இராமாயணம் - பரதன் 15 - அறம் கெட முயன்றவன்
உன் தாய் செய்தது உனக்குத் தெரியாதா என்று கோசலை பரதனிடம் கேட்டவுடன், பரதன் கூறுவான் , என் தாய் செய்தது மட்டும் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் கீழே சொன்ன பாவங்கள் செய்த நரகத்துக்கு நான் போவேன் என்று கூறுகிறான்.
பாடல்
‘அறம் கெட முயன்றவன்,
அருள் இல் நெஞ்சினன்,
பிறன் கடை நின்றவன்,
பிறரைச் சீறினோன்,
மறம் கொடு மன் உயிர்
கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மாதவர்க்கு அருந்
துயரம் சூழ்ந்துேளான். ‘
பொருள்
அறம் கெட முயன்றவன் = அறம் கெட முயன்றவன்
அருள் இல் நெஞ்சினன் = அருள் இல்லாத மனமுடையவன்
பிறன் கடை நின்றவன் = மற்றவர்கள் வீட்டு வாசலில் நின்றவன்
பிறரைச் சீறினோன் = மற்றவர்கள் மேல் சீறி விழுந்தவன்
மறம் கொடு = சண்டையிட்டு
மன் உயிர் = நிலைத்து வாழும் உயிர்களை
கொன்று வாழ்ந்தவன் = கொலை செய்து வாழ்பவன்
துறந்த = பற்றினை துறந்த
மாதவர்க்கு = பெரிய தவம் செய்தவர்களுக்கு
அருந் துயரம் = பெரிய துயரை
சூழ்ந்துேளான்.= செய்பவன்
இவர்கள் எல்லோரும் செல்லும் நரகத்துக்கு செல்வேன்
அறத்தை கெடுக்கக் கூட வேண்டாம்...கெடுக்க நினைத்தாலே நரகம் தானாம். இங்கே அறம் என்பதற்கு கொடை , தானம் என்றும் கொள்ளலாம் அல்லது தர்மம், நியாயம் என்ற அறக் கோட்டபாடுகளையும் கொள்ளலாம்.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
என்பது வள்ளுவம்.
பாவம் என்பது மற்றவர்களுக்குச் ஏதாவது கெடுதல் செய்தால் தான் என்று இல்லை. மனதில் அருள் இல்லாவிட்டாலும் பாவம் தான்.
நம்மிடம் எந்த தொடர்பும் இல்லாத உயிர்களிடத்து செலுத்தும் கருணைக்கு அருள் என்று பெயர் என்பார் பரிமேலழகர். தெருவில் திரியும் நாய், பேருந்து நிலையத்தில் உள்ள பிச்சைக்காரன், டிவி யில் எங்கோ யுத்தத்தில் அடிபடும் உயிர்களின் மேல் வரும் இரக்கம், இதற்கு அருள் என்று பெயர்.
அந்த கருணை எப்போதும் மனதில் இருக்க வேண்டும்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் அந்த மாதிரி கருணை.
"பிறன் கடை நின்றவன்" ... தன்னிடம் ஒன்றும் இல்லை என்று மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து அவர்கள் வீட்டு வாசலில் நின்றவன் என்றும் கொள்ளலாம் அல்லது மற்றவன் மனைவியை கவர நினைத்து அவன் வீட்டு வாசலில் நின்றவன் வேண்டும் கொள்ளலாம். இரண்டும் தவறு தான்.
இப்படி ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறான்.
அதன் முடிவில் ....
இதன் தொடர்ச்சியைத் தேடினேன். இன்னும் எழுதவில்லையா?
ReplyDelete