணியம் செய்தோமோ....






No comments:

Post a Comment