இராமாயணம் - பரதன் 12 - நெடியவன் முனியும்
"உன் தந்தை இறந்து விட்டார். இராமன் கானகம் போய் விட்டான். அவனோடு சீதையும், இலக்குவனும் போய் விட்டார்கள்" என்று கைகேயி பரதனிடம் கூறினாள் .
“குற்றம் ஒன்று இல்லையேல்,
கொதித்து வேறு உேளார்
செற்றதும் இல்லையேல்
தயெ்வத்தால் அன்றேல்
பெற்றவன் இருக்கவே
பிள்ளை கான் புக
உற்றது என்? பின் அவன்
இராமன் குற்றம் எதுவும் செய்யவில்லையென்றால், வேறு ஒருவர் செய்ய வில்லையென்றால், தெய்வத்தால் ஆனது இல்லை என்றால், பெற்றவன் இருக்க இராமன் ஏன் கானகம் போனான் என்று பரதன் கேட்கிறான்.
உன் தந்தை எனக்கு தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பினேன், தயரதன் அது கேட்டு மாண்டு போனான் என்றாள்.
பரதனால் தாங்க முடியவில்லை.
இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி யோசிப்போம்.
பரதன் நிலையில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்.
அரசு கையில் வந்து விட்டது. இராமனும் இலக்குவனும் கானகம் போய் விட்டார்கள். தயரதனும் இறந்து விட்டான். இனி என்ன வேண்டும் ? அரசை மகிழ்ச்சியாக ஆளலாம் என்று நினைக்கலாம். சந்தோஷப் படலாம்.
அல்லது, இது சரி இல்லை. நமக்கு எதுக்கு இந்த பழிச் சொல். பேசாமல் இராமனிடமே இந்த அரசை கொடுத்து விடலாம் என்று நினைக்கலாம். என்று பழிக்கு அஞ்சி இருக்கலாம்.
அல்லது, இந்த அரசு என்பது பெரும் பாரம். இதை யார் கட்டி இழுப்பார். இராமனே இதை பார்த்துக் கொள்ளட்டும் என்று பொறுப்பை தட்டி கழிக்க நினைக்கலாம்.
பரதன் இது எதுவும் செய்யவில்லை.
கோபத்தில் கொந்தளிக்கிறான்.
கைகேயியை கொல்லப் பார்க்கிறான். இப்படி ஒரு பாதகத்தை செய்த அவளை தண்டிக்க நினைக்கிறான்.
ஆனால், அப்படி செய்தால் இராமன் கோபப் படுவான் என்று நினைத்து கைகேயியை ஒன்றும் செய்யாமல் விடுகிறான்.
பாடல்
கொடிய வெங் கோபத்தால் கொதித்த கோளரி,
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்;
‘நெடியவன் முனியும்’ என்று அஞ்சி நின்றனன்;
இடிஉரும் அனைய வெம் மொழி இயம்புவான்;
பொருள்
கொடிய = கொடுமையான
வெங் = வெம்மையான
கோபத்தால் = கோபத்தால்
கொதித்த = கொதித்த
கோளரி = சிங்கம் போன்ற பரதன்
கடியவள் = கடுமையானவள்
தாய் எனக் = தாய் என்று
கருதுகின்றிலன் = நினைக்கவில்லை
‘நெடியவன் முனியும்’ = பெரியவன் கோபிப்பான்
என்று = என்று
அஞ்சி = பயந்து
நின்றனன் = நின்றான்
இடிஉரும் = இடி இடிப்பது
அனைய = போன்ற
வெம் மொழி = சூடான சொற்களை
இயம்புவான் = சொல்லுவான்
ஒரு பக்கம் தாய். என்னதான் அவள் தவறு செய்திருந்தாலும் , தாயின் மேல் உள்ள அன்பு இல்லாமல் இருக்காது. கைகேயி பரதனுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. அவனுக்கு ஒரு பெரிய இராஜ்யத்தை பெற்றுத் தந்திருக்கிறான். சொல்லப் போனால் பரதன் அவளுக்கு நன்றி சொல்லலாம். இல்லை என்றால் சும்மா இருக்கலாம். அவள் மேல் கோபம் கொள்ள ஒரு காரணமும் இல்லை - அறம் பிழைத்த ஒன்றைத் தவிர.
இன்னோரு பக்கம், இராமன். அவன் மேல் கொண்ட பக்தி. காதல்.
இன்னொரு பக்கம், அரச நீதி. தர்மம். அறம் .
தாயே ஆனாலும், தனக்கு ஒரு பெரிய அரசையே பெற்றுத் தந்தாலும், அது அறம் அல்லாத வழியில் வந்தது என்று அறிந்து கொதித்துப் போகிறான். அப்படி செய்த கைகேயியை கொன்று விடலாமா என்று கூட நினைக்கிறான்.
ஆனால், அப்படி செய்தால் இராமன் சினம் கொள்வான். கைகேயியை கொன்றால் இராமானுக்குப் பிடிக்காது என்று நினைத்து ஒன்றும் செய்யாமல் நின்றான்.
அரசு வேண்டாம். தாய் கூட வேண்டாம். இந்த இடத்தில் இராமன் ஒன்றே பிராதானம் என்று நினைக்கிறான்.
இராம பக்தி.
பின்னால் பார்க்கப் போகிறோம். இராமனே சொன்னால் கூட , அறம் என்று அவன் நினைத்ததை , பரதன் ஒரு போதும் விலக நினைக்கவில்லை. இராம பக்தியையும் விஞ்சி நிற்கிறது அவனின் அறத்தின் மேல் கொண்ட பிடிப்பு.
அதுதான் பரதன்.
ராமனிடம் உள்ள பக்தி ராமனை விட உயர்ந்தது போலும்!
ReplyDeleteதவிர அறத்தின் மேல் உள்ள அசைக்கமுடியாத உறுதி.எப்படி பார்த்தாலும் பரதன் உயர்ந்தே காணப்படுகிறான்.