Thursday, March 28, 2019

கம்ப இராமாயணம் - அருந்துயில் துறந்த ஐயனைக்

கம்ப இராமாயணம் - அருந்துயில் துறந்த ஐயனைக்


கடவுள் யார் என்றே தெரியாது. இருந்தும் கடவுளை "தேடுகிறேன்", என்று சொல்லுகிறார்கள். தெரியாத ஒன்றை எப்படி தேட முடியும்? கடவுளை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவன் யார், எப்படி இருப்பான் என்று தெரியாது, எங்கே இருப்பான் என்று தெரியாது. ஆனால், அவனை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நாளையே கடவுள் நேரில் வந்து "வா போகலாம் " என்றால் எத்தனை பேர் கிளம்புவார்கள். முதலில், வந்திருப்பது கடவுளா என்ற சந்தேகம் வரும். நம் வீட்டில் உள்ள படத்தில் இருப்பது போல இல்லை என்றால், வந்த ஆளை கடவுள் என்று எப்படி ஏற்றுக் கொள்ளுவது? ஒரு வேளை அதே போல் இருந்தால், யாரேனும் அப்படி வேஷம் போட்டு வந்து நம்மை ஏமாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் வரும்.

சரி, கடவுள் நம்மிடம் சொல்ல வில்லை. சும்மா, நம் பக்கத்தில் வந்து நிற்கிறார். பஸ்ஸில் நம் கூட பிரயாணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நமக்குத் தெரியுமா அவர் தான் கடவுள் என்று ?

தெரியவே தெரியாது.

சூர்ப்பனகை, இராமனை கண்டாள். அவன் கடவுள் என்று அறியவில்லை. அனுமன் அறிந்தான். குகன் உணர்ந்தான். சூர்ப்பனகை அறியவும் இல்லத்தில். உணரவும் இல்லை.

கம்பன் ரொம்பவும் மெனெக்கெட்டு சொல்லுகிறான்.

"அந்தக் காலத்தில் தேவர்கள் எல்லாம் சென்று அரக்கர்கள் எங்களை பாடாய் படுத்துகிறார்கள் என்று முறையிட்ட அந்த விஷ்ணுவை சூர்ப்பனகை கண்டாள் " என்று.

ஆனால், இராமன் அவளுக்கு கடவுளாகத் தெரியவில்லை. மானிடனாகத் தெரிந்தான். அவன் உடம்பு தான் அவளுக்குத் தெரிந்தது.

என்ன செய்ய ? அவள் அறிவின் ஆழம் அவ்வளவுதான்.

பாடல்

எண் தகும் இமையவர் ,'அரக்கர் எங்கள்மேல்
விண்டனர் , விலக்குதி 'என்ன , மேலை நாள்
அண்டசத்து அருந்துயில் துறந்த ஐயனைக்
கண்டனள் , தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் 


பொருள்

எண் தகும் = எண்ணத் தகுந்த, பூஜிக்கத் தகுந்த

இமையவர் = கண் இமைக்காதவர்கள் (தேவர்கள்)

,'அரக்கர்  எங்கள் மேல் = அரக்கர்கள் எங்கள் மேல்

விண்டனர் = சண்டை செய்து எங்களை அடக்கி வைத்து இருக்கிறார்கள்

, விலக்குதி  = அதில் இருந்து எங்களை விலக்கி அருள் புரிவாய்

'என்ன  = என்று

 மேலை நாள் = முன்பொரு நாள்

அண்டசத்து =  பாம்பணை மேல் (முட்டையில் இருந்து வந்த பாம்பு)

அருந்துயில் = அரிய துயில்

துறந்த = விட்டு விட்ட

 ஐயனைக் = ஐயனை (விஷ்ணுவை)

கண்டனள்  = கண்டாள்

 தன் கிளைக்கு இறுதி காட்டுவாள்  = தன்னுடைய உறவினர்களுக்கு முடிவை தேடித் தரும்  சூர்ப்பனகை

கடவுள் அருகில் இருந்தாலும் அறிந்து கொள்ள முடியவில்லை.

குளத்தில் தாமரை இருக்கும். அதில் தேன் இருக்கும். அந்தக் குளத்தில் இருக்கும் தவளைக்கு தேன் பற்றி ஒன்றும் தெரியாது.

எங்கேயோ உள்ள காட்டில் இருந்து வந்த வண்டு அந்த தேனை சுவைக்கும்.

கடவுளோ, அறிவோ, அறிவுள்ளவர்களோ அருகில் இருந்தாலும் அரக்கர்களுக்கு அது தெரியாது.

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்து இடைஇருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே. 

(விவேக சிந்தாமணி)


அப்படி தெரியாமல் இருப்பவர்கள் அரக்கர்கள். நம்மில் எத்தனை அரக்கர்களோ...?

சூர்பனகைக்கு, இராமன் அருகில் இருந்தும் அவன் பரம்பொருள் என்று தெரியவில்லை. 

காரணம், காமம். 

காமம் அவள் கண்ணை மறைத்தது. 

இராவணனுக்குத் தெரியவில்லை. ஆணவம் அவன் கண்ணை மறைத்தது. 

வீடனுக்குத் தெரிந்தது. அது ஞானம். 

காமத்தையும், கோபத்தையும், அறிவீனத்தையும் வைத்துக் கொண்டு தேடினால், இறைவனே நேரில் வந்தாலும் தெரியாது என்று கம்பன் சொல்லித் தருகிறான்.

கண்ணைக் கட்டிக் கொண்டா தேடுவது?

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_28.html




2 comments:

  1. அருமையாக உள்ளது.மேற்கொண்டு என்ன சொல்ல?

    ReplyDelete
  2. சூப்பர் விளக்கம்.

    ReplyDelete