தேவாரம் - நல்லக விளக்கது நமச்சி வாயவே.
வீடுகளில் , சாயந்தரம் விளக்கு ஏற்றுவார்கள். கார்த்திகை போன்ற மாதங்களில் நிறைய அகல் விளக்கு ஏற்றுவார்கள்.
எதற்கு விளக்கு ஏற்ற வேண்டும் ?
திருநாவுக்கரசர் சைவ சமயத்தில் பிறந்து, தடம் மாறி சமண சமயத்தில் சேர்ந்தார். அந்த சமண சமயத்தில் நீண்ட காலம் இருந்தார். பின் , மீண்டு சைவ சமயத்தில் வந்து சேர்ந்தார். அவர் அப்படி சமண சமயத்தை விட்டு விட்டு சைவ சமயத்தில் சேர்ந்ததில் சமணர்களுக்கு மிகுந்த கோபம். அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு நிறைய துன்பங்கள் செய்தார்கள்.
கல்லைக் கட்டி கடலில் போட்டார்கள், சுண்ணாம்பு உள்ள அறையில் அடைத்து வைத்தார்கள், அறையில் அடைத்து வைத்து விறகை போட்டு தீ மூட்டினார்கள், யானையை கொண்டு அவருடைய தலையை மிதிக்கச் சொன்னார்கள்....
அந்த சமயத்தில், நாவுக்கரசர் நமச்சிவாய பதிகம் என்ற பத்து பாடல்களை பாடினார்.
அதில் ஒன்று
பாடல்
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
பொருள்
இல்லக = இல்லத்தினுள்
விளக்கது = உள்ள விளக்கானது
விருள்கெ டுப்பது = இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது
சொல்லக = சொல்லினுள் உள்ள
விளக்கது = விளக்கானது
சோதி யுள்ளது = ஜோதி வடிவில் உள்ளது
பல்லக = பலருடைய மனதில் உள்ள
விளக்கது = விளக்கு அது
பலருங் காண்பது = எல்லோரும் காண்பது
நல்லக = நல்லவர்களின் மனதில் உள்ள
விளக்கது = விளக்கு அது
நமச்சி வாயவே = "நமச்சிவாய" என்ற மந்திரம்
என்ன இது வீட்டில் உள்ள உள்ள விளக்கு, சொல்லில் உள்ள விளக்கு, பலருடைய மற்றும் நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு என்று ஒரே விளக்காக இருக்கிறதே...என்ன அர்த்தம் ?
விளக்கு என்பது இருளை போக்குவது. இருளை விலக்க வேண்டும் என்றால் , இருளை குறைக்க முடியாது. ஒரு விளக்கை ஏற்றினால் தானே இருள் விலகி விடும்.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த இருளாக இருந்தாலும் ஒரே ஒரு விளக்கை கொண்டு வந்தால் அந்த இருள் அகன்று விடும்.
அஞ்ஞானம் என்ற இருள் நம்மிடம் மண்டிக் கிடக்கிறது. எத்தனையோ பிறவிகளில் சேர்த்த இருள். அந்த இருளை எப்படி போக்குவது ? நிறைய புத்தகங்களை கொண்டு வந்து வைத்தால் அது போகுமா ? நிறைய செல்வங்களை கொண்டு வந்து வைத்தால் போகுமா ? போகாது. ஒரே ஒரு விளக்கு போதும் அந்த இருளை விரட்ட.
அந்த விளக்கு "நமச்சிவாய" என்ற மந்திர விளக்கு. நமச்சிவாய என்று சொன்னால் அஞ்ஞான இருள் அகன்று விடும்.
இல்லத்தினுள் இருக்கும் இருளை எப்படி விளக்கின் ஒளி கெடுக்கிறதோ, அது போல் மனதில் உள்ள இருளை கெடுப்பது நமச்சிவாய என்ற மந்திரச் சொல்.
அது எப்படி, நமச்சிவாய என்று சொன்னால் இருள் போகுமா ? அந்த சொல்லில் அப்படி என்ன இருக்கிறது ?
அந்த சொல்லுக்குள் ஜோதி இருக்கிறது.
"சொல்லக விளக்கது ஜோதி உள்ளது"
அந்த சொல்லுக்குள் ஜோதி உள்ளது.
சரி, அது சைவ சமயத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தானே பொருந்தும். நமச்சிவாய என்று மற்ற மதத்தில் , ஏன், இந்து சமயத்தில் உள்ள மற்ற பிரிவினர் கூட சொல்ல மாட்டார்களே..என்ன செய்வது ?
அது எல்லோருடைய மனதிலும் உள்ளது. சைவ சமயத்துக்கு மட்டும் சொந்தம் இல்லை.
"பல்லக விளக்கது பலரும் காண்பது"
பலருடைய மனதிலும் உள்ளது. பலரும் காணும்படி உள்ளது.
அப்படியானால், எல்லோரும் காணமுடியுமா ? சிலர் இதெல்லாம் இல்லை , தவறு என்று சொல்கிறார்களே ?
நல்லவர்களின் மனதில் உள்ளது.
நல்லக விளக்கது நமச்சிவாயவே . நல்லவர்களின் மனதில் தோன்றி சுடர் விடும் விளக்கு அது.
கொஞ்சம் நம்பும்படி இல்லையே ... நமச்சிவாய என்று சொன்னால் அனைத்து பாவங்களும் அஞ்ஞானமும் போய் விடுமா ?
அதற்கு பாரதியார் பதில் சொல்கிறார்.
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'
காடு பெரியது தான், அதற்காக பெரிய நெருப்பு வேண்டாம். ஒரு சிறு நெருப்பு பொறி போதும். காடு வெந்து தணியும். அது போல சேர்த்து வைத்த பாவங்களும், அஞ்ஞானமும் எவ்வளவு இருந்தாலும் ஒரே வார்த்தையில் போகும்.
சரி, இப்படி விளக்கு ஏற்றியவர் அப்பர் மட்டும்தானா ?
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்
என்று ஞான விளக்கு ஏற்றினார் பூதத்தாழ்வார்
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே
என்று கதிரோனையே விளக்காக ஏற்றினார் பொய்கை ஆழ்வார்.
விளக்கு ஏற்றுங்கள். அறியாமை நீங்கட்டும். ஞானம் என்ற ஒளி பெருகட்டும்.
அருமை அருமை... திருவருள்.. நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா.. அருமை. சைவம் வைணவம் இரண்டு சமயங்களில் இருந்தும் மேற்கோள் காட்டியது சிறப்பு.
ReplyDeleteஅருமை
ReplyDeleteதிருச்சிற்றம்பலம் ����
திருச்சிற்றம்பலம்
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteExcellent
ReplyDeleteமிகவும் அருமையாக உள்ளது
ReplyDeleteThiruchitrambalam
ReplyDeleteநமச்சி வாயவே
ReplyDeleteநன்றி
ReplyDelete