Saturday, March 30, 2019

கம்ப இராமாயணம் - கண்ணில் காய்தலால் இற்றவன்

கம்ப இராமாயணம் - கண்ணில் காய்தலால் இற்றவன் 


மனிதன் எதையும் வெல்ல முடியும் காமத்தைத் தவிர. காமம் ஞானிகளையும் ரிஷிகளையும் முனிவர்களையும் புரட்டிப் போட்டிருக்கிறது. சாம்ராஜ்யங்களை சாம்பல் மேடாக்கியிருக்கிறது.

எல்லாம் துறந்த துறவிகளும் காமத்தின் பிடியில் இருந்து வெளி வரமுடியாமல் தவித்து இருக்கிறார்கள். பெண்ணை ஏசி, தூற்றி, அவள் உடம்பை கொச்சைப் படுத்தி பாடி தீர்த்து இருக்கிறார்கள்.

மாணிக்க வாசகர், எவ்வளவு பெரிய ஞானி....இறைவனை அடைய இதில் இருந்து எல்லாம் தப்பிப் பிழைத்தேன் என்று ஒரு பட்டியல் தருகிறார்.



ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி

அனைத்துக்கும் ஒரு வரி சொன்ன அவர், பெண்ணிடம் இருந்து பிழைத்தேன், காமத்தில் இருந்து பிழைத்தேன் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே...

கரும்குழல்
செவ்வாய்
வெள்நகைக்
கார்மயில்
ஒருங்கிய சாயல்
நெருங்கி
உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து
கதிர்ந்து
முன் பணைத்து
எய்த்து
இடைவருந்த
எழுந்து
புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா
 இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்

என அடுக்குகிறார்.

பெண்ணின் மார்பகம் அவரை அப்படி அலைக்கழிக்கிறது.

காமம் தேவேந்திரனை விடவில்லை. வால்மீகியை விடவில்லை - வியாசரை விடவில்லை. சந்திரனை விடவில்லை.

அந்த காமத்தை வென்ற ஒருவன் சிவன்.

சிவ பெருமான் யோகத்தில் இருக்கிறார். அந்த யோகத்தை கலைக்க வேண்டும். தேவர்கள் மன்மதனை அனுப்புகிறார்கள். நடுங்கிக் கொண்டு போகிறான் மன்மதன். சிவன் மேல் மலர் அம்பை தொடுக்கிறான்.

கண் விழித்த சிவன் காமவயப் படவில்லை. மன்மதனை எரித்து விட்டான்.

காமத்தை வென்றவன் சிவன்.

பின், ரதி அழுது, பார்வதி இரங்கி, மன்மதன் உயிர் பெறுகிறான் ஆனால் அவன் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டான் என்ற ஒரு நிபந்தனையோடு.

சூர்ப்பனகை, இராமனை பார்க்கிறாள்.

"ஒருவேளை அந்த மன்மதன், தவம் செய்து, சாப விமோச்சனம் பெற்று, எல்லோரும் காணும் படி ஆகி விட்டானோ. அந்த மன்மதன் தான் இவன் போலும்" என்று ராமனை கண்டு வியக்கிறாள் சூர்ப்பனகை.

பாடல்


'கற்றை அம் சடையவன் கண்ணில் காய்தலால் 
இற்றவன் , அன்றுதொட்டு இன்றுகாறும் தான் 
நல் தவம் இயற்றி , அவ் அநங்கன் , நல் உருப் 
பெற்றனன் ஆம் 'எனப் பெயர்த்தும் எண்ணுவாள் .


பொருள்


'கற்றை அம் சடையவன் = கற்றை முடியை கொண்ட சிவன்

கண்ணில் காய்தலால்  = நெற்றிக் கண்ணால் எரித்ததால்

இற்றவன் , = இறந்தவன் (மன்மதன்)

அன்றுதொட்டு = அன்று முதல்

இன்றுகாறும் = இன்று வரை

தான் = அவன்

நல் தவம் இயற்றி  = நல்ல தவம் புரிந்து

அவ் அநங்கன் = அந்த மன்மதன்

நல் உருப் பெற்றனன் ஆம் '= நல்ல வடிவத்தை பெற்றான்

எனப் பெயர்த்தும் எண்ணுவாள்  = என்று மீண்டும் எண்ணுவாள்


கம்பன் கோடி காட்டுகிறான்.

காமத்தை வென்றவன் சிவன்.

காமத்தில் தடுமாறி நிற்கிறாள் சூர்ப்பனகை.

மேலும் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_30.html

1 comment:

  1. அருமையான கற்பனை கம்பருக்கு! ஏதோ வரம் பெற்றிருக்க வேண்டும் இப்படி எல்லாம் எழுத.

    (ஆண் ஞானிகள் காமத் துக்கம் தாளாமல் பெண்களைத் தூற்றினார்கள் என்றால், பெண் ஞானிகள் என்ன செய்தார்கள்? ஆணுக்கு மட்டும்தான் காமமா, பெண்ணுக்கு இல்லையா?!)

    ReplyDelete