Thursday, September 19, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - தமிழ்த்தலைவன்

இராமானுஜர் நூற்றந்தாதி - தமிழ்த்தலைவன்


இரவு நேரம். வீட்டுக்குள் நுழைகிறோம். மின்சாரம் இல்லை. ஒரே இருட்டு.  எது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. கண் திறந்துதான் இருக்கிறது. சாமான்கள் அந்தந்த இடத்தில் தான் இருக்கிறது. இருந்தும் கண் தெரியவில்லை.

ஏன் ?

இருட்டு.

வெளிச்சம் இருந்தால் தான் எது எங்கே இருக்கிறது என்று தெரியும்.

வெளிச்சம் இல்லாவிட்டால், கண் முன் இருக்கும் தூண் கூடத் தெரியாது. முட்டிக் கொள்வோம்.

இறைவன் கண் முன் இருந்த தூணில் இருந்தான். ப்ரகலாதனுக்குத் தெரிந்தது. இரணியனுக்கு தெரியவில்லை.

காரணம், அறியாமை என்ற இருள் அறிவை செயல் பட விடாமல் தடுக்கிறது.

அறியாமை என்ற இருள் விலகினால் இறை தரிசனம் கிடைக்கும். இல்லை என்றால், இருட்டில் நின்று கொண்டு, எதிரில் என்ன இருந்தாலும், எதுவும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் எல்லாம் பளிச் சென்று தெரியும்.

அமுதனார் சொல்கிறார்,

"கொடிய இருள் மறைந்த பின் திருக்கோவலூர் என்ற திருத்தலத்தில் உள்ள ஆயனை, அவனுடைய  தேவியுடன் தரிசிக்கப் பெற்ற தமிழ்த் தலைவன் பேயாழ்வாரின் பொன்னடிகளைப் போற்றும் இராமானுஜர் மேல் அன்பு பூண்டவர்களின் திருவடிகளை தலை மேல் சூடும் பக்தி உடையவர்கள் சிறந்தவர்களே "

பாடல்


மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்
பொன்னடி போற்றும் இராமா னுசற்கன்பு பூண்டவர்தாள்
சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே.



பொருள்

மன்னிய = நிலைத்து நின்ற

பேரிருள்  = பெரிய இருள் (அறியாமை என்ற இருள்)

மாண்டபின் = மறைந்த பின்

கோவலுள் = திருக்கோவளுள்

மாமலராள் = திருமகள்

தன்னொடு = அவளோடு

மாயனைக் = மாயனை

கண்டமை = தான் தரிசித்ததை

காட்டும் = உலகுக்கு காட்டும்

தமிழ்த்தலைவன் = தமிழ் தலைவன்  (பேயாழ்வார்)

பொன்னடி = பொன் போன்ற அடிகளை

போற்றும் = போற்றும்

இராமா னுசற்கு  = இராமானுஜருக்கு

கன்பு = அன்பு

பூண்டவர்தாள் = கொண்டவர்கள் தாள் (அடிகள்)

சென்னியிற் = தலையில்

சூடும் = சூடிக் கொள்ளும்

திருவுடை யாரென்றும் சீரியரே = பக்தி உடையவர்கள் என்றும் சிறந்தவர்களே .


திருக்கோவலூர் மாயன், அவனுடைய தேவி திருமகள்

அவர்களின் தரிசனம் பெற்ற பேயாழ்வார்

பேயாழ்வாரின் திருவடிகளை போற்றும் இராமானுஜர்

இராமானுஜர் மேல் அன்பு கொண்டவர்கள்

அன்பு கொண்டவர்களின் பாதங்களை தலை மேல் சூடி கொண்டவர்கள் சிறந்தவர்கள்

புரிகிறதா ?

ஆண்டவன்,
அடியார்  (பேயாழ்வார்)
அடியார்க்கு அடியார் (இராமானுஜர்)
அடியார்க்கு அடியார்க்கு அடியார் (அவர் மேல் அன்பு கொண்டவர்கள்)
அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார் (அன்பு கொண்டவர்களின் திருவடிகளை தலை மேல் சூடி கொண்டவர்கள்)

ஆண்டவனை அடையும் படிகள்

பிறவி என்ற இருட்டில் கண் இருந்தும் தெரியாமல் தவிக்கிறோம்.

ஞான விளக்கை கையில் கொண்டவர் பேயாழ்வார். அவர் முன் செல்ல , அவர் பின்னே  வரிசையாக சென்று விட வேண்டியது தான்.


இராமானுஜர் நூற்றந்தாதியில் ஒவ்வொரு பாடலும் தேன் போல தித்திப்பவை.

உள்ளத்தை உருக்குபவை.

மூல நூலை தேடி படியுங்கள்.

நான் சொன்னதை விடவும் உங்களுக்கு மேலும்   பல தோன்றலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_19.html


Wednesday, September 18, 2019

திருக்குறள் - பொன் போல் பொதிந்து

திருக்குறள் - பொன் போல் பொதிந்து 


நமக்கு தீமை செய்தவரை நாம் பொறுத்துக் கொண்டே இருந்தால், உலகம் நம்மை பற்றி என்ன நினைக்கும் என்று வள்ளுவரைக் கேட்டேன். நம்மை இளிச்ச வாயன், ஏமாந்த சோணகிரி, கையாலாகாதவன் என்றல்லவா நகையாடும் என்று கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னார்,

"அப்படி அல்ல. ஒருவன் உனக்கு தீங்கு செய்தால், பதிலுக்கு அவனுக்கு நீ தீங்கு செய்தால், சான்றோர் உன்னை ஒரு நிறை மனிதனாக நினைக்க மாட்டார்கள். மாறாக, உனக்கு தீங்கு செய்தவனை நீ மன்னித்தால்,உன்னை பொன்னைப் போல போற்றி பாதுகாப்பார்கள்"

பாடல்


ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து


பொருள்

ஒறுத்தாரை = தனக்கு தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களை

ஒன்றாக = சிறப்பாக

வையாரே = (ஆன்றோர்) வைக்க மாட்டார்கள்

வைப்பர் = வைப்பார்கள்

பொறுத்தாரைப் = பொறுத்துக் கொண்டவரை

பொன்போல் = பொன்னைப் போல

பொதிந்து = பாதுகாத்து

இப்படியே நமக்கு தீங்கு செய்பவர்களை எல்லாம் பொறுத்துக் கொண்டே போனால்,  நாம் அழிந்து போக மாட்டோமா என்பதற்கு மிக நுணுக்கமாக விடை தருகிறார் வள்ளுவப் பேராசான்.

நம்மிடம் தங்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் எப்படி பாதுகாப்போம்?  வங்கியில் உள்ள பெட்டகத்தில் வைப்போம். வீட்டில் ல், கனமான  பீரோவில் வைத்து பூட்டுவோம். அதற்கு ஒன்றுக்கு நாலு பூட்டு போடுவோம் . அதை நாம் எப்படி பாதுகாப்போமோ, அது போல உலகம் பொறுமை உள்ளவனை  பாதுகாக்கும் என்கிறார்.

"பொன் போல பொதிந்து"

பொன்னை எப்படி பொதிந்து பாதுகாப்பார்களோ அப்படி பொறுமை உள்ளவனை உலகம்  காக்கும் என்பது ஒரு பொருள்.

இரண்டாவது, பொன்னை நாம் எப்போதாவது காக்காமல் விடுவோமா?  இத்தனை காலம் பாது காத்தது போதும். இனி தூக்கில் தெருவில் போட்டு விடுவோம் என்று நினைப்போமா?  ஒரு காலும் நினைக்க மாட்டோம் அல்லவா? அது போல, பொறுமை உள்ளவர்களை உலகம் ஒரு போதும் கை விடாது.

மூன்றாவது, பொன் இருக்கிறதே, அது எப்போது சிறப்பு பெறுகிறது? நெருப்பில் சுட்டு, உருக்கி, சுத்தியால் அடித்து, நல்ல ஆபரணம் செய்த பின் அந்த பொன்னுக்கு   மதிப்பும் சிறப்பும் கூடுகிறது. அது போல, மனிதன் தனக்கு ஏற்படும்  துன்பங்களையும், தாழ்வுகளையும் பொறுத்துக் கொண்டால், பொன் போல் மதிப்பும் சிறப்பும் பெறுவான். பொன் அந்த வலிகளை பொறுத்துக் கொண்டதால் மின்னுமாப் போல்.

நான்காவது, பொன்னை வெறுப்பார் யாரும் இல்லை. தீயவர்கள் கூட பொன்னை போற்றுவார்கள்.  அது போல, பொறுமை உள்ளவர்களை உலகில் எல்லோரும் போற்றுவார்கள். தீமை செய்தவர்கள் கூட, ஒரு கால கட்டத்தில், "இவன்  மிக நல்ல மனிதன். இவனுக்குப் போய் நாம் தீங்கு செய்தோமே" என்று நினைத்து வருந்தி  அவனைப் போற்றுவார்கள்.


"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே"

ஒருவன் தீங்கு செய்கிறான். நாம் அவனுக்கு பதிலுக்கு தீங்கு செய்கிறோம். நமக்கும் அவனுக்கும்  தீங்கு செய்வதில் என்ன வித்தியாசம்? அவன் முதலில் செய்தான். நாம் இரண்டாவது  செய்தோம் என்ற வித்தியாசம் தவிர, வேறு எல்லாம் ஒன்று தான்.  எனவே தான், இவனுக்கும் அவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இரண்டும் ஒன்று தான். "ஒன்றாக" என்றால் தனியாக, சிறப்பாக என்று அர்த்தம்.

விஸ்வாமித்ரன், தசரதனிடம்

"கரிய செம்மல் ஒருவனைத் தருதி" என்றார்.

இரண்டு பேர் கரிய நிற பிள்ளைகள். இராமனும், பரதனும். யாரைச் சொல்கிறார்   விஸ்வாமித்ரர்?  ஒருவனை என்றால் சிறந்தவனை என்று அர்த்தம். இராமன் தான் சிறந்தவன்.

"ஒரு திரு முருகன் வந்தான்" என்பார் கச்சியப்பர். இங்கே ஒரு என்றால் சிறந்த, தனித்துவம் வாய்ந்த என்று அர்த்தம்.

ஒறுத்தாரை சிறப்பாக கருத மாட்டார்கள் சான்றோர். எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைதான் என்று  நினைத்துக் கொள்வார்கள்.

பொறுமையின் பலன் புரிகிறது அல்லவா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_54.html

இராமானுஜர் நூற்றந்தாதி - மறையினை மன்ன வைப்பவரே

இராமானுஜர் நூற்றந்தாதி - மறையினை மன்ன வைப்பவரே


தாய் நமக்கு தந்தையை அறிமுகப் படுத்துகிறாள். அவள் சொல்லித்தான், தந்தை யார் என்று நாம் அறிந்து கொள்கிறோம்.

தந்தை நமக்கு ஆசிரியரை அறிமுகப் படுத்துகிறார். கை பிடித்துக் கொண்டு போய் பள்ளியில் சேர்த்து விடுகிறார்.

ஆசிரியர் நமக்கு இறைவனை அறிமுகப் படுத்துவார்.

அதெல்லாம் இல்லை, ஆசிரியர் பாடம் சொல்லித் தருவார்.அவருக்கே கடவுள் என்றால் யார் என்று தெரியாது. அவர் எப்படி எனக்கு கடவுளை காட்ட முடியும் என்று சிலர் கேட்கலாம்.

அவர் கடவுளை காட்ட வேண்டாம். கல்வியை ஒழுங்காக சொல்லித் தந்தால் போதும். அந்த கல்வி இறைவனை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்த்தும்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்

என்பார் வள்ளுவர்.

கல்வி, இறைவனின் திருவடிகளில் கொண்டு சேர்க்கும்.

எனவேதான் ஆசிரியர், ஆச்சாரியனை நம் இனம் கொண்டாடுகிறது.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"

என்பார் அருணகிரிநாதர்.

ஆச்சாரியன் கையை பிடித்துக் கொண்டு இறைவனை அடைந்து விடலாம் என்பது நம்பிக்கை.

இறைவனை விட்டு விடுங்கள் ,
அவனை கண்ட ஆழ்வார்களை விட்டு விடுங்கள்,
ஆழ்வார்களை மனதால் எப்போதும் கொண்ட இராமாநுஜரையும் விட்டு விடுங்கள்.
இராமானுஜரை மனதில் கொண்ட அடியவர்கள் யாரோ, அவர்களே இந்த உலகில் வேதம் நிலைத்து நிற்க செய்பவர்கள் என்கிறார்  அமுதனார்.

பாடல்


இறைவனைக் காணும் இதயத் திருள்கெட ஞானமென்னும்
நிறைவிளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்
துறையவைத் தாளும் இராமா னுசன்புகழ் ஓதும்நல்லோர்
மறையினைக் காத்த இந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே.


பொருள்


இறைவனைக் = இறைவனை

காணும் = காணும் போது

இதயத் திருள்கெட = இதயத்தில் உள்ள இருள் எல்லாம் கெட

ஞானமென்னும் = ஞானம் என்ற

நிறைவிளக் கேற்றிய = நிறைவான விளக்கை ஏற்றிய

பூதத் திருவடி = பூதத்தாழ்வார்

தாள்கள் = திருவடிகள்

நெஞ்சத் = மனதில்

துறைய = உறைந்து இருக்கும்படி

வைத் தாளும் = வைத்து போற்றும்

இராமா னுசன் = இராமானுசன்

புகழ் = புகழை

ஓதும் நல்லோர் = சொல்லும் நல்லவர்ககள்

மறையினைக்  = வேதத்தை

காத்த = காத்து

இந்த மண்ணகத் தே = இந்த மண்ணில்

மன்ன = நிலைத்து நிற்கும்படி

வைப்பவரே. = செய்வார்கள்


என்ன சொல்ல வருகிறார்?

இராமானுஜரை மனதில் வைத்து இருந்தாலே போதும், அவர்கள் தீய செயல்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் செல்லும் வழி நல்ல வழியாகத்தான் இருக்கும். வேதம் சொன்ன வழியாகத்தான் இருக்கும். வேதத்தில் சொன்ன படி   வாழ்வதால், அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாழ்வார்கள். வேதம் வாழ்க்கையோடு சேர்ந்து நிலைத்து நிற்கும்.

யாருமே அதில் சொன்ன படி வாழாவிட்டால், பின் அந்த நூலுக்கு என்னதான் பலன், பயன்?

அது எப்படி இராமனுசரை மனதில் வைத்தாலே நாம் நல்லவர்களாகி விடுவோமா?

உதாரணம் பார்ப்போம்.

கைகேயி பெற்ற வரத்தால், இராமன் காடு செல்ல வேண்டி இருந்தது. அதைக் கேட்ட  இலக்குவன் கோபம் கொண்டு மிகையையாகப் பேசுகிறான். நிதானம் தவறி பேசுகிறான்.

அப்போது இராமன் சொல்கிறான்,

"வேதம் படித்த வாயால்" இப்படி பேசலாமா என்று.

வேதத்தைப் படித்தாலே போதும், வாழ்வில் நிதானம் வந்து விடும். வார்த்தையில்  கனிவு இருக்கும். பணிவு இருக்கும்.

அதாவது, படித்த பின் அதன் படி நடக்க நினைப்பவர்களுக்கு அப்படி நிகழும்.

"அதெல்லாம் நடை முறை இல்லை, நான் சாதாரண மனுஷன்/மனுஷி, நம்மால் அது முடியாது,  மனது ஏற்றுக் கொள்கிறது ஆனால் செய்யத்தான் முடியவில்லை " என்று சாக்கு போக்கு சொல்பவர்களுக்கு அல்ல.


ஆய் தந்து, அவன், அவ் உரை
    கூறலும் ‘ஐயன், ‘நின் தன்
வாய் தந்தன கூறுதியோ
    மறை தந்த நாவால்?
நீ தந்தது அன்றே நெறியோர்
    கண் இலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால் அவர்மேல்
    சலிக்கின்றது என்னோ? ‘

"வாய் தந்தன கூறுதியோ
    மறை தந்த நாவால்?"

வேதம் சொன்ன வாயால், வாய்க்கு வந்த படி பேசலாமா" என்று கேட்கிறான். படித்தால் மட்டும் போதாது, அதற்கு தக வாழவும் வேண்டும்.

இராமாநுஜரை மனதில் வைத்தவர்கள், வேதம் நிலைத்து இருக்கும் படி வாழ்வார்கள்.

அதாவது, நான் இராமானுஜரை வழிபடுகிறேன், அவரை மனதால் எப்போதும் வைத்து இருக்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது, வேதம் காட்டிய நல் வழியில் வாழவும் வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார்.

சாதி மத பேதம் இல்லாமல், எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாழ்ந்தார் இராமானுஜர். அவரை மனதில் வைத்தவர்கள் அப்படி செய்ய வேண்டும் என்பது மறைமுக கட்டளை.

முடியுமா என்ன ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_18.html

Tuesday, September 17, 2019

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - காய்சின ஆலம் உண்டாய்

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - காய்சின ஆலம் உண்டாய் 


நமக்கு துன்பம் வரும் போது நாம் இறைவனை ஏசுகிறோம். "கடவுளே உனக்கு கண் இல்லையா,  நீ என்ன கல்லா ?"

ஏதாவது நல்லது நடந்தால் , "நான் பண்ணின பிரார்த்தனை வீண் போகவில்லை, நான் கும்பிட்ட சாமி நல்ல சாமிதான்" என்று  சாமிக்கு சான்றிதழ் வழங்குகிறோம்.

உங்கள் ஏச்சினாலும் , புகழ்ச்சியாலும் இறைவனுக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லம். நீங்கள் புகழ்ந்தால் அவன் உடனே எல்லோரிடமும் சென்று நீங்கள் புகழ்ந்ததை சொல்லி மகிழப் போவதும் இல்லை, நீங்க திட்டினால் அதற்காக அவன் மனம் வருத்தப் போவதும் இல்லை.

உங்களுக்கு பொழுது போகவில்லை. ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

மணிவாசகர் சொல்கிறார் "நான் ஏசினாலும், புகழ்ந்தாலும் அது என் பிழைதான். நீ அதை எல்லாம் பெரிது பண்ணாமல் என்னை காப்பாற்றி கடையேற்றுவாய் . அமுது வந்த போது, அதில் உனக்கும் ஒரு பங்கு வந்திருக்க வேண்டும். அதை விடுத்து, நீ விஷத்தை உண்டாய். உனக்கு அமுதும், விஷமும் ஒன்றுதான். எனவே, என் ஏச்சையும், புகழையும் ஒன்றாகக் கொண்டு, தேவர்களை காத்தது போல என்னையும் காப்பாத்து "

என்று குழைந்து  வேண்டுகிறார்.

பாடல்


ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து
வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின்
தேகடை யாயென்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக்
காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே.


பொருள்


ஏசினும் = ஏசினாலும்

யானுன்னை = யான் உன்னை

யேத்தினும் = ஏத்தினும், புகழ்ந்தாலும்

என்பிழைக்கே = என் பிழையினால்

குழைந்து = மனம் வருந்தி

வேசறு வேனை = துன்பப் படுவேனை

விடுதிகண்டாய் = விடுதலை அடையச் செய்வாய்

செம்பவள  = சிவந்த பவளம்

வெற்பின் = மலையின்

தேகடை யா = போல தேகம் உடையவனே

யென்னை  = என்னை

ஆளுடையாய் = ஆளுகின்றவனே

சிற் றுயிர்க் கிரங்கிக் = சிறிய உயிர்களுக்கு இரங்கி, இரக்கப் பட்டு (சிறிய உயிர் = தேவர்கள்)

காய்சின = பொங்கி வந்த

ஆலமுண்டாய் = ஆலகால விஷம் உண்டாய்

அமுதுண்ணக் கடையவனே. = அமுது உண்ண உடமை உள்ளவனே

அமுது நஞ்சு எல்லாம் அவனுக்கு ஒன்றுதான். நாம் தான் கிடந்து அலட்டிக் கொள்கிறோம்....கோவிலுக்குப் போய் அவன் பெயரில் அர்ச்சனை செய்வதும்,  ஆராதனை செய்வதும், அபிஷேகம் செய்வதும், மொட்டை அடிப்பதும் என்று.  இதை எல்லாம் பற்றி அவன் கவலைப் படுவதே இல்லை.

அமுதம் எங்கே. உலகை அழிக்கும் விஷம் எங்கே. அதற்கு பதில் இதை உண்டவன், இதை எல்லாம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவா போகிறான்.

எதற்கு இந்த ஆட்டம் ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_17.html

Monday, September 16, 2019

திருக்குறள் - பொறுமை - நிறையுடைமை

திருக்குறள் - பொறுமை - நிறையுடைமை 


நல்ல பேர் எடுப்பது என்பது ஒன்று, எடுத்த பேரை தக்க வைத்துக் கொள்வது என்பது மற்றொன்று.

பேர் எடுப்பதைவிட அதை தக்கவைத்துக் கொள்வது கடினமான செயல்.

எல்லோருக்கும் கொஞ்சம் நல்ல பெயர் இருக்கும். அன்பானவர்/ள் , யாருக்கும் உடனே உதவி செய்பவர்/ள், திறமையானவர்/ள், பொறுப்பானவர்/ள் என்று ஏதோ ஒரு விதத்தில் நல்ல பேர் இருக்கும்.

அந்த நல்ல பேர் நிலைக்க வேண்டும் என்றால், பொறுமை என்ற குணத்தை எப்போதும் கடை பிடிக்க வேண்டும்.

நல்ல பேருக்கும் , பொறுமைக்கும் என்ன சம்பந்தம்?

இருக்கு.

ஏதோ ஒரு நொடியில், யாரோ ஒன்றை தவறாக சொன்னார்கள், அல்லது செய்தார்கள் என்றால், நிதானம் தவறி நாம் ஒன்றை செய்து விடக் கூடும், அல்லது வாய் தவறி வார்த்தை வந்து விடலாம். நாம் அப்படி பொறுமை இழந்து ஏதேனும் செய்தால், சொன்னால், அது, நாம் இதுவரை சேர்த்து வைத்த நல்ல பெயரை அழித்து விடும்.

"அவரா அப்படி சொன்னார்/செய்தார்? அவர் அப்படி செய்ய மாட்டாரே, நம்ப முடியலியே..." என்று உலகம் சொன்னாலும், அந்த ஒரு செய்கை, சொல் எப்போதும் நம் மீது ஒரு கறையாக இருந்து கொண்டே இருக்கும்.  ஒரு முறை தவறு நிகழ்ந்து விட்டால், பின் அதை மாற்றுவது கடினம்.

ஒரு முறைதான் இராமன் மறைந்து நின்று அம்பு எய்தான். யுகம் எத்தனை ஆனால் என்ன?  அந்த கறை போகிறதா?

பாடல்


நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்

பொருள்

நிறையுடைமை = நிறைந்த தன்மை, உயர்வான குணங்கள் நிறைந்து இருக்கும் தன்மை

நீங்காமை = ஒருவனை விட்டு நீங்காமல் இருக்கும்படி

வேண்டின் = விரும்பினால்

பொறையுடைமை = பொறுமையுடன் இருத்தல்

போற்றி = போற்றி, சிறப்பாக, உயர்வாக,

ஒழுகப் படும் = கடை பிடிக்க வேண்டும்

ஒழுகுதல் என்றால் விடாமல் கடை பிடித்தல் என்று பொருள்.  ஏதோ ஒரு சமயம் செய்தோம், இன்னொரு சமயம் விட்டு விட்டோம் என்று இருக்கக் கூடாது.

போன மாதம், ஆறாம் தேதி நான் பொறுமையாக இருந்தேன் என்று சொல்லிப்  பயன் இல்லை. எப்போதும் பொறுமையை கடை பிடிக்க வேண்டும்.

அப்படி கடை பிடிக்காவிட்டால், நிறையுடைமை நீங்கி விடும்.

பொறுமை , நமது மற்ற நல்ல குணங்களை கட்டி சேர்த்து வைக்கும் அரண் போன்றது என்பது பொருள்

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_16.html

Sunday, September 15, 2019

திருக்குறள் - பொறுமை - வலிமை

திருக்குறள் - பொறுமை - வலிமை 


பொறுமை நல்லது என்கிறார் வள்ளுவர். அதுவே தலையாய அறம் என்கிறார்.

நமக்கு தீங்கு செய்பவர்களை எல்லாம் பொறுத்துக் கொண்டே இருந்தால், உலகம் நம்மை கையாலாகாதவன் என்று இகழாதா. மானம், ரோசம், சூடு, சொரணை இல்லாதவன் என்று நம்மை பார்த்து சிரிக்காதா. அப்படி ஊர் சிரிக்க வாழும் வாழ்க்கை எப்படி சிறந்த அறம் ஆகும் என்று வள்ளுவரிடம் கேட்டபோது சொன்னார்,

"அப்படி அல்ல தம்பி. ஒருவன் உனக்கு தீங்கு (மிகை) செய்கிறான் என்றால் அவனுக்கு பதிலுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று நினைப்பது எல்லோரும் செய்வது. அதில் என்ன பெரிய பெருமை இருக்கிறது. ஒருவன் உனக்கு தீங்கு செய்கிறான் என்றால் அதை பொறுத்துக் கொள்ளத்தான் பெரிய வலிமை வேண்டும். உடல் வலியை விட மன வலிமை வேண்டும்"

"ஐயா, அதெல்லாம் சரி. பல்கலைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதில் என்ன பெருமை. அவன் மீண்டும் நாளை இன்னொரு தீங்கு செய்வான். அவன் செய்வதைப் பார்த்து இன்னொருவன் செய்வான். போகிற வருகிறவன் எல்லாம் எனக்கு தீங்கு செய்வார்களே. இதை எப்படி தடுப்பது? என்று கேட்டேன்.

"நீ தவறாக உலகை எடை போடுகிறாய். பொறுமையாய் இருப்பவனை உலகம் எளியவன் என்று எடை போடாது. இவ்வளவு செய்த பின்னும் ஒருவன் பொறுமையாய் இருக்கிறான் என்றான் அவனுடைய நல்ல உள்ளத்தை, அவனுடைய சகிப்பு தன்மையை , உறுதியான உள்ளத்தை உலகம் பாராட்டும். அவனுக்கு தீங்கு செய்பவர்களை உலகம் தண்டிக்கும்" என்று சொல்லி விட்டு   அதற்கு ஒரு உதாரணமும் தந்தார்.

"உலகிலேயே பெரிய வறுமை எது என்றால், வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்க முடியாத  வறுமைதான். அது போல, உலகிலேயே மிகப் பெரிய பலம் எது என்றால், முட்டாள்கள் நமக்கு செய்யும் தீமையை பொறுத்துக் கொள்ளுதல்"  என்றார்.

பாடல்

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை


பொருள்


இன்மையுள் = இல்லாமையில் , வறுமையில்

இன்மை = இல்லாதது (வறுமையிலும் வறுமை)

விருந்தொரால் = விருந்தை விலக்குதல் (ஓரல் விலக்குதல் )

வன்மையுள் = வலிமையில்

வன்மை = பெரிய வலிமை

மடவார்ப் = முட்டாள்களின்

பொறை = (செயல்களை) பொறுத்தல்

இது கொஞ்சம் ஏற்றுக் கொள்ள கடினமான செய்திதான்.

அப்படி யாராவது வாழ்ந்தார்களா ? கதையாவது இருக்கிறதா என்றால் ...

இராமனுக்கு கைகேயி செய்த கொடுமையை விடவா பெரிய கொடுமை இருக்க முடியும்.  காட்டில் படாத பாடு பட்டான். மனைவியை இழந்தான். அரக்கர்கள்  எப்போதும் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள்.

எல்லாம் முடிந்து, இராவண வதம் முடிந்து, இறுதியில் தசரதன் சொர்க்கத்தில் இருந்து வருகிறான். இராமனைப் பாராட்டி "உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள்" என்கிறான்.

இராமன் என்ன கேட்டான் தெரியுமா ?


‘ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று
    உரை ‘என, அழகன்,
‘தீயள் என்று நீ துறந்த என்
    தெய்வமும் மகனும்,
தாயும் தம்பியுமாம் வரம்
    தருக ‘எனத் தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன
    உயிரெலாம் வழுத்தி.


"நீ தீயவள் என்று துறந்த என் தெய்வமாம் கைகேயியும், பரதனும் எனக்கு தாயும், தம்பியாக வேண்டும். அந்த வரத்தைத் தருவாய் " என்று கேட்டான்.

அதைக் கேட்டு உலகம் எல்லாம் "ஆஹா" என்று வாய் திறந்து ஆச்சரியத்தில் வாழ்த்தியது இராமனை.

இராமனை யாரும், இகழவில்லை.

கைகேயி உன் மனைவியாக வரம் தா என்று  கேட்கவில்லை. அவள் எனக்கு மீண்டும் தாயாக வேண்டும் என்று வேண்டினான்.

அதுவும் எப்படி, "என் தெய்வம்" என்கிறான்.

முடியுமா?

நாட்டைப் பறித்துக் கொண்டு, காட்டுக்கு விரட்டிய அந்த பெண்ணை, "தெய்வம்" என்று கூறுகிறான் இராமன்.

இராமன் கடவுள், "நான் சாதாரண மனுஷன்/மனுஷி" என்று சொல்லிக் கொள்ளலாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என்பது மறை


இங்கே இருக்கும் போதே தெய்வ நிலையை அடையலாம் என்கிறார் பேராசான்.

இராமன் அளவுக்கு முடியாவிட்டாலும்,  முடிந்த வரை பொறுமை என்ற நல்ல குணத்தை  கடை பிடிக்கலாமே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_15.html

Saturday, September 14, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - திரித்தன் றெரித்த திருவிளக்கை

இராமானுஜர் நூற்றந்தாதி - திரித்தன் றெரித்த திருவிளக்கை


வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றுவார்கள். அதற்கு திரி திரித்து போடுவார்கள். பஞ்சில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளை எடுத்து அதை திரியாக திரித்து , எண்ணெயில் நனைத்து விளக்கு ஏற்றுவார்கள்.

ஒரே பஞ்சை போட்டால் என்ன? எரியாதா ?

எரியும். ஆனால் சீக்கிரம் கரிந்து விடும்.

இரண்டு அல்லது மூன்று பஞ்சை சேர்த்து திரிக்கும் போது, அந்த திரிகளுக்கு நடுவில் ஒரு மெல்லிய குழாய் போன்ற அமைப்பு உருவாகும். அதன் மூலம் எண்ணெய் வேகமாக மேலேறும். தமிழில் தந்துகி கவர்ச்சி என்பார்கள். ஆங்கிலத்தில் capillary effect என்று சொல்லுவார்கள்.

எப்படி திரி திரிப்பதால் எண்ணெய் நன்றாக மேலேறி வருகிறதோ, அது போல உண்மை என்ற எண்ணெய் மேலேறி வந்து உலகுக்கு எல்லாம் வெளிச்சம் காட்ட வேதத்தையும், தமிழையும் திரித்து உலகுக்கு  அளித்த பொய்கை ஆழ்வாரின் பாசுரங்களை மனதில் எப்போதும் வைத்திருக்கும் இராமானுஜன் , அவரே என் தலைவன், இறையவன் என்று அமுதனார் பாடுகிறார்.


பாடல்


வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே.

பொருள்

வருத்தும்  = வருத்தம் தருகின்ற

புறவிருள் = புற இருள்

மாற்ற = மாற்ற, போக்க

எம் பொய்கைப்பி ரான் = பொய்கை பிரானான பொய்கை ஆழ்வார்

மறையின் = வேதத்தின் 

குருத்தின் = வெளிப்படும் உண்மை

பொருளையும் = அதன் பொருளையும்

செந்தமிழ் = தமிழ்

தன்னையும் = அதையும்

கூட்டி = சேர்த்து

ஒன்றத் = ஒன்றாக

திரித்தன் றெரித்த = திரித்து எரித்த, ஏற்றிய

திருவிளக் கைத் = திருவிளக்கை

தன் = தன்னுடைய

திருவுள்ளத்தே = மனதில்

இருத்தும் = எப்போதும் வைத்திருக்கும்

பரமன் = தலைவன்

இராமா னுசனெம் இறையவனே. = இராமானுசன் எம் இறையவனே

புற இருள் என்றால் என்ன ?

வெளியே ஏதோ இருக்கிறது என்று நாம் தேடி அலைகிறோம். இன்பம், செல்வம், புகழ், செல்வாக்கு, நட்பு, உறவு, என்று எதை எதையோ தேடி அலைகிறோம். கடைசியில் கையில் மிஞ்சுவது ஒன்றும் இல்லை. என்ன வேண்டும் என்றே தெரியாமல் தேடுகிறோம்.  எதைத் தொலைத்தோம் என்று தெரியாமலே தேடுகிறோம்.

எனவே, அதை இருட்டில் தேடுவது போல என்று புற இருள் என்றார்.

விளக்கை ஏற்றின்னால், இருள் அகன்று விடும்.

இங்கே இருள், வெளிச்சம் என்பது அறியாமை, ஞானம் என்பதைக் குறிக்கும்.

இராமானுஜர் நூற்றந்தாதியில் இப்படி பல அருமையான பாடல்கள் இருக்கின்றன.

படித்துப் பாருங்கள்.

நல்ல விஷயங்களுக்கு கொஞ்ச நேரம் ஒதுக்கினால்தான் என்ன?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_72.html