Saturday, June 29, 2019

கம்ப இராமாயணம் - ஆர் உயிர் வெந்து புழுங்குவாள்

கம்ப இராமாயணம் - ஆர் உயிர் வெந்து புழுங்குவாள் 


நமக்கு எப்போதாவது துன்பம் வந்தால், நாம் ஊரில் உள்ள அனைவரையும் திட்டித் தீர்ப்போம்.

கணவன்/மனைவி (எனக்குனு வந்து வாச்சிது பாரு), பிள்ளைகள், அக்கம் பக்கம், மேலதிகாரி, கீழே வேலை பார்ப்பவர்கள், அரசாங்கம், பொதுவாக எல்லோரும் நமக்கு எதிராக வேலை செய்கிறார்கள் என்றே நினைப்போம். சில சமயம் கடவுள் மீது கூட கோபம் வரும்.

நமது அனைத்து துன்பங்களுக்கும் நாம் தான் காரணம்.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பது கணியன் பூங்குன்றனார் வாக்கு.

நமக்கு வரும் நல்லதுக்கு கெட்டதுக்கும் நாம் தான் காரணம். வேறு ஒருவரும் காரணம் அல்ல.

சூர்ப்பனகை இராமனை விரும்பினாள். அவன் திருமணம் ஆனவன் என்று தெரிந்தும், அவனுக்கு அவள் மேல் விருப்பம் இல்லை என்று தெரிந்தும் அவனை விரும்பினாள் . அது அவள் குற்றம்.

காமம் அவளை வாட்டுகிறது.

அருகில் உள்ள சோலைக்குச் சென்றாள். இரவு நேரம். நிலவு வருகிறது.

அந்த குளிர் நிலவு அவளுக்கு கொதிக்கிறது.

"கிரஹனத்தன்று வரும் இராகு கேது என்ற அந்த பாம்புகளை பிடித்து வந்து இந்த  சந்திரனை தின்ன வைத்தால் அப்புறம் இந்த சந்திரன் என்னை இப்படி துன்பப் படுத்த மாட்டான் "

என்று நினைக்கிறாள்.

துன்பம் , நிலவினால் அல்ல. அவள் கொண்ட காமத்தினால். ஆனால், அவளோ  நிலவை தொலைத்து கட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறாள்.

தான் செய்த தவறை உணராமல், மற்றவர்கள் மேல் பழி போடுவதும்,  அரக்க குணம்தானோ?

பாடல்

‘அணைவு இல் திங்களை நுங்க அராவினைக்
கொணர்வென் ஓடி ‘எனக் கொதித்து உன்னுவாள்
பணை இன் மென் முலை மேல் பனி மாருதம்
புணர ஆர் உயிர் வெந்து புழுங்குவாள்.


பொருள்

‘அணைவு இல் = ஆதரவாக இல்லாத

திங்களை = நிலவை

நுங்க = உண்ண

அராவினைக் = பாம்பினை

கொணர்வென் ஓடி = ஓடிச் சென்று கொண்டு வருவேன்

‘எனக் = என்று

கொதித்து  = ஆத்திரப்பட்டு, கோபப் பட்டு

உன்னுவாள் = நினைப்பாள்

பணை = பெருத்த

இன் = இனிய

மென் = மென்மையான

முலை மேல் = மார்பின் மேல்

பனி = குளிர்ந்த

மாருதம் = காற்று

புணர = சேர

ஆர் உயிர் = அருமையான உயிர்

வெந்து புழுங்குவாள் = வெந்து புழுங்குவாள்

யாரையாவது திட்ட வேண்டும் என்று தோன்றுகிறதா, எவர் மேலாவது பழி போட வேண்டும்  என்று தோன்றுகிறதா, எதன் மீதாவது வெறுப்பு வருகிறதா ...ஒரு நிமிடம் சூர்பனகையை நினையுங்கள்.

தன் காமத்திற்கு நிலவை பழித்த அவளின் செயலை நினையுங்கள்.

ஒருவேளை உங்கள் தவறு உங்களுக்கு புரிபடலாம்.

அதனால், உறவுகளில் விழ இருந்த விரிசல்கள் தவிர்க்கப் படலாம்.

மனம் இருந்தால், சூர்பனகையின் வாழ்வில் இருந்தும் பாடம் படிக்கலாம்.


Friday, June 28, 2019

கம்ப இராமாயணம் - கார் விடம் ஏறுவது என்னவே

கம்ப இராமாயணம் - கார் விடம் ஏறுவது என்னவே 


இராமாயணம் சொல்லும் அறம் என்ன என்று பல விவாதங்கள் நடந்தன, நடக்கின்ற, இனியும் நடக்கும்.

சூர்ப்பனகை படலத்தில் ஒரு முக்கியமான அறத்தை கம்பன் காட்டுகிறான்.

இராவணன், மற்றவன் மனைவியை விரும்பினான்.

சூர்ப்பனகை, மற்றவள் கணவனை விரும்பினாள்.

பிறன் மனை நோக்குவதுதான் குற்றம் என்று சொல்லிவந்தது நம் தமிழ் இலக்கியம்.

கம்பன் ஒரு படி மேலே போகிறான்,  மாற்றான் மனைவியை பார்ப்பது மட்டும் அல்ல குற்றம், மாற்றாள் கணவனை நயப்பதும் குற்றம் என்று காட்டுகிறான்.

சூர்ப்பனகை மட்டும் இராமன் மேல் ஆசை கொள்ளாவிட்டால், இராவணன் அழிந்து இருக்க மாட்டான்.

சூர்ப்பனகையின் பொருந்தா காமம், ஒருதலைக் காமம், அறம் பிறழ்ந்த காமம் அரக்கர் குலத்தை அழித்தது.

ஒருவன் குற்றம் செய்தால் அது அவனை மட்டும் அல்ல, அவனைச் சேர்ந்த எல்லோரையும் பாதிக்கும் என்று தெரிய வேண்டும்.

"சினம்  எனும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம் எனும் ஏமப் புணையை சுடும்"

என்பார் வள்ளுவர்.

சினம் மட்டும் அல்ல, காமமும் அப்படித்தான் என்கிறார் கம்பர்.

இராமன், சூர்ப்பனகையை விட்டு விட்டு சீதையோடு குடிலுக்குள் போய் விட்டான். தனித்து விடப்பட்ட சூர்ப்பனகை காமத்தால் தவிக்கிறாள்.

இராமன் இருந்த இடம் விட்டு விலகி, அருகில் உள்ள ஒரு சோலையை அடைகிறாள்.

"நச்சுப் பாம்பு தீண்டினால் எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் விஷம் தலைக்கு ஏறுமோ அது  போல இராமனின் மேல் கொண்ட காமம் சூர்பனகைக்கு ஏறியது" என்கிறான் கம்பன்.

நஞ்சு முடிவில் ஆளை கொல்லாமல் விடாது அல்லவா?

பாடல்


அழிந்த சிந்தையள் ஆய் அயர்வாள் வயின்
மொழிந்த காமக் கடுங்கனல் மூண்டதால்
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே.


பொருள் 


அழிந்த சிந்தையள் ஆய் = மனம் அழிந்து, வெறுத்து போனவளாய்

 அயர்வாள்  = சோர்வுற்று

வயின் = அசைச் சொல்

மொழிந்த = சொல்லப்பட்ட

காமக் கடுங்கனல் = காமம் என்ற கொதிக்கும், எரிக்கும் தீ

மூண்டதால் = மூண்டதால்

வழிந்த = பொங்கி வழியும்

நாகத்தின் = நாகப் பாம்பின்

வன் = வன்மையான, கொடுமையான

தொளை = துளையிடும்

வாள் = கத்தி போல் கூர்மையான

எயிற்று = பல்

இழிந்த = வெளிப்பட்ட

கார்  = கரிய

விடம் = விஷம்

ஏறுவது என்னவே. = ஏறியது

கொஞ்சம் இலக்கணம் படிக்கலாமா?

யாப்பிலக்கணம் என்பது இலக்கணத்தில் ஒரு பகுதி.

யாக்குதல் என்றால் கட்டுதல் என்று பொருள்.  இந்த உடம்புக்கு யாக்கை என்று ஒரு  பெயர் உண்டு. கை , கால், தலை, கண், மூக்கு என்று இவற்றை எல்லாம்  சேர்த்து கட்டிவைத்த ஒன்றுக்குப் பெயர் யாக்கை.

"ஐவருக்கு இடம் பெற, கால் இரண்டு ஒட்டி அதில் இரண்டு கை வைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்து அருளே " என்பார் அருணகிரிநாதர்.

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
 வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
 ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
 கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.


சீர், தளை , அடி , தொடை என்று ஒரு செய்யுளை கட்டும் இலக்கணத்துக்கு யாப்பிலக்கணம் என்று பெயர். 

தமிழில் ஒரு பாடல் எப்படி எழுத வேண்டும் என்றுர் சொல்லுவது யாப்பிலக்கணம். 

சரியா?

கவிஞன் சொல்ல வந்த செய்தி ஒரு பக்கம். 

இலக்கண கட்டுப்பாடு மறு பக்கம். 

இரண்டும் பொருந்த வேண்டும். 

சில சமயம் கவிஞன் சொல்ல வந்த செய்தியை சொல்லி முடித்து விடுவான். ஆனால், இலக்கணத்துக்கு இன்னும் ஒரு சொல் வேண்டி இருக்கும். 

உதாரணமாக , குறள் என்றால் ஏழு சீர் (சொல்) வேண்டி இருக்கும். ஆறே வார்த்தையில்  சொல்லி விட்டால், என்ன செய்வது ? ஒரு சொல் பாக்கி இருக்கிறது. அந்த இடத்தை அர்த்தம் இல்லாத ஒரு சொல்லை இட்டு நிரப்புவார்கள். அதற்கு அசைச் சொல் என்று பெயர். 

மன் , மற்று , கொல் , நம்ம , வயின்  என்பவை அசைச் சொற்கள். 

மீண்டும் கவிதைக்கு வருவோம். 

விஷம் எப்படி விறு விறு என்று உடம்பில் பரவுமோ, அது போல சூர்ப்பனகை உடலில்   காமம் பரவியது. 

அப்புறம்?


Thursday, June 27, 2019

திருக்குறள் - அறிவு

திருக்குறள் - அறிவு 


இன்று கணணித் (கம்ப்யூட்டர்) துறையில் செயற்கை அறிவு (artificial intelligence ) பற்றி மிக வேகமாக, ஆழமாக ஆராய்ச்சிகள் நடக்கிறது.

செயற்கை அறிவு ஒரு புறம் இருக்கட்டும். அறிவு என்றால் என்ன? எது அறிவு? யாரை அறிவாளி என்று நாம் சொல்கிறோம் ?

நிறைய புத்தகம் படித்தவரையா ? நிறைய பட்டங்கள் பெற்றவரையா?  திறமையாக காரியம் சாதிப்பவரையா? யார் அறிவாளி அல்லது எது அறிவு என்பது ஒரு சிக்கலான கேள்வி.

அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாம் எவ்வளவு படிக்கிறோம். எத்தனை படித்தவர்கள் சொல்லக் கேட்கிறோம். எது நல்லது, எது கெட்டது என்று நமக்குத் தெரியும். இருந்தும் நல்லதை விட்டு விட்டு கெட்டதை ஏன் செய்கிறோம்?

உதாரணமாக, கோபம் கொள்ளக் கூடாது, இனிப்பு தவிர்க்க வேண்டியது, உடற் பயிற்சி அவசியம், வெட்டி அரட்டை நேர விரயம், என்றெல்லாம் நமக்குத் தெரியும். இருந்தும் செய்கிறோமா? இல்லை.

"...அதெல்லாம் சரி தான், இருந்தாலும் நடை முறைக்கு ஒத்து வருமா " என்று ஒரு சந்தேகத்தை கிளப்பி விட்டு, நாம் பாட்டுக்கு நம் வழியில் செக்கு மாடு போல  செல்லத் தொடங்கி விடுகிறோம்.

ஏன்?

நல்லது என்று தெரிந்தும், அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறோம்?

தீமை என்று தெரிந்தும் சிலவற்றை ஏன் செய்கிறோம்?

அறிவின்மையால்.

அறிவு சரிவர வேலை செய்யாததால்.

படிக்கிற நேரத்தில் ஊர் சுற்றுவது. அலுவலக நேரத்தில் வாட்சப்பில் அரட்டை அடிப்பது.  எது உடம்புக்கு ஆகாதோ, அதை விரும்பி உண்பது. யார் சகவாசம் தீமை  பயக்குமோ அவர்களோடு உறவு கொள்வது....

இதற்கெல்லாம் காரணம் - அறிவின்மை.

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை....எங்களுக்கு அறிவு நிறைய இருக்கு...சில சமயம்  சோம்பேறித்தனத்தால் காரியங்கள் செய்வதில்லை, சில சமயம்  அலுப்பாக இருப்பதால் செய்வதில்லை, நல்ல சாப்பாடு எப்பவுமா  கிடைக்கிறது...பண்டிகை, திருவிழா, என்று வரும் போது இரண்டு வடை, கொஞ்சம் சர்க்கரை பொங்கல், நாலு கப் பாயாசம், triple scoop sundae  என்று அவ்வப்போது   சாப்பிடுவதுதான்...அதற்காக அறிவில்லை என்று சொல்வதா" என்று கேட்கலாம்.

சொன்னது நான் இல்லை. வள்ளுவர்.  அவரை எதிர்த்து பேச முடியுமா?


பாடல்

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

பொருள்

சென்ற இடத்தால் = புலன்களும் மனமும் சென்ற இடமெல்லாம்

செலவிடா = அவற்றை செல்ல விடாது

தீது = தீமைகளை

ஓரீஇ  = நீக்கி

நன்றின்பால் = நல்லவற்றின் பால்

உய்ப்பது  = செல்ல விடுவது

அறிவு = அறிவு

கூர்ந்து கவனிக்க வேண்டும்.

முதலாவது, தீமைக்கு காரணம் புலன்களை, மனதை அலைய விடுவது. குளிர் சாதன பெட்டி (பிரிட்ஜ்) நிறைய தின் பண்டங்களாக சேமித்து வைத்தால், அதை திறக்கும் தோறும்  அந்த தின் பண்டம் கண்ணில் படும். ஒண்ணே ஒண்ணு சாப்பிட்டால் என்ன   என்று தோன்றும்.

கை பேசியில் (செல் போன்) எல்லா வீடியோ கேம் களையும் தரவிறக்கம் (டவுன்லோட்) பண்ணி வைத்திருந்தால் , அதை விளையாடினால் என்ன என்று தோன்றும்.

ஆறு மணிக்கு நண்பரை பார்க்க கிளப் க்குப் போனால், தண்ணி அடிக்கத் தோன்றும்.

எனவே, புலன்கள் அலையும் வாய்ப்பை முதலில் தரக் கூடாது.

புலன்கள் அலையும் இயல்பு உடையன.

அது சரி, புலன்கள் அலையும் இயல்பு உடையன என்றால், நான் என்ன செய்வது. அது பாட்டுக்கு ஓடுது. அதை எப்படி பிடித்து நிறுத்துவது? அதுக்கு ஏதாவது  வழி சொல்லி இருக்காரா வள்ளுவர் என்றால் அடுத்த வரியிலேயே சொல்லி இருக்கிறார்.

நன்றின் பால் உயிப்பது அறிவு

புலன்கள் ஓடும். ஓடட்டும். தீமையின் பக்கம் செல்லாமல், நல்லவற்றில் பக்கம் அவற்றை திருப்பி விட்டு விட வேண்டும். இப்ப ஓடு என்று.

ஓடிப் போய் நல்லதில் நிற்கும்.

ஆரோக்கியமான உணவுகளை  குளிர் சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

கை பேசியில் நல்ல வீடியோ, ஆடியோ போன்றவற்றை தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி, புலன்கள் எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் நல்லவற்றை வைக்க வேண்டும். புலன்கள் ஓடிச் சென்று அவற்றைப் பற்றிக் கொள்ளும்.

தீயவர்களோடு பழகினால், அவர்களின் தீய குணம் நமக்கும் வரும்.

நல்லவர்களோடு பழக வேண்டும்.

"நடை முறை ..." அது இது என்று சாக்கு சொல்லாமல், அறிவை செயல் பட விடுங்கள்.

நன்றின் பால் உயிப்பது அறிவு.

என்ன நான் சொல்றது?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_27.html

Wednesday, June 26, 2019

கம்ப இராமாயணம் - அன்பினில் வலியன்

கம்ப இராமாயணம் - அன்பினில் வலியன்


சூர்பனகையை தனியாக காட்டில் விட்டு விட்டு வந்து விட்டோம். அவள் என்ன ஆனாள் என்று பார்ப்போம்.

இராமன், சீதையைக் கூட்டிக் கொண்டு குடிசைக்குள் போய் விட்டான்.

சூர்ப்பனகை தனித்து நிற்கிறாள்.

தளர்ந்து போனாள். இராமன் தனக்கு இல்லை என்று உணர்ந்தாள். அதனால், அவளுக்கு, அவள் மேலேயே ஒரு தன்னிரக்கம் பிறக்கிறது.

பொதுவாகவே, நாம் எப்போதும் நம் உடலைத்தான், நாம் என்று கூறுவோம்.

நமக்கு ஒரு தலைவலி வந்தால், என்னுடைய தலைக்கு வலிக்கிறது என்று சொல்ல மாட்டோம். என் தலை வலிக்கிறது என்போம்.

ஐம்புல இன்பங்களும் இந்த உடலுக்குத்தான்.

எப்போதாவது நாம், நம் உயிரை, ஆன்மாவை நாம் என்று சொன்னது உண்டா ? நான் என் உடலை தூக்கிக் கொண்டு நடந்து வந்தேன் என்று யாராவது சொல்லிக் கேட்டு இருக்கிறோமா?  உடலை யார் தூக்கிக் கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி வரும் அல்லவா?

காதல் தோல்வி, சூர்பனகைக்கு.

முதன் முறையாக தான் வேறு , தன் உடல் வேறு என்ற ஞானம் வருகிறது அவளுக்கு. தான் என்பது இந்த உயிர் என்ற ஆத்ம ஞானம் பிறக்கிறது. இந்த உடலை சுமப்பது கடினம் என்று உணர்கிறாள்.

"இராமன் போன பின், இராமன் போய் விட்டான் என்ற உணர்வு கூட அவளுக்கு இல்லை. அவன் தன் முன் நிற்பதாகவே அவள் நினைக்கிறாள். தன்னுடைய உயிரானது தனது உடலை சுமந்து கொண்டிருக்கும் பொறுமையை கை விட்டு.  மூச்சு விடக் கூட மறந்து ஒடுங்கி நின்றாள். தகுதியில்லாதவன். மனதளவில் கூட என்னை தழுவாதவன்.  கோபம் கொண்டவன். ஆனால், சீதையிடம் , நெருக்கமான அன்பு கொண்டவன் "  என்று சூர்ப்பனகை நினைக்கிறாள்.

பாடல்

புக்க பின், போனது என்னும் உணர்வினள்;
     பொறையுள் நீங்கி
உக்கது ஆம் உயிரள்; ஒன்றும்
     உயிர்த்திலள்; ஒடுங்கி நின்றாள்;
தக்கிலன்; மனத்துள் யாதும் தழுவிலன்;
     சலமும் கொண்டான்;
மைக்கருங் குழலினாள்மாட்டு அன்பினில்
     வலியன்' என்பாள்.


பொருள்

புக்க பின் = சீதையுடன் இராமன் குடிசைக்குள் புகுந்த பின்

போனது என்னும் = போய் விட்டான் என்ற

உணர்வினள் = உணர்வு உடையவளாய்

பொறையுள் நீங்கி = பொறுமை நீங்கி 


உக்கது ஆம் உயிரள் = நைந்து இருக்கும் உயிரைக் கொண்டவள். அவளுடைய உயிர், அவளின் உடலை சுமந்து தளர்ந்து விட்டது, நைந்து விட்டது

ஒன்றும் உயிர்த்திலள்; = உயிர் மூச்சு இல்லை

ஒடுங்கி நின்றாள் = அனைத்தும் ஒடுங்கி நின்றாள்

தக்கிலன் =  வசப்படாதவன்

மனத்துள் யாதும் தழுவிலன் = மனதில் கூட என்னை தழுவவில்லை

சலமும் கொண்டான் = கோபம் கொண்டவன்

மைக் = கண் மை போன்ற

கருங்  = கரிய

குழலினாள் = கூந்தலைக் கொண்ட

மாட்டு = அவளின் (சீதையின்)

அன்பினில் = அன்பினில்

வலியன்' என்பாள். = வலியவன் என்றாள்

அராக்கிதான் என்றாலும், அவளுள்ளும் ஒரு அன்புக்கு ஏங்கும் பெண் இருக்கத்தான் செய்கிறாள்.



Monday, June 24, 2019

சிலப்பதிகாரம் - அதன் இடை நினக்கு இடை

சிலப்பதிகாரம் - அதன் இடை நினக்கு இடை


முதலிரவு. கண்ணகியின் அழகைப் பற்றி கோவலன் புகழ்ந்து தள்ளுகிறான்.

பெண்ணின் அருகாமை, அவளின் அன்பு, காதல் ஆணுக்கு உயிர் தருகிறது.

கிரேக்க கதைகளில் ஒன்று.

அதிகாலையின் கடவுள்  ஈயாஸ் (Eos ) என்ற ஒரு பெண் தெய்வம். மிக அழகானவள். அவளுக்கு ஒரு காதலன். அவன் பெயர் டித்தோன்ஸ் (Tithonus ) என்று பெயர். அவளோ தெய்வப் பெண். அவனோ மானிடன். மானிடர்களுக்கு இறப்பு என்று ஒன்று உண்டு. ஈயாசுக்கு, அவளுடைய காதலன் ஒரு நாள் இறந்து போவான் என்ற எண்ணத்தையே சகிக்க முடியவில்லை.

நேரே, கடவுள்களுக்கெல்லாம் தலைவரானான ஸியூஸ் (Zeus ) என்பவரிடம் சென்று, தன்னுடைய காதலுனுக்கு சாகா வரம் வேண்டும் என்று கேட்டாள். அவள் மேல் பரிதாபப் பட்டு, அவரும், அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்தார்.

அவளுடைய அவசரத்தில் அவள் தன்னுடைய காதலுனுக்கு என்றும் மாறாத இளமை வேண்டும் என்று கேட்கவில்லை.

அதனால் என்ன ஆயிற்று?

அவளுடைய காதலனுக்கு வயது ஆகிக் கொண்டே போனது.

100, 200, 300, 500 என்று வயது ஆகிக் கொண்டே போகிறது.

கண் பார்வை மங்கி, சுத்தமாக ஒன்றும் தெரியவில்லை. காது கேட்கும் சக்தியை இழந்து விட்டது.  தோல் எல்லாம் சுருங்கி விட்டது. நிற்க முடியவில்லை. பசியில்லை. இயற்கையின் உபாதைகளுக்கு தானே எழுந்து சென்று  தன் காரியங்களை பார்த்துக் கொள்ள முடியவில்லை.

சரி, செத்தாவது தொலைக்கலாம் என்றால், சாகா வரம் இருப்பதால் சாகவும் முடியாது.

சிந்தித்துப் பாருங்கள். 1000, 2000 வருடம் வாழ்ந்து கொண்டிருந்தால், உடலில் வலிமை இல்லாமல் , புலன்கள் எல்லாம் தள்ளாடிப் போய் இருந்தால் எப்படி இருக்கும்?

எனவே, நீண்ட ஆயுள் மட்டும் இருந்தால் போதாது. குன்றாத இளமையும் வேண்டும் அல்லவா?

அதுக்கு நம்ம ஊரில் ஒரு வழி கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

அது தான் "அமுதம்".

அந்த அமுதத்தை உண்டால் மூப்பும் வராது, இறப்பும் வராது.

சரி, அதுக்கும் இந்த சிலப்பதிகாரத்துக்கும் என்ன என்ன சம்பந்தம்.

கோவலன் சொல்கிறான் கண்ணகியிடம்

"இந்த அமுதம் இருக்கிறதே, அதற்கு முன்னால் தோன்றியவள் நீ. எனவே, இந்திரன் தன் படையான வஜ்ராயுதத்தை உனக்கு தந்திருக்க வேண்டும். அந்த வஜ்ராயுதத்தின் இடை, உன்னுடைய இடை (இடுப்பு).

அதுமட்டும் அல்ல, இந்த முருகன் இருக்கிறானே, ஒரு காரணமும் இல்லாமல், தன்னுடைய கூரிய வேலை உன் கண்களுக்கு தந்துவிட்டுப் போய் விட்டான். அது என்னை என்ன பாது படுத்துகிறது தெரியுமா "






பாடல்


மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
தேவர் கோமான் தெய்வக் காவல் -
படை நினக்கு அளிக்க - அதன் இடை நினக்கு இடை என:
அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை இன்றியும்,
இறும் முறை காணும் இயல்பினின் அன்றே -
அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?


பொருள்

மூவா மருந்தின் = மூப்பு வராமல் காக்கும் மருந்து (அமுதம்)

முன்னர்த் தோன்றலின், = அந்த அமுதத்துக்கு நீ முன்னால் தோன்றியதால்

தேவர் கோமான்  = தேவர்களின் தலைவன் (இந்திரன்)

தெய்வக் காவல் படை  = தெய்வக் காவல் படையான வஜ்ராயுதத்தை

நினக்கு அளிக்க  = உன்னிடம் கொடுக்க

அதன் இடை  = அந்த ஆயுதத்தின் இடுப்புப் பகுதி

நினக்கு இடை என = உன் இடை ஆயிற்று


அறுமுக ஒருவன் = ஆறு முகங்களை கொண்ட ஒருவன் (முருகன்)

ஓர் பெறும் முறை இன்றியும் = நீ பெற்றுக் கொள்ள எந்த முறையும் இல்லாமல்

இறும் முறை  = (நான்) துன்பப்  படும் காட்சியை

காணும் இயல்பினின் அன்றே  = காணாததால்

அம் சுடர் நெடு வேல் = அந்த சுடர் போல ஒளி விடும் வேலை

ஒன்றும் நின் முகத்துச் = உன்முகத்தில்

செங் = சிவந்த

கடை  =  கடைசியில், கடைக்கண் , கண்ணோரத்தில்

மழைக் கண்  = ஈரம் நிறைந்த உன் கண்கள்

இரண்டா ஈத்தது? = இரண்டாக தந்துவிட்டான்


வஜ்ராயுதம் என்பது மின்னலைக் கொண்டு செய்தது. மின்னல் போல் இடுப்பு. இருக்கிறதா, இல்லையா என்று தெரியாது. தொட்டால் மின்சாரம் பாயுமோ? 

இளங்கோ அடிகள் தான் இப்படி விழுந்து விழுந்து வர்ணனை செய்கிறார் என்றால், இந்த தாடிக்கார தாத்தா, வள்ளுவர், அவர் முறைக்கு அவர் விடும் ஜொள்ளைப் பாருங்கள். 


உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு 
அமிழ்தின் இயன்றன தோள்


ஒவ்வொரு முறை அவளை கட்டி அணைக்கும் போதும், உயிர் தளிர் விட்டு துளிர்ப்பதால்,  அவளுடைய தோள்கள் அமுதத்தால் ஆனதோ என்கிறார்?

உயிரில்,  புதிதாக, இளமையாக, தளிர் துளிர்க்குமாம், ஒவ்வொரு முறை கட்டிப் பிடிக்கும் போதும். 

வாழ்க்கையை இரசியுங்கள். ஒவ்வொரு வினாடியையும் இரசித்து அனுபவியுங்கள்.  

வாழ்க்கை இனிமையானது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_24.html

Sunday, June 23, 2019

சிலப்பதிகாரம் - படை வழங்குவது ஓர் பண்பு உண்டு

சிலப்பதிகாரம்  - படை வழங்குவது ஓர் பண்பு உண்டு 


கோவலனுக்கும் கண்ணகிக்கும் முதல் இரவு. அந்த அறையின் தோற்றத்தை விளக்கினார் அடிகளார்.

அடுத்தது, அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று சொல்கிரார்.

அவர்கள் எங்கே பேசினார்கள். கோவலன் தான் பேசுகிறான். கண்ணகியின் அழகில் மயங்கி, அவள் அழகைப்  புகழ்கிறான்.

கோவலன் , கண்ணகியிடம் சொல்கிறான் (கொஞ்சுகிறான்)

"இந்த சிவ பெருமான், பிறை நிலவை தலையில் சூடிக் கொண்டிருக்கிறார். அது அவருக்கு அழகாகத்தான் இருக்கிறது. எல்லோரும் அவரை வணங்கும்போது, அந்த பிறை நிலவையும் வணங்குகிறார்கள். ஆனால், அந்த பிறை நிலா அவருக்கு உரியது அல்ல. உன் நெற்றியில் இருந்து வந்தது அது. எனவே, அதை உனக்கு (கண்ணகிக்கு) அவர் தருவதுதான் ஞாயம்.

அரசர்கள் போருக்குச் செல்லும் முன், வீரர்களுக்கு ஆயுதங்களை வழங்குவார்கள். போரில் போராடி வெற்றி பெற வேண்டி. இந்த காமப் போரில் நீ வெல்ல அந்த மன்மதன், தன் கையில் இருந்த கரும்பு வில்லை உன் புருவமாக வளைத்து அனுப்பி வைத்திருக்கிறான் போலும் "


பாடல்


குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின், 
பெரியோன் தருக - திரு நுதல் ஆக என:
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்

பொருள்

குழவித் = குழவி என்றால் குழந்தை. இங்கே இளைய, அல்லது சிறிய. பிறை.

திங்கள் = நிலா

இமையவர் = தேவர்கள்

ஏத்த = போற்ற

அழகொடு = அழகாக

முடித்த = முடியில்

அருமைத்து ஆயினும் = அருமையாக இருந்தாலும்

உரிதின் = அதன் உரிமை

நின்னோடு = உன்னுடையது

உடன் பிறப்பு = (காரணம்) அது உன் உடன் பிறப்பு

உண்மையின் = உண்மையாக,

பெரியோன்  = சிவா பெருமான்

தருக = உனக்குத் தர வேண்டும்

திரு நுதல் ஆக என: = உன்னுடைய சிறந்த நெற்றியாக (நுதல் = நெற்றி)

அடையார் முனை = பகைவர்களை சந்திக்கும் இடம்

அகத்து = அந்த இடத்துக்கு

அமர் = போர்

மேம்படுநர்க்குப் = செய்யச் செல்வோருக்கு

படை = ஆயுதங்கள்

வழங்குவது = கொடுத்து  அனுப்புவது

ஓர் பண்பு உண்டு = ஒரு வழக்கம்

ஆகலின், = ஆகவே, அது போல

உருவிலாளன் = மன்மதன். மன்மதனுக்கு உருவம் கிடையாது. யார் கண்ணுக்கும் தெரிய மாட்டான், அவன் மனைவி இரதி தேவியைத் தவிர.

ஒரு = சிறந்த

பெரும் கருப்பு வில் = பெரிய கரும்பு வில்லை


பெண்களுக்கு நெற்றி சிறிதாக இருக்க வேண்டும் என்பது சாமுத்திரிகா இலட்சணங்களில் ஒன்று.

ஏன் ?

பெண்களுக்கு கருணை அதிகம். (அந்தக் கால பெண்களுக்கு). கருணை, கண் வழியேதான்  வெளிப்படும்.  அதற்கு கண்ணோட்டம் என்று பெயர்.

கண்ணோட்டம் என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்.

கருணை அதிகமானால், கண்கள் விரியும். கண்கள் விரிந்தால், நெற்றி சுருங்கும்.

அம்பாளுக்கு விசாலாட்சி என்று ஒரு பெயர் உண்டு.  விரிந்த, பெரிய கண்களை உடையவள் என்று அர்த்தம்.

கண்ணகியின் நெற்றி, பிறைச் சந்திரனைப் போல சிறியதாக இருந்ததாம்.

சீதையை,  குகனிடம் அறிமுகப் படுத்தும் போது இராமன் சொல்லுவான், "இந்த சிறந்த போன்ற  நெற்றியை உடைய சீதை உன் உறவினள்" என்று.

"நல் நுதலவள் நின் கேள்"


அன்னவன் உரை கேளா,
    அமலனும் உரை நேர்வான்,
என் உயிர் அனையாய் நீ;
    இளவல் உன் இளையான்; இந்
நல் நுதலவள் நின் கேள்;
    நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன்

    தொழில் உரிமையின் உள்ளேன் 


வர்ணனை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முதலிரவில், மனைவியை ,கணவன் புகழ்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. 

நாம், மற்றவைகளை எவ்வளவு புகழ்கிறோம் ? அவர்கள் நல்ல குணத்தை, அவர்கள் செய்த உதவியை, எவ்வளவு புகழ்கிறோம். 

மனைவியின் சமையலை, அவள் வேலை மெனக்கட்டு வீட்டை சுத்தமாக  வைக்க படும் பாட்டை, கணவனின் வெளி உலக சங்கடங்களை சமாளிக்கும் திறமையை, நண்பர்களின் உதவியை, கீழே வேலை செய்பவர்களின் பங்களிப்பை...இப்படி ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது, புகழ்ந்து சொல்ல. 

நாம் புகழ்கிறோமா?

குறை சொல்ல மட்டும் முதலில் வந்து விடுகிறோம். 

சாப்பாட்டில், ஒரு உப்புக் கல் கூடி விட்டால், தைய தக்கா என்று குதிக்கிறோம்.  சரியாக இருந்தால், நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்வது கிடையாது. 

மற்றவர்களை, மனம் விட்டு புகழ வேண்டும். போலியாக அல்ல. உண்மையாக. 

அவர்கள் சந்தோஷப் படுவார்கள். நமக்கு மேலும் உதவி செய்ய நினைப்பார்கள். 

உதாரணமாக, இந்த பிளாக் நன்றாக இருக்கிறது என்றால், நன்றாக இருக்கிறது  என்று ஒரு வார்த்தை சொல்லலாம். அடடா, இத்தனை பேர் நன்றாக இருக்கிறது என்று  சொல்கிறார்களே என்று மேலும் எழுத உற்சாகம் வரும்...:)

"யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. " என்பார் திருமூலர். 


யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. 

முயன்று பாருங்கள். 


Saturday, June 22, 2019

சிலப்பதிகாரம் - பெரும் தோள் எழுதி

சிலப்பதிகாரம் - பெரும் தோள் எழுதி


கோவலன் மற்றும் கண்ணகியின் திருமணச் சடங்குகள் இனிதே நடந்து முடிந்தன.

இரவு தொடங்கி விட்டது.

அவர்களின் முதலிரவு காட்சியினை இளங்கோ அடிகள் என்ற துறவி காட்டுகிறார்.

கத்தி மேல் நடப்பது போன்ற வேலை. ஒரு வார்த்தை பிசகினாலும் முகம் சுளிக்க நேரிடலாம். அதே சமயம், ஒரு பெண்ணும், ஆணும் முதன் முதலில் தனிமையில் சந்திக்கும் அந்த இன்பத்தையும் காட்ட வேண்டும்.

தமிழ் இலக்கியம் சிற்றின்பத்தை கண்டு ஓடியதில்லை. உலகப் பொதுமறை எழுதிய வள்ளுவரும், இன்பத்துப் பால் எழுதினர். தேவாரம், திருவாசகம், பிரபந்தம் என்ற பக்தி இலக்கியங்களிலும் சிற்றின்பம் என்பது நாயக நாயகி பாவமாக ஊடாடிக் கிடந்தது.

தமிழர்கள் வாழ்க்கையை அகம், புறம் என்று பிரித்தார்கள். அக வாழ்க்கையை பற்றி பேச அவர்கள் தயங்கியதே இல்லை. பிற்காலத்தில் எங்கிருந்தோ இந்த சங்கடம் வந்துவிட்டது.   ஆண் பெண் உறவு என்பது ஏதோ அசிங்கமானது, தவிர்க்கமுடியாத ஒரு நிர்பந்தம் என்ற உணர்வு வந்து விட்டது.

நம் தமிழ் இலக்கியம், ஆண் பெண் உறவை தலை மேல் வைத்து கொண்டாடி இருக்கிறது.

"இரவு நேரம். பெரிய கட்டில். கட்டில் பூராவும் மலர் தூவி இருக்கிறது. கோவலனும் கண்ணகியும் தனித்து இருக்கிறார்கள். சந்திரனும், சூரியனும் ஒன்றாக சேர்ந்து இருந்தது போல இருந்ததாம். கோவலன், அங்கிருந்த சந்தனம், குங்குமம் இவற்றை மயிலிறகால் தொட்டு கண்ணகியின் தோளில் படம் வரைந்தான். அவர்கள் இருவரும் அணிந்திருந்த மாலையில் இருந்து பூக்கள் உதிர்ந்தன. அந்த மாலைகள் என்ன செய்வது என்று தெரியாமல் மயங்கி நின்றன. அப்போது, தீராத காதோலோடு கோவலன் கண்ணகியின் முகம் பார்த்து சொல்லுவான் "


பாடல்

சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி,
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் 
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,
வண்டு வாய் திறப்ப, நெடு நிலா விரிந்த
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழ,
தாரும் மாலையும் மயங்கி, கையற்று,
தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை:

பொருள்

சுரும்பு  = வண்டுகள்

உணக் கிடந்த = தேன் உண்ணும்படி கிடந்த

நறும் பூஞ் சேக்கைக் = நல்ல பூக்களின் சேர்க்கை

கரும்பும் வல்லியும் = கரும்பு வல்லி என்பவை இன்பத்தை தூண்டும் படங்கள் என்று விரிவுரையாளர்கள்  கூறுகிறார்கள்

பெரும் தோள் எழுதி = அவளுடய தோளில் வரைந்து. இலக்கியத்தில் அவ்வளவுதான் சொல்ல முடியும்.உரை ஆசிரியர்கள் அவன் எங்கெல்லாம் படம் வரைந்தான் என்று சொல்லுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள், ஆர்வம் உள்ளவர்கள் தேடி கண்டு கொள்க.

முதிர் = முதிர்ந்த

கடல் = கடல் (சூழ்ந்த)

ஞாலம் முழுவதும் விளக்கும்  = இந்த உலகம் முழுவதும் விளங்கும்

கதிர் = நிலவும், சூரியனும்

ஒருங்கு இருந்த காட்சி போல, = ஒன்றாக இருந்த காட்சி போல

வண்டு வாய் திறப்ப = வண்டுகள் வாய் திறக்க

நெடு நிலா விரிந்த = நெடுக வெண்மையான ஒளி பரப்பும் நிலவின் ஒளி போல


வெண் தோட்டு மல்லிகை விரியல் =  வெண்மையான மல்லிகை மலரில் கட்டிய   (விரியல் என்றால் பூமாலை என்று பொருள்)

மாலையொடு = மாலையோடு (மல்லிகைப் பூ மாலை)

கழுநீர்ப் = நீலோற்பலம் என்ற ஒருவகை மலர். தாமரை போல் நீரில் பூக்கும் ஒரு மலர்

பிணையல்  = மாலை

முழுநெறி பிறழ = அந்த மாலையில் உள்ள மலர்கள் மாலையில் இருந்து உதிர்ந்து விழ

தாரும் மாலையும் = அவர்கள் அணிந்திருந்த மாலைகள்

மயங்கி = மூச்சு முட்டி மயங்கி

கையற்று = என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து, செயல் இழந்து

தீராக் காதலின் = தீராத காதலோடு

திரு முகம் நோக்கி = கண்ணகியின் அழகிய முகத்தைப் பார்த்து

கோவலன் கூறும்  = கோவலன் கூறும்

ஓர் குறியாக் கட்டுரை = ஒரு குறிப்பான கட்டுரை.

கத்தி மேல் நடக்கும் வித்தைதானே? சொல்லவும் வேண்டும், முழுவதுமாக சொல்லவும் கூடாது.

வயது வராத பிள்ளைகள் படித்தால் விகல்பமாக ஒன்றும் தெரியாது.

வயது வந்தவர்களுக்கு, திருமணம் முடித்தவர்களுக்கு அந்த வார்த்தைகளின் முழு அர்த்தம் விளங்கும்.  அவற்றை தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு மகிழ்வார்கள்.

Pornography என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆண் பெண் உறவை கொச்சைப் படுத்தாமல், அழகாகவும்  சொல்ல முடியும் என்று காட்டுகிறார் அடிகளார்.

அழகாக சொல்லப் படிக்க வேண்டும். .அடிகளார் நினைத்து இருந்தால், இந்த பகுதியை விட்டு விட்டுப் போயிருக்கலாம்.

நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரிய வேண்டும். படிக்க வேண்டும்.

யோசித்துப் பார்ப்போம்...எத்தனை முறை நாம் நம்முடைய ஆழமான, நுண்ணிய, மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறோம் என்று.

"இந்த சேலையில் நீ ரொம்ப அழகா இருக்க" என்று கடைசியாக மனைவியிடம்  எப்போது கூறினோம்.

இந்த T ஷர்ட் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு என்று கணவனிடம் எப்போது கூறினோம்?

இன்னிக்கு சாப்பாடு பிரமாதம்...செஞ்ச கைக்கு ஒரு முத்தம் தரணும் என்று அவள் கையை எப்போது  பிடித்து அன்பை வெளிப்படுத்தினோம்?

மெல்லிய, நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அவரை மழுங்க அடித்துக் கொண்டிருக்கிறோம்.

கோபம், எரிச்சல், வெறுப்பு...இவற்றை காட்ட நாம் என்றுமே தயங்கியது இல்லை. அன்பு, பாசம், காதல், காமம் இவற்றை வெளிப்படுத்துவதில் ஒரு தயக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.

நான், எல்லோரையும் சொல்லவில்லை. பொதுவாகச்  சொல்லுகிறேன்.

உணர்வுகளை அழகாக வெளிப்படுத்த பழக வேண்டும்.

இளங்கோ அதோடு விடவில்லை. மேலும் போகிறார்.

முதலிரவில், மனைவியோடு ஏதோ சொல்லப் போகிறான் கோவலன்.

என்ன சொல்லி இருப்பான் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_31.html