இராமாயணம் - பரதன் 11 - தீயன இராமனே செய்யுமேல்
இராமன் மேல் அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தான் பரதன்.
உன் தந்தை தயரதன் இறந்து போனான் என்று கைகேயி பரதனிடம் கூறினாள். அதைக் கேட்ட பரதன் துக்கப் படுகிறான். "இந்த துக்கத்தை மாற்ற இராமனின் திருவடிகளை பற்றினால் தான் சரி வரும் " என்று எண்ணி, இராமன் எங்கே என்று கேட்கிறான் பரதன்.
இராமன் கானகம் போய் விட்டான் என்று சொல்கிறாள் கைகேயி.
ஆடிப் போய் விடுகிறான் பரதன். இராமன் ஏன் கானகம் போனான் ? அவனை யார் போகச் சொன்னது ? அவன் என்ன தவறு செய்தான் ? அப்படியே அவன் தவறு செய்திருந்தாலும், அது ஒரு தாய் செய்த தவறு போலல்லவா எண்ண வேண்டும் . இராமன் தயரதன் இறக்கும் முன் போனானா ? அல்லது இறந்த பின் போனானா என்று கேட்கிறான்.
பாடல்
தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?
ஆயதன் முன்னரோ? அருளுவீர்’ என்றான்.
பொருள்
தீயன = தீமையான செயல்களை
இராமனே = இராமனே
செய்யுமேல் = செய்து இருந்தாலும்
அவை = அந்தச் செயல்கள்
தாய் = ஒரு தாய்
செயல் =செய்த செயல்
அல்லவோ = அல்லவோ ?
தலத்துளோர்க்கு எலாம்? = இந்த உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம்
போயது = இராமன் போனது
தாதை = தந்தை
விண் = வானம்
புக்க = புகுந்த
பின்னரோ? = பின்னாலா ?
ஆயதன் = அல்லது
முன்னரோ? = அதற்கு முன்னாலா ?
அருளுவீர்’ = தயவு செய்து சொல்லுங்கள்
என்றான் = என்றான்
இராமன் தவறு செய்ய மாட்டான். அப்படியே செய்து இருந்தாலும், அது ஒரு தாய் செய்த தவறு மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறான் பரதன்.
அது என்ன தாய் செய்த தவறு ?
சில சமயம் குழந்தை பால் குடிக்காமல் அடம் பிடிக்கும். ஒரு தாய் அந்த குழந்தையை இறுக்கிப் பிடித்து கட்டாயமாக பால் புகட்டுவாள். பார்ப்பதற்கு ஏதோ அசுர வைத்தியம் போல இருக்கும்.
குழந்தை நோய் வாய்ப்பட்டால் , மருந்து கொடுக்க வேண்டும். மருந்து கசக்கும் என்று குழந்தை குடிக்காது. தாய், தன்னுடைய இரண்டு கால்களுக்கு இடையில் குழந்தையை இறுக பிடித்துக் கொண்டு, வலு கட்டாயாமாக வாயைத் திறந்து மருந்தை புகட்டி விடுவாள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன இவள் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் இப்படி செய்கிறாளே என்று தோன்றும்.
அவள் அவ்வளவு முரட்டுத் தனமாக நடந்து கொண்டாலும், அது அந்த குழந்தையின் நல்லதுக்கே.
அது போல, ஒரு வேளை இராமன் தவறே செய்திருந்தாலும், அது ஒரு தாய் செய்த தவறு போல எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறான்.
பல பேர் ஒரு சின்ன துன்பம் வந்தால் கூட இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா ? அவனை வணங்குவது சரி தானா ? நாம் எவ்வளவு எல்லாம் பூஜை பண்ணினோம், நமக்கே இந்த துன்பங்கள் வருகிறதே என்று இறைவனை சந்தேகப் படுவார்கள், அல்லது
கடவுளே உனக்கு கண் இல்லையா, உனக்கு கருணை இல்லையா என்று கடவுளை ஏச தலைப்படுவார்கள்.
பரதன் சொல்கிறான், இராமன் துன்பமே தந்தாலும், அது தாயின் அன்பில் விளைந்த துன்பம் , அது நல்லதுக்கே என்று கொள்ள வேண்டும் என்கிறான்.
நன்றே செய்வாய். பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே என்பார் மணிவாசகர்.
அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்,
குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?
இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே!
நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே?
என்பது திருவாசகம்.
நல்லது எது கெட்டது எது என்று அவளுக்குத் தெரியும். எனக்கு என்ன தெரியும். நீ தீமை செய்தால் கூட அது என் நன்மைக்கே. என்னுடையது என்று இருந்த அனைத்தையும் உன்னிடம் கொடுத்து விட்டேன். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று உருகுகிறார் பட்டர்.
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.
சரணாகதி தத்துவத்தின் சாரம்.
கிடைப்பதை ஏற்றுக் கொள்ளுவது.
இறைவன் எதைத் தந்தாலும் அது நல்லதுக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் பரதனிடம் இருந்தது.
அது எப்படி துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாக பார்க்க முடியும். கேட்க வேண்டுமானால் நல்லா இருக்கும். நடை முறைக்கு ஒத்து வருமா என்ற கேள்வி வரும்.
துன்பத்திலும் ஒரு நன்மை இருக்கும் என்றால், அந்த துன்பத்தை நாம் வெறுக்க மாட்டோம் அல்லவா ?
வள்ளுவர் சொல்கிறார். துன்பத்திலும் ஒரு நண்மை உண்டு. அந்தத் துன்பம் நமக்கு உரியவர்கள் யார். நமக்கு நல்லது செய்பவர்கள் யார் என்று அறிந்து கொள்ள உதவும் அளவு கோல் என்கிறார்.
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
சிந்தித்துப் பாருங்கள்.
No comments:
Post a Comment