Sunday, March 31, 2019

கம்ப இராமாயணம் - தவம் செய்த தவம்

கம்ப இராமாயணம் - தவம் செய்த தவம் 



IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்கள் சில பல மாதங்கள் தனியாக பயிற்சி எடுத்துக் கொள்ளவார்கள். IIT போன்ற நிறுவனங்களில் சேர்வது என்பது அவ்வளவு எளிதல்ல.  இந்த பயிற்சி நிறுவனங்களில் சேர்வதும் அவ்வளவு எளிதல்ல. அவற்றில் சேர்வதற்கும் நுழைவு தேர்வு உண்டு. வருகிற எல்லோரையும் அவர்கள் சேர்த்துக் கொள்வதில்லை. அந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அந்த பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து, பயிற்சி பெற்று IIT ல் சேர முடியும்.

இப்போது என்ன ஆகிறது என்றால், அந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள்.

அதில் சேர்ந்து பயிற்சி பெற்று, இந்த பயிற்சி நிறுவனங்களில் நுழைந்து, அங்கு மீண்டும் IIT க்கு பயிற்சி பெற்று, IIT ல் சேர வேண்டும்.

சரி, அதுக்கும், இராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம் ? IIT எங்கே இருக்கிறது, இராமாயணம் எங்கே இருக்கிறது ?

இராமன் தவம் செய்ய கானகம் வந்தான்.

தவம் செய்யவா வந்தான் ?

ஆம். அப்படித்தான் கைகேயி சொல்லி அனுப்பினாள்.

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ 
தாழிரும் சடைகள் தாங்கி, தாங்க அரும் தவம் மேற் கொண்டு 
பூழி வெங்கானம் நல்கி புண்ணியத் துறைகள் ஆடி 
ஏழிரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன்

என்றாள்

"பரதன் நாட்டை ஆளட்டும். நீ காட்டில் போய் தவம் செய்"

என்று சொல்லித்தான் அனுப்பினாள்.

எனவே இராமன் தவம் செய்ய காட்டுக்கு வந்திருக்கிறான்.

சூர்ப்பனகை பார்க்கிறாள். எல்லோரும் தவம் செய்து அதன் பலன்களைப் பெறுவார்கள். ஆனால், இந்த இராமன் தவம் செய்ய, இந்த தவம் , என்ன தவம் செய்ததோ என்று வியக்கிறாள்.

இராமன் தவம் செய்கிறான் என்றால் அது தவத்திற்கே பெருமையாம்.

நாம் எல்லாம் தவம் செய்தால் அது நமக்குப் பெருமை. இராமன் தவம் செய்தால் அதனால் தவத்துக்கு பெருமை.

இராமன் தவம் செய்ய வேண்டுமே என்று அந்த தவம் முன்பு தவம் செய்ததாம்.

பாடல்


எவன் செய, இனிய இவ்
    அழகை எய்தினோன்,
அவம் செயத் திரு உடம்பு
    அலச நோற்கின்றான்?
நவம் செயத் தகைய இந்
    நளின நாட்டத்தான்
தவம் செயத் தவன் செய்த
    தவன் என்? ‘என்கின்றாள்.

பொருள்

எவன் செய = எதைப் பெறுவதற்காக

இனிய = இனிமையான

இவ் அழகை எய்தினோன், = இந்த அழகை அடைந்தவன்

அவம் செயத்  = துன்பப் பட்டு

திரு உடம்பு = அவனுடைய இந்த உயர்ந்த உடம்பு

அலச நோற்கின்றான்? = நோகும்படி தவம் மேற்கொள்கிறான்

நவம் செயத் தகைய  = புதுமையை உண்டாக்கக் கூடிய

இந் நளின நாட்டத்தான் = இந்த நளினமான கண்களை உடைய இராமன்

தவம் செயத் = தவம் செய்ய

தவன் செய்த = தவம் செய்த

தவன் என்? ‘என்கின்றாள். =தவம் என்ன என்கிறாள்

இவன் தவம் செய்ய, அந்த தவம் என்ன தவம் செய்ததோ என்கிறாள்.

நீங்க எங்க வீட்டுக்கு வர இந்த வீடு என்ன புண்ணியம் பண்ணியதோ என்று சொல்லுவதைப் போல.

IIT ல் சேர கோச்சிங் சென்டர். கோச்சிங் சென்டரில் சேர ஒரு டுடோரியல் சென்ட்ரல் மாதிரி.

தவம் செய்ய தவம் செய்த தவம் .

கம்பனின் கவித் திறமைக்கு ஒரு உரைகல்.

மேலும்,

நாம் ஒரு வேலை செய்கிறோம் என்றால், நம்மால் அந்த வேலை பெருமை அடைய வேண்டும். அந்த அளவுக்கு நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். இராமன் உயர்த்திக் கொண்டான்.

இராமாயணம் படிப்பது கம்பனின் கவிதத்திறமையை இரசிக்க மட்டும் அல்ல, அதில் உள்ள கதையை படிப்பதற்கு மட்டும் அல்ல, அதில் உள்ள பாடங்களையும்  படித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு காரியத்தை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்ய வேண்டும். நம்மால் அந்த காரியத்துக்கு பெருமை வந்து சேர வேண்டும்.

அணு ஆராய்ச்சி செய்தாலும் சரி, தெரு பெருகினாலும் சரி....மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.



மார்ட்டின் லூதர் கிங் சொல்லுவார்

If a man is called to be a street sweeper, he should sweep streets even as a Michaelangelo painted, or Beethoven composed music or Shakespeare wrote poetry. He should sweep streets so well that all the hosts of heaven and earth will pause to say, 'Here lived a great street sweeper who did his job well.”





Saturday, March 30, 2019

கம்ப இராமாயணம் - கண்ணில் காய்தலால் இற்றவன்

கம்ப இராமாயணம் - கண்ணில் காய்தலால் இற்றவன் 


மனிதன் எதையும் வெல்ல முடியும் காமத்தைத் தவிர. காமம் ஞானிகளையும் ரிஷிகளையும் முனிவர்களையும் புரட்டிப் போட்டிருக்கிறது. சாம்ராஜ்யங்களை சாம்பல் மேடாக்கியிருக்கிறது.

எல்லாம் துறந்த துறவிகளும் காமத்தின் பிடியில் இருந்து வெளி வரமுடியாமல் தவித்து இருக்கிறார்கள். பெண்ணை ஏசி, தூற்றி, அவள் உடம்பை கொச்சைப் படுத்தி பாடி தீர்த்து இருக்கிறார்கள்.

மாணிக்க வாசகர், எவ்வளவு பெரிய ஞானி....இறைவனை அடைய இதில் இருந்து எல்லாம் தப்பிப் பிழைத்தேன் என்று ஒரு பட்டியல் தருகிறார்.



ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி

அனைத்துக்கும் ஒரு வரி சொன்ன அவர், பெண்ணிடம் இருந்து பிழைத்தேன், காமத்தில் இருந்து பிழைத்தேன் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே...

கரும்குழல்
செவ்வாய்
வெள்நகைக்
கார்மயில்
ஒருங்கிய சாயல்
நெருங்கி
உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து
கதிர்ந்து
முன் பணைத்து
எய்த்து
இடைவருந்த
எழுந்து
புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா
 இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்

என அடுக்குகிறார்.

பெண்ணின் மார்பகம் அவரை அப்படி அலைக்கழிக்கிறது.

காமம் தேவேந்திரனை விடவில்லை. வால்மீகியை விடவில்லை - வியாசரை விடவில்லை. சந்திரனை விடவில்லை.

அந்த காமத்தை வென்ற ஒருவன் சிவன்.

சிவ பெருமான் யோகத்தில் இருக்கிறார். அந்த யோகத்தை கலைக்க வேண்டும். தேவர்கள் மன்மதனை அனுப்புகிறார்கள். நடுங்கிக் கொண்டு போகிறான் மன்மதன். சிவன் மேல் மலர் அம்பை தொடுக்கிறான்.

கண் விழித்த சிவன் காமவயப் படவில்லை. மன்மதனை எரித்து விட்டான்.

காமத்தை வென்றவன் சிவன்.

பின், ரதி அழுது, பார்வதி இரங்கி, மன்மதன் உயிர் பெறுகிறான் ஆனால் அவன் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டான் என்ற ஒரு நிபந்தனையோடு.

சூர்ப்பனகை, இராமனை பார்க்கிறாள்.

"ஒருவேளை அந்த மன்மதன், தவம் செய்து, சாப விமோச்சனம் பெற்று, எல்லோரும் காணும் படி ஆகி விட்டானோ. அந்த மன்மதன் தான் இவன் போலும்" என்று ராமனை கண்டு வியக்கிறாள் சூர்ப்பனகை.

பாடல்


'கற்றை அம் சடையவன் கண்ணில் காய்தலால் 
இற்றவன் , அன்றுதொட்டு இன்றுகாறும் தான் 
நல் தவம் இயற்றி , அவ் அநங்கன் , நல் உருப் 
பெற்றனன் ஆம் 'எனப் பெயர்த்தும் எண்ணுவாள் .


பொருள்


'கற்றை அம் சடையவன் = கற்றை முடியை கொண்ட சிவன்

கண்ணில் காய்தலால்  = நெற்றிக் கண்ணால் எரித்ததால்

இற்றவன் , = இறந்தவன் (மன்மதன்)

அன்றுதொட்டு = அன்று முதல்

இன்றுகாறும் = இன்று வரை

தான் = அவன்

நல் தவம் இயற்றி  = நல்ல தவம் புரிந்து

அவ் அநங்கன் = அந்த மன்மதன்

நல் உருப் பெற்றனன் ஆம் '= நல்ல வடிவத்தை பெற்றான்

எனப் பெயர்த்தும் எண்ணுவாள்  = என்று மீண்டும் எண்ணுவாள்


கம்பன் கோடி காட்டுகிறான்.

காமத்தை வென்றவன் சிவன்.

காமத்தில் தடுமாறி நிற்கிறாள் சூர்ப்பனகை.

மேலும் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_30.html

Friday, March 29, 2019

பட்டினத்தார் பாடல்கள் - ஐயா, திருவையாறா

பட்டினத்தார் பாடல்கள் - ஐயா, திருவையாறா 



பாடல்

மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன்
கையாறவும் அடியேன் கால் ஆறவும் காண்பார்
ஐயா திருவை யாறா


பொருள்

மண்ணும் தணல் ஆற = மீண்டும் மீண்டும் நாம் பிறந்து, பின் இறந்து கொண்டிருந்தால், நம் உடலை மீண்டும் மீண்டும் எரிப்பார்கள். அப்படி மாறி மாறி எரித்துக் கொண்டிருந்தால், இந்த மணல் (சுடுகாட்டு மணல் ) சூடாகவே இருக்கும் அல்லவா? அந்த மணல் கொஞ்சம் தணல் ஆறவும். சூடு ஆறி குளிரவும்

வானும் புகை ஆற = உடலை எரிக்கும் போது எவ்வளவு புகை வரும். நாம் மறுபடியும் மறுபடியும் பிறந்து இறந்து எரித்து எரித்து இந்த வானமே புகை மண்டி கிடக்கிறது. அந்த புகை ஆறவும்

எண்ணரிய தாயும் இளைப்பாறப் = பிள்ளையைப் பெறுவது என்றால் எவ்வளவு சிரமம் ஒரு தாய்க்கு. எத்தனை தாய்மார்கள் நம்மை மறுபடி மறுபடி பெறுவதற்கு சிரமப் படுவார்கள். அவர்கள் கொஞ்சம் இளைப்பாறவும். 


பண்ணுமயன் = பண்ணும் + அயன் . நம்மை மீண்டும் மீண்டும் படைக்கும் ப்ரம்மா 

கையாறவும் = நம் தலை எழுத்தை எழுதி எழுதி அவனுக்கும் கை வலிக்காதா? அவன் கை ஆறவும் 

அடியேன் கால் ஆறவும் = பிறந்தது முதல் ஆட்டம், ஓட்டம் என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம். பள்ளிக்கூடம், வேலை, வெட்டி என்று அலைந்து திரிகிறோம். கால் தான் வலிக்காதா நமக்கு. ஒரு பிறவி என்றால் பரவாயில்லை. எத்தனை பிறவி, எவ்வளவு நடப்பது ? கால் தான் வலிக்காதா ? என் கால் இளைப்பாறவும் 


காண்பார் = இவை எல்லாம் இளைப்பாறும்படி காண்பாய் 

ஐயா = ஐயா 

திருவை யாறா = திருவையாறா, திருவையாற்றில் உள்ள சிவனே 

பட்டினத்தாருக்கு தமிழ் வந்து விழுகிறது. 

ஐந்து ஆறுகள் சேரும் இடம், திரு + ஐந்து + ஆறு. திருவையாறு. 

அந்த ஆற்றினை, ஆறுதல் என்ற இளைப்பாறுதல் என்ற வார்த்தையோடு சேர்க்கும் இலாகவம் பட்டினத்தாருக்கு இருக்கிறது. 

அது போகட்டும். 

நமக்கு நேற்று நடந்தது கொஞ்சம் நினைவு இருக்கிறது. போன வாரம் நடந்தது அதை விட கொஞ்சம் குறைவாக நினைவு இருக்கிறது. போன மாதம், போன வருடம் ?

நாள் ஆக , ஆக நினைவு குறைந்து கொண்டே போகிறது. 

போன ஜென்மம் நினைவு இருக்கிறதா ? இல்லவே இல்லை. 

ஞானிகளுக்கு அது நினைவு இருக்கிறது. 

பட்டினத்தார் சொல்கிறார் எத்தனை பிறப்பு, எத்தனை தாய்மார் என்று. 

மாணிக்க வாசகர் சொல்லுகிறார் 

"எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான் 
மெய்யே உன் பொன்னடிக்கு கண்டு இன்று வீடு உற்றேன் "

என்று சிவபுராணத்தில்.

புல்லாகி, பூடாகி, புழுவாய் , பறவையாய், பாம்பாய் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். அத்தனை பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார். 

இளைத்து யார் ? இந்த உடம்பு அல்ல. இந்த ஆன்மா. மறுபடி மறுபடி பிறந்து இளைக்கிறது.

எளிய தமிழில் ஆழ்ந்த அர்த்தம்.

இது உங்கள் சொத்து. உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு விட்டுச் சென்ற சொத்து. வெட்டிக் கொண்டு போனாலும் சரி. கட்டிக் கொண்டு போனாலும் சரி. விட்டு விட்டுப் போய் விடாதீர்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_15.html

இராமாயணம் - யாரோ இவன் ?

இராமாயணம் - யாரோ இவன் ?


சில பேருக்கு எதைச் சொன்னாலும் குதர்க்கமான அர்த்தம் தான் தோன்றும்.  நல்ல புத்தகத்தை கொடுத்தால், "இதை எடைக்கு போட்டால் என்ன விலை வரும் " என்று சிந்திப்பார்கள்.

"தீயவரோடு சேராதே" என்று சொன்னால், "அப்ப தீயவர்கள் எப்படித்தான் திருந்துவார்கள். நாம் தான் பழகி அவர்களை திருத்த வேண்டும் " என்று வாதம் செய்வார்கள்.

என்ன செய்வது. அவர்கள் அறிவின் ஆழம் அவ்வளவுதான் என்று விட்டு விட வேண்டும்.

இராமனை நேரில் காண்கிறாள் சூர்ப்பனகை. அவன் பரம்பொருள் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் உடல் அழகை கண்டு வியக்கிறாள்.

"மன்மதனுக்கு உருவம் கிடையாது. இந்திரனுக்கு ஆயிரம் கண்கள். சிவனுக்கு மூன்று கண்கள். திருமாலுக்கு நான்கு தோள்கள். இவனைப் பார்த்தால் அப்படி யாரும் போலத் தெரியவில்லையே. இவன் யாராக இருக்கும்" என்று அவன் உடல் அழகை கண்டு வியக்கிறாள்.

பாடல்


'சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால் ; 
இந்திரற்கு ஆயிரம் நயனம் ; ஈசற்கு 
முந்திய மலர்க்கண் ஓர் மூன்று ; நான்கு தோள் 
உந்தியின் உலகு அளித்தாற்கு 'என்று உன்னுவாள் .


பொருள்


'சிந்தையின் = மனதில்

உறைபவற்கு = இருப்பவருக்கு (எல்லோர் மனத்திலும் காதலும் காமமும் உண்டு. அதற்கு காரணமான மன்மதன்)

உருவம் தீர்ந்ததால் ;  = உருவம் இல்லாததால்

இந்திரற்கு = இந்திரனுக்கு

ஆயிரம் நயனம்  = ஆயிரம் கண்கள்

ஈசற்கு  = சிவனுக்கு

முந்திய மலர்க்கண் ஓர் மூன்று = மூன்று மலர் போன்ற கண்கள்

நான்கு தோள்  = நான்கு தோள்கள்

உந்தியின் = நாபிக் கமலத்தில் இருந்து

உலகு  = இந்த உலகை

அளித்தாற்கு ' = அளித்தவனுக்கு

என்று உன்னுவாள் . = என்று நினைப்பாள்

உருவம் தாண்டி மேலே செல்லத் தெரியவில்லை. புறத் தோற்றமே முடிவானது என்று முடிவு  செய்து விட்டாள்.

கவிதை தெரியும், கவிஞனின் உள்ளம் தெரியாது.

“அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் “


என்பான் பாரதி.

மனைவி தெரியும், அவள் உள்ளம் தெரியாது.

"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரம்"

என்பார் மணிவாசகர். பொருள் அறிந்து அல்ல, பொருள் உணர்ந்து.

புறத் தோற்றங்களைத் தாண்டி மேலே செல்ல வேண்டும்.



Thursday, March 28, 2019

கம்ப இராமாயணம் - அருந்துயில் துறந்த ஐயனைக்

கம்ப இராமாயணம் - அருந்துயில் துறந்த ஐயனைக்


கடவுள் யார் என்றே தெரியாது. இருந்தும் கடவுளை "தேடுகிறேன்", என்று சொல்லுகிறார்கள். தெரியாத ஒன்றை எப்படி தேட முடியும்? கடவுளை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவன் யார், எப்படி இருப்பான் என்று தெரியாது, எங்கே இருப்பான் என்று தெரியாது. ஆனால், அவனை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நாளையே கடவுள் நேரில் வந்து "வா போகலாம் " என்றால் எத்தனை பேர் கிளம்புவார்கள். முதலில், வந்திருப்பது கடவுளா என்ற சந்தேகம் வரும். நம் வீட்டில் உள்ள படத்தில் இருப்பது போல இல்லை என்றால், வந்த ஆளை கடவுள் என்று எப்படி ஏற்றுக் கொள்ளுவது? ஒரு வேளை அதே போல் இருந்தால், யாரேனும் அப்படி வேஷம் போட்டு வந்து நம்மை ஏமாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் வரும்.

சரி, கடவுள் நம்மிடம் சொல்ல வில்லை. சும்மா, நம் பக்கத்தில் வந்து நிற்கிறார். பஸ்ஸில் நம் கூட பிரயாணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நமக்குத் தெரியுமா அவர் தான் கடவுள் என்று ?

தெரியவே தெரியாது.

சூர்ப்பனகை, இராமனை கண்டாள். அவன் கடவுள் என்று அறியவில்லை. அனுமன் அறிந்தான். குகன் உணர்ந்தான். சூர்ப்பனகை அறியவும் இல்லத்தில். உணரவும் இல்லை.

கம்பன் ரொம்பவும் மெனெக்கெட்டு சொல்லுகிறான்.

"அந்தக் காலத்தில் தேவர்கள் எல்லாம் சென்று அரக்கர்கள் எங்களை பாடாய் படுத்துகிறார்கள் என்று முறையிட்ட அந்த விஷ்ணுவை சூர்ப்பனகை கண்டாள் " என்று.

ஆனால், இராமன் அவளுக்கு கடவுளாகத் தெரியவில்லை. மானிடனாகத் தெரிந்தான். அவன் உடம்பு தான் அவளுக்குத் தெரிந்தது.

என்ன செய்ய ? அவள் அறிவின் ஆழம் அவ்வளவுதான்.

பாடல்

எண் தகும் இமையவர் ,'அரக்கர் எங்கள்மேல்
விண்டனர் , விலக்குதி 'என்ன , மேலை நாள்
அண்டசத்து அருந்துயில் துறந்த ஐயனைக்
கண்டனள் , தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் 


பொருள்

எண் தகும் = எண்ணத் தகுந்த, பூஜிக்கத் தகுந்த

இமையவர் = கண் இமைக்காதவர்கள் (தேவர்கள்)

,'அரக்கர்  எங்கள் மேல் = அரக்கர்கள் எங்கள் மேல்

விண்டனர் = சண்டை செய்து எங்களை அடக்கி வைத்து இருக்கிறார்கள்

, விலக்குதி  = அதில் இருந்து எங்களை விலக்கி அருள் புரிவாய்

'என்ன  = என்று

 மேலை நாள் = முன்பொரு நாள்

அண்டசத்து =  பாம்பணை மேல் (முட்டையில் இருந்து வந்த பாம்பு)

அருந்துயில் = அரிய துயில்

துறந்த = விட்டு விட்ட

 ஐயனைக் = ஐயனை (விஷ்ணுவை)

கண்டனள்  = கண்டாள்

 தன் கிளைக்கு இறுதி காட்டுவாள்  = தன்னுடைய உறவினர்களுக்கு முடிவை தேடித் தரும்  சூர்ப்பனகை

கடவுள் அருகில் இருந்தாலும் அறிந்து கொள்ள முடியவில்லை.

குளத்தில் தாமரை இருக்கும். அதில் தேன் இருக்கும். அந்தக் குளத்தில் இருக்கும் தவளைக்கு தேன் பற்றி ஒன்றும் தெரியாது.

எங்கேயோ உள்ள காட்டில் இருந்து வந்த வண்டு அந்த தேனை சுவைக்கும்.

கடவுளோ, அறிவோ, அறிவுள்ளவர்களோ அருகில் இருந்தாலும் அரக்கர்களுக்கு அது தெரியாது.

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்து இடைஇருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே. 

(விவேக சிந்தாமணி)


அப்படி தெரியாமல் இருப்பவர்கள் அரக்கர்கள். நம்மில் எத்தனை அரக்கர்களோ...?

சூர்பனகைக்கு, இராமன் அருகில் இருந்தும் அவன் பரம்பொருள் என்று தெரியவில்லை. 

காரணம், காமம். 

காமம் அவள் கண்ணை மறைத்தது. 

இராவணனுக்குத் தெரியவில்லை. ஆணவம் அவன் கண்ணை மறைத்தது. 

வீடனுக்குத் தெரிந்தது. அது ஞானம். 

காமத்தையும், கோபத்தையும், அறிவீனத்தையும் வைத்துக் கொண்டு தேடினால், இறைவனே நேரில் வந்தாலும் தெரியாது என்று கம்பன் சொல்லித் தருகிறான்.

கண்ணைக் கட்டிக் கொண்டா தேடுவது?

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_28.html




Wednesday, March 27, 2019

திருக்குறள் - மறத்திற்கும் அஃதே துணை

திருக்குறள் - மறத்திற்கும் அஃதே துணை


பிள்ளைகளை அடித்து வளர்க்கலாமா? பிள்ளைகளை திட்டலாமா?

ஆசிரியர் மாணவர்களை தண்டிக்கலாமா?

கணவன் மனைவி உறவில் ஒருவர் தவறு செய்தால் மற்றொருவர் அதை தட்டிக் கேட்கலாமா?

இதெல்லாம் கூடாது என்று ஒரு சாரார் கூறி வருகின்றனர். மேலை நாடுகளில் பிள்ளைகளை அடிப்பதோ, திட்டுவதோ சட்டப்படி குற்றம் என்று ஆகி விட்டது. அந்த கலாச்சாரம் மெல்ல இங்கும் பரவி வருகிறது. ஆசிரியர் , மாணவனை அடித்ததாலோ, சுடு சொல் கூறினாலோ அவர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆகி விட்டது.

கோபமும், அதனால் வரும் கண்டிப்பும், சுடு சொல்லும், தவறா?

சில சமயம், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு வரலாம். ஒருவரை ஒருவர் கோபித்து பேசலாம் ..."ஏண்டா உனக்கு அறிவு இருக்கா..இப்படி சொல்கிறாயே/செய்கிறாயே" என்று கடிந்து சொல்லலாம்.


வள்ளுவர் என்ன சொல்லுகிறார் என்று கேட்போம்

பாடல்

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் 
மறத்திற்கும் அஃதே துணை 

பொருள்

அறத்திற்கே = அறத்திற்கே

அன்பு = அன்பு

சார்பு என்ப = சார்ந்தது என்று கூறுவார்

அறியார்  = அறியாதவர்கள்

மறத்திற்கும் = மறத்திற்கும்

 அஃதே துணை  = அதுவே (அந்த அன்பே) துணை

அறத்திற்கு மட்டும் அல்ல, மறத்திற்கும் அந்த அன்பே துணையாக நிற்கிறது.

இது ஒரு சிக்கலான குறள். இதற்கு பலர் பலவிதமான அர்த்தங்கள் கூறி இருக்கிறார்கள்.

நான் என் நோக்கில் எது சரி என்று கூற விழைகிறேன். ஏற்றுக் கொள்வதும், புறம் தள்ளுவதும் உங்கள் பாடு.

மறம் என்றால் என்ன? தீமை, கொடுமை, கடுமை என்று  பொருள் கொள்ளலாம். இதில் தீமை என்பதை விட்டு விடுவோம்.

கடுமை, கண்டிப்பு என்று பொருள் கொண்டால், அந்த கடுமை , கண்டிப்பு இவற்றிற்கும்  அன்பே காரணம் என்று ஆகும்.

ஒரு பெற்றோர் பிள்ளையை திட்டுகிறார்கள்/அடிக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அதற்கு காரணம் அவர்கள் அந்த பிள்ளை மேல் வைத்த அன்புதானே? என் பிள்ளை தவறான வழியில் போய் கெட்டு போய் விடக் கூடாதே, அவன் நல்லவனாக வல்லவனாக வர வேண்டுமே என்ற நல்ல எண்ணம் தானே அந்த கண்டிப்புக்கு பின்னால் இருப்பது? அவன் மேல் கொண்ட பாசம் தானே அந்த கோபத்துக்கு காரணம்.

அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும்  மற்றவள் அருள் நினைத்தே அழும் குழவி அதுபோல இருந்தேனே என்பார் குலசேகர ஆழ்வார்


தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே



மறத்திற்கும் அன்பே காரணம்.

கையை அல்லது காலை வெட்டினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்று மருத்துவர் கூறினால், அது அவர் அந்த நோயாளி மேல் வைத்த அன்பின்றி வேறு என்ன. நோயாளியின் காலை வெட்டி அவர் என்ன சுகம் காணப் போகிறார். காலை வெட்டுதல் என்ற கொடுமையான செயலுக்கும் அன்பே காரணம்.

நண்பன் ஒருவன் புகை பிடித்து / தண்ணி அடித்து / எந்நேரம் பார்த்தாலும் whatsapp பார்த்து கெட்டுப் போகிறான் என்றால், அவனை கண்டித்து திருத்துவதும் அன்பின்பால் பட்டதே என்கிறார் வள்ளுவர்.

எனவே, அன்பு என்றால் எப்போதும் கண்ணே மணியே என்று கொஞ்சிக் கொண்டே இருப்பது மட்டும் அல்ல. கோபத்திற்கும் கண்டிப்புக்கும் அன்பே காரணம்.

எல்லா கோபத்துக்கும் அன்பு காரணமாக இருக்க முடியாது. ஆனால், அன்பினால் கோபமும் வெளிப்படலாம்.

இந்த விளக்கம் சரியாக இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_27.html



Tuesday, March 26, 2019

கம்ப இராமாயணம் - வெய்யது ஓர் காரணம்

கம்ப இராமாயணம் - வெய்யது ஓர் காரணம் 


 கொடுமையான சூர்ப்பனகை இராகவன் இருக்கும் இடம் வந்தாள். இது ஒரு பெரிய விஷயம் என்று மெனக்கெட்டு கம்பன் ஒரு பாடல் எழுதுகிறான். காரணம் இல்லாமலா இருக்கும் ?

பாடல்

வெய்யது ஓர் காரணம் 
     உண்மை மேயினாள்,
வைகலும் தமியள் அவ் 
     வனத்து வைகுவாள், 
நொய்தின் இவ் உலகு எலாம் 
     நுழையும் நோன்மையாள்,- 
எய்தினள், இராகவன் 
     இருந்த சூழல்வாய்.

பொருள்


வெய்யது = கொடுமையான

ஓர் காரணம்  = ஒரு காரணம்

உண்மை மேயினாள் = உள்ளத்தில் கொண்டு சென்றாள்

வைகலும் = தினமும்

தமியள் = தனி ஆளாய்

அவ்  வனத்து = அந்த வனத்தில் , அந்த காட்டில்

வைகுவாள் = வாழ்வாள்

நொய்தின் = விரைவாக

இவ் உலகு எலாம் = இந்த உலகத்தின் அனைத்து இடங்களுக்கும்

நுழையும் நோன்மையாள்,-  = செல்லும் வலிமை பொருந்தியவன்

எய்தினள் = அடைந்தாள்

இராகவன் = இராமன்

இருந்த சூழல்வாய். = இருந்த இடத்துக்கு

வெய்யது - வெப்பம் நிறைந்தது, கொடுமையானது, சூடானது.

இராமன் காட்டுக்கு வருகிறான். மேல் உடை ஒன்றும் இல்லை. சூரியன் வெயில் அவன் மேல்   படுகிறது.  மேலாடை இல்லாமல் வெயிலில் போனால் எப்படி இருக்கும்.  கம்பன் பதறுகிறான். ஐயோ, இராமனுக்கு சுடுமே என்று.  கம்பனுக்கு  சூரியன் மேல் கோபம் வருகிறது.  சூரியனுக்கு ஆயிரம் பேர் இருக்கலாம்.  கம்பன், கோபத்தில், "வெய்யோன்" என்று சூரியனை சொல்லுகிறான்.

வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
     அழியா அழகு உடையான்.


இராமனின் மேனி ஒளியில், அந்த சூரியனின் ஒளி மழுங்கி விட்டதாம்.

வெய்யோன்.

"வெய்யது ஓர் காரணம்". அது என்ன காரணம்?

சூர்ப்பனகையின் கணவன் பெயர் வித்யுதசிவன். அவனை  இராவணன் கொன்று விட்டான். சூர்பனகைக்கு கோபம். இருக்காதா. எப்படியும் இந்த இராவணனை  பழி வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.


இங்கே ஒரு கணம் நிதானிப்போம்.

தங்கையின் கணவன் என்றும் பாராமல் அவனைக் கொன்றான் இராவணன்.

அண்ணன் என்றும் பாராமல் அவனை பழி வாங்க துடிக்கிறாள் சூர்ப்பனகை.

கோபம் - மன்னிக்காத குணம் - பழி வாங்கும் எண்ணம் - உறவுகளை மதிக்காத குணம்  ....இவை எல்லாம் தான் அரக்க குணம்.

அந்த அரக்க குணம் எப்படி அவர்கள் குலத்தையே அழித்தது என்று நமக்குத் தெரியும்.

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி
இனம் எனும் ஏமப் புணையை சுடும்

என்பார் வள்ளுவர். சினம் என்பது அதைக் கொண்டவனை மட்டும் அல்ல, அவன் குடுமத்தை மட்டும் அல்ல, அவன் இனைத்தையே அழிக்கும் என்றார் வள்ளுவர்.

வள்ளுவன் வகுத்துத் தந்த அறத்தை உள்வாங்கி தன் காப்பியத்தில் சேர்கிறான் கம்பன்.

இராவணனின் சினம், சூர்ப்பனகையின் சினம் அரக்க குலத்தையே அழித்தது.

நமக்குள்ளும் அந்த அரக்க குணம் இருக்கலாம். கண்டு பிடித்து களைய வேண்டும்.

"உண்மை மேயினாள்" =  உள்ளத்தில் கொண்டு சென்றாள். தமிழில் உண்மை, வாய்மை,மெய்மை என்று மூன்று சொல் உண்டு. பார்க்க எல்லாம் ஒன்று போல் இருக்கும்.

மனிதன் மூன்று நிலைகளில் செயல்படுகிறான். மனம், மொழி, மெய் என்ற மூன்று  நிலைகளில் செயல்படுகிறான். மனோ, வாக்கு, காயம் என்பார்கள் வடமொழியில்.

மனம் (உள்ளம்) - உள்ளத்தில் இருந்து வருவது உண்மை
அது வாய் வழியாக வெளிப்படுவது வாய்மை
அதுவே செயல் வழியாக வெளிப்பதுவது மெய்மை

"உண்மை மேயினாள் " என்றால் உள்ளத்தில் கொண்டு சென்றாள் என்று அர்த்தம்.

ஒவ்வொரு வார்த்தையையும் கம்பன் தெரிந்து எடுத்துக் போடுகிறான்.

சூர்ப்பனகை ஏன் இப்படி ஒரு கொடிய அரக்கியாக ஆனாள்? என்றும் நாம் சிந்திக்கலாம்.

அது பற்றி மற்றொரு நாள் சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_26.html