Saturday, September 13, 2025

கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -2/2

 

கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -2/2


இதன் முதல் பகுதியை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 



ஜடாயு மாண்ட பின், இராமன் வருந்துகிறான். 

இலக்குவன் சொல்கிறான், 


"தீமை என்று எதுவும் இல்லை. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். அதற்கு எதற்கு வருந்த வேண்டும். நடக்க வேண்டியது நடந்தது. இது வருந்தவோ, துக்கப்படவோ வேண்டிய நேரம் அல்ல. அந்த அரக்கர்களை கொன்ற பின் நாம் இந்த துக்கத்தை அனுபவிக்கலாம்"


இப்படித்தான் வாழ்வில் ஒவ்வொரு உணர்சிகளையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். எந்த சந்தோஷம் வந்தாலும், "இல்லை இல்லை, இது என்ன பெரிய விடயம், நான் அதை அடைந்தால் சந்தோஷாம் அடைவேன் " என்று நினைக்கிறோம். அதை அடைந்த பின், வேறு ஒன்று வந்து நிற்கும். ஒரு நாளும் சந்தோஷமாய் இருப்பதே இல்லை. துக்கமும் அப்படியே.  "இது விதி, நான் ஆண், அழக் கூடாது, நானே தளர்ந்து போனால் பிள்ளைகள் பயந்து விடுவார்கள்" என்று ஏதேதோ சொல்லி துக்கத்தையும் தள்ளிப் போட்டு விடுகிறோம். 

இப்படி ஒவ்வொன்றாக தவிர்த்துக் கொண்டே போனால், வாழ்வில் உணர்வுகளுக்கு மதிப்பு இல்லாமல் போய் விடும். ஆங்கிலத்தில் Emotional Intelligence என்று சொல்லுவார்கள். 


இன்பமோ, துன்பமோ அவ்வவற்றை அவ்வப்போது அனுபவிக்க வேண்டும். அப்புறம், அப்புறம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகக் கூடாது. 

பாடல் 


என்றலும், இளைய கோ அவ் இராமனை
     இறைஞ்சி, 'யாண்டும்,
வென்றியாய்! விதியின் தன்மை
     பழியல விளைந்தது ஒன்றோ?
நின்று இனி நினைவது என்னே? நெருக்கி
    அவ் அரக்கர் தம்மைக்
கொன்றபின் அன்றோ, வெய்ய கொடுந்
     துயர் குளிப்பது?' என்றான்.

பொருள் 

என்றலும் = இராமனின் துயரச் சொற்களை கேட்ட பின் 

இளைய கோ = இளவல் இலக்குமன் 

அவ் இராமனை இறைஞ்சி = அந்த இராமனை வணங்கி 

 'யாண்டும், = எப்போதும் 

வென்றியாய்! = வெற்றியை உடையவனே 

விதியின் தன்மை = விதியின் தன்மை(யைத் தவிர) 

பழியல விளைந்தது ஒன்றோ? = பழி அல்லது தீமை என்று ஒன்று உண்டா. இல்லை. எல்லாம் விதியின் செயல் 

நின்று இனி நினைவது என்னே?  = அதையே நீண்ட நேரம் சிந்தித்து நடக்கப் போவது என்ன. 

நெருக்கி = மேல் சென்று 

அவ் அரக்கர் தம்மைக் = அந்த அரக்கர்களை 

கொன்றபின் அன்றோ = கொன்ற பின் அல்லவா 

வெய்ய  கொடுந்  துயர் குளிப்பது?' = மிகக் கொடுமையான துயரை நாம் அனுபவிக்க வேண்டும். 

என்றான் = என்று கூறினான் 

இப்ப துக்கப் படாதே. அரக்கர்ளை கொன்ற பின் ஜடாயு இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கலாம் என்கிறான். 

நடக்கிற காரியமா அது? அப்போது இந்தத் துக்கம் மறந்து விடும். 

சிந்திப்போம். 




No comments:

Post a Comment