நாலாயிர திவ்ய பிரபந்தம் - மெய்யே பெற்றோழிந்தேன்
நான் சில வயதானவர்களைப் பார்த்து இருக்கிறேன்.
எப்போது பார்த்தாலும், "முடியலை, எப்படா இந்த உலகத்தை விட்டுப் போவோம் என்று இருக்கிறது" என்று சலித்துக் கொள்வார்கள். சொல்லி ஒரு சில மணி நேரம் கூட இருக்காது, "சூடா ஒரு கப் காப்பி கொடேன்" என்று வந்து நிற்பார்கள்.
மூன்று வேளைச் சாப்பட்டில் ஒரு குறை இருக்காது. காப்பி, டீ என்று உள்ளே போய்க் கொண்டிருக்கும். நடு நடுவில் கொஞ்சம் நொறுக்குத் தீனி வேற. கேட்டால் அந்த பெருமாள் என்னை எப்போ கூப்பிடுவான் என்று இருக்கிறேன் என்று சொல்லுவார்கள்.
இந்த உலகை விட்டுப் போக யாருக்கும் மனம் இல்லை. காரணம் வேறு வேறாக இருக்கலாம்...பொண்ணுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டால், சிவனேன்னு கிளம்பிறலாம் என்று சொல்லுவார்கள். அப்புறம், அவளுக்கு ஒரு பிள்ளை பொறக்கட்டும், பேரனை பார்த்துவிட்டுப் போகிறேன் என்பார்கள், அப்புறம் அது பள்ளிக் கூடம் போகட்டும் என்பார்கள். அப்புறம் "நான் போய்ட்டா அவரை/அவளை யார் பாத்துப்பா" என்று காரணம் சொல்லுவார்கள்.
மொத்தத்தில் போக மனம் இல்லை.
வெளியே கேட்டால் கோவிந்தா, கிருஷ்ணா, சிவனே, முருகா, என்னை எப்ப கூப்டுக்கப் போற என்று டயலாக்.
இதுதான் உண்மை என்று ஆழ்வாரே சொல்கிறார்.
"எப்பப் பார்த்தாலும் எப்பப் போறது, எப்பப் போறதுன்னு பொய் சொல்லிக் கொண்டு திரிகிறேன். எனக்கு ஒன்றும் போக ஆசையில்லை. உலக இன்பங்களில் நன்றாக திளைத்து அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். ஏதோ உன் கருணை கிடைத்ததால் நல் வழிப் பட்டேன். நீ உன் அருள் கிடைக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை யார் தடுக்க முடியும். ஒரு வழியாக உன்னை வந்து அடைந்து விட்டேன். இனிமேல் உன்னை விட்டுப் பிரிய முடியாது. என்னை விட்டு விட்டுப் போய் விடாதே" என்று உருகுகிறார்.
பாடல்
கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.
பொருள்
கையார் = கையில்
சக்கரத்து = சக்கரத்தை கொண்ட
என் கருமா ணிக்கமே! = என்னுடைய கருமையான மாணிக்கமே
என்றென்று = என்று போவேன், என்று போவேன், என்று
பொய்யே கைம்மை சொல்லிப் = பொய்யாக சொல்லிக் கொண்டு
புறமேபுற மேஆடி = ஊருக்குள் நன்றாக ஆட்டம் போட்டு (அனுபவித்து)
மெய்யே பெற்றொழிந்தேன் = கடைசியில் உண்மையனா உன்னை பெற்று விட்டேன்
விதிவாய்க் கின்று = விதி வாய்கின்றது. உன் அருளைப் பெற வேண்டும் என்ற விதி இருந்தால்
காப்பார்ஆர்? = அதை யாரால் தடுக்க மூடியும்
ஐயோ! = ஐயோ
கண்ண பிராஅன்! = கண்ணபிரானே
அறையோ! = தாங்க முடியுமா
இனிப் போனாலே = இனி நீ என்னை விட்டுப் போய்விட்டால்
சில சமயம், உண்மையின் தரிசனம் கிடைக்கும். இதுதான் என்று நினைப்போம். நொடியில் கை விட்டுப் போய் விடும். இறை தரிசனமும், அருளும் நிரந்தரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அருள் கிடைத்தாலும், நாம் அதை விட்டு விட்டு உலக வாழ்க்கையில் மூழ்கி அதை மறந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது.
மணிவாசகருக்கு இறைவனே நேரில் வந்து அருள் பாலிக்க வந்தார். மணிவாசகர் இறைவனைக் கண்டார். அவர் பின்னால் போகாமல், குதிரை வாங்கப் போய் விட்டார்.
உயர்ந்தவற்றை விட்டு விட்டு அற்ப சுககங்களின் பின்னால் போய் விடுகிறோம்.
நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு தெருவுக்குத்தான் போகும் என்பார்கள்.
மணிவாசகர் தன்னை நாய் என்று பல முறை கூறிக் கொள்வார்.
"நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு"
"நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்து"
ஆழ்வார் உருகுகிறார். கண்ணா, உன் அருள் கிட்டியது ஏதோ விதிவசம். அதை நான் விட்டு விடாமல் இருக்க நீ தான் அருள் செய்ய வேண்டும். உன் அருள் இல்லை என்றால் நான் மீண்டும் இந்த உலக வாழ்க்கைக்குத் திரும்பி விடுவேன் என்கிறார்.
நமக்காக அவர் சொன்னது.
எப்போதேனும் உண்மையின் தரிசனம் கிடைப்பின், கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
"சிக்கெனப் பிடித்தேன்" என்று பிடித்துக் கொள்ளுங்கள்.