Wednesday, November 16, 2016

திருக்குறள் - உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும்

திருக்குறள் - உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும் 


சிலர் யாருக்குமே உதவி செய்ய மாட்டார்கள். அது கூட பரவாயில்லை, மற்றவர்கள் உதவி செய்தாலும், உதவி பெறுபவர்களை கண்டு பொறாமை படுவார்கள். அந்த உதவியை தடுக்க நினைப்பார்கள். மற்றவர்களின் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத தன்மையை அழுக்காறு என்பார்கள்.

அப்படி ஒருவன் மற்றவனுக்கு செய்யும் உதவியை கண்டு பொறுக்க மாட்டாதவன் சுற்றத்தார் உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாமல் கெட்டுப் போவார்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்

கொடுப்பது = ஒருவன் மற்றவருக்கு கொடுக்கும் உதைவியை

அழுக்கறுப்பான் = பொறுத்துக் கொள்ள மாட்டாதவன்; அல்லது அதை தடுக்க நினைப்பவன்

சுற்றம் = அவனது சுற்றத்தார்

 உடுப்பதூஉம் = உடுக்க உடையும்

உண்பதூஉம் = உண்பதற்கு உணவும்

இன்றிக் கெடும் = இல்லாமல் கெட்டுப்  போவார்கள் , அல்லது துன்பப் படுவார்கள்.

எளிமையான குறள் தான். இருந்தாலும் மிகுந்த ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது.

முதலாவது, கொடுப்பது கண்டு பொறாமை படுவது என்பது மிக மிக கேவலமான செயல். அப்படி பொறாமை படுபவன் ரொம்ப துன்பப் படுவான் என்று சொல்ல வந்தார் வள்ளுவர்.

துன்பத்தில் பெரிய துன்பம் எது ? பசிக்கு உணவு இல்லாததும், மானத்தை காக்க உடை இல்லாததும் தான். உணவு இல்லாமல் கூட சில நாட்கள் இருந்து விடலாம். உடை இல்லாமால் இருக்க முடியுமா ? உடையும் உணவும் இல்லாவிட்டால் எவ்வளவு துன்பமாக இருக்கும். அவ்வளவு துன்பப் படுவான் என்று சொல்ல வந்தார்.

சரி, பொறாமை படுபவன் துன்பப் பட்டால் சரி. எதற்காக அவன் சுற்றத்தார் உணவும் உடையும்  இன்றி துன்பப் பட வேண்டும் ?

இரண்டாவது,  ஒருவன் துன்பத்தில் இருக்கிறான் என்றால், உதவி என்று தன் சுற்றத்தாரிடம் போவான்.  அவர்களே உணவும் உடையும் இல்லாமல் இருந்தால், இவன் எங்கே போவான். சுற்றம் கெடும் என்றால், இவனும் கெடுவான் என்பது சொல்லாமல் சொன்னது. மேலும், தான் கெட்டு , சுற்றமும் கெட்டால் , உதவிக்கு கூட யாரும் இல்லாமல் தனித்துப் போவான் என்பது பொருள்.

சிந்தித்துப் பாருங்கள். துன்பம் யாருக்கும் வரும். அப்படி துன்பம் வந்த காலத்து, அதில் இருந்து விடுபட மற்றவர்களின் உதவி வேண்டும். உதவி செய்யவும்  யாரும் இல்லை என்றால் அது எவ்வளவு பெரிய துன்பம் ?


மூன்றாவது, சுற்றம் என்றால் ஏதோ தூரத்து சொந்தம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. தூரத்து  சொந்தக் காரன் எப்படி போனால் நமக்கு என்ன என்று பல பேர் நினைப்பார்கள். சுற்றம் என்றால் பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி, மக்கள் என்று  நெருங்கிய சொந்தம்.  பெற்ற பிள்ளை சாப்பாட்டுக்கும் , துணி மணிக்கும்  வழி இல்லாமல் தவிக்கிறான் அல்லது தவிக்கிறாள்  என்று கேட்டால் அந்த பெற்றோரின் மனம்  எவ்வளவு துன்பப் படும்.  அது மட்டும் அல்ல  பிள்ளைக்கு உதவி செய்யக் கூட முடியவில்லை என்றால் அது இன்னும் எவ்வளவு துன்பம்.


நான்காவது, அப்படி நம்முடைய பிள்ளைகளோ, பெற்றோரோ, உடன் பிறப்புகளோ உணவும் உடையும் இன்றி தவிக்க நாமே காரணம் என்று இருந்தால் அந்த நினைப்பு எவ்வளவு துன்பத்தைத் தரும். நம் பிள்ளைகளின் துன்பத்திற்கு நாமே காரணமாகி விட்டோமே என்று நினைத்தால் ஒரு பெற்றோர் எவ்வளவு  வருந்துவார்கள்.

இவ்வளவு பெரிய துன்பம் தேவையா ? மற்றவர்கள் செய்யும் உதவியைக் கண்டு  பொறாமை கொண்டால் இப்படிப் பட்ட துன்பங்கள் நிகழும் என்கிறார் வள்ளுவர்.

ஐந்தாவது, உணவும் உடையும் இல்லை என்றால் மற்றவைகள் இருக்குமா ? வீடு, நிலைக்கு, நகை, வண்டி , வாகனம் என்று எல்லாம் இருக்குமா ? ஒன்றும் இருக்காது அல்லவா ? எல்லாம் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டும். ஆனால், தெருவில் நின்று பிச்சை கூட கேட்க முடியாது காரணம், உடை இல்லை.  உடை இல்லாமல், தெருவில் சென்று பிச்சை கேட்பது எவ்வளவு அவமானம்.

ஆறாவது, துன்பத்தில் இருக்கும் சுற்றத்தார், "இவன் கொண்ட பொறாமையினால் தான், நமக்கு இந்த துன்பம் வந்தது " என்று எண்ணி இவனை வெறுத்து ஒதுக்குவார்கள். ஒண்ட இடம் இன்றி, உடுத்த உடை இன்றி, உண்ண உணவு இன்றி ....எவ்வளவு துன்பம் பாருங்கள்.

ஏழாவது, சரி இவ்வளவுதானா ? தானும், சுற்றமும் உணவும் உடையும் இல்லாமல்  போவோம் அவ்வளவுதானா என்றால் இல்லை. அதற்கு மேலும் சொல்கிறார்  "கெடும்" என்று. இதற்கு மேல் கெடுவதற்கு என்ன இருக்கிறது  ?

இருக்கிறது.

உணவும் உடையும் இல்லாத ஒருவன், தன் பிள்ளைகள் உணவும் உடையும் இல்லாமல் தவிப்பதை பார்க்கும்  ஒருவன் எப்படியாவது அவர்களுக்கு உணவும் உடையும்  பெற்றுத் தர வேண்டும் என்று ஏதாவது தவறான வழியில் முயல்வான். திருடுவான், மற்ற குறுக்கு வழியில் செல்ல நினைப்பான். அதனால் மேலும் பழி  வந்து சேரும்.  சிறைக்குப் போவான். குடும்பத்தை அனாதையாக விட்டு விட்டு சிறை செல்ல நேரிடும்.

மீண்டும் தலை எடுக்கவே முடியாத அளவு  தீராத துன்பத்தில் கிடந்து கெடுவான் என்ற பொருள் பட "கெடும்" என்றார் .

எவ்வளவு கோபமும், வெறுப்பும் இருந்தால் வள்ளுவர் இப்படி ஒரு குறளை எழுதி இருப்பார் ?

கொடுப்பதைக் கண்டு அழுக்காறு கொள்ளக் கூடாது என்பதை இதை விட அழுத்தமாக சொல்ல முடியாது.

சரி, யாரோ யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறார்கள். நாம் ஏன் அதை தடுக்கப் போகிறோம். அப்படி எல்லாம் யாரும் செய்வார்களா என்று கேட்டால், சில உதாரணங்கள் காட்டலாம்.

உணவு விடுதியில் , உணவு சாப்பிட்டபின் பில் வரும். நண்பர் , அந்த பில்லோடு சேர்த்து கொஞ்சம் டிப்ஸ் வைப்பார். "எதுக்கு எவ்வளவு டிப்ஸ், கொஞ்சம் குறைத்து வை. இல்லைனா எல்லோரிடமும் இப்படியே எதிர் பார்ப்பார்கள் " என்று நண்பன் கொடுப்பதை குறைப்பவன் , இந்த பட்டியலில் வருவான்.

அலுவலகத்தில், ஒருவனுக்கு பதவி உயர்வோ, அல்லது சம்பள உயர்வோ கொடுக்கும் முன், அவனுடைய மேலதிகாரி நம்மிடம் அபிப்பிராயம் கேட்கலாம். "அவனுக்கா, இப்ப எதுக்கு, அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் " அவனுக்கு வரும் நன்மையை தடுப்பவன் இந்த பட்டியலில் வருவான்.

வீட்டில் மனைவியோ கணவனோ , ஒரு அனாதை ஆசிரமத்துக்கோ அல்லது வேறு ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்துக்கோ நன்கொடை அளிக்கும் போது , எதுக்கு இவ்வளவு நன்கொடை என்று தடுப்பவன் இந்த பட்டியலில் வருவான்.

இப்படி நடை முறையில் எவ்வளவோ விதங்களில் நாம் பிறருக்கு வரும் நன்மைகளை  தடுத்து விடுகிறோம்.

அது தவறு.

கொடுப்பவர்களை வாழ்த்துவோம்.

பெறுபவர்களை , இன்னும் சிறந்து வரட்டும் என்று வாழ்த்துவோம்.



Tuesday, November 15, 2016

இராமாயணம் - பரதன் 15 - அறம் கெட முயன்றவன்

இராமாயணம் - பரதன் 15 - அறம் கெட முயன்றவன்



உன் தாய் செய்தது உனக்குத் தெரியாதா என்று கோசலை பரதனிடம் கேட்டவுடன், பரதன் கூறுவான் , என் தாய் செய்தது மட்டும் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் கீழே சொன்ன பாவங்கள் செய்த நரகத்துக்கு நான் போவேன் என்று கூறுகிறான்.

பாடல்

‘அறம் கெட முயன்றவன்,
    அருள் இல் நெஞ்சினன்,
பிறன் கடை நின்றவன்,
    பிறரைச் சீறினோன்,
மறம் கொடு மன் உயிர்
    கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மாதவர்க்கு அருந்
    துயரம் சூழ்ந்துேளான். ‘

பொருள்

அறம் கெட முயன்றவன் = அறம் கெட முயன்றவன்

அருள் இல் நெஞ்சினன் = அருள் இல்லாத மனமுடையவன்

பிறன் கடை நின்றவன் = மற்றவர்கள் வீட்டு வாசலில் நின்றவன்

பிறரைச் சீறினோன் = மற்றவர்கள் மேல் சீறி விழுந்தவன்

மறம் கொடு = சண்டையிட்டு

மன் உயிர் = நிலைத்து வாழும் உயிர்களை

கொன்று வாழ்ந்தவன் = கொலை செய்து வாழ்பவன்

துறந்த = பற்றினை துறந்த

மாதவர்க்கு = பெரிய தவம் செய்தவர்களுக்கு

அருந் துயரம் = பெரிய துயரை

சூழ்ந்துேளான்.= செய்பவன்

இவர்கள் எல்லோரும் செல்லும் நரகத்துக்கு செல்வேன்


அறத்தை கெடுக்கக் கூட வேண்டாம்...கெடுக்க நினைத்தாலே நரகம் தானாம். இங்கே அறம்  என்பதற்கு கொடை , தானம் என்றும் கொள்ளலாம் அல்லது தர்மம், நியாயம் என்ற அறக் கோட்டபாடுகளையும் கொள்ளலாம்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்

என்பது வள்ளுவம்.

பாவம் என்பது மற்றவர்களுக்குச் ஏதாவது கெடுதல் செய்தால் தான் என்று இல்லை. மனதில் அருள் இல்லாவிட்டாலும் பாவம் தான்.

நம்மிடம் எந்த தொடர்பும் இல்லாத உயிர்களிடத்து செலுத்தும் கருணைக்கு  அருள் என்று பெயர் என்பார் பரிமேலழகர். தெருவில் திரியும் நாய், பேருந்து நிலையத்தில் உள்ள  பிச்சைக்காரன், டிவி யில் எங்கோ யுத்தத்தில் அடிபடும் உயிர்களின் மேல் வரும் இரக்கம், இதற்கு அருள் என்று பெயர்.

அந்த கருணை எப்போதும் மனதில் இருக்க வேண்டும்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் அந்த மாதிரி  கருணை.

"பிறன் கடை நின்றவன்" ... தன்னிடம் ஒன்றும் இல்லை என்று மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து   அவர்கள் வீட்டு வாசலில் நின்றவன் என்றும் கொள்ளலாம் அல்லது  மற்றவன் மனைவியை கவர நினைத்து அவன் வீட்டு வாசலில் நின்றவன் வேண்டும் கொள்ளலாம். இரண்டும் தவறு தான்.

இப்படி ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறான்.

அதன் முடிவில் ....



Sunday, November 13, 2016

இராமாயணம் - பரதன் 14 - ஐய! நீ அறிந்திலை போலுமால்?

இராமாயணம் - பரதன் 14 - ஐய! நீ அறிந்திலை போலுமால்?


தான் பெற்ற வரங்களினால் தயரதன் இறக்கவும், இராமன் காடு போக நேர்ந்ததையும் கைகேயி சொல்லக் கேட்ட பரதன் அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். அறம் பிழைக்க தானும் ஒரு காரணம் என்று உலகம் சொல்லுமே என்று வருந்துகிறான்.

பின், கோசலையை பார்க்கச் செல்கிறான்.

இங்கே, கொஞ்சம் நிறுத்தி யோசிப்போம்.

பரதன் தன்னுடைய பாட்டனார் வீட்டில் இருந்து  கொண்டு,கைகேயியை தூண்டி விட்டு அரசை பெற்றுக் கொண்டான் என்று சிலர் அவன் மீது பழி சொல்லக் கேட்டிருக்கிறோம். அது உண்மையானால், அவன் கைகேயியை பழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சரி, அது கூட ஒரு நாடகம் என்று வைத்துக் கொண்டால், அவன் கோசலையை பார்க்க போக வேண்டிய அவசியம் இல்லை. ஒரு குற்ற உணர்வு இருந்தால் , அவன் கோசலையை பார்க்க நினைத்திருப்பானா ?

பார்க்கப் போனான்.

கீழானவர்கள் எப்போதும் தங்களது கீழ்மையை மற்றவற்றின் மேல் ஏற்றிக் கூறுவார்கள்.

உயர்ந்த நூல்களை படிக்கும் போது , அந்த நூல்கள் நம்மை மேலேற்றும் படி நாம் பார்த்துக் கொள்ள  வேண்டும்.நம் சிந்தனைகள், எண்ணங்கள் மேலே போக வேண்டும். மாறாக, அந்த நூலை, அதில் சொல்லப் பட்ட உயர்ந்த கருத்துகளை, நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது.  நாம் மேலே போக வேண்டுமே அல்லால்  நம்மை விட உயர்ந்தவற்றை நம் நிலைக்கு கீழே கொண்டு வரக் கூடாது.

பாடல்

மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே என்பது தேரும் சிந்தையாள்
‘கைகயர் கோமகள் இழைத்த கைதவம்
ஐய! நீ அறிந்திலை போலுமால்? ‘என்றாள்.

பொருள்

மை = கருமை, தீய எண்ணங்கள்

அறு = அறுந்த , இல்லாத

மனத்து  = மனதை கொண்டவன் (பரதன்)

ஒரு மாசு = ஒரு குற்றம் கூட

உளான் அலன் = இருப்பவன் அல்லன்

செய்யனே = செம்மையானவன். நேர்மையானவன்

என்பது = என்பதை

தேரும் = தேர்ந்து, ஆராய்ந்து அறிந்த

சிந்தையாள் = மனத்தைக் கொண்டவள் (கோசலை)

‘கைகயர் கோமகள் = கேகேய அரச குமாரி

இழைத்த = செய்த

கைதவம் = வஞ்சனை



ஐய! = ஐயனே 

 நீ = நீ 

அறிந்திலை = அறியவில்லை 

போலுமால்? = போலிருக்கிறது 

‘என்றாள் = என்றாள் 

பரதா , உன் தாய் செய்த வஞ்சனை உனக்குத் தெரியாதா என்று கேட்கிறாள்.  அதில்  மறைந்து நிற்கும் தொனி , உனக்கு தெரிந்தே இது நடந்திருக்கும் என்பதே.

பரதன் குற்றமற்றவன் என்று கோசாலைக்குத் தெரியும். மையறு மனத்தன் என்று  அவள் அறிவாள் .

இருந்தும் "உனக்குத் தெரியாதா " என்று ஏன் கேட்டாள் ?

அப்படி கேட்க்காமல் இருந்திருந்தால், பரதனுக்கு ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்கும்  வாய்ப்பு இல்லாமலேயே போய் இருக்கும்.   ,கோசலை   ஒன்றும் கேட்கவில்லை, ஒரு வேளை அவளுக்கும் பரதன் மேல் வருத்தம் இருந்திருக்குமோ என்று   நினைக்க வாய்ப்பு இருக்கிறது. 

அதை சரி செய்கிறான் கம்பன். 


அவள் அப்படி கேட்டவுடன், பரதன் துடித்துப் போகிறான். 

கைகேயி செய்தது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால், இன்னின்ன பாவங்கள் செய்தவர்கள்   போகும் நரகத்திற்கு நான் போகக் கடவேன் என்று பாவங்களின் பட்டியல் தருகிறான். 

எதெல்லாம் செய்யக் கூடாது என்று பாடம் நடத்துகிறான் கம்பன் , பரதன் வாயிலாக.

அவை என்னென்ன என்று பார்ப்போம். 


Wednesday, November 9, 2016

இராமாயணம் - பரதன் 14 - “தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?

இராமாயணம் - பரதன் 14 - “தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?


தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், ஆசிரியன் என்பது எல்லாம் ஒருவரை சேர்ந்தது அல்ல. அது ஒருவர் செய்யும் செயலைப் பொறுத்தது. 

பிள்ளையை பெற்றவள் எல்லாம் தாயாக முடியாது. தாய் என்பது, பிள்ளையை நல்ல முறையில் வளர்ப்பதில் இருக்கிறது. 

தந்தையான இறைவன் தாயும் ஆனான். தாயுமானவன் என்று அவன்  பெயர்.

தந்தை என்ற பெயரில் ஒரு தந்தை செய்யக் கூடாத செயல்களை எல்லாம் செய்பவர்களை பற்றி செய்தித் தாள்களில் படிக்கிறோம். 

ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு தகாத செயல்கள் செய்பவர்களை பற்றியும் படிக்கிறோம். 

எனவே, இவை செய்யும் செயலைப் பொறுத்து அமைவது. 

தாய்மை மனதில் இருந்தால் , ஒரு ஆணும் தாயாக முடியும். அன்பு மனதில் இல்லை என்றல், ஒரு பிள்ளை பெற்ற பெண்ணும் தாயாக முடியாது. 


தாடகை ஒரு பெண் என்பதால் அவளைக் கொல்லாமல் நிற்கிறான் இராமன். அவனைப் பார்த்து கௌசிகன் சொல்வான், "இந்த கொடியவளை பெண் என்று நீ நினைக்கிறாயா" என்று. பெண் போல வடிவம் இருந்தால் பெண்ணாக முடியாது. பெண் என்றால் அந்த பெண்மைக்குரிய குணங்கள் இருக்க வேண்டும். 

‘தீது என்று உள்ளவை யாவையும் செய்து எமைக்
கோது என்று உண்டிலள் : இத்தனையே குறை :
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்
மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்! ‘

என்பான் கம்பன்.

தான் பெற்ற இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கும், தயரதனை வானுக்கும் அனுப்பினேன் என்றாள் கைகேயி பரதனிடம்.

அதைக் கேட்டு கொதித்துப் போய் பரதன் சொல்கிறான்

"நீ இன்னுமும் உயிரோடு இருக்கிறாய். நானும் இருக்கிறேன். உன்னை தண்டிக்காமல் இருப்பதற்கு காரணம் நீ தாய் என்பதால் அல்ல, இராமன் கோபப் படுவானே என்பதால் " என்கிறான்.

பாடல்

நீ இனம் இருந்தனை; யானும், நின்றனென்;
“ஏ” எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்;
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்,
“தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?


பொருள்

நீ = நீ, கைகேயி

இனம் = இன்னும்

இருந்தனை; = உயிரோடு இருக்கிறாய்

யானும் = நானும் (பரதன்)

நின்றனென் = ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டு இருக்கிறேன்

“ஏ”  = ஏ

எனும் = என்று

மாத்திரத்து = சொல்லும் நேரத்திற்குள்

எற்றுகிற்றிலென் = உன்னை தண்டிக்காமல் இருக்கிறேன்

ஆயவன் = தாய் போன்ற இராமன்

முனியும் = கோபம் கொள்வான்

என்று = என்று

அஞ்சினேன் = அச்சம் கொண்டேன். பயம் கொண்டேன்

அலால் = இல்லை என்றால்

“தாய்” எனும் = தாய் என்ற

பெயர் = பெயர்

எனைத்  = என்னை

தடுக்கற் பாலதோ? = தடுக்கும் சக்தி வாய்ந்ததா ? இல்லை.

 குழந்தையை பெற்று விட்டால் மட்டும் தாயாக முடியாது.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் என்பார் மணிவாசகர். பால் கொடுத்தால் அழகு குறைந்து  விடும் என்று நினைக்கும் ஒரு பெண் தாயாக முடியுமா ?

கைகேயி பரதனைப் பெற்றவள்தான். அதனால் அவளை தாய் என்று கருதவில்லை பரதன். கணவனை கொண்டு, இன்னொரு பிள்ளையை கானகம் அனுப்பிய ஒரு  பெண் எப்படி தாயக இருக்க முடியும் என்பது பரதனின் எண்ணம்.

தவறு செய்த தாய் ஒருபுறம்.

தவறிப் போன அரச நீதி மறுபுறம்.

தாயின் மேல் அன்பு கொண்ட இராமன் இன்னொரு புறம்.

தண்டித்தாலும் தவறு. தண்டிக்காவிட்டாலும் தவறு.

தவிக்கிறான் பரதன். 

சோதனைகள் மனிதனின் உண்மையான  குணத்தை வெளியில் காட்டும். 

பரதன் என்ன செய்தான் என்று பார்ப்போம். 

Tuesday, November 8, 2016

இராமாயணம் - பரதன் 13 - ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்

இராமாயணம் - பரதன் 13 - ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்




நாடு ரொம்ப கெட்டுப் போய் விட்டது. இலஞ்சம், அராஜகம் எல்லாம் தலை விரித்து ஆடுகிறது. நீதி நேர்மை எல்லாம் செத்து விட்டது என்று பல பேர் நொந்து கொள்வார்கள். சரி, இதை சரி செய்ய நீ என்ன செய்தாய் என்றால் "நான் என்ன செய்ய முடியும்..தனி ஒரு ஆள் இந்த நாட்டை திருத்த முடியுமா " என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள்.


ஒரு அநீதி நடக்கிறது என்றால் , அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதும் கூட அந்த அநீதிக்கு துணை போவது போலத்தான் . ஒன்றும் செய்யாமல் இருப்பதும் , அந்த அநீதியை செய்வது போலத்தான் என்பது பரதனின் எண்ணம்.


எனக்கு உன் தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பி, உனக்கு நாட்டைப் பெற்றுத் தந்தேன் என்று கைகேயி கூறியதைக் கேட்ட பரதன் தவித்துப் போகிறான்.


அவன் கைகேயி தண்டிக்க முடியவில்லை ஏன் என்றால் கைகேயிக்கு ஏதாவது துன்பம் செய்தால் அது இராமனுக்கு பிடிக்காது என்று தெரியும் பரதனுக்கு. சரி, கைகேயியைத்தான் ஒன்றும் செய்யவில்லை, தானும் இந்த அறம் வழுவிய செயலைக் கண்டு இறக்கவில்லை என்றால் தானும் இந்த அநீதியை பங்கு கொண்டது போலத்தான் என்கிறான்.

பாடல்

‘மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம்
பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால்,
கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்?

பொருள்

‘மாண்டனன் = இறந்தான்

எந்தை = என் தந்தையாகிய தயரதன்

என் = என்னுடைய

தம்முன் = முன் பிறந்த இராமன்

மா தவம் = பெரிய தவம்

பூண்டனன் = மேற்கொண்டான்

நின் = உன்னுடைய

கொடும் = கொடிய

புணர்ப்பினால் = சூழ்ச்சியால்

என்றால் = என்றால்

கீண்டிலென் வாய் = உன் வாயை கிழிக்கவில்லை

அது கேட்டும் = இவற்றை எல்லாம் கேட்ட பின்னும்

நின்ற யான் = இருக்கும் நான்

ஆண்டனெனே = ஆண்டேன்

அன்றோ  =  இல்லையா

அரசை ஆசையால்? = அரசை ஆசையால்

இப்படிப் பட்ட வரம் கேட்ட உன் வாயைக் கிழிக்கவில்லை. நானும் இறக்காமல் இருக்கிறேன். இது , நான் இந்த அரசை ஆசையோடு ஏற்றுக் கொண்டதற்கு  ஒப்பாகும் என்றான்.

ஒரு தலைவன் , அவனுக்கு கீழே உள்ளவர்கள் தவறு செய்தால் , ஒன்று அவர்களை  தண்டிக்க வேண்டும். அல்லது, தண்டிக்க முடியவில்லை என்றால் அந்த தலைவர் பதவியை விடவேண்டும்.

இல்லை என்றால், அந்த தவறில் தலைவனுக்கும் பங்கு உண்டு. நான் செய்யவில்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது.

இது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அல்ல, ஒரு நிறுவனத்தின் தலைவருக்கும், ஒரு குடும்பத்தின் தலைவருக்கும் பொருந்தும்.

பிள்ளைகள் தவறு செய்தால் கண்டித்து திருத்த வேண்டும்.

பரதனின் சோகத்திலும் ஓங்கி நிற்பது  அறச் சிந்தனையே

Monday, November 7, 2016

தேவாரம் - துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என் ?

தேவாரம் - துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்  ?


 இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு  பெரும்பாலும் அது நாயக நாயகி பாவமாகவே இருந்திருக்கிறது. 

சுந்தரர் ஒருவர் தான் அதை மாற்றினார். இறைவனை தோழனாக பாவித்தார்.

நட்பு அனைத்து உறவுகளிலும் உயர்ந்தது.

நட்பு என்றால் ஏதோ பெயரளவில் அல்ல.

சிவ பெருமானிடம் love லெட்டர் கொடுத்து அனுப்பியவர் சுந்தரர்...அதுவும் முதல் மனைவி இருக்கும் போதே , இரண்டாவது ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்து அனுப்பினார். சிவ பெருமானும் கொண்டு போனார்.

நட்பு என்றால் கிண்டல், கேலி எல்லாம் இருக்கும் அல்லவா.

சுந்தரர் சிவனைப் பார்த்து கேட்கிறார்

"இங்க பாரு, உன் பக்தர்கள் உன் அருள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அது இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என்று காத்து கிடக்கிறார்கள். நீயோ காலம் தாழ்த்திக் கொண்டே போகிறாய். நீ அருள் செய்வதற்கு முன் அவர்கள் இறந்து விட்டால் என்ன செய்வாய் ? அப்புறம் யாருக்கு அருள் செய்வாய் ? அது மட்டும் அல்ல, உனக்கு இருக்கும் அருளுக்கு , இந்த பக்தர்களுக்கு கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்த போய் விடும்...போ சீக்கிரம் அருள் செய் " கட்டளை இருக்கிறார்.

பாடல்

நஞ்சி, “இடை இன்று நாளை” என்று உம்மை நச்சுவார் 
துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்! 
பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்! 
முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே!

பொருள்


நஞ்சி, = விரும்பி

“இடை இன்று நாளை” = இன்று வரும் , நாளை வரும்

என்று = என்று

 உம்மை  = உன்னை

நச்சுவார் = உள்ளன்போடு விரும்புவார் 


துஞ்சியிட்டால் = இறந்து விட்டால்

பின்னைச் = அப்புறம்  பின்னால்

செய்வது என்? = என்ன செய்வது ?

அடிகேள், = அடிகளே கேள்

சொலீர் = ஆரவாரம் எழுப்பும் கழல்கள் அணிந்த திருவடிகளை உடையவரே

பஞ்சி = பஞ்சு

இடப் புட்டில் = இட்டு வைத்தால்

கீறுமோ? = உடைந்து விடுமோ

பணியீர், = சொல்வீர்

அருள்! = உம்முடைய அருள்

முஞ்சி இடைச் =  புல்லின் மேல்

சங்கம் = சங்கு

ஆர்க்கும் = சப்தம் எழுப்பும்

சீர் முதுகுன்றரே! = சிறந்த முது குன்று என்ற ஊரில் உள்ளவரே


நச்சி என்றால் விரும்பி , உள்ளன்போடு விரும்பி என்று பொருள். விரும்பப் படாதவன் செல்வம் ஊர் நடுவில் ஒரு நச்சு மரம் பழுத்தது போன்றது என்பார் வள்ளுவர்.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று

யாரிடமும் அனுப்பு செலுத்தாதவன். அவனிடம் யாரும் போக மாட்டார்கள். அவனுக்கு செல்வம்  வந்தால் அது நச்சு மரம் பழுத்தது போலத்தான் என்கிறார்.

மானிட வாழ்வு கொஞ்சம் காலம்தான். சிவனே, உன் அடியார்கள் இறப்பதற்குள் போய் அருள் செய் என்று இறைவனையே பணிக்கிறார்.

துஞ்சியிட்டால் = இறந்து விட்டால்

துஞ்சுதல் என்றால் தூங்குதல் என்று பொருள். 

தமிழிலே மங்கள வழக்கு என்று ஒன்று உண்டு. 

எப்போதும் நல்ல சொற்களையே சொல்ல வேண்டும் என்பது தமிழ் மரபு. 

அதிலும் குறிப்பாக மங்கல சொற்களையே எப்போதும் பயன்படுத்த வேண்டும் என்று  விதி செய்து வைத்து இருந்தார்கள். 

சொற்களுக்காக பெரிய பெரிய புலவர்கள் எல்லாம் திணறி இருக்கிறார்கள். 

கடைசியில் இறைவனிடமே சென்று , நீயே ஒரு சொல் எடுத்துக் கொடு என்று வேண்டி , வாங்கியும் இருக்கிறார்கள். 

சேக்கிழாருக்கு , அருணகிரி நாதருக்கு, கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு இறைவனே  அடி எடுத்துக் கொடுத்தான் என்பது வரலாறு. 

இலக்கியம் படிக்கும் போது இடையிடையே  இலக்கணமும் சற்று படிப்போமே 

இறைவனிடம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு முறையும் இல்லை. 

உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி இருங்கள். 

தமிழில் அன்று வைதாரையும் வாழ வைத்தோன் என்பார் அருணகிரி நாதர். 

மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
வைதாரையும் ஆங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம்போல்
கைதான் இருபது உடையான் தலைப் பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே!

என்பது கந்தரலங்காரம் 


சுந்தரர் பாடிய பாடல்களுக்கு திருப்பாட்டு என்று பெயர். தேவாரம் என்பது திருநாவுக்கரசர்  பாடிய பாடல்களை மட்டுமே குறிக்கும். எளிதாக அடையாளம் காண  தேவாரம் என்று தலைப்பில் கொடுத்திருக்கிறேன்.

திருபாட்டை  தேடிப் படியுங்கள் . அத்தனையும் தேன் .


இராமாயணம் - பரதன் 12 - நெடியவன் முனியும்

இராமாயணம் - பரதன் 12 - நெடியவன் முனியும் 


"உன் தந்தை இறந்து விட்டார். இராமன் கானகம் போய் விட்டான். அவனோடு சீதையும், இலக்குவனும் போய் விட்டார்கள்" என்று கைகேயி பரதனிடம் கூறினாள் .


“குற்றம் ஒன்று இல்லையேல்,
    கொதித்து வேறு உேளார்
செற்றதும் இல்லையேல்
    தயெ்வத்தால் அன்றேல்
பெற்றவன் இருக்கவே
    பிள்ளை கான் புக
உற்றது என்? பின் அவன்

இராமன் குற்றம் எதுவும் செய்யவில்லையென்றால், வேறு ஒருவர் செய்ய வில்லையென்றால், தெய்வத்தால் ஆனது இல்லை என்றால், பெற்றவன் இருக்க இராமன் ஏன் கானகம் போனான் என்று பரதன் கேட்கிறான்.

உன் தந்தை எனக்கு தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பினேன், தயரதன் அது கேட்டு மாண்டு போனான் என்றாள்.

பரதனால் தாங்க முடியவில்லை.

இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி யோசிப்போம்.

பரதன் நிலையில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்.

அரசு கையில் வந்து விட்டது. இராமனும் இலக்குவனும் கானகம் போய் விட்டார்கள். தயரதனும் இறந்து விட்டான். இனி என்ன வேண்டும் ? அரசை மகிழ்ச்சியாக ஆளலாம் என்று நினைக்கலாம். சந்தோஷப் படலாம்.

அல்லது, இது சரி இல்லை. நமக்கு எதுக்கு இந்த பழிச் சொல். பேசாமல் இராமனிடமே இந்த அரசை கொடுத்து விடலாம் என்று நினைக்கலாம். என்று பழிக்கு அஞ்சி இருக்கலாம்.

அல்லது, இந்த அரசு என்பது பெரும் பாரம். இதை யார் கட்டி இழுப்பார். இராமனே இதை பார்த்துக் கொள்ளட்டும் என்று பொறுப்பை தட்டி கழிக்க நினைக்கலாம்.

பரதன் இது எதுவும் செய்யவில்லை.

கோபத்தில் கொந்தளிக்கிறான்.

கைகேயியை கொல்லப் பார்க்கிறான். இப்படி ஒரு பாதகத்தை செய்த அவளை தண்டிக்க நினைக்கிறான்.

ஆனால், அப்படி செய்தால் இராமன் கோபப் படுவான்  என்று நினைத்து கைகேயியை ஒன்றும்  செய்யாமல் விடுகிறான்.

பாடல்

கொடிய வெங் கோபத்தால் கொதித்த கோளரி,
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்;
‘நெடியவன் முனியும்’ என்று அஞ்சி நின்றனன்;
இடிஉரும் அனைய வெம் மொழி இயம்புவான்;

பொருள்

கொடிய = கொடுமையான

வெங் = வெம்மையான

கோபத்தால் = கோபத்தால்

கொதித்த = கொதித்த

கோளரி = சிங்கம் போன்ற பரதன்

கடியவள் = கடுமையானவள்

தாய் எனக் = தாய் என்று

கருதுகின்றிலன் = நினைக்கவில்லை

‘நெடியவன் முனியும்’ = பெரியவன் கோபிப்பான்

என்று = என்று

அஞ்சி = பயந்து

நின்றனன் = நின்றான்

இடிஉரும் = இடி இடிப்பது

அனைய = போன்ற

வெம் மொழி = சூடான சொற்களை

 இயம்புவான் = சொல்லுவான்

ஒரு பக்கம் தாய். என்னதான் அவள் தவறு செய்திருந்தாலும் , தாயின் மேல் உள்ள அன்பு  இல்லாமல் இருக்காது. கைகேயி பரதனுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. அவனுக்கு ஒரு பெரிய இராஜ்யத்தை பெற்றுத் தந்திருக்கிறான். சொல்லப் போனால் பரதன் அவளுக்கு நன்றி சொல்லலாம். இல்லை என்றால்  சும்மா இருக்கலாம். அவள் மேல் கோபம் கொள்ள ஒரு காரணமும் இல்லை - அறம் பிழைத்த ஒன்றைத் தவிர.

இன்னோரு பக்கம், இராமன். அவன் மேல் கொண்ட பக்தி. காதல்.

இன்னொரு பக்கம், அரச நீதி. தர்மம். அறம் .

தாயே ஆனாலும், தனக்கு ஒரு பெரிய அரசையே பெற்றுத் தந்தாலும், அது  அறம் அல்லாத  வழியில் வந்தது என்று அறிந்து கொதித்துப் போகிறான். அப்படி செய்த  கைகேயியை கொன்று விடலாமா  என்று கூட நினைக்கிறான்.

ஆனால், அப்படி செய்தால் இராமன் சினம் கொள்வான். கைகேயியை கொன்றால்  இராமானுக்குப் பிடிக்காது என்று நினைத்து ஒன்றும் செய்யாமல் நின்றான்.

அரசு வேண்டாம். தாய் கூட வேண்டாம். இந்த இடத்தில் இராமன் ஒன்றே பிராதானம்  என்று நினைக்கிறான்.

இராம பக்தி.

பின்னால் பார்க்கப் போகிறோம். இராமனே சொன்னால் கூட , அறம் என்று அவன் நினைத்ததை , பரதன் ஒரு போதும் விலக நினைக்கவில்லை. இராம பக்தியையும்  விஞ்சி நிற்கிறது அவனின் அறத்தின் மேல் கொண்ட பிடிப்பு.

அதுதான் பரதன்.