Wednesday, March 20, 2019

குறுந்தொகை - செம்புலப் பெயனீர் போல

குறுந்தொகை - செம்புலப் பெயனீர் போல 


எங்கேயோ பிறந்து, வளர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்கிறார்கள். முன்ன பின்ன தெரியாது. காதலித்து திருமணம் செய்தாலும் அதே நிலை தான். என்ன திருமணத்துக்கு முன் சில காலம் காதலித்து இருக்கலாம். அதற்க்கு முன் அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்ததே இல்லை.

இப்படி இந்த உறவு சாத்தியமாகிறது ?

கணவனுக்காக, மனைவி உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறாள். மனைவியை காப்பாற்ற கணவன் வாழ்நாள் எல்லாம் பாடு படுகிறான். எப்படி இது முடிகிறது?

திருமணம் ஆனவுடன் எங்கிருந்து இந்த அன்பும், கற்பும், அக்கறையும், கரிசனமும் வந்து விடுகிறது?

ஆச்சரியமாக இல்லை?

அவர்களுக்குள் காதல். ஒருவர் மேல் மற்றொருவர் உயிரையே வைத்து இருந்தனர். இருந்தாலும், அவன் அடிக்கடி வெளியூர் போக வேண்டிய நிர்பந்தம். அவளை விட்டு விட்டுப் போய் வருகிறான். அவன் பிரிவு ஒரு பக்கம். இன்னொரு பக்கம், ஒரு வேளை அவனுக்கு நம்மை பிடிக்கவில்லையோ, நம்மை மறந்து விடுவானோ, வேறு யார் மேலும் அவனுக்கு அன்பு இருக்கிறதோ என்ற பெண்மைக்கே உண்டான சந்தேகம் அவளுக்குள் எழுகிறது.

அவனிடம் கேட்டேவிட்டாள். "என் மேல் உனக்கு உண்மையிலேயே அன்பு இருக்கிறாதா? என்னை கை விட்டு விடுவாயா ? " என்று கேட்டாள்.

அவன் பதறிப் போனான்.

அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்

"உன் தாயும், என் தாயும் யாரோ எவரோ. உன் தந்தையும் என் தந்தையும் எந்த விதத்தில் உறவு? ஒரு உறவும் இல்லை. சரி அதாவது போகட்டும், நீயும் நானும் எந்த விதத்தில் ஒன்று பட்டவர்கள். ஒன்றும் இல்லை. இருந்தும் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீரும், அந்த செம்மண்ணும் எப்படி ஒன்றோடு ஒன்று கலந்து விடுகிறதோ அது போல கலந்து விட்டோம். இனிமேல் நமக்குள் பிரிவு என்பதே இல்லை "

பாடல்




யாயு ஞாயும் யாரா கியரோ 
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. 


பொருள்


யாயு ஞாயும் = உன் தாயும், என் தாயும்

யாரா கியரோ  = யாரோ எவரோ

எந்தையு = என் தந்தையும்

நுந்தையு  = நுன் (=உன்) தந்தையும்

மெம்முறைக் = எந்த முறையில்

கேளிர் = உறவு ?

யானு = நானும்

நீயு = நீயும்

மெவ்வழி யறிதும் = எந்த வழியில் ஒன்று பட்டவர்கள் ? நான் அறிய மாட்டேன்

செம்புலப் = சிவந்த மண்ணில்

பெயனீர் = பெய்த நீர் (மழை)

போல = போல

அன்புடை  = அன்புள்ள

நெஞ்சந்  தாங் = நெஞ்சம் தான்

கலந் தனவே. = கலந்தனவே

கேள் என்றால் உறவினர்.

இராமயணத்தில், கங்கை ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இராமனும், இலக்குவனும், சீதையும் தயாராகி விட்டார்கள். குகனுக்கு அவர்களை விட்டு பிரிய மனம் இல்லை. "நானும் உங்களுடனேயே வருகிறேன்" என்று அடம் பிடிக்கிறான்.

அவனை சமாதனம் சொல்லி இருக்கப் பண்ணுகிறான் இராமன்.

"நீ இந்த கடற் கரைக்கு அரசன். நீ தான் இந்த குடி மக்களை பாதுக்காக வேண்டும். இந்த சீதை இருக்கிறாளே அவள் உன் உறவினள். நான் உன் அரசுக்கு கட்டுப் பட்டு இருக்கிறேன்.


அன்னவன் உரை கேளா,
    அமலனும் உரை நேர்வான்,
என் உயிர் அனையாய் நீ;
    இளவல் உன் இளையான்; இந்
நல் நுதலவள் நின் கேள்;
    நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன்
    தொழில் உரிமையின் உள்ளேன் 

"நல் நுதல் அவள் நின் கேள்"....அழகிய நெற்றியை உடைய சீதை உன் உறவினள் என்கிறான் இராமன். 

கேள் என்றால் உறவு.

மீண்டும் குறுந்தொகைக்குப் போவோம். 

"என்னை விட்டு பிரிந்து விடுவாயா " என்று கேட்ட அவளுக்கு அவன் சொன்ன பதில், நாம் ஒருவரோடு ஒருவர் கலந்து விட்டோம். இனி பிரிவென்பது ஏது என்பதுதான்.

பெண்ணின் ஏக்கம், பயம், சந்தேகம், காதல், கவலை என்று அனைத்தையும் ஒன்றாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் பாடல். அவள் சொல்வதாக ஒன்றுமே இல்லை இந்தப் பாடலில். இருந்தும், நீர் ததும்பும் அவள் விழிகளை, துடிக்கும் அவள் இதழ்களை, விம்மும் அவள் நெஞ்சை நாம் உணர முடிகிறது அல்லவா.

2 comments:

  1. இந்தக் கவிதையை முன்பே படித்திருக்கிறேன். ஆனால், இப்படி ஒரு முன்னுரை கவிதைக்கு மேலும் அழகு கூட்டியது. நன்றி.

    ReplyDelete
  2. உறவின் ஆழத்தை இதைவிட அழகாக வெளிப்படுத்த முடியாது.

    ReplyDelete