Sunday, June 30, 2024

ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

 திருக்குறள் - ஒளி விடும் பொன் 


தங்கத்தில் சில மாசுக்கள் இருக்கும். அதை எப்படி எடுப்பது?  


பொன்னை நெருப்பில் இட்டு உருக்கினால், அதில் கலந்துள்ள மாசுக்கள் உருகிய பொன்னின் மேல் மிதக்கும். அப்படி மிதக்கும் அந்த கசடுகளை எளிதாக நீக்கி விடலாம். கசடுகள் நீங்கிய பின், பொன் மிகப் பொலிவாக இருக்கும். 


உருக்காமல் அந்த கசடுகளை நீக்க முடியாதா என்றால் முடியாது. அவை பொன்னோடு இறுகிக் கிடக்கும். பிரிக்க முடியாது. பொன்னை உருக்கினால், அந்த மாசுக்கள் தனியே கழன்று மிதக்கும். 


அது போல, நம்மிடமும் பல மாசுக்கள் இருக்கின்றன. அவற்றை எளிதில் போக்க முடியாது. அவற்றை போக்க வேண்டும் என்றால் நமக்கு வருகின்ற துன்பங்களை பொறுத்து, சகித்து அவற்றை தீர்க்கும் போது நம் மாசுக்கள் நீங்கி நாமும் அந்த பொன் போல பொலிவு பெறுவோம். 


பாடல் 


சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு


பொருள் 


சுடச் = நெருப்பில் இட்டு உருக்க 


சுடரும் = ஒளி விடும் 


 பொன்போல் = பொன்னைப் போல 


ஒளிவிடும் = ஒளி வீசும் 


துன்பம் = துன்பங்கள் 


சுடச்சுட = மேலும் மேலும் வருத்தும் போது 


நோற்கிற் = அதை ஏற்று, சகித்து, அனுபவித்து 


பவர்க்கு = அதை தாண்டிச் செல்பவர்களுக்கு 


இந்தக் குறளில் ஒரு சில நெளிவு சுளிவுகள் இருக்கின்றன. அவை என்ன என்று பார்ப்போம். 


'ஒளிவிடும்' என்ற சொல் குறளின் நடுவில் நிற்கிறது. 


சுடச் சுடரும் பொன் போல் ஒளி விடும் 


என்றும் கொள்ளலாம். 


அல்லது 


ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு


என்றும் கொள்ளலாம்.


முதலாவதாகக் கொண்டால், சுடச் சுட ஒளிரும் பொன் போல என்பது அர்த்தம் தரும். 


ஆனால், துன்பம் சுடச் சுட நோர்கிற்பவற்கு என்பது பொருள் முற்றுப் பெறாமல் நிற்கும். 


துன்பம் சுடச் சுட நோர்கிற்பவற்கு என்ன ஆகும்  என்பதற்கு பதில் கிடையாது. 


எனவே, 


சுடச் சுடரும் பொன்போல் 

ஒளிவிடும் துன்பம் சுடச் சுட நோற்கிற்பவர்கு என்று கொள்ள வேண்டும். 


அடுத்தது, 


இந்தக் குறள் இருப்பது தவம் என்ற அதிகாரத்தில். இந்தப் குறளில் தவம் எங்கே வருகிறது?  


"உற்ற நோய் நோற்றல்" என்று முன்பே சொல்லி விட்டார். வருகின்ற துன்பத்தை பொறுத்தல் தவத்தின் உரு என்று முன்பே சொல்லி விட்டதால், துன்பம் சுடச் சுட நோற்றல் என்பதை தவம் என்று கொள்ள வேண்டும். 


யோசித்துப் பார்ப்போம். 


ஒரு நாளில் நமக்கு எவ்வளவு துன்பங்கள் வருகின்றன. 


உடல் உபாதைகள், மனச் சிக்கல்கள், பணத் தட்டுபாடு, உறவுகளில் எழும் சிக்கல்கள், அலுவலகத்தில், அக்கம் பக்கத்தில், என்று ஆயிரம் வழிகளில் துன்பம் நம் கதவை தட்டிக் கொண்டே இருக்கிறது. 


எல்லா துன்பத்துக்கும் "ஐயோ, அம்மா, எனக்கு இப்படி ஆகி விட்டதே, எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது, நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன் ..."என்று புலம்பாமல், வந்த துன்பத்தை ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டால், துன்பம், துன்பமாக இருக்காது. 


சொல்வது எளிது. செய்வது கடினம். 


எனவேதான், பழக்கம் வேண்டும். தவம் முயல வேண்டும். 




No comments:

Post a Comment