Sunday, September 1, 2019

கம்ப இராமாயணம் - வரதர்க்கும் வரதன்

கம்ப இராமாயணம் - வரதர்க்கும் வரதன்


சீதை தீக்குளித்து வந்து விட்டாள். அக்கினி தேவன் , சீதை கற்புள்ளவள் என்று சான்றிதழும் கொடுத்து விட்டான். பத்தா குறைக்கு "இராமா, நீ இப்படி செய்வது அறம் அல்ல" என்றும் உபதேசம் செய்தான்.

சீதை பேசவில்லை.

அடுத்து பிரமன் வருகிறான். அவன் இராமனுக்கு அவன் யார் என்று சொல்லுகிறான்.

சீதை பேசவில்லை.

அடுத்து சிவன் வருகிறான். அவனும் இராமனைப் பற்றி அவனுக்கே எடுத்து உரைக்கிறான்.

எல்லாம் சொல்லிவிட்டு சொல்லுவான்

"இந்த சீதை இருக்கிறாளே, இவள் உன்னால் கைவிடப் படக் கூடியவள் அல்லள். இந்த உலகம் அனைத்துக்கும் தாய் போன்றவள் அவள். இவள் தவறு செய்தால் என்றால், இந்த உலகில் பல உயிர்கள் அழிந்து போகும். நீ இவளை இகழ்வாக எண்ணியதை மறந்து விடு " என்று சொன்னான்.

சொன்னது யார், வரம் தருபவர்களுக்கு வரம் தருபவன். அதாவது கடவுள்களுக்கே வரம் தரும் சிவன்.

பாடல்

'துறக்கும் தன்மையள் அல்லளால், தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை; இப் பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல் உயிர்; இராமன்! நீ இவள் திறத்து  இகழ்ச்சி
மறக்கும் தன்மையது' என்றனன் - வரதர்க்கும் வரதன். 



பொருள்

'துறக்கும் = துறந்து விடக் கூடிய

தன்மையள் அல்லளால் = தன்மை கொண்டவள் அல்ல இவள்.

தொல்லை = பழமையான

எவ் உலகும் = அனைத்து உலகும்

பிறக்கும் = தோன்றும்

பொன் வயிற்று அன்னை = பொன் போன்ற வயிற்றை கொண்ட தாய் இவள்

இப் பெய்வளை = இந்த வளையல்கள் அணிந்த சீதை

பிழைக்கின், = பிழை செய்தால்

இறக்கும் பல் உயிர் = பல உயிர்கள் அழிந்து போகும்

இராமன்! = இராமா

நீ இவள் திறத்து = நீ இவள் பால் கொண்ட

இகழ்ச்சி = இகழ்ச்சி, தாழ்ந்த எண்ணம்

மறக்கும் தன்மையது'  = அதை மறந்து விடு. அது மறக்கும் தன்மையது

என்றனன் = என்றான்

வரதர்க்கும் வரதன்.  = வரம் தருபவர்களுக்கு வரம் தருபவன்


சீதையின் கற்பை உலகுக்கு காட்டவே இராமன் அவளை தீயில் இறங்க வைத்தான் என்று  சிலர் கூறுவார்கள். இராமனை எப்படியாவது அந்த அபவாதத்தில் இருந்து  காப்பாற்ற அவன் பக்தர்கள் செய்யும் வேலை அது.

சிவன் சொல்கிறான், "அவள் மேல் நீ கொண்ட இகழ்வான எண்ணத்தை மறந்து விடு " என்று.

இராமனுக்கு, சீதை மேல் தாழ்வான எண்ணம் இருத்தது என்று சிவன் சொல்கிறான், எல்லோர் முன்னிலையிலும்.  இராமன், சீதையை தவறாக நினைத்தான் என்றே கம்பனும் காட்டுகிறான்.

கம்பன் நினைத்து இருந்தால், இந்தப் பகுதியை அப்படியே நீக்கி இருக்கலாம். காப்பிய போக்கு ஒன்றும் கெட்டு விடாது.

வேலை மெனக்கிட்டு கம்பன் எழுதுகிறான் "அவள் மேல் கொண்ட இழிவான எண்ணத்தை  மறந்து விடு" என்று சிவன் சொன்னதாக.

இதற்கு இராமன் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

சீதையும் பேசவில்லை.

சிவனுக்கு என்ன செய்வது  என்று தெரியவில்லை.

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.

கணவன் மனைவி உறவில் உள்ள சிக்கல்களை ஊரறிய செய்தால் இதுதான்  நடக்கும்  என்று கம்பன் சொல்லாமல் சொல்கிறானோ என்னவோ.

அக்கினி தேவன் சொல்லியாச்சு...ஒன்றும் நடக்கவில்லை.

பிரம்மன் சொல்லியாச்சு ...ஒன்றும் நடக்கவிலை

சிவன் வந்து சொல்லிப் பார்த்தான்....ஒன்றும் நடக்கவில்லை

இனி என்னதான் செய்வது...

பார்த்தார் சிவன், இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது என்று நினைத்து அதைச் செய்தார்....

அது என்ன வழின்னா.....


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_1.html

5 comments:

  1. ராமன் சீதையைச் சந்தேகப் பட்டாரா?

    தீக்குளித்தால் மட்டுமே உத்தமி என்று ஏற்பேன் என்று சொன்னாரா?


    இது பற்றி வால்மீகியும் கம்பனும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

    மாயமான் வடிவில் வந்த மரீசன் ராமபாணத்தால் அடிபட்டபோது 'ஹே சீதா, ஹே லக்ஷ்மணா' என்று ராமனின் குரலில் அழைத்துவிட்டு உயிரை விடுகிறான். இதனால் கலக்கம் அடைந்த சீதை லக்ஷமனை ராமனுக்கு உதவுமாறு பணிக்கிறார். ஆனால் இலக்குவன் அண்ணனுக்கு ஆபத்து விளைவிக்கும் சக்தி மூன்று உலகிலும் இல்லை, மேலும் அண்ணன் உங்களைப் பாதுகாக்க என்னைப் பணித்து இருக்கிறார் என்று கூறி மறுத்துவிடுகிறார்.

    ராமன் அபயக் குரல் கேட்டும் அசையாமல் என் அருகில் நிற்கும் உன் எண்ணம் என்ன ? (இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம் என்று நீங்களே ஊகியுங்கள்) என்று கேட்டு கடும் சொற்களால் இலக்குவனை கடிந்துகொண்டு சீதை தன் உயிரை விடத் துணிந்தார். வால்மீகி ராமாயணத்தில் சீதை 'இலக்குவா என் மீதுள்ள ஆசையாலேயே நீ ராமன் அழிய விரும்புகிறாய்' என்று நேரடியாகவே குற்றம் சாட்டுகிறார். கம்பர் அதை வெளிப்படையாக சொல்லவில்லை. சீதையின் பேச்சால் இலக்குவன் ராமனைத் தேடிப் புறப்படுகிறார்.

    ராமனும் இலக்குவனும் சந்திக்கும்போது , ராமன் சீதையைத் தனியாக விட்டு ஏன் வந்தாய் என இலக்குவனை கேட்கிறார். அப்போது இலக்குவன் நடந்தவற்றை எல்லாம் ராமனிடம் சொல்கிறார். இலக்குவனைப் பார்த்து இப்படியொரு சந்தேகப் பேச்சை பேசிய சீதையின்மீது கோபமாகவே பர்ணசாலைக்கு வருகிறார் ராமன். அங்கே சீதையைக் காணாமல் துடித்துப் போகிறார். அதன் பின்னர் சீதையை நினைத்து ராமன் பட்ட துயரை அழுத அழுகையை வால்மீகியும் கம்பரும் நிறையவே வர்ணித்திருக்கிறார்கள்.

    போர்க்களத்தில் மாய சீதை உருவத்தை இந்திரசித்து தலையை துண்டித்து கொன்ற காட்சியை ஹனுமன் சொல்லக் கேட்ட ராமனின் துக்கத்தை பலபாடல்களில் கம்பர் வர்ணிக்கிறார் . தன் வாழ்நாளில் சீதையைத் தவிர வேறொரு பெண்ணை ராமன் மனதாலும் நினைத்தது இல்லை. இவ்வளவு அன்புகொண்ட ராமன் 10 மாதங்கள் பிரிந்த சீதையைச் சிறையில் இருந்து மீட்டபோது நடந்த நிகழ்ச்சிகளைச் சற்றுக் கூர்ந்து கவனிப்போம்.

    அனுசூயை உபதேசித்த மந்திரத்தின் சக்தியால் சீதை பசி, தாகம், தூக்கம் ஏதும் இன்றி ஒரே அழுக்கான ஆடையுடன் ஒரே இடத்திலேயே அமர்ந்திருந்தார். போரில் வெற்றி பெற்றதும் இராமன் வீடணனைச், 'சீதையை அலங்கரித்து சீரொடும் அழைத்து வா' என்று அனுப்புகிறான். அழுக்கான ஆடையுடன் இருந்தவாறே தான் வருவேன் என்று சொன்ன சீதையை இராமன் ஆணையைக் கூறி அலங்கரித்து வரச் செய்து அழைத்து வருகிறான் வீடணன். சீதை வானுலக மங்கையரும் நாணும்படி அழகாக அலங்கரித்து வருகிறார்.

    இலக்குவனின் அன்பைத் தவறாகப் பேசிய சீதையை இப்போது ராமன் இகழந்து பேசுகிறார். ராமன் தன் அன்பர்களின் மனத்தை புண் படுத்தியவர்களை ஒரு போதும் மன்னிப்பதில்லை. அது சீதா பிராட்டியாகவே இருந்தாலும். கணவனைப் பிரிந்து இருக்கும் ஒழுக்கமான பெண்கள் இப்படி அலங்கரித்து கொள்வார்களா என்று கேட்கிறார். (ராமன் தான் வீடணனிடம் சீதயை அலங்கரித்து வரச்சொன்னது). ராமன் சீதையிடம் உன் ஒழுக்கத்தை நிரூபிப்பாய் அல்லது நீ விரும்பும் வழியில் செல்வாய் என்று சொன்னர். ஆனால் அது சந்தேகத்தால் அல்ல.

    கம்பன் பல பாடல்களில் சீதையை “கற்புக்கு அணி” என்று பாடினாலும் இராவணன் தூக்கி வந்து சிறை வைத்ததாலேயே தான் தூய்மை இழந்துவிட்ட தாக சீதையே புலம்புகிறார். "எச்சில், என் உடல்; உயிர் ஏகிற்றே; இனி நச்சு இலை" -- நச்சு என்றால் விருப்பம். இங்கே வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்று பொருள். சீதையின் இந்த எண்ணமும் வருத்தமும் ராமனுக்குத் தெரியும்.

    இப்போது ராமன் கடுஞ்சொற்கள் பேசியதும், ரோஷம் கொண்ட சீதை இலக்குவனை அழைத்து சிதையை மூட்ட சொல்லி அதில் புகுகிறார். சீதையின் கற்பின் பெருமையையும் , சீதையை நெருப்பு சுடாது என்பதையும் இலங்கையில் இருந்து திரும்பியபோதே ஹனுமானின் மூலம் ராமன் அறிந்திருந்தார். எனவே சீதையை தடுக்க முயலவில்லை. அதன்பின் அக்கினி பகவானும் தேவர்களும் வந்து சீதையின் பெருமையைக் கூறி ராமனுடன் சேர்த்துவைக்கிறார்கள்.
    ராமன் இப்படி பேசாமல் இருந்தால் எஞ்சியிருந்த வாழ்க்கை எல்லாம் சீதை “எச்சில் என் உடல்” என்னும் எண்ணத்துடனே வாழ்ந்திருப்பார். நம் புரட்சியாளர்களும் சீதையை வைத்து சிம்பதி கிரியேட் செய்திருப்பார்கள்.

    ReplyDelete
  2. சில இடங்களில் நெருடல்கள் இருக்கத்தான் செய்கிறது.ஆண்டாண்டு காலமாக இந்த விவாதங்கள் பட்டி மன்றங்களில் நடை பெற்றுவருகிறது.இதற்கு தீர்வு காண அந்த ராமா பிரானே விளக்க வேண்டும்!.
    அன்பர் விவேக் எழுதியது சுவாரஸ்யமாக ரசிக்கும் படியாக இருந்தது.
    ஒரு வேளை ராமர் தன்னுடைய தெய்வீக தன்மையை வெளியே காட்டாது மனுஷ்யனாக பிறந்து சாதாரணமான மனுஷ சந்தேக குணத்தை வெளிப் படுத்தினாரோ என்னவோ?. அக்னிதேவன்,ப்ரம்மா,சிவபெருமான் எல்லோரும் கூறிய பிறகும்,தீ குளித்த பிறகும் அயோத்தியில் சீதா பிராட்டியாரை யாரோ ஒருவரின் பேச்சுக்கு செவி சாய்த்து காட்டுக்கு அனுப்பினாரே..இதற்கு என்ன சொல்வது?

    ReplyDelete
    Replies
    1. ராமன் ஒரு கணவன் அதே சமயம் ராமன் ஒரு அரசன். சாமானிய தர்மம் (இந்த இடத்தில் கணவனின் தர்மம்) விஷேச தர்மம் (இந்த இடத்தில் அரச தர்மம்) இரண்டுக்கும் நடுவே வேறுபாடு (conflict of interests) ஏற்படும்போது விஷேஷ த்ர்மத்தை பின்பற்றவேண்டும் என்பதே தர்ம சாச்த்திரம். குடிம்க்கள் நாட்டை பெருமையாக எண்ண வேண்டும். நாட்டின் ராணி தூயவளாய் மட்டும் இருந்தால் போதாது. அந்த தூய்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாய் இருக்கவேண்டும். ராமன் அரச தர்மத்தின்படி சீதையை உதறினாலும் இறுதிவரை வேறு திருமனம் செய்ய்வில்லை. யாகம் செய்ய் மனை உடனிருக்க வேண்டும் நிலை ஏர்பட்ட்போதும் சீதையின் உருவத்தையே தங்கத்தால் செய்து அருகில் வைத்துக்கொண்டு யாகம் செய்தார். அழகு, அரசபோகம் இருந்த ராமன் நினைத்திருந்தால் தந்தையைப் போல பல திருமணங்கள் செய்திருக்க்லாம். ராமனைப் போல உண்மைக் காதலனை சரிதிரம் புராணம் வேறு எங்கும் பார்க்க முடியாது. மேலும் ரமாயனம் பட்டாபிஷெகத்துடன் முடிந்தது என்றும் உத்ரகாண்டம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்னும் கருத்தும் உண்டு.

      Delete
  3. தன் தம்பியான லட்சுமணனை சீதை தவறாக எண்ணி அதன் காரணமாக ராமன் சீதையை தீயில் இறங்க சொல்லி இருப்பார் அதுமட்டுமல்லாமல் இந்த உலகிற்கு சீதை தூய்மை ஆனவள் என்பதை நிரூபிக்கவும் அவ்வாறு செய்திருப்பார் ஆனால் சீதை தீயில் இறங்கினாள் அவளுக்கு ஒன்றும் ஏற்படாது என்பதை ராமன் தெரிந்து கொண்டுதான் இறங்கச் சொல்லி இருப்பார்

    ReplyDelete