Thursday, September 19, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - தமிழ்த்தலைவன்

இராமானுஜர் நூற்றந்தாதி - தமிழ்த்தலைவன்


இரவு நேரம். வீட்டுக்குள் நுழைகிறோம். மின்சாரம் இல்லை. ஒரே இருட்டு.  எது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. கண் திறந்துதான் இருக்கிறது. சாமான்கள் அந்தந்த இடத்தில் தான் இருக்கிறது. இருந்தும் கண் தெரியவில்லை.

ஏன் ?

இருட்டு.

வெளிச்சம் இருந்தால் தான் எது எங்கே இருக்கிறது என்று தெரியும்.

வெளிச்சம் இல்லாவிட்டால், கண் முன் இருக்கும் தூண் கூடத் தெரியாது. முட்டிக் கொள்வோம்.

இறைவன் கண் முன் இருந்த தூணில் இருந்தான். ப்ரகலாதனுக்குத் தெரிந்தது. இரணியனுக்கு தெரியவில்லை.

காரணம், அறியாமை என்ற இருள் அறிவை செயல் பட விடாமல் தடுக்கிறது.

அறியாமை என்ற இருள் விலகினால் இறை தரிசனம் கிடைக்கும். இல்லை என்றால், இருட்டில் நின்று கொண்டு, எதிரில் என்ன இருந்தாலும், எதுவும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் எல்லாம் பளிச் சென்று தெரியும்.

அமுதனார் சொல்கிறார்,

"கொடிய இருள் மறைந்த பின் திருக்கோவலூர் என்ற திருத்தலத்தில் உள்ள ஆயனை, அவனுடைய  தேவியுடன் தரிசிக்கப் பெற்ற தமிழ்த் தலைவன் பேயாழ்வாரின் பொன்னடிகளைப் போற்றும் இராமானுஜர் மேல் அன்பு பூண்டவர்களின் திருவடிகளை தலை மேல் சூடும் பக்தி உடையவர்கள் சிறந்தவர்களே "

பாடல்


மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்
பொன்னடி போற்றும் இராமா னுசற்கன்பு பூண்டவர்தாள்
சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே.



பொருள்

மன்னிய = நிலைத்து நின்ற

பேரிருள்  = பெரிய இருள் (அறியாமை என்ற இருள்)

மாண்டபின் = மறைந்த பின்

கோவலுள் = திருக்கோவளுள்

மாமலராள் = திருமகள்

தன்னொடு = அவளோடு

மாயனைக் = மாயனை

கண்டமை = தான் தரிசித்ததை

காட்டும் = உலகுக்கு காட்டும்

தமிழ்த்தலைவன் = தமிழ் தலைவன்  (பேயாழ்வார்)

பொன்னடி = பொன் போன்ற அடிகளை

போற்றும் = போற்றும்

இராமா னுசற்கு  = இராமானுஜருக்கு

கன்பு = அன்பு

பூண்டவர்தாள் = கொண்டவர்கள் தாள் (அடிகள்)

சென்னியிற் = தலையில்

சூடும் = சூடிக் கொள்ளும்

திருவுடை யாரென்றும் சீரியரே = பக்தி உடையவர்கள் என்றும் சிறந்தவர்களே .


திருக்கோவலூர் மாயன், அவனுடைய தேவி திருமகள்

அவர்களின் தரிசனம் பெற்ற பேயாழ்வார்

பேயாழ்வாரின் திருவடிகளை போற்றும் இராமானுஜர்

இராமானுஜர் மேல் அன்பு கொண்டவர்கள்

அன்பு கொண்டவர்களின் பாதங்களை தலை மேல் சூடி கொண்டவர்கள் சிறந்தவர்கள்

புரிகிறதா ?

ஆண்டவன்,
அடியார்  (பேயாழ்வார்)
அடியார்க்கு அடியார் (இராமானுஜர்)
அடியார்க்கு அடியார்க்கு அடியார் (அவர் மேல் அன்பு கொண்டவர்கள்)
அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார் (அன்பு கொண்டவர்களின் திருவடிகளை தலை மேல் சூடி கொண்டவர்கள்)

ஆண்டவனை அடையும் படிகள்

பிறவி என்ற இருட்டில் கண் இருந்தும் தெரியாமல் தவிக்கிறோம்.

ஞான விளக்கை கையில் கொண்டவர் பேயாழ்வார். அவர் முன் செல்ல , அவர் பின்னே  வரிசையாக சென்று விட வேண்டியது தான்.


இராமானுஜர் நூற்றந்தாதியில் ஒவ்வொரு பாடலும் தேன் போல தித்திப்பவை.

உள்ளத்தை உருக்குபவை.

மூல நூலை தேடி படியுங்கள்.

நான் சொன்னதை விடவும் உங்களுக்கு மேலும்   பல தோன்றலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_19.html


3 comments:

  1. உங்கள் விளக்கம் ஆவலை தூண்டுகிறது. ஆனால் உங்கள்பதிவுகளை படித்த பின்தான் அதில் உள்ள ருசியையும் ஆழ்ந்த கருத்தையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.ஆக என் வேண்டுகோள் அந்த நூறு பாடல்களுக்கும் விளக்கம் நீங்கள் தர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. முறையாய் ஒவ்வொரு பாடலாய் சொற்பொருள், இலக்கன குறிப்புகள் என்று வேளுக்குடி கிரிஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம் இருக்கிறது. தமிழின் சுவையோடு பக்தி சுஅவையும் கலந்திருக்கும். முயற்ச்சி செய்து பாருங்கள். https://velukkudidiscourses.com/product/ramanuja-nootrandhadi/

      Delete
  2. அருமையான விளக்கம். அருமையாய் எழுதி இருக்கிறீர்கள். அடியேன் நன்றிகள்

    ReplyDelete