Sunday, September 15, 2019

திருக்குறள் - பொறுமை - வலிமை

திருக்குறள் - பொறுமை - வலிமை 


பொறுமை நல்லது என்கிறார் வள்ளுவர். அதுவே தலையாய அறம் என்கிறார்.

நமக்கு தீங்கு செய்பவர்களை எல்லாம் பொறுத்துக் கொண்டே இருந்தால், உலகம் நம்மை கையாலாகாதவன் என்று இகழாதா. மானம், ரோசம், சூடு, சொரணை இல்லாதவன் என்று நம்மை பார்த்து சிரிக்காதா. அப்படி ஊர் சிரிக்க வாழும் வாழ்க்கை எப்படி சிறந்த அறம் ஆகும் என்று வள்ளுவரிடம் கேட்டபோது சொன்னார்,

"அப்படி அல்ல தம்பி. ஒருவன் உனக்கு தீங்கு (மிகை) செய்கிறான் என்றால் அவனுக்கு பதிலுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று நினைப்பது எல்லோரும் செய்வது. அதில் என்ன பெரிய பெருமை இருக்கிறது. ஒருவன் உனக்கு தீங்கு செய்கிறான் என்றால் அதை பொறுத்துக் கொள்ளத்தான் பெரிய வலிமை வேண்டும். உடல் வலியை விட மன வலிமை வேண்டும்"

"ஐயா, அதெல்லாம் சரி. பல்கலைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதில் என்ன பெருமை. அவன் மீண்டும் நாளை இன்னொரு தீங்கு செய்வான். அவன் செய்வதைப் பார்த்து இன்னொருவன் செய்வான். போகிற வருகிறவன் எல்லாம் எனக்கு தீங்கு செய்வார்களே. இதை எப்படி தடுப்பது? என்று கேட்டேன்.

"நீ தவறாக உலகை எடை போடுகிறாய். பொறுமையாய் இருப்பவனை உலகம் எளியவன் என்று எடை போடாது. இவ்வளவு செய்த பின்னும் ஒருவன் பொறுமையாய் இருக்கிறான் என்றான் அவனுடைய நல்ல உள்ளத்தை, அவனுடைய சகிப்பு தன்மையை , உறுதியான உள்ளத்தை உலகம் பாராட்டும். அவனுக்கு தீங்கு செய்பவர்களை உலகம் தண்டிக்கும்" என்று சொல்லி விட்டு   அதற்கு ஒரு உதாரணமும் தந்தார்.

"உலகிலேயே பெரிய வறுமை எது என்றால், வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்க முடியாத  வறுமைதான். அது போல, உலகிலேயே மிகப் பெரிய பலம் எது என்றால், முட்டாள்கள் நமக்கு செய்யும் தீமையை பொறுத்துக் கொள்ளுதல்"  என்றார்.

பாடல்

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை


பொருள்


இன்மையுள் = இல்லாமையில் , வறுமையில்

இன்மை = இல்லாதது (வறுமையிலும் வறுமை)

விருந்தொரால் = விருந்தை விலக்குதல் (ஓரல் விலக்குதல் )

வன்மையுள் = வலிமையில்

வன்மை = பெரிய வலிமை

மடவார்ப் = முட்டாள்களின்

பொறை = (செயல்களை) பொறுத்தல்

இது கொஞ்சம் ஏற்றுக் கொள்ள கடினமான செய்திதான்.

அப்படி யாராவது வாழ்ந்தார்களா ? கதையாவது இருக்கிறதா என்றால் ...

இராமனுக்கு கைகேயி செய்த கொடுமையை விடவா பெரிய கொடுமை இருக்க முடியும்.  காட்டில் படாத பாடு பட்டான். மனைவியை இழந்தான். அரக்கர்கள்  எப்போதும் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள்.

எல்லாம் முடிந்து, இராவண வதம் முடிந்து, இறுதியில் தசரதன் சொர்க்கத்தில் இருந்து வருகிறான். இராமனைப் பாராட்டி "உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள்" என்கிறான்.

இராமன் என்ன கேட்டான் தெரியுமா ?


‘ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று
    உரை ‘என, அழகன்,
‘தீயள் என்று நீ துறந்த என்
    தெய்வமும் மகனும்,
தாயும் தம்பியுமாம் வரம்
    தருக ‘எனத் தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன
    உயிரெலாம் வழுத்தி.


"நீ தீயவள் என்று துறந்த என் தெய்வமாம் கைகேயியும், பரதனும் எனக்கு தாயும், தம்பியாக வேண்டும். அந்த வரத்தைத் தருவாய் " என்று கேட்டான்.

அதைக் கேட்டு உலகம் எல்லாம் "ஆஹா" என்று வாய் திறந்து ஆச்சரியத்தில் வாழ்த்தியது இராமனை.

இராமனை யாரும், இகழவில்லை.

கைகேயி உன் மனைவியாக வரம் தா என்று  கேட்கவில்லை. அவள் எனக்கு மீண்டும் தாயாக வேண்டும் என்று வேண்டினான்.

அதுவும் எப்படி, "என் தெய்வம்" என்கிறான்.

முடியுமா?

நாட்டைப் பறித்துக் கொண்டு, காட்டுக்கு விரட்டிய அந்த பெண்ணை, "தெய்வம்" என்று கூறுகிறான் இராமன்.

இராமன் கடவுள், "நான் சாதாரண மனுஷன்/மனுஷி" என்று சொல்லிக் கொள்ளலாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என்பது மறை


இங்கே இருக்கும் போதே தெய்வ நிலையை அடையலாம் என்கிறார் பேராசான்.

இராமன் அளவுக்கு முடியாவிட்டாலும்,  முடிந்த வரை பொறுமை என்ற நல்ல குணத்தை  கடை பிடிக்கலாமே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_15.html

1 comment:

  1. பொறுமைக்கு எல்லை உண்டு என்பார்கள். ஆனால் இல்லை என்றே தெரிகிறது, இப்போது. இல்லையென்றால், இராமன் இவ்வாறு சொல்ல வாய்ப்பில்லை. மிக்க நன்றி.

    ReplyDelete