கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -1/2
துக்கத்தை எப்படி கையாள்வது ?
எந்த ஒரு உணர்வையும் கையாள்வது என்றால் அதில் பயிற்சி வேண்டும். துக்கம் என்றாலே காத தூரம் ஓடி விடுகிறோம். அதை எப்படியாவது தவிர்க்க எண்ணுகிறோம். இப்படி பயந்து பயந்து ஓடிக் கொண்டே இருந்தால், ஒரு நாள் உண்மையிலேயே ஒரு துன்பம் வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமலேயே போய் விடும். சின்ன துன்பம் வந்தால் கூட தவித்துப் போய் விடுவோம்.
துன்பத்தை கையாளத் தெரிய வேண்டும். அதற்காக எங்கு போய் பயிற்சி எடுப்பது?
எங்கும் போக வேண்டாம். வரும் துன்பங்களை ஏற்றுக் கொண்டு அவற்றை கடந்து போகப் பழக வேண்டும்.
சரி துன்பமே வராவிட்டால் என்ன செய்வது?
அதற்குத்தான் விரதம், தூக்கம் விழிப்பது என்று வைத்து இருந்தார்கள். மாதத்தில் ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார். பசிக்கும். தலை வலிக்கும். சோர்வு வரும். ஆனால், பழகி விடும். அப்புறம், அது ஒரு பெரிய விடயமாகத் தெரியாது. அது போல் ஆண்டில் ஒரு நாள் சிவராத்திரி அன்று தூக்கம் தவிர்த்துப் பார்க்க வேண்டும். கடினம்தான். அவற்றை ஏற்றுப் பழகிக் கொண்டால் பின் நாம் எதிர்பார்க்காமல் பசி தூக்கம் போன்ற துன்பங்கள் வரும் போது அவற்றை எளிதில் நம்மால் சமாளிக்க முடியும்.
நான் பார்த்தவரை, நாம் துக்கம் அனுஷ்டிப்பது என்பதை நாம் சரியாக செய்வதில்லையோ என்ற சந்தேகம் உண்டு. துக்கம் வந்தால் அதை தள்ளிப் போட்டு விடுகிறோம். அதில் பல சடங்குகளைப் புகுத்தி அந்த உணர்வுகளை மழுங்கப் பண்ணி விடுகிறோமோ என்று தோன்றுகிறது. மனம் அந்த சமய சடங்குகளில், அதற்கு வேண்டிய சாமான்கள் வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, சடங்கு செய்யும் ஆட்களை கொண்டு வருவது,சுற்றம்/ நட்பை அழைப்பது, அதில் யாரை அழைக்க வேண்டும், யாரை அழைக்க வேண்டாம் என்ற சச்சரவு வேறு.
இதில் மனம் போனால் துக்கத்தில் எங்கே மனம் போகும்.
அனுபவிக்காமல் விட்ட துக்கம் எங்கோ போய் ஒளிந்து கொள்கிறது. பின், அது வேறு வேறு விதங்களில் வெளிப்படுகிறது.
ஜடாயு இறந்து போகிறார்.
இராமன் துக்கத்தில் புலம்புகிறான். அது தான் சரியான ஒன்று.
ஆனால், இலக்குவன் அதை மறுக்கிறான்.
அவன் என்ன சொன்னான் என்று நாளை சிந்திப்போம்.