Monday, June 24, 2024

திருக்குறள் - நம் கடமை என்ன ?

 திருக்குறள் - நம் கடமை என்ன ?


நம் வாழ்வின் கடமை என்ன? எதற்காக பிறந்தோம்? என்ன செய்ய பிறந்தோம்? வாழ்வின் நோக்கம், குறிக்கோள் என்ன?


அது தெரியாவிட்டால் எதையாவது செய்து கொண்டு இருப்போம். செய்வது சரியா தவறா என்று கூடத் தெரியாது. நல்லது என்று நினைத்து தீயதை செய்து கொண்டு இருப்போம். 


பெரும்பாலோனோர் வாழ்க்கை எப்படிப் போகிறது?


பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், மணந்தோம், பிள்ளைகளைப் பெற்றோம், அவர்களை வளர்த்தோம், அவர்களை கட்டிக் கொடுத்தோம், பேரப் பிள்ளைகளை கொஞ்சினோம், வயதாகி இறந்தோம். 


இதுதானே உலக வழக்காக இருக்கிறது. "நல்ல படியா பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன். என் கடமை முடிந்தது" என்று பலர் சொல்லக் கேட்டு இருக்கிறோம். நீங்கள் பிறந்த போது, வளர்ந்த போது, உங்கள் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்றா வளர்ந்தீர்கள்? அதெல்லாம் அப்புறம் வந்தது. பிள்ளைகள் வந்தார்கள், திருமணம் செய்து கொண்டு போய் விடுவார்கள். உங்கள் வாழ்க்கை என்ன? 



வள்ளுவர் சொல்கிறார், 


தவம் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. தவம் அல்லாத மற்றவை அனைத்தையும் செய்வது வெட்டி வேலை. தேவை இல்லாத வேலை என்கிறார். 


பாடல் 


தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார்

அவம்செய்வார் ஆசையுள் பட்டு


பொருள் 


தவஞ்செய்வார் = தவத்தினை செய்பவர்கள் 


தம் = தங்களுடைய 


கருமம் = கடமையை 


செய்வார் = செய்பவர்கள் 


மற் றல்லார் = மற்று + அல்லார் = மற்றவர்கள் 


அவம் = வீண் வேலை, வெட்டி வேலை 


செய்வார் = செய்பவர்கள் 


ஆசையுள் பட்டு = ஆசையினால் 


தவம் செய்வது என்பது எப்படி கடமை ஆகும். யாருமே தவம் செய்வதாகத் தெரியவில்லையே. 


வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கடமை. அதுதான் குறிக்கோள். அதுதான் நோக்கம் என்று சொன்னால் அது சரியாகத்தானே படுகிறது. அதை விட்டு விட்டு தவம் செய்வது கடமை என்று வள்ளுவர் சொல்லுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டால், அதை பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். 


பிறந்தாகி விட்டது. இன்பம், மகிழ்ச்சி என்று வாழ்க்கை போகிறது. அப்படி போகின்ற வாழ்வில், நோய் வருமா?  வரும். 


மூப்பு வருமா? வரும். 


இறப்பு வருமா ? வரும். 


இது துன்பம் இல்லையா?  இதுவா வாழ்வின் நோக்கம்?


சரி, இருந்த வரை மகிழ்ச்சியாக இருந்தோமே. அது போதாதா? என்றால், போதாது. 


ஏன்? இறந்த பின் என்ன ஆகும்?  இந்தப் பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இன்னொரு பிறவி வரும். அந்தப் பிறவியில் என்னவாக பிறப்போமோ யாருக்குத் தெரியும்?  அங்கு மேலும் பாவம் செய்து மேலும் பல பல பிறவிகள் எடுக்க வேண்டி வரும். 


அது பரவாயில்லையா?


அதை தவிர்ப்பது நல்லதுதானே. 


இந்தப் பிறவியோடு அனைத்தையும் முடித்து விட்டு, வீடு பேறு பெறுவது சிறப்பா அல்லது மீண்டும் மீண்டும் பிறப்பது நல்லதா?


வீடு பேறு பெறுவதுதான் சிறப்பு. அதுதான் வாழ்வின் நோக்கம். அதை அடைய தவம் செய்ய வேண்டும். 


அதை விட்டு விட்டு, whatsapp, facebook, youtube, swiggy, tv என்று பொழுதை அவமே கழிப்பது வெட்டி வேலை தானே. 


இருக்கின்ற நாட்களை நல்ல முறையில் பயன் படுத்தி பிறவியின் நோக்கத்தை அடைய வேண்டும். 


தவம் செய்து வீடு பேறு அடைவதுதான் நம் கடமை. 


இல்லை, வீடு பேறு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. மறு பிறவி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று நீங்கள் சொன்னால், சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வின் குறிக்கோள், செய்ய வேண்டிய கடமை என்று நீங்கள் எதை வைத்து இருக்கிறீர்கள்? அது உண்மையிலேயே சிறந்த குறிக்கோள்தானா? அதை விட உயர்ந்த ஒன்று இருக்க முடியுமா என்று சிந்தியுங்கள். 




1 comment:

  1. இன்பமும் துன்பமும் வரத்தான் போகின்றன. அவற்றை மீறி இருக்க முயற்சிப்பதே தவம். இந்தக் குறள் படித்ததும் இதுதான் எனக்குத் தோன்றுகிறது

    ReplyDelete