திருக்குறள் - இடுக்கண் வருங்கால் நகுக
வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் நிறைந்ததுதான். இன்பம் மட்டுமே வேண்டும். துன்பம் வேண்டவே வேண்டாம் என்று தான் எல்லா உயிர்களும் விரும்புகின்றன. ஆனாலும் , துன்பம் அழையா விருந்தாளியாக வந்து வந்து போகத்தான் செய்கிறது.
துன்பம் வந்தால் என்ன செய்வது ? சிரித்து விடுங்கள் என்கிறார் வள்ளுவர்.
பாடல்
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்
பொருள்
இடுக்கண் = துன்பம்
வருங்கால் = வரும்போது
நகுக = சிரிக்க
அதனை = அந்த துன்பத்தை
அடுத்தூர்வது = சென்று போராடுவது
அஃதொப்பது = அதைப்போன்ற ஒன்று
இல் = இல்லை
வள்ளுவருக்கு என்ன சொல்லிவிட்டு போய் விடுவார். துன்பம் வரும் போது சிரியுங்கள் என்று. அதெல்லாம் நடக்குமா ? நடைமுறைக்கு சாத்தியமா ? கேட்க வேண்டுமானால் நல்லா இருக்கும் என்று நாம் எப்போதும் போல நினைப்போம்.
வள்ளுவர் சும்மா சொல்ல மாட்டார். அதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும்.
அது என்னவாக இருக்கும் என்று சிந்திப்போம்.
துன்பம் வேண்டாம் தான் நினைக்கிறோம். ஆனால் நம்மை யார் கேட்கிறார்கள். துன்பம் வந்து விட்டது.
உடல் நிலை குறைவு, பணத் தட்டுப்பாடு, பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் திருமணம், தொழிலில் தொய்வு, அலுவலகத்தில் சிக்கல், உறவுகளில் குழப்பம், விரிசல், நெருங்கியவர்கள் புரிந்து கொள்ளாமை , நினைத்தது நடக்காமை, தேர்வில் குறைந்த மதிப்பெண், என்று ஏதோ ஒரு வகையில் துன்பம் வந்து விடுகிறது.
வந்தவுடன் என்ன செய்யலாம் ?
துவண்டு போய் விடலாம்.
வீட்டுக்குள் முடங்கி விடலாம்.
விதியை நோகலாம்.
நமக்கு உதவி செய்ய யாரும் இல்லையே என்று எல்லோரையும் நோகலாம்.
தெய்வத்தை பழிக்கலாம்.
விதியை நோகலாம்.
....
ஆனால் இப்படி எல்லாம் செய்வதனால் வந்த துன்பம் நீங்கி விடுமா ? வந்த துன்பத்தில் இருந்து விடுபட வேண்டுமென்றால் அதை எதிர்த்து போராட வேண்டும்.
என்னால் என்ன முடியும் என்று முடங்கிக் கிடந்தால் எப்படி போராடுவது ?
அந்த முயற்சிக்கு ஒரே வழி , "இந்த துன்பத்தை நான் வெற்றிக்கு கொள்வேன் " என்ற தன்னம்பிக்கை.
இரண்டாவது, துன்பம் வந்தால் யாரிடமாவது உதவி கேட்க வேண்டும். உதவி கேட்கப் போகும் போது முகத்தை வாட்டமாக, தொங்கப் போட்டுக் கொண்டு சென்றால் உதவி செய்யலாம் என்று நினைப்பவர்கள் கூட செய்ய மாட்டார்கள். நினைத்துப் பாருங்கள், உங்களுக்கு கொஞ்சம் பணம் வேண்டும். சோகமான முகத்துடன், பயந்த விழிகளோடு , தயங்கி தயங்கி கேட்டால் பணம் கிடைக்குமா. தைரியமாக, தன்னம்பிக்கையோடு சிரித்த முகத்தோடு கேட்டால் கிடைக்குமா ?
பணம் இல்லாதது துன்பம் தான். ஆனால் அதற்காக அழுது வடிந்து கொண்டு இருந்தால் , உதவி செய்ய நினைப்பவர்கள் கூட உதவி செய்ய மாட்டார்கள். மலர்ந்த முகத்தோடு இருங்கள்.
மூன்றாவது, "அடுத்தூர்வது" என்றார். அது என்ன அடுத்தூர்வது ? அடுத்து + ஊர்வது.
அடுத்தல் என்றால் போராடுதல். அடுகளம் என்றால் போர் களம். துன்பத்தை எதிர்த்து போராடுவது என்று அர்த்தம். போராடும் போது ஒரு வலிமை, ஒரு உத்வேகம். இல்லை என்றால் தோல்வி நிச்சயம். பணம் வேண்டுமா, ஒன்றுக்கு பத்து பேரிடம் கேட்போம் என்று கிளம்ப வேண்டும். கட்டாயம் கிடைக்கும் என்று ஒரு புன்னகையோடு கிளம்ப வேண்டும். "எங்க கிடைக்க போகுது, எவன் தருவான் " என்று சோர்வோடு கிளம்பினால் கட்டாயம் கிடைக்காது.
நோய் வந்து விட்டதா ? அவ்வளவுதான், இனிமேல் பிழைக்க மாட்டேன் என்று துவண்டு விடக் கூடாது. மருந்து வேலை செய்யும். மருத்துவர்கள் உதவி செய்வார்கள். என் குடும்பத்தில் உள்ளவர்கள் எனக்கு உதவி செய்வார்கள். இந்த நொடியில் இருந்து விடுபடுவேன் என்று தன்னம்பிக்கையோடு இருந்தால் நோயிலிருந்து விடுபடலாம். மாறாக, என்ன மருந்து சாப்பிட்டு என்ன பயன் என்று துவண்டு விட்டால் , நோய் குணமாகாது.
நான்காவது, "அஃதொப்பது இல்" என்றார். அப்படி என்றால் என்ன ? துன்பத்தை வெல்ல பல வழிகள் இருக்கலாம். இறைவனை நம்பலாம். கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ளலாம். வள்ளுவர் அதை எல்லாம் தவிர்க்கச் சொல்லவில்லை. துன்பத்தை கண்டு சிரிப்பது உள்ளதிற்குள் சிறந்தது. அதற்கு இணையான ஒன்று இல்லை என்கிறார். அதை விட சிறப்பு குறைந்தவை இருக்கலாம். ஆனால் அதற்கு இணையான ஒன்று இல்லை. சிறந்தது இருக்கும் போது மற்றவற்றை ஏன் நாட வேண்டும் ?
துன்பம் வந்தால், எதிர்த்துப் போராடுங்கள். போராட ஒரு முயற்சி, உற்சாகம், உத்வேகம் வேண்டும்.
அதற்கு ஒரு தன்னம்பிக்கை, ஒரு மலர்ந்த முகம் வேண்டும்.
எனவே, துன்பம் வந்தால் துவண்டு விடாமல், சிரித்த முகத்தோடு போராடுங்கள். அதை விட சிறந்த வழி இல்லை.
அருமையான குறள். அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்
ReplyDeleteதன்னம்பிக்கை விளக்கம்...
ReplyDeleteஅருமையான சரியான விளக்கம்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிளக்கம் மிக தெளிவாக உள்ளது. பாராட்டுகள்.
ReplyDelete