திருக்குறள் - உற்றநோய் நீக்கி
சில பேரிடம் உதவி என்று கேட்டுப் போனால், "நீ அப்படி செஞ்சிருக்கக் கூடாது. இப்படி செஞ்சிருக்கணும். அப்படி செஞ்சதால தான் இப்ப இந்த மாதிரி சிக்கல்ல மாட்டிக்கிட்ட " என்று நடந்து முடிந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஒழுங்கா படிக்க வேண்டிய நேரத்தில பிடிச்சிருந்தா நல்ல மார்க்கு கிடைச்சிருக்கும், இப்ப அழுது என்ன புண்ணியம் என்று கையில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு சொல்லாமல் பழங்கதை பேசிக் கொண்டிருப்பார்கள்.
கண்டதையும் சாப்பிட வேண்டியது, அப்புறம் acidity , வயிற்று வலின்னு தவிக்க வேண்டியது என்று ஏற்கனவே வலியில் துடிக்கும் ஒருவனுக்கு மேலும் வலிக்கும் படி ஏதாவது சொல்லுவது.
பெரியவர்கள் என்றால், முதலில் இருக்கின்ற பிரச்னைக்கு தீர்வு சொல்ல வேண்டும். பின் , அந்த மாதிரி பிரச்சனை இனி வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று சொல்லித் தர வேண்டும். அப்படிப் பட்ட பெரியவர்களை , அவர்களைப் போற்றி அவர்கள் உறவை கொள்ள வேண்டும்.
பாடல்
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
பொருள்
உற்றநோய் = வந்த துன்பத்தை
நீக்கி = நீக்கி
உறாஅமை = மீண்டும் அவை வராமல்
முற்காக்கும் = முன்பே காத்துக் கொள்ளும் வழி சொல்லும்
பெற்றியார்ப் = தன்மை உடையவரை
பேணிக் = போற்றி
கொளல் = அவர்கள் உறவை ன், நட்பை கொள்ள வேண்டும்.
நோய் என்றால் துன்பம்.
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
என்பது குறள் . தனக்கு துன்பம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் மற்றவர்களுக்கு துன்பம் வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
அது என்ன உற்ற நோய் ? உற்ற நோய் என்றால் வந்த துன்பம்.
துன்பம் இரண்டு வழியில் வரும்.
தெய்வத்தால் வருவது. மக்களால் வருவது.
தெய்வத்தால் வருவது என்பது (an act of God ) வெள்ளம் , நில நடுக்கம், தீ, பெருங்காற்று, பெரிய நோய் போன்றவை.
மக்களால் வருவது என்பது பகை, திருட்டு, கொள்ளை, பழி சொல்லுதல் போன்றவை.
பெரியோர் என்பவர் இவற்றில் இருந்து நம்மை காப்பார்கள்.
தெய்வத்தால் வருவதில் இருந்து எப்படி காப்பார்கள் என்றால், இயற்கையை நன்றாக ஊன்றி கவனித்து, அதன் தன்மை புரிந்து, இந்த இந்த நிலை இருந்தால், இன்னின்ன நிகழும் என்று கணித்து கூறுவார்கள். இப்படி வெயில் அடித்தால் , இந்த வருடம் அதிகம் மழை பொழிவு இருக்கும். எனவே, ஏரிகளை தூர் வாரி, சரி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று வருவது உரைப்பார்கள்.
அறிவில் சிறந்த அமைச்சர்கள், பண்டிதர்கள் இவர்களை ஒரு அரசன் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அது போல இன்றைய தினத்தில் ஒரு நிறுவனத்தின் முதலாளி, CEO தனக்கு வரும் துன்பங்களில் இருந்து தன்னை காக்கும் வழி சொல்லும் நல்லவர்களை துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இல்லறத்தில் இருப்பவனுக்கு மனைவியே நல்ல துணை. ஒருவனுக்கு வரப் போகும் மற்றும் வந்த துன்பங்களில் இருந்து ஒருவனை காப்பவள் அவன் வாழ்க்கை துணை நலமான மனைவியே.
மக்களால் வரும் துன்பங்களை சாம, தான, பேத , தண்டம் என்ற வழிகளில் சென்று அந்தத் துன்பங்களில் இருந்து அரசனை காக்க வேண்டும்.
"பேணிக் கொளல்"
பேணுதல் என்றால் போற்றுதல்.
தந்தை தாய் பேண் என்பது அவ்வை வாக்கு. (ஒண்ணாங் கிளாசில் படிச்ச ஆத்திச் சூடி நினைவுக்கு வருகிறதா ?)
கப்பிய கரி முகன் அடி பேணி என்பது அருணகிரியார் வாக்கு.
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.
என்பது திருப்புகழ்.
முப்பது முவர்கத்து அமரரும் அடி பேண என்பதும் அவர் வாக்கே
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே
பேணுதல் என்றால் போற்றுதல்.
பேண் என்ற சொல்லடியாக வந்தது தான் பெண் என்ற சொல்.
போற்றுதலுக்கு உரியவள் என்று பொருள்
ஏதோ பணம் கொடுத்து நல்லவர்களை, பெரியவர்களை துணையாகக் கொள்ளக் கூடாது. அவர்கள் மனம் விரும்பும்படி, அவர்களைப் போற்றி அவர்களின் உறவைப் பெற வேண்டும்.
அவர்கள் , நமக்கு வந்த துன்பத்தை போக்குவது மட்டும் அல்ல, இனி அந்த மாதிரி துன்பங்கள் வரமால் இருக்கவும் வழி சொல்லித் தருவார்கள்.
அப்படி எத்தனை பெரியவர்களை உங்களுக்குத் தெரியும் ?
அப்படி ஒரு பெரியவராக நீங்கள் எத்தனை பேருக்கு இருக்கிறீர்கள் ?
சிந்தியுங்கள்.
No comments:
Post a Comment