Thursday, July 11, 2019

கம்ப இராமாயணம் - மானுடவர்க்கு ஆற்றாது மாற்றினையோ?

கம்ப இராமாயணம்  -  மானுடவர்க்கு ஆற்றாது மாற்றினையோ?


இலக்குவனால் மூக்கும், காதும், முலையும் வெட்டுப்பட்ட சூர்ப்பனகை வலியில் தன் அண்ணனான இராவணனை அழைக்கிறாள்.

"இராவணா, நீ தேவர்களையெல்லாம் வென்று அவர்களை அடிமைப் படுத்தி வேலை வாங்கினாய். அப்படிப்பட்ட நீ, இந்த மானிடர்களுக்கு முன் வலிமையை காட்டாமல் மாற்றி வைத்து விட்டாயா? இதற்காகவா உன் கையில் சிவன் தந்த வாள் இருக்கிறது?"

என்று அழுது புலம்புகிறாள்.

பாடல்


காற்றினையும், புனலினையும்,
    கனலினையும், கடுங் காலக்
கூற்றினையும், விண்ணினையும்,
    கோளினையும், பணி கோடற்கு
ஆற்றினை நீ, ஈண்டு இருவர்
    மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ? உன் வலத்தைச்
    சிவன் தடக்கை வாள் கொண்டாய்!

பொருள்


காற்றினையும் = வாயு பகவானையும்

புனலினையும் = வருண பகவானையும்

கனலினையும் = அக்கினி பகவானையும்

கடுங் காலக் கூற்றினையும் = எமனையும் (கூற்றுவன் , உடலையும், உயிரையும் கூறு போட்டு பிரிப்பவன்)

விண்ணினையும் = ஆகாயத்தையும்

கோளினையும் = நவ கோள்களையும்

பணி  = வேலை

கோடற்கு = செய்வதற்கு

ஆற்றினை நீ = செய்செய்வித்தாய் நீ

ஈண்டு = இன்று

இருவர் = இருவர்

மானுடவர்க்கு = மானிடற்கு

ஆற்றாது = போருக்க முடியாமல்

மாற்றினையோ? = மாற்றி வைத்து விட்டாயா ? (எதை மாற்றி வைத்து விட்டான்)

உன் வலத்தைச் = உன் வலக்கையில்

சிவன் = சிவன்

தடக்கை = பெரிய கை, பெருமை வாய்ந்த கை

வாள் கொண்டாய்! = வாள் கொண்டாய் (வாளை மறைத்து வைத்து விட்டாயா என்று கேட்கிறாள்)

இந்தப் பாடலில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? இதைத் தெரிந்து நமக்கு என்ன  பலன்.  இதைப் போய் வேலை மெனக்கெட்டு எதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும்?

 நாம், நாம் இருக்கும் இடத்தில் இருந்து மற்றவற்றை எடை போடுகிறோம். மற்றவர்களை , நம் கோணத்திலேயே புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

என்னுடைய நிலை தாழ்வாக இருந்தால், என் உயரத்துக்கு எது தெரியுமோ, அதுதான்  உண்மை என்று நாம் நினைக்கிறோம்.

அது மட்டும் அல்ல, அதற்கு மேலாக எதுவும் இருந்தால், அவற்றை என்னுடைய  அளவுக்கு கீழே இரக்க முயற்சி செய்வேன். என்னை விட, என் அறிவின்  வீச்சை விட பெரியது என்ன இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

நான், இவற்றை நேரில் கண்டிருக்கிறேன்.

"தீயவர்களோடு சேராதே" என்று திருக்குறள் சொல்கிறது என்று சொன்னால், "அப்படி என்றால் அந்த தீயவர்களை எப்படித்தான் திருத்துவது? நாம் அவர்களோடு  சேர்ந்து பழகி அவர்களை திருத்த வேண்டாமா" என்று கேட்பவர்களை  நான் பார்த்து இருக்கிறேன்.

அதாவது, திருக்குறள் என்ன பெரிய புத்தகமா? நான் அதை விட பெரிய ஆள் என்று  அவர்களுக்கு நினைப்பு.

சூர்ப்பனகை நினைக்கிறாள் இராம இலக்குவனர்களை மானிடர்கள் என்று. அவள்  அறிவுக்கு எட்டியது அவ்வளவு தூரம் தான்.

கண்ணனை இடையன் என்று சொல்லிக் கெட்டான், துரியோதனன் என்ற மடையன்.

முருகனை சிறு பாலகன் என்று சொல்லிக் கெட்டான் சூரபத்மன் என்ற  மூடன்.

இராமனை மானிடன் என்று சொல்லிக் கெட்டான் இராவணனும் (இங்கு சூர்பனகையும்).

சில விடயங்கள் நம் அறிவுக்கு அப்பால் இருக்கின்றன. அவற்றை அறிவு கொண்டு  சிந்தித்து அறிந்து விட முடியாது.

"சித்தமும் செல்லா சேச்சியான் காண்க"

என்பார் மணிவாசகர்.

நம் அறிவு அங்கே போகாது. அறிவினால் அதை அறிய முடியாது.

அன்பினால் அறியலாம். அருளினால் அறியலாம்.

இராமனை தூரத்தில் கண்ட போதே அனுமன் சொல்கிறான்

"இவர்கள் மேல் உள்ள அன்பினால் என் எலும்பு உருகுகிறது" என்று.

குகனுக்கு, அனுமனுக்கு, வீடணனுக்கு, பரம் பொருளாக தெரிந்த இராமன்  சூர்பனகைக்கு  மானிடர்களாகத் தெரிகிறான்.

அவரவர் உயரம்.

உயர்ந்த நூல்களை,  உயர்ந்த விடயங்களை, அறிவில் பெரியவர்கள் சொல்லியதை கேட்கும் போது , நாம் நம்மை அந்த உயரத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டுமே அல்லாது அவற்றை நம் உயரத்துக்கு கீழே  கொண்டு வர  முயற்சி செய்யக் கூடாது.

செய்கிறார்கள். அரக்கர்கள்.

கம்ப இராமாயணத்தை, வைணவ நூல் என்று ஒதுக்கி வைத்த ஆட்கள் உண்டு.

கம்ப இராமாயணம் மூட நம்பிக்கைகளை வளர்க்கிறது என்று கூறிய ஆட்கள் உண்டு.

கம்ப இராமாயணம் பால் உணர்ச்சியை தூண்டும் நூல் என்று கூறிய ஆட்களும் உண்டு.

அவரவர் உயரம்.

மேலிருந்து ஒருவன் நம்மை கை தூக்கி விட முயற்சி செய்தால், மேலே செல்ல முயல வேண்டுமே அல்லாமல் அவனை  நாம் இருக்கும் இடத்துக்கு கீழே இழுத்து  விட முயலக் கூடாது.


நல்ல விடயங்களை உள் வாங்கிக் கொள்ளுங்கள். மருந்து குடிக்க அடம் பிடிக்கும் குழந்தை  போல் அடம் பிடிக்காதீர்கள்.

மருந்து கசக்கும் என்று தெரிந்துதான், அதன் மேல் சர்க்கரை தடவி தருவார்கள்.

கடினமான செய்திகளை இராமனின் வாழ்க்கைக்  கதை என்ற சர்க்கரை தடவித் தருகிறார்  கம்பர்.

சர்க்கரை அல்ல முக்கியம். மருந்து தான் முக்கியம்.

நாளும் நம்மை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

அதற்கு இது போன்ற காப்பியங்கள் நமக்கு உதவி செய்யும்.

நேற்றை விட இன்று ஒரு படி மேலே.

இன்றை விட நாளை ஒரு படி மேலே என்று முன்னேறுவோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_11.html

Wednesday, July 10, 2019

சகலகலாவல்லி மாலை - சுவை கொள் கரும்பே !

சகலகலாவல்லி மாலை - சுவை கொள் கரும்பே !


குமரகுருபரர் பாடியது சகலகலாவல்லி மாலை. சரஸ்வதியின் மேல் பாடியது.


அது போல

காசி இராஜா சபையில் குமரகுருபரர் இந்த பாடல்களை பாடினார். அந்த மன்னன், தமிழ் தெரியாதவன். ஆனால், அவனுக்கு  புரிந்தது. குமரகுருபரருக்கு நிறைய பொருளை பரிசாக அளித்தான். அவற்றைக் கொண்டு அவர், காசியில் மடம் காட்டினார். இன்றும் இருக்கிறது. போனால், தங்கிக் கொள்ளலாம்.

தமிழ் தெரியாத மன்னருக்கு எப்படி இது புரிந்தது ?

காதலர்கள், ஒருவரோடு ஒருவர் பார்வையாலேயே பேசிக் கொள்வதில்லையா.

தமிழ் தெரியாத மன்னனனுக்கே புரிந்தது. நமக்குப்  புரியாதா?

பாடல்

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே

என்ன புரிகிறதா ?

என்னத்த புரிய? முதல்ல சரியா வாசிக்கவே முடியல. அப்புறம் அல்லவா புரிவதை பற்றி  யோசிக்க.

சீர் பிரிப்போம். சீர் பிரித்தால் புரியும்

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க  என்  வெள்ளை உள்ளத்து 
தண் தாமரைக்கு தகாது கொலோ சகம் ஏழும் அளித்து 
உண்டான் உறங்க  ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலாவல்லியே


இப்ப புரிஞ்சிருக்குமே?

குமர குருபரர் சொல்கிறார்

"ஏதாவது வேண்டும் என்றால் எந்தக் கடவுளை நாடுவது?  இந்த உலகை எல்லாம் படைத்து , அதை உண்டவன் திருமால். அவன் கிட்ட போகலாம் என்றான்  அவன் ஒரு பக்கம் படுத்து தூங்கிக் கொண்டு இருக்கிறான். தூங்குமூஞ்சி.

சரி, திருமால் வேண்டாம், சிவனிடம் போகலாம் என்றால், அவனோ பித்து பிடித்து சுடுகாட்டில் அலைந்து கொண்டிருக்கிறான். பித்தன்.

சரி, திருமாலும் வேண்டாம், பிரம்மனும் வேண்டாம்,  பிரம்மனிடம் போகலாம் என்றால், அவன் உன் அழகில் இலயித்து இருக்கிறான்.

இவர்களை நம்பி ஒரு பலனும் இல்லை. எனவே, தாயே, உன்னிடம் வந்து விட்டோம். என் மனதில் வந்து இருப்பாய் "

என்று வேண்டுகிறார்.

பொருள்

வெண் தாமரைக்கு = வெண்மையான தாமரைக்கு

அன்றி = அல்லாது

நின் = உன்னுடைய

பதம் = பாதங்களை

தாங்க = தாங்கிக் கொள்ள

 என்  வெள்ளை உள்ளத்து  = என் வெள்ளை உள்ளத்து

தண் = குளிர்ந்த

தாமரைக்கு  = தாமரைக்கு

தகாது கொலோ = பொருத்தம் இல்லையா ?

சகம் ஏழும் அளித்து  = ஏழு உலகையும் படைத்து

உண்டான் = உண்டு (உமிழ்ந்தவன்)

உறங்க = உறங்கிக் கொண்டு இருக்க

 ஒழித்தான் = அழிக்கும் கடவுளான சிவன்

 பித்தாக = பித்து பிடித்து அலைய

உண்டாக்கும் வண்ணம் = படைக்கும் கடவுளான பிரம்மன்

கண்டான் = உன்னைக் கண்டான். எப்படி தெரியுமா ?

சுவை கொள் கரும்பே = சுவை நிறைந்த கரும்பைப் போல

சகல கலாவல்லியே = அனைத்து கலைகளிலும் வல்லவளே


சிவனை பித்தன் என்று சொல்லியதற்கு யாரும் கோபிக்கக் கூடாது.

சுந்தரர் சொன்னது அது.

பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?


சரஸ்வதி - வெண் தாமரையில் இருக்கிறாள்.

இலக்குமி - சிவந்த தாமரையில் இருக்கிறாள்.

என்ன காரணமாக இருக்கும்?

முதலில், ஏன் தாமரை ? பின் ஏன் அந்த நிறம் ?

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_9.html

கம்ப இராமாயணம் - யான் பட்ட பழி வந்து பாராயோ ?

கம்ப இராமாயணம் - யான் பட்ட பழி வந்து பாராயோ ?


இலக்குவனால் மூக்கும், காதும், மார்பும் துண்டிக்கப்பட்ட சூர்ப்பனகை தன் அண்ணன் இராவணனை கூவி அழைக்கிறாள். "அண்ணா, உன் தங்கையின் நிலையை பார்த்தாயா" என்று கேவுகிறாள்.

இராவணனின் பெருமைகளை சொல்லி, அப்பேற்பட்ட உன் தங்கையின் நிலையைப் பார் என்கிறாள்.

"யானைகளுக்கு அரசனான ஐராவதத்தின் மீது ஏறி சண்டைக்கு வந்த இந்திரனை போரிட்டு அவனை புறம் காணச் செய்தாய். அவன் புற முதுகை கண்ட நீ உன் தங்கையின் அவல நிலையை பார்க்க மாட்டாயா?" என்று புலம்புகிறாள்.

பாடல்

ஆர்த்து, ஆனைக்கு அரசு உந்தி,
    அமரர் கணத்தொடும் அடர்ந்த
போர்த் தானை இந்திரனைப் பொருது,
    அவனைப் போர் தொலைத்து,
வேர்த்தானை, உயிர் கொண்டு
    மீண்டானை, வெரிந் பண்டு
பார்த்தானே! யான் பட்ட
    பழி வந்து பாராயோ?

பொருள்

ஆர்த்து = போரிட்டு

ஆனைக்கு அரசு = யானைகளுக்கு அரசனான ஐராவதத்தினை

உந்தி = அதன் மேல் ஏறி வந்து

அமரர் = தேவர்கள்

கணத்தொடும் = படையோடும்

அடர்ந்த = சண்டையிட்ட

போர்த்  = போரின்

தானை = தலைவன்

இந்திரனைப் பொருது = இந்திரனோடு போரிட்டு

அவனைப் போர் தொலைத்து = அவனை போரில் வென்று

வேர்த்தானை = அவன் வேர்த்து விறுவிறுக்க

உயிர் கொண்டு = உயிர் பிழைத்தோம் என்று

மீண்டானை = போரில் இருந்து தப்பி மீண்டு வந்தவனை

வெரிந் = புறமுதுகு

பண்டு = அன்றொரு நாளில்

பார்த்தானே!  = பார்த்தாயே

யான் பட்ட = நான் பட்ட

பழி வந்து பாராயோ? = பழியினை வந்து பார்க்க மாட்டாயா ?


ஆர்த்த என்றால் பேரொலி , சண்டை, யுத்தம், பெருகி வருதல் என்று பொருள்.

ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய். 

என்பார் மணிவாசகர். பேரலை, சுனாமி போல் வரும் பிறவிகள், ஒன்றன் பின் ஒன்றாக .

ஆர்த்த பிறவி
ஆர்த்தாடும் தீர்த்தன்
வார் கலைகள் ஆர்ப்ப
குழல் மேல் வண்டு ஆர்ப்ப

தமிழில் ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டால் அது நம்மை எங்கெங்கோ கொண்டு செல்லும்.

படகு சவாரி போல. அங்கே ஒரு தென்னை மரம், இங்கே கொஞ்சம் வீடுகள், அங்கே ஒரு   பண்ணை, திட்டு திட்டாய் தாமரை பூக்கள் என்று காட்சி மாறிக் கொண்டே வருவது போல , வார்த்தை என்ற படகில் ஏறி விட்டால் அது நம்மை  காலம் என்ற நதியில் எங்கெங்கோ கொண்டு செல்லும்.

இலக்குவன் அப்படி செய்த போது , நேரே சூர்ப்பனகை இலங்கை சென்றாள் என்று  சொல்லி விட்டு கதையை நகர்த்தி இருக்கலாம்.

வேலை மெனக்கெட்டு இராவணனின் புகழ் பாடுகிறான் கம்பன். நிறுத்தி நிதானமாக.

காரணம் என்ன?

நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அறம் பிழைத்தால் அந்த அறமே உன்னை தண்டிக்கும்  என்று காட்டவே, இராவணன் எவ்வளவு பெரிய ஆள் என்று காட்டுகிறான்.

ஐராவதம் என்ற அந்த யானைக்கு ஆயிரம் தந்தம் இருக்குமாம். ஆயிரம் தந்தம் என்றால்  அது எவ்வளவு பெரிய யானை என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அந்த யானையை ஒருவன் ஓட்டுகிறான் என்றால் அவன் எவ்வளவு பெரிய பலசாலியாக இருக்க வேண்டும்.

அப்படிபட்ட பல சாலியை ஒருவன் போரில் தோற்கடித்து ஓட ஓட விரட்டுகிறான் என்றால்  அப்படி விரட்டியவன் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும்? 

அவன் தான் இராவணன்.

மிகப் பெரிய பராக்கிரமம். வீரம்.

எல்லாம் போனது, மாற்றான் மனைவியை மோகித்த ஒரே காரணத்தால்.

தேவர்களை சிறை வைத்தது அல்ல அவன் செய்த தவறு.

இராமனின் மனைவியை கவர்ந்து சென்றது, அவன் செய்த பிழை.

அந்தப் பிழை, அப்பேற்பட்ட இராவணனை வேரோடு சாய்த்தது.

அவனுடைய தவம், வீரம், செல்வம், புகழ், குலம், படை, அனைத்தையும் புரட்டிப் போட்டது  அறம்.

இராமாயணம் போன்ற காப்பியங்களை சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்தால், இவை மனதில் எளிதில் பதியும்.

கதையாக மட்டும் அல்ல, ஒரு வாழ்க்கை நெறியாகச் சொல்லித் தர வேண்டும்.

பாட்டியை ஏமாற்றிய காக்கா, காக்காவை ஏமாற்றிய நரி என்று கதை சொல்லிக்  கொடுக்கிறோம். ஏமாற்றுவது தவறில்லை என்று சொல்லி சொல்லி வளர்க்கிறோம்.

அவர்கள் வளர்ந்த பின் ,  வேறு என்ன செய்வார்கள்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_10.html

Monday, July 8, 2019

திருவாசகம் - பொன்னூசல் ஆடாமோ

திருவாசகம் - பொன்னூசல் ஆடாமோ 


முன்பெல்லாம் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் தேவாரம், திருவாசகம் போன்ற உயர்ந்த பாடல்களை பாடுவார்கள். எப்போதும் கேட்காவிட்டாலும், இது போன்ற சமயங்களிலாவது கேட்கட்டுமே என்று இவை பாடப்பட்டது.

அது மட்டும் அல்ல, உயர்ந்த சிந்தனைகள், இனிய தமிழ், பக்தி இவை எல்லாம் எல்லோரையும் போய் சேர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் காரணம்.

இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பாடுவதற்காகவே மணிவாசகர் பொன்னூஞ்சல், பொற் சுண்ணம் இடித்தல் என்று பல பாடல்கள் பாடி இருக்கிறார்.

அத்தனையும் தேன் சொட்டும் பாடல்கள்.

இப்போது இரண்டு மாற்றங்கள் வந்துவிட்டன.

ஒன்று, மங்கல விழாக்களில் பாடப்பட்ட தேவராம் , திருவாசகம் போன்றவை இப்போது அமங்கல நிகழ்ச்சிகளில் பாடப் படுகிறது. ஓதுவாரை கூட்டி வந்து , மரண சடங்குகளில் பாட வைக்கிறார்கள்.

இரண்டாவது, மங்கல விழாக்களில் கர்ண கடூரமாய் சினிமா பாடல்கள் காதை கிழிக்கின்றன. அர்த்தம் இல்லாத, பாலுணர்ச்சியை தூண்டும் பாடல்களை பாடி ஆண் பெண், முதியவர், குழந்தைகள் என்று பாரபட்சம் இல்லாமல் எல்லோரும் ஒன்றாக கேட்கிறறார்கள். யாருக்கும் ஒரு உறுத்தலும் இல்லை.

நீரும், நிலமும், காற்று மாசு படுவது போல மனங்களும் மாசு பட்டுக் கொண்டே இருக்கின்றன.  என்ன செய்வது. சூழ்நிலை அப்படி.

திருமண விழாக்களில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரு ஊஞ்சலில் அமர வைத்து, லேசாக ஆட்டி விட்டு, பாடல் பாடுவார்கள்.

மணிவாசகரின் பொன்னூஞ்சல் பாடல் இதோ "ஆடு"கிறது.

பாடல்

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.


பொருள்


மாதாடு பாகத்தன்  = பெண்ணை ஒரு பாகத்தில் கொண்டு ஆடுபவன்

உத்தர கோசமங்கைத் = திரு உத்திர கோசை என்ற திருத்தலத்தில் எழுந்து அருளி இருப்பவன்

தாதாடு = மகரந்தம் ஆடும்

கொன்றைச் = கொன்றை மலர் சூடிய

சடையான் = சடை முடியை உடையவன்

அடியாருள் = அடியவர்களுக்குள்ளே

கோதாட்டி = சீராட்டி

நாயேனை = நாய் போல கீழான என்னை

ஆட்கொண்டென் = ஆட்கொண்டு என்

தொல்பிறவித் = பழைய பிறவி

தீதோடா = தீது + ஓடா = தீது தொடர்ந்து ஓடி வந்து பற்றிக் கொள்ளாமல்

வண்ணந் = அப்படி

 திகழப் = நடக்க

பிறப்பறுப்பான் = இனி வரும் பிறவிகளை வராமல் அந்தத் தொடர்பை அறுப்பவன்

காதாடு  =காதில் ஆடும்

குண்டலங்கள் = குண்டலங்கள்

பாடிக்  = பாடி

கசிந்தன்பால் = கசிந்து அன்பால்

போதாடு  = போது என்றால் மலர். மலர் ஆடும்

பூண்முலையீர் = ஆபரணங்களை அணிந்த மார்பை உடைய பெண்களே

பொன்னூசல் ஆடாமோ. = பொன்னூசல் ஆடாமோ. ஆடுவோம்.



மாதாடு  = மாது ஆட
தாதாடு  = தாது (மகரந்தம்) ஆட
கோதாட்டி  = சீராட்டி
தீதோடா  = தீது ஓட
காதாடு  = காது ஆட
போதாடு  = போது (மலர்) ஆட

எத்தனை ஆட்டம்.

பக்தியை விடுங்கள்.   கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சையை விடுங்கள்.

தமிழ் எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

பக்தியும், இறை உணர்வும், தமிழும், வாழ்க்கை முறையும் ஒரு புள்ளியில் நிற்கும் அந்த   அதிசயம், எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்.

மாதாடு - ஆண் என்றும் பெண் என்றும் யாரும் கிடையாது. ஆணுக்குள் பெண் உண்டு. பெண்ணுக்குள் ஆணுண்டு. எல்லோருமே இரண்டும் கலந்த கலவைதான். ஆணுக்குள் உள்ள பெண்ணை அடக்கி வைக்கிறோம். பெண்ணுக்குள் உள்ள  ஆணையும் அடக்கி வைக்கிறோம்.

எது அடக்கப் பட்டதோ, அது வெளிவர காத்திருக்கும். நீருக்குள் பந்தை அமுக்கி வைத்து இருப்பது போல.  எப்படா கையை எடுப்போம் என்று இருக்கும். எடுத்தவுடன் துள்ளிக் கொண்டு வெளியில் வரும்.

ஒவ்வொரு ஆணும், தனக்குள் இருக்கும் பெண்ணை வெளியே தேடி அலைகிறான்.

ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் இருக்கும் ஆணை வெளியே தேடி அலைகிறாள்.

வெளியில் உள்ள எந்த ஆணும், எந்த பெண்ணும் உள்ளுக்குள் இருக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஈடாகாது.

எது கிடைத்தாலும் திருப்தி இருக்காது.  தேடல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இது அல்ல நான் தேடிய பெண்/ஆண் என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

அர்த்த நாரீஸ்வரர் தத்துவம் அதுதான்.

மாதொரு பாகன் உணர்த்துவது அதைத்தான்.

திருவாசகம் ஒரு கடல்.

ஒரு வாழ்நாள் போதாது படித்து உணர.

மூல நூலை தேடிப் பிடித்து படித்துப் பாருங்கள்.

ஊன் உருகும். உயிர் உருகும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_57.html

கம்ப இராமாயணம் - தழல் எடுத்தான் மலை எடுத்தான்

கம்ப இராமாயணம் - தழல் எடுத்தான் மலை எடுத்தான் 


இலக்குவனால் மூக்கும், காதும், முலையும் அறுபட்ட சூர்ப்பனகை, வலியில் , அவமானத்தில் துடிக்கிறாள்.

துன்பம் என்று வரும்போது நமக்கு யார் துணை செய்வார்கள் என்று நினைப்பது இயல்பு.

சூர்ப்பனகையின் தமையர்கள் யார் ? இராவணன், கும்பகர்ணன், வீடணன். பெரிய பலசாலிகள்.

இராவணா, என் நிலையைப் பார் என்று கதறி அழுகிறாள்.

ஒரு புறம் சூர்ப்பனகையின் அவலம். இன்னோரு புறம் கம்பனின் அற்புதமான பாடல்கள். பாடலை இரசித்து மகிழவா அல்லது சூர்ப்பனகையின் துன்பம் கண்டு வருந்தவா என்று தெரியாமல் நம்மை குழப்பும் பாடல்கள். பாடல்கள் அத்தனையும் தேன்.

துன்பத்தைக் கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கும் பாடல்கள்.

அழுது, இராவணனை கூப்பிட்டாள் என்ற ஒரு வரியைத் தவிர அந்த பாடல்களில் ஒன்றும் இல்லை. ஆனால், அவள் கூப்பிட்ட விதம்..அருமையிலும் அருமை.

வாசகர்களுக்கு பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை, அவற்றை இரசிக்க.  இல்லை என்றால், விட்டு விட்டு மேலே போய் விடலாம். உங்கள் எண்ணத்தை  தெரிவியுங்கள்.

சரி, பாடலுக்கு வருவோம்....


"இராவணா , இந்த நிலத்தில் நீ நிலைத்து இருக்கும் போது, இந்த தவ வேடம் பூண்ட மானிடர்கள் கையில் வில்லை எடுத்துக் கொண்டு அலைவது சரியா? உன் எதிரில் தேவர்கள் கூட நிமிர்ந்து பார்க்க பயப்படுவார்களே. நீ யார், அனலை கையில் கொண்ட சிவனின் மலையை கையில் எடுக்க முயன்ற பலசாலி ஆயிற்றே ... உன் தங்கையின் நிலையை பார்க்க வரமாட்டாயா...வா "

என்று அழைக்கிறாள்.

"எடுத்து" என்ற சொல்லை கம்பன் எப்படி எடுத்தாழ்கிறான் (:) )என்று பாருங்கள்.

பாடல்

'நிலை எடுத்து, நெடு நிலத்து 
     நீ இருக்க, தாபதர்கள் 
சிலை எடுத்துத் திரியும்இது சிறிது 
     அன்றோ? தேவர் எதிர்
தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! 
     தழல் எடுத்தான் 
மலை எடுத்த தனி மலையே! 
     இவை காண வாராயோ?

பொருள்

'நிலை எடுத்து = நிலைத்து நிற்க

நெடு நிலத்து  = பெரிய நிலத்தில்

நீ இருக்க = நீ (இராவணன்) இருக்க.  நெடு நிலத்து நீ நிலை எடுத்து இருக்க என்று வாசிக்க வேண்டும்.

தாபதர்கள்  = தவக் கோலம் கொண்டவர்கள்

சிலை எடுத்துத் = கையில் வில்லை எடுத்து

திரியும் இது = திரிகின்ற இந்த நிலை

சிறிது அன்றோ?  = சிறுமை அல்லவா?

தேவர் = தேவர்கள்

எதிர் = (உன்) எதிரில்

தலையெடுத்து = தலை தூக்கி

விழியாமைச் = விழித்துப் பார்க்காமை

சமைப்பதே! = இருப்பதே

தழல் எடுத்தான்  = கையில் தீயைக் கொண்ட (சிவனின்)

மலை எடுத்த = கைலாய மலையை கையில் எடுத்த

தனி மலையே!  = ஒப்பற்ற மலை போல் வலிமை உடையவனே

இவை காண வாராயோ? = இந்த கொடுமையை காண வர மாட்டாயா ?


நிலை எடுத்து
சிலை எடுத்துத்
தலையெடுத்து
தழல் எடுத்து
மலை எடுத்து

தமிழ்  சொற்கள் கம்பனிடம் கை கட்டி சேவகம் செய்தன. என்னை எடுத்துக் கொள் , என்னை எடுத்துக் கொள் என்று அவன் முன் வரிசையில் நின்றன.

சூர்ப்பனகையின் புலம்பலில் இத்தனை தமிழ் சுவை.

கொஞ்சம் இலக்கணம் படிப்போமா ?

"மலை எடுத்த தனி மலையே " என்று இராவணனை குறிப்பிடுகிறாள்.

மலை போன்ற உறுதியானவன், வலிமையானவன் இராவணன் என்று சொல்ல வந்தாள். அவனையே மலை என்று சொல்லி விட்டாள்.

இதற்கு "உவமை ஆகு பெயர்" என்று இலக்கணத்தில் பெயர்.

அது என்ன ஆகு பெயர்.

ஒன்றிற்கு ஆகி வரும் பெயர்.

ஒன்றின் பெயர் இன்னொன்றுக்கு ஆகி வருவது ஆகு பெயர் எனப்படும்.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

"அறம் பற்றி அறிய வேண்டும் என்றால் வள்ளுவனைப் படி"

என்று சொன்னால், வள்ளுவரை எப்படி படிக்க முடியும். அவர்தான் இல்லையே. இருந்தாலும், இரு ஆளை எப்படி படிக்க முடியும்?

வள்ளுவனை படி என்றால் அவர் எழுதிய திருக்குறளைப் படி என்று அர்த்தம்.

இதற்கு கர்த்தாவாகு பெயர் என்று அர்த்தம்.

திருக்குறளின் கர்த்தாவான வள்ளுவர், அந்த திருக்குறளுக்கு ஆகி வந்தமையால் அது கர்த்தாவாகு பெயர் .

"அடுப்புக்கு பக்கத்தில நெய்யை வச்சிருக்க பாரு. அந்த நெய்யை கொஞ்சம் மாத்தி அந்தப் பக்கம் வை."

 என்று சொன்னால், நெய்யை தள்ளி வை என்று அர்த்தம் அல்ல.  நெய் உள்ள பாத்திரத்தை  தள்ளி வை என்று அர்த்தம். அதை  தானியாகு பெயர் என்று சொல்லுவார்கள். தானி என்றால் ஸ்தானம் அல்லது இடம். நெய் இருக்கும் இடமான அந்தப் பாத்திரத்துக்கு நெய் என்று சொல் ஆகி வந்ததால் அதற்கு தானியாகு என்று  பெயர்.


தமிழ் இலக்கணம் மிக எளிமையானது. வாழ்வோடு ஒட்டி வருவது. அன்றாடம் நடை முறையில் நாம் கையாள்வது. படிக்க படிக்க மிக சுவையானது. 'அட, இதற்கு இப்படி ஒரு பெயர் இருக்கா ' என்று ஆச்சரியப் பட வைக்கும்.

இப்படி இன்னும் கொஞ்சம் இருக்கு. தேடுங்கள், கண்டடைவீர்கள்.


மேலும் இரசிப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_8.html

Sunday, July 7, 2019

தனிப்பாடல் - உலகை உண்டுறங்குவான்

தனிப்பாடல் - உலகை உண்டுறங்குவான்


பயம்.

பயம் என்பது ஒரு நல்ல உணர்வு. பயம் நம்மை ஆபத்தில் இருந்து காப்பாற்றும். பயம் என்று ஒன்று இல்லாவிட்டால் நாம் முட்டாள் தனமாக ஏதாவது செய்து ஆபத்தில் சிக்கிக் கொள்வோம்.

வண்டிக்கு brake இருப்பது போல, குதிரைக்கு கடிவாளம் இருப்பது போல, பயம் நம்மை கட்டுப் படுத்தி ஒரு எல்லைக்குள் நிறுத்துகிறது.

இவ்வளவு செய்யலாம், இதற்கு மேல் செய்யக் கூடாது என்று நம்மை அறிவுறுத்துவது பயமே.

ஆனால், அந்த பயமே அளவு கடந்தால், வாழ்க்கை நரகமாகிவிடும். எதற்கு எடுத்தாலும் பயந்து கொண்டே இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

அதே போல், ஒன்றும் செய்ய முடியாததற்கு பயந்தால் வாழ்க்கை துன்பமயமாகி விடும்.

மரணம் கட்டாயம் வரும். அதில் இருந்து யாரும் தப்ப முடியாது. அதற்கு பயந்தால் பின் எப்படி வாழ்வது.

மரணம் பற்றிய பயம்.

மீண்டும் என்னவாக பிறப்போமோ என்று பயம்.

கணவன்/மனைவி/பிள்ளைகளை விட்டு விட்டு போகிறோமே என்ற பயம்

வரும் நாட்களில் முதுமை வந்து என்ன பாடு படுத்துமோ என்ற பயம்.

தனித்து விடப் படுவோமோ என்ற பயம்.

இந்த பயத்தில் இருந்து எல்லாம் எப்படி விடுபடுவது?

பயமற்ற வாழ்க்கை எப்படி வாழ்வது?

ஒரு தனிப்பாடல் சமீபத்தில் படித்தேன். பெரிய கருத்தாழம், சொல் ஆழம் உள்ள பாடல் இல்லைதான்.  இருந்தும் அதில் ஒரு எளிமையான அழகு இருப்பதைக் கண்டேன்.

ஒரு அலங்காரமும் இல்லாமல் சிலர் அழகாக இருப்பதைப் போல...


பாடல்

“ நாவுண்டு நீயுண்டு நாமம் தரித்தோதப்
பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ - பூவுண்டு
வண்டுறங்கும் சோலை மதிலரங்கத் தேஉலகை
உண்டுறங்கு வான்.ஒருவன் உண்டு “ 


பொருள்


“ நாவுண்டு = என்னுடைய நாக்கு உண்டு

நீயுண்டு = (பெருமாளே) நீ உண்டு

நாமம் = உன்னுடைய திரு நாமத்தை

தரித்தோதப் = நாக்கில் ஏற்றுக் கொண்டு ஓத

பாவுண்டு = நல்ல பாடல்கள் உண்டு

நெஞ்சே = என்னுடைய நெஞ்சே

பயமுண்டோ = நமக்கு பயம் என்று ஒன்று உண்டா ?

பூவுண்டு = நல்ல மலர்கள் உண்டு , பூவை உண்டு அதாவது பூவில் தேனை உண்டு

வண்டுறங்கும் = வண்டுகள் உறங்கும்

சோலை  = சோலைகள் நிறைந்த

மதிலரங்கத் தே = நீண்ட மதில்களை கொண்ட திருவரங்கத்தில்

உலகை = இந்த உலகத்தை

உண்டு = வாயில் போட்டு உண்டு

உறங்கு வான்.ஒருவன் உண்டு  = உறங்குவான் (பள்ளி கொண்டான்) ஒருவன் உண்டு

கற்பனை பண்ணிப் பாருங்கள். இன்றைக்கு சுமார் 300 அல்லது 400 ஆண்டுகள் பின் நோக்கி போய் விடவேண்டும்.

அதி காலை நேரம். சூரியன் இன்னும் முழுவதும் வெளி வரவில்லை.

மின்சாரம் கிடையாது.  பெட்ரோல் டீசல் கிடையாது. பெரிய வண்டிகள் கிடையாது. செல் போன் கிடையாது.  டிவி கிடையாது.

இவ்வளவு மக்கள் தொகை கிடையாது.

திருவரங்கம். சின்ன கிராமம். 200 அல்லது 300 பேர் இருக்கலாம். நிறைய திறந்த வெளி.  ஊரின் ஓரம் காவிரியும், கொள்ளிடமும் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஊரில் நிறைய தோட்டங்கள். சோலைகள்.

சோலையில் நிறைய மலர்கள். அதில் நிறைய தேன் . அந்த தேனை குடித்த மயக்கத்தில் வண்டுகள்  தூங்குகின்றன.

ஸ்ரீரங்கத்தில், பெருமாள் அமைதியாக பள்ளி கொண்டிருக்கிறார். எங்கும் அமைதி.

தூரத்தில் யாரோ நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுகிறார்கள். இன்னொரு பக்கம் சுப்ரபாதம் கேட்கிறது.

இதற்கு  மேல் என்ன வேண்டும்.

எதைப் பற்றி பயம்?

வாழ்க்கையை இரசியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் முழுவதுமாக  அனுபவியுங்கள். எதிர் காலத்தை பற்றி பயந்து கொண்டே இருக்காதீர்கள். இந்த கணம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று அனுபவியுங்கள்.

பாடலை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.

பயம் ஓடி விடும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_7.html

Saturday, July 6, 2019

திருவாசகம் - நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து

திருவாசகம் - நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து 


தினமும் உடற் பயிற்சி செய்யணும்னு நினைக்கிறேன். எங்க முடியுது, ஏதாவது ஒரு தடங்கல்.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமாவது படிக்கணும்னு நினைக்கிறேன், எங்க முடியுது...whatsapp செய்தி, டிவி, நண்பர்கள் தொலைபேசி என்று ஏதாவது வந்து குழப்பி விடுகிறது.

கணவன்/மனைவி/பிள்ளைகள் கூட நேரம் செலவழிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எங்க முடியுது. எனக்கு நேரம் இருக்கும் பொழுது அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்களுக்கு நேரம் இருக்கும் பொழுது எனக்கு இல்லை.

என்ன செய்தாலும் ஏதாவது குத்தம் குறை சொல்லிக் கொண்டே இருக்கும் கணவன்/மனைவி. எப்படித்தான் அன்பாக இருப்பது. அன்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன், முடிய மாட்டேன் என்கிறதே...

என்று இப்படி நமக்கு நாளும் பல சிக்கல்கள் வருகின்றன.

இவற்றை மீறி எப்படி நாம் நினைத்ததை செய்வது?

நமக்கு மட்டும் அல்ல, மணிவாசகருக்கும் இந்த சிக்கல் இருந்திருக்கிறது.

இறைவன் மேல் பக்தி செய்ய வேண்டும். கோவிலுக்குப் போக வேண்டும். திருப்பணி செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைத்தார். முடியவில்லை. ஏதோ ஒரு வேலை வந்து குழப்பிக் கொண்டே இருந்தது.

என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒரு வழியும் கண்டு பிடித்து விட்டார். கண்டு பிடித்தது மட்டும் அல்ல, அதை நமக்கும் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்.

அது என்ன வழி தெரியுமா ?

செய்ய முடியாவிட்டாலும், செய்வது போல நடி. நாளடைவில் அந்த நடிப்பே நிஜமாகி விடும்.

புரியவில்லையா?

படிக்க முடியவில்லையா ? ஒரு பிரச்சனையும் இல்லை. படிப்பது போல நடி. தினமும்  சும்மா இரண்டு மணி நேரம் படிப்பது போல பாவனை பண்ணு. புத்தகத்தை  திறந்து வைத்துக் கொண்டு சும்மா இரு. படம் பாரு.  ஒண்ணும் படிக்க வேண்டாம். இப்படி செய்து கொண்டிருந்தால், நாளடைவில் இந்தப் பழக்கம்  கொஞ்சம் கொஞ்சமாக தீவிர படிப்பில் கொண்டு போய் விட்டு விடும்.

மனைவி மேல் கோபமும், எரிச்சலும் வருகிறதா?  அவள் மேல் அன்பாக இருப்பது போல்  நடியுங்கள். அவள் செய்த சமையலை பாராட்டுங்கள். அவள் உடையை இரசியுங்கள். அவள் வீட்டாரைப் பற்றி புகழ்ந்து பேசுங்கள். உண்மையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த நடிப்பு நாளடைவில் உண்மையாக மாறிவிடும்.

பிள்ளை சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறானா? அவன் நல்லவன் என்று நினைத்து அவனை நடத்துங்கள்.  அவனிடம் அன்பு செலுத்துங்கள். பொய்யாகவேணும் செய்யுங்கள். அந்த பொய், நாளடைவில் உண்மையாக மாறும்.

மணிவாசகர் என்ன செய்தார் தெரியுமா,

தானும் பக்தி செய்பவர் போல மற்ற அடியார்களுடன் சேர்ந்து கோவிலுக்கு அவர்கள் பின்னால் போய் விடுவாராம். அவர் மனதில் அப்போது பக்தி இல்லை. பக்திமான் போல் நடித்தேன் என்கிறார்.

நாடகம்தான் என்றாலும், நாடிவில் அது உண்மையான பக்தியாக மாறியது உலகறியும்.



பாடல் 


நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.


பொருள்

நாடகத்தால் = நடிப்பால்

உன்னடியார் போல் = உன்னுடைய அடியவனைப் போல

நடித்து = நடித்து

நானடுவே = நான் நடுவே

வீடகத்தே = வீட்டின் அகத்தே - வானுலகத்தின் உள்ளே

புகுந்திடுவான் = புக வேண்டி

 மிகப்பெரிதும் = மிக வேகமாக

 விரைகின்றேன் = விரைந்து செல்கின்றேன்

ஆடகச்சீர் = உயர்ந்த தங்கத்தால் ஆன

மணிக்குன்றே = மணிகள் நிறைந்த குன்றே , மலையே

இடையறா = இடைவிடாத

அன்புனக்கென் = அன்பு  உனக்கு என்

ஊடகத்தே = உள்ளத்தில்

நின்றுருகத் = நின்று , அதனால் என் உள்ளம் உருக

தந்தருள் = தந்து அருள்வாய்

எம் உடையானே.= என்னை உடையவனே

இதைத்தான் இன்று மேல் நாட்டு உளவியல் அறிஞர்கள் (psychologists ) fake it till you make it என்று சொல்லுகிறார்கள். 

கீழே உள்ள இணைய தளத்தில் இது பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் படித்துணர்க.

http://mentalfloss.com/article/74310/8-fake-it-til-you-make-it-strategies-backed-science


நம் மூளை இருக்கிறதே, அதுக்கு ஒண்ணே ஒண்ணுதான் தெரியும். எதைச் சொன்னாலும்  அது ஏற்றுக் கொள்ளும். 

முடியும் என்று சொன்னால் , ஆமாம் முடியும் என்று ஏற்றுக் கொண்டு அதற்கு தகுந்த மாதிரி  உங்களை தயார் படுத்தும். 

முடியாது என்று நினைத்தால் ஆமாம் முடியாது என்று ஏற்றுக் கொண்டு  எவ்வாறு செய்யாமல் இருப்பது என்று வழி காணும். 

ஆங்கிலத்தில் GIGO என்று சொல்லுவார்கள். அதாவது Garbage In Garbage Out. 

எதை நம்புகிறோமோ, அதுவே நடக்கும். 

அதனால்தான் படித்து  படித்து சொன்னார்கள், நல்லவர்களோடு சேர்ந்து இரு, கெட்டவர்களை கண்டால் ஓடி விடு என்று. 

நல்ல குணங்கள் உங்களிடம் இருப்பது போல நினைத்துக் கொண்டு அது படி  நடங்கள். உண்மையில் அது இல்லாவிட்டால், இருப்பது போல நடியுங்கள். நாளடைவில் அது உண்மையாகிவிடும்.

ஆச்சரியமாக இருக்கிறது இல்ல?  செய்து பாருங்கள். 

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_6.html