திருக்குறள் - இல்லாமையில் பெரிய இல்லாமை
பொருள் தேட வேண்டும். பணம் இருந்தால் மற்ற எதைப் பற்றியும் கவலை இல்லை. வேண்டிய அளவு பணம் மட்டும் இருந்து விட்டால் உலகில் மிக சந்தோஷமாக வாழலாம். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடலாம் என்றுதான் எல்லோரும் நம்பி , அந்த பணத்தை சேர்க்க வாழ்நாள் எல்லாம் முயற்சி செய்கிறார்கள்.
பணம் இல்லாவிட்டால் வாழ்வில் மற்றவை எது இருந்தும் பயனில்லை. பணம் ஒன்றுதான் குறி என்று உலகம் சென்று கொண்டிருக்கிறது.
நம்மிடம் பணம் இல்லை, செல்வம் இல்லை , எனவே அதை சேர்க்க முயற்சி செய்கிறோம். இதில் தவறென்ன.
பணம் மட்டும் அல்ல, நாம் வேறு சிலவற்றையும் சேர்க்க முயற்சி செய்கிறோம்.
நல்ல ஆரோக்கியம், உறவுகள், நட்பு, புகழ் , செல்வாக்கு, மதிப்பு, என்று இப்படி பலவற்றை சேர்க்க ஆசைப் படுகிறோம். ஆனால் முக்கியமான ஒன்றை மறந்து விடுகிறோம்.
அது என்ன ?
அறிவு !
பாடல்
அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.
கொஞ்சம் சீர் பிரிக்கலாம்
அறிவு இன்மை , இன்மையுள் இன்மை பிறிது இன்மை
இன்மையாக வையாது உலகு
பொருள்
அறிவு இன்மை = அறிவு இல்லாமை
இன்மையுள் = இல்லாதவற்றில்
இன்மை = பெரிய இல்லாதது
பிறிது இன்மை = மற்றவை இல்லை என்றாலும்
இன்மையாக = இல்லாததாக
வையாது = கொள்ளாது
உலகு = உலகம்
இல்லாதவற்றில் பெரிய இல்லாதது அறிவு இல்லாததே. மற்றயவை இல்லாவிட்டாலும் அதை பெரிதாக நினைக்காது உலகு.
இது சரிதானா ? வள்ளுவர் சொல்லுவது நடை முறைக்கு சாத்தியமா ? அறிவு மட்டும் போதுமா ? மற்றவை வேண்டாமா ? பொருள் இல்லாமல் சாப்பாட்டுக்கு என்ன செய்வது, நல்ல உடை, இருக்க இடம், வாழ்க்கை வசதிகள், பிள்ளைகளின் எதிர்காலம் இவற்றிற்கு பொருள் வேண்டாமா ? அறிவை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?
இது கேள்வி.
சிந்திப்போம்.
முதலாவது, சரி, அறிவு வேண்டாம். பொருள் மட்டும் வேண்டும் என்று செல்வத்தின் பின்னால் சென்றால் என்ன ஆகும் ? எந்த வழியில் பொருள் சேர்க்க வேண்டும் என்று தெரியாது. எப்படியோ பொருள் சேர்த்தால் சரிதான் என்று நினைத்து , தவறான வழியில் பொருள் சேர்த்து பல சிக்கல்களில் மாட்டித் தவிப்பவர்கள் பலர். எனவே, பொருள் சேர்க்கவும் அறிவு வேண்டும்.
இரண்டாவது, சரி எப்படியோ நல்ல வழியில் பொருள் சேர்த்தாகி விட்டது. இனி என்ன சிக்கல் என்றால் ? சேர்த்த பணத்தை என்ன செய்வது ? பல பேருக்கு பணம் சேர்க்கத் தெரியும். அதை நல்ல வழியில் செல்வழிக்கத் தெரியாது. நல்ல துணிமணி, பெரிய வீடு, ஆரோக்கியமான சூழ்நிலை என்று வாழத் தெரியாமல் எல்லா பணத்தையும் வங்கிகளிலும், நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்து விட்டு , ஒரு சுகமும் அனுபவிக்காமல் இருப்பார்கள். செலவழிக்கவும் அறிவு வேண்டும்.
மூன்றாவது, சேர்த்த பணத்தை நல்ல வழியில் முதலீடு செய்து அதை பாதுகாத்து மேலும் அதை அதிகரிக்கத் தெரியாது. தவறான இடங்களில் முதலீடு செய்து கடினமாக உழைத்து சேர்த்த பணத்தை இழந்து முதுமையில் வறுமையால் வாடுவார்கள். எத்தனையோ நடிகர் நடிகைகளை பார்க்கிறோம். சரியான வழியில் முதலீடு செய்யாமல் கைப் பொருளை இழந்து பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழ்பவர்களை பார்க்கிறோம். முதலீடு செய்யவும் அறிவு வேண்டும்.
நான்காவது, சிலர் கையில் நாலு காசு சேர்ந்தவுடன் அதை கண்ணு மண்ணு தெரியாமல் செலவழிப்பார்கள். சூதாட்டம், கள் , கெட்ட சகவாசம் என்று செலவழித்து அதனால் பொருளையும் இழந்து, பெருமையையும் இழந்து ஆரோக்கியத்தையும் இழந்து துன்பப் படுவார்கள்.
ஐந்தாவது, சரி பணம் மட்டும் தானா, உறவு நட்பு இது எல்லாம் வேண்டாமா ? அறிவு இல்லை என்றால் சிறந்த நண்பர்களை தேர்ந்து எடுப்பது கடினம். கெட்ட நண்பர்கள் நம்மை துன்பத்தில் தள்ளி விடுவார்கள். உறவுகளில் ஆயிரம் சிக்கல் வரும். ஏன் கணவன் மனைவிக்கு நடுவில் கூட சிக்கல்கள் வரலாம். பணம் இல்லாத ஏழைகள் வீட்டில் கணவன் மனைவி அன்போடு ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக அன்பு செலுத்தி இன்பமாக இருப்பதைக் காணலாம். பணம் படைத்த வீட்டில் , கணவனும் மனைவியும் அன்பில்லாமல், நாளும் சண்டையிட்டுக் கொண்டு வாழக்கை நரகமாக வாழ்வதையும் காணலாம். தேவை இல்லாத உறவுகளை கொண்டாடுவது, தேவையான உறவுகளை மதிக்காமல் இருப்பது போன்றவை அறிவின்மையால் நிகழும்.
சரி, இதெல்லாம் சரிதான். அதுக்காக எந்நேரமும் படித்துக் கொண்டே இருந்தால் போதுமா என்றால் , அறிவு வளர்ந்தால் பணம் சம்பாதிப்பது எப்படி, செலவழிப்பது எப்படி, இதில் முதலீடு செய்யலாம், எப்படி மகிழ்ச்சியாக வாழலாம், உறவுகளில் வரும் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்று தெரிந்து அதன் படி செயல் பட முடியும்.
அறிவு இவை அனைத்தையும் கொண்டு வரும்.
எனவே அறிவைப் பெற்றால் அறிவும் கிடைக்கும் மற்றவையும் கிடைக்கும்.
அறிவில்லாத மற்றவற்றாரால் அவ்வளவாக சிறப்பு இல்லை. சில சமயம் அதனால் துன்பம் கூட வரும்.
அது மட்டும் அல்ல, அறிவினால் இம்மைக்கு மட்டும் அல்ல, மறுமைக்கும் வேண்டிய நன்மைகளை தேடிக் கொள்ள முடியும்.
மற்றவை வேண்டாம் என்று சொல்லவில்லை வள்ளுவர். மற்றவை இல்லாவிட்டால் பரவாயில்லை என்று சொல்லவில்லை. தேவையான பொருள் இல்லாவிட்டாலும், நல்ல உறவும் நட்பும் இல்லாவிட்டாலும், ஆரோக்கியம் இல்லாவிட்டாலும் குறை தான். ஆனால், அவற்றை ஒரு பெரிய குறையாக உலகம் கருதாது என்றார் வள்ளுவர்.
அறிவைத் தேடுங்கள். மற்றவை தானே வரும்.
இந்த குறள் எளிதில் புரியவில்லை. உங்கள் அருமையான விளக்கம் கண்டு தெளிவு பெற்றேன்.
ReplyDeleteநன்றி.