Tuesday, November 22, 2016

பெரிய புராணம் - பிள்ளைகளை எதற்கு பெற வேண்டும் ?

பெரிய புராணம் - பிள்ளைகளை எதற்கு பெற வேண்டும் ?


பிள்ளைகள் எதற்கு என்று கேட்டால், "எனக்கு கொள்ளி போட ஒரு பிள்ளை வேண்டாமா ?" என்று சிலர் கூறுவார்கள்.

அவர்கள் விரும்பியபடியே பிள்ளை பிறக்கும்...கொள்ளி போட ...சில சமயம் உயிரோடு இருக்கும் போதே கூட.

சிலர் , "எனக்குப் பிறகு இந்த சொத்தை எல்லாம் ஆள ஒரு வாரிசு வேண்டாமா ?" என்று பிள்ளை பெறுவதற்கு காரணம் சொல்லுவார்கள். அவனுக்கு வரும் பிள்ளை, அவன் மேல் கோர்ட்டில் கேஸ் கொடுக்கும்...."சொத்தை பிரித்து தா"..என்று.

இன்னும் சிலரோ, "வயதான காலத்தில் என்னை பார்த்துக் கொள்ள ஒரு பிள்ளை வேண்டாமா " என்று கேட்பார்கள்.

இதெல்லாம் சுயநலத்தில் இருந்து எழும் ஆசைகள்.

திருஞான சம்பந்தரின் தந்தையார் , தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று தவம் இருந்தார். எதற்காக தெரியுமா ?

பாடல்

மனையறத்தி லின்பமுறு மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே யாடியசே வடிக்கமல
நினைவுறமுன் பரசமய நிராகரித்து, நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றுந் தவம்புரிந்தார்.


சீர் பிரித்த பின் 

மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்
அனைய நிலை தலை நின்றே ஆடிய சேவடி கமல 
நினைவுற முன் பர சமய நிராகரித்து, நீறாக்கும்
புனை மணிப்பூண் காதலனைப் பெற ப் போற்றும் தவம் புரிந்தார்.


பொருள் 

மனை = வீடு

அறத்தில்= அறத்தில்

இன்பம் = இன்பம்

உறு = பெறும் , பெற

மகப் = பிள்ளைகளை

பெறுவான் = பெறுவதற்காக

விரும்புவார் = விரும்பி

அனைய = அந்த

நிலை = நிலையில்

தலை = சிறப்பாக

நின்றே = நின்றே

ஆடிய = ஆடிய

சேவடி = சிவந்த திருவடிகளை

கமல = தாமரை போன்ற

நினைவுற = மனதில் நினைத்து

முன் = முன்பு

பர = மற்ற

சமய = சமயங்களை

நிராகரித்து = நிராகரித்து

நீறாக்கும் = திருநீற்றின் பெருமையை விளங்கும்படி செய்து

புனை = அணியும் (புனைந்து கொள்ளுதல் )

மணிப்பூண் = மணிகள் கொண்ட பூணை

காதலனைப் = காதல் கொண்ட மகனை

பெறப் = பெறுவதற்காக

போற்றும் = போற்றுதலுக்கு உரிய

தவம் புரிந்தார் = தவத்தினை செய்தார்

பிள்ளைகளைப் பெறுவதைப் பற்றி பேச வந்த வள்ளுவர் கூறுவார்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

பெறக் கூடியவற்றில் அறிவான பிள்ளைகளை பெறுவதைத் தவிர சிறந்தது ஒன்றும் இல்லை என்றார். 

அழகான பிள்ளை, ஆரோக்கியமான பிள்ளை என்று சொல்லவில்லை ... அறிவான பிள்ளை என்றார். 

திருஞான சம்பந்தரின் தந்தையார் பிள்ளை வேண்டி தவம் இருந்தார்...

எதற்காக பிள்ளை வேண்டினார் ?

இல்லறத்தில் இருந்து பெறும் இன்பம் பிள்ளைகள் மூலம் வரும். 

மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம், அவர் பேசுவதைக் கேட்பது காதுக்கு இன்பம் என்பார் வள்ளுவர். 

அந்த இன்பத்தை பெற தவம் செய்தார்.

அது மட்டும் அல்ல. 

"பர சமய நிராகரித்து, நீறாக்கும்"

மற்ற சமயங்களை நிராகரித்து, திருநீற்றின் பெருமையை விளங்கச் செய்ய பிள்ளை வேண்டும் என்று  தவம் செய்தார். 

பிள்ளைகளை பெறுவது , மற்ற உயிர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு. 

கொள்ளி வைப்பதற்கோ, சொத்தை அனுபவிப்பதற்கோ அல்ல.

பர சமயங்களை ஏன் நிராகரிக்க வேண்டும் ?

மக்கள் எது உண்மை, எது தவறு என்று அறியாமல் தடுமாறிய சமயம். 

எது அறம் , எது அறம் அல்லாதது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரம். 

பலப் பல சமயங்கள். ஆளுக்கு ஒன்றை கூறுகிறார்கள். பாமர மக்களுக்கு எது சரி, எது தவறு என்று தெரியாது.  

உண்மை புரியாமல் ஒருவரோடு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டு சீரழிந்து கொண்டிருந்த நேரம். 

அந்த நேரத்தில், மற்ற பொய்யான சமயங்களை நிராகரித்து, திருநீற்றின் பெருமை விளங்க ஒரு புதல்வன் வேண்டும் என்று தவம் செய்தார். 

மக்கள் உய்யும் பொருட்டு பிள்ளை வேண்டினார்.

அது தான் கருத்து. 

நம் பிள்ளைகளும், வீட்டுக்கு மட்டும் இன்றி நாம் வாழும் சமுதாயத்துக்கும், இந்த  நாட்டுக்கும்,மற்றைய உயிர்களுக்கும்  பயன் படும்படி வாழ நாம் கற்றுத் தர வேண்டும். 

தேவர்கள் , சிவனை வேண்டி , தங்கள் துயர் தீர்க்க ஒரு பிள்ளையைத் தர வேண்டும் என்று வேண்டினர். முருகன் தோன்றினான். 

ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும்
ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி
வேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நினையே நிகர்க்க வென்றார்.

என்பது கந்த புராணம். 

தயரதனுக்கு நீண்ட நாள் பிள்ளை இல்லை. அவனுடைய குல குருவான வசிட்டரிடம் சென்று தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று கூறினான். பிள்ளை எதற்கு தெரியுமா ? தனக்கு பின்னால் அரசை ஆள  அல்ல.

தனக்குப் பின்னால் , இந்த மக்களை யார் காப்பாற்றுவார்கள் ? அவரக்ளை காக்க வேண்டுமே என்ற கவலையில் பிள்ளை வேண்டினான். 

‘அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற
உறு பகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ.

என்பது கம்ப இராமாயணம். 

அறுபதினாயிரம் ஆண்டுகள் , பகைவர்களை ஒடுக்கி, இந்த உலகை நான் காத்து வந்தேன். வேறு ஒரு குறையும் இல்லை. எனக்குப் பின் இந்த வையகம் துன்பப் படுமே என்று ஒரு வருத்தம் இருக்கிறது என்று கூறினான். 

இந்த உலகைக் காக்க ஒரு பிள்ளை வேண்டினான். அப்படியே பெற்றான்.  

பிள்ளைகளைப் பெறுவது, உலக நன்மைக்காக என்று நம் இலக்கியங்கள் கூறுகின்றன. 

பெரிய புராணம் காட்டும் வழியும் அதுவே. 


 

1 comment:

  1. பிள்ளைகளை எதற்குப் பெற வேண்டும் என்று என்னைக் கேட்டிருந்தால், "அவர்களுடன் கலந்து பழகி மகிழ" என்று சொல்லியிருப்பேன். பொது நன்மைக்காக என்பது எண்ணி உணரத்தக்க செய்தி.

    நன்றி.

    ReplyDelete