Tuesday, October 1, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - காரிய வன்மை

இராமானுஜர் நூற்றந்தாதி  - காரிய வன்மை 


திருவரங்கத்து அமுதனார், இராமானுஜர் மேல் உள்ள பக்தியால் அந்தாதி பாடினார். நாம் ஏன் அதைப் படிக்க வேண்டும்? படித்து என்ன ஆகப் போகிறது. சரி, அவருக்கு அவர் மேல் பக்தி இருத்தது என்று வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம். அதற்கு எதற்கு 100 பாடலைப் படிக்க வேண்டும். ஒரு வரியில் சொன்னால் போதாதா?

அது ஒரு கேள்வி.

அது ஒரு புறம் இருக்கட்டும். நாம் ஒருவருடைய வழியைப் பின் பற்றுகிறோம் என்றால், நாம் எப்படி இருக்க வேண்டும்? யாருடைய வழியைப் பின் பற்றுகிறோமோ அவர் சொன்ன மாதிரி, செய்த மாதிரி நாமும் இருக்க வேண்டும் அல்லவா?

காந்தியை நான் பின்  பற்றுகிறேன் என்றால், நானும் அகிம்ஸையை கடைபிடிக்க வேண்டும் அல்லவா. மூன்று வேளையும் மாமிசம் தின்று கொண்டு, அடி தடியில் இறங்கிக் கொண்டு, காந்தியவாதி என்று சொன்னால் எப்படி இருக்கும் ?

இராமனுஜரை பின்பற்றுகிறேன் என்றால் என்ன அர்த்தம்?  சும்மா அவர் பெயரை சொல்லிக்கொண்டு திரிவது, எந்த பிரச்சனை வந்தாலும் அவர் பார்த்துக் கொள்வார் என்று அவர் மேல் எல்லாவற்றையும் போட்டு விடுவது, அவரை வணங்குவது என்பதெலாம் அல்ல.

பின் என்னதான் செய்ய வேண்டும்?

இராமனுஜரின் அடியார்கள் காரியங்களை செய்து முடிப்பதில் வல்லவர்களாய் இருப்பார்கள். சும்மா பேசிக் கொண்டு இருக்க மாட்டார்கள் என்கிறார்.

பாடல்


சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமி ழாலளித்த
பாரிய லும்புகழ்ப் பாண்பெரு மாள்,சர ணாம்பதுமத்
தாரியல் சென்னி இராமா னுசன்றனைச் சார்ந்தவர்தம்
காரிய வண்மை, என் னால்சொல்லொ ணாதிக் கடலிடத்தே.

பொருள்


சீரிய = சிறந்த

நான்மறைச் = நான்கு வேதங்கள்

செம்பொருள் = அவற்றில் உள்ள உயர்ந்த கருத்துகளை

செந்தமி ழாலளித்த = செந்தமிழால் அளித்த

பாரிய லும் = இந்த உலகில்

புகழ்ப் = புகழ் பெற்ற

பாண்பெரு மாள் = திருப்பாணாழ்வார்

சர ணாம் = பாதங்கள் என்ற

பதுமத் = தாமரை

தாரியல் = மலர்களை

சென்னி = தலையில்

இராமா னுசன்றனைச் = இராமானுஜரை

சார்ந்தவர்தம் = சேர்ந்தவர்கள்

காரிய வண்மை = காரியம் செய்து முடிப்பதில் உள்ள வல்லமையை

என்னால் = என்னால்

சொல்லொ ணா = சொல்ல முடியாது

இக்  கடலிடத்தே = இந்த கடல் போல பெரிய உலகத்திலே


நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், பக்தி என்பது சும்மா ஏதோ பூஜை செய்வது, தூப தீபம் காட்டுவது, விரதம் இருப்பது என்று.

சும்மா பொழுது போக்குவது அல்ல. எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்று சோம்பேறியாக இருப்பது அல்ல பக்தி.


பக்தி என்பது செயல் சார்ந்தது.

காரிய வண்மை வேண்டும்.

செயல் ஊக்கம் வேண்டும். நல்லது செய்ய வேண்டும்.

இராமானுஜர் என்ன செய்தார்? எல்லோரும் வைகுண்டம் போக வேண்டும் பாடுபட்டார். அது காரிய வன்மை.

சும்மா மடத்தை கட்டிவைத்துக் கொண்டு பாடம் நடத்திக் கொண்டு இருக்கவில்லை.

இராமானுஜரின் பக்தர்கள் என்றால், காரிய வண்மை இருக்க வேண்டும்.

அந்த கரிய வண்மை எல்லாம் இல்லை என்றால் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post.html

Sunday, September 29, 2019

பெரிய புராணம் - இளையான் குடி மாறனார் - விருந்து

பெரிய புராணம் - இளையான் குடி மாறனார் - விருந்து 


விருந்தினரை உபசரிப்பதை ஒரு அறமாகக் கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.  விருந்தை எப்படி உபசரிக்க வேண்டும் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

விருந்தினரை எப்படி நடத்த வேண்டும் என்பதில் உச்சம் தொட்டவர்கள் நம்மவர்கள்.

சேக்கிழார் சொல்கிறார்,  விருந்தினர் தூரத்தில் வரும் போது, அவர் கண்ணுக்கு நாம் தெரிவோம். நாம் நிற்கும் நிலை, நமது மலர்ந்த முகம், சிரிப்பு, விரிந்த கைகள், அல்லது கூப்பிய கைகள் இவைகள்தான் விருந்தினருக்கு தெரியும். அந்த பார்வையிலேயே வருகின்ற விருந்தினர்க்குக்கு தெரிந்து விடுமாம், இவன் நம் வருகையை விரும்புகிறானா அல்லது நாம் அழையா விருந்தாளியா என்று.

இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால், நாம் பேசுவது அவருக்கு கேட்கும். "வாங்க வாங்க...என்ன உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு, இப்பவாவது என் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதே" என்று இன் சொல் சொல்லி வரவேற்க வேண்டும்.

முதலில் பார்வைக்கு குளிர்ச்சியாக இருக்க வேண்டும். முகத்தை கடு கடு என்று வைத்து இருந்தால் வருகிறவன் கூட அப்படியே போய் விடுவான். அப்புறம், கொஞ்சம் கிட்ட வந்த பின், இன் சொல் கூற வேண்டும்.

பாடல்


ஆர மென்புபு னைந்த ஐயர்தம் அன்பர் என்பதொர் தன்மையால்
நேர வந்தவர் யாவ ராயினும் நித்த மாகிய பத்திமுன்
கூர வந்தெதிர் கொண்டு கைகள்குவித்து நின்றுசெ விப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரிவெய்த முன்னுரை செய்தபின்.


பொருள்

ஆரம் = கழுத்தில் அணியும் மாலை

என்பு புனைந்த = எலும்பை அணிந்த

ஐயர்தம்  = தலைவரின்

அன்பர் = அன்பர்

என்பதொர் தன்மையால் = என்கிற தன்மையால்

நேர வந்தவர் = நேரே வந்தவர்

யாவ ராயினும்  = யாராக இருந்தாலும்

நித்த மாகிய = எப்போதும் இருக்கும்

பத்தி = பக்தி

முன் கூர = முன்பு வர

வந்தெதிர் = வந்து எதிர்

கொண்டு  = கொண்டு

கைகள் குவித்து = கைகளை குவித்து

நின்று = நின்று

செ விப்புலத் தீர = அவர்கள் காதில் விழும்படி

மென் = மென்மையாக

மது ர = மதுரமான

பதம் = சொற்களை கூறி

பரி வெய்த = பரிவுடன்

முன்னுரை செய்தபின். = வரவேற்புரை கூறிய பின்

இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு, வாங்க வாங்க என்று சொல்லக் கூடாது. எதிரில் சென்று அழைக்க வேண்டும்.

உட்கார்ந்து கொண்டே வாங்க என்று சொல்லக் கூடாது. எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும்.

கை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும்.

இனிமையான சொற்களை மென்மையாக பேசி வரவேற்க வேண்டும்.

வீட்டுக்கு யார் வந்தாலும் அப்படி வரவேற்க வேண்டும். வேண்டியவர், வேண்டாதவர், பணக்காரர், பெரியவர், சின்னவர் என்று பேதம் பார்க்கக் கூடாது.

இதெல்லாம் ஒரு பண்பாடு. அப்படி வாழ்ந்தார்கள் நம் முன்னவர்கள்.

அது ஒரு நல்ல பழக்கம் என்று தெரிந்தால், கடைபிடிப்பது நல்லது தானே?

அது மட்டும் அல்ல, பிள்ளைகளுக்கு இதை கதையாக சொல்லித் தர வேண்டும்.  அவர்கள் மனதில் பதியும். செய்வதும் செய்யாததும் அவர்கள் விருப்பம்.

நல்லதை விதைப்போம்.  அல்லதா விளைந்து விடும்?

சரி, இன் முகம் காட்டி, இன் சொல் கூறி வரவேற்றாகி விட்டது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_29.html

Saturday, September 28, 2019

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் - நம்பு வாய்மையில்

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் - நம்பு வாய்மையில்


நம் உடம்பில் எந்த உறுப்பு உயர்ந்தது ? எது தாழ்ந்தது  என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? அனைத்து உறுப்புகளும் ஒரே நிலை தான். கண் உயர்ந்தது, காது தாழ்ந்தது, வலது கை சிறந்தது, இடது கை தாழ்ந்தது என்று சொல்ல முடியுமா?

சரி.

சமுதாயத்தில் எந்த வேலை செய்பவர் உயர்ந்தவர்? எந்த வேலை செய்பவர் தாழ்ந்தவர் என்று கேட்டால்?

பூஜை செய்ப்வர் உயர்ந்தவர்....குப்பை அள்ளுபவர் தாழந்தவர் என்று கூற முடியுமா ?

கூறிக் கொண்டிருக்கிறோம். அது சரி அல்ல.

நமது முன்னோர்கள் சமுதாயத்தை நான்காக பிரித்தார்கள். அது இன்றைய பெரிய பெரிய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

அதாவது,

- உற்பத்தி (production )
- விநியோகம் (distribution )
- நிர்வாகம் (Administration)
- தொலை நோக்கு திட்டமிடுதல் (Strategic Planning )

எந்த பெரிய நிறுவனத்தையும் இந்த நான்கு பிரிவாக பிரித்து விடலாம்.

சமுதாயத்தையும் அப்படியே.

அப்படி பிரித்து வைத்து இருந்தார்கள் -  அதற்கு வர்ணம் என்று பெயர்.

உற்பத்தி அடிப்படை. Goods and Services உற்பத்தி செய்யாவிட்டால் ஒரு சமுதாயம் படுத்து விடும்.  உற்பத்திதான் ஒரு சமுதாயத்தின் உயிர் நாடி. விவசாயம், மருத்துவம், சாலை போடுவது, போக்குவரத்து, தொழிற்சாலை , வங்கிகள்,  தொலை தொடர்பு என்ற அனைத்தும் இதில் அடங்கும். சமுதாயத்தை  இயக்குவது அதுதான். எனவே, அதில் உள்ளவர்களை சூத்திர தாரிகள், அல்லது சூத்திரர்கள் என்று கூறினார்கள்.

உற்பத்தி மட்டும் செய்து விட்டால் போதாது, அதை எல்லோருக்கும் விநியோகம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வைசியர்கள் என்று பெயர்.

அதே போல நிர்வாகம் செய்பவர்கள் ஷத்ரியர்கள் என்றும் திட்டம் தீட்டுதல்,  ஆராய்ச்சி செய்தல் போன்ற மூளை சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்களை  அந்தணர்கள் என்று பிரித்து பெயர் வைத்தார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இளையான்குடிமாற நாயனார் ஒரு விவசாயி. எனவே அவர் சமுதாய அமைப்பில் ஒரு சூத்திரர். சூத்திரர் என்ற நற்குலத்தில் பிறந்தவர் என்கிறார் சேக்கிழார். சிவனடியார்களை போற்றி அவர்களுக்கு விருந்து உபசரிப்பது என்பது அவரின் விரதம்.

பாடல்

அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர் சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற்குலஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளையான்கு டிப்பதி மாறனார்.


பொருள்

அம்பொன் = அழகிய பொன்

நீடிய = வேய்ந்த

அம்பலத்தினில் = அம்பலத்தில்

ஆடு வார் = ஆடுவார். யார் ஆடுவார்? சிவன்.

அடி சூடுவார் = அவருடைய (சிவனுடைய) அடிகளை சூடுபவர்

தம்பி ரான் = தம்பிரான்

அடி மைத் = அப்படி சிவனுக்கு அடிமையாக இருந்த

திறத்துயர்  சால்பின் = திறத்தினால்

மேன்மைத ரித்துளார் = மேன்மை பெற்றவர்

நம்பு வாய்மையில் = நம்புகின்ற வாய்மையில்

நீடு = உயர்ந்த

சூத்திர = சூத்திர

நற்குலஞ் = நல்ல  குலம்

செய்த வத்தினால் = செய்த தவத்தினால்

இம்பர் = இந்த

ஞாலம் = உலகம்

விளக்கி னார் = விளங்கும்படி

இளையான்கு டிப்பதி மாறனார். = இளையான்குடி பதி மாறனார் இருந்தார்

நம்பு வாய்மை = வாய்மையை நம்ப வேண்டும். வாய்மையே சிறந்த அறம் என்பார் வள்ளுவர்.

யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும் 
வாய்மையின் நல்லபிற

என்பது வள்ளுவம்.

வாய்மையை விட சிறந்தது ஒன்று இல்லை.

இறைவன் ஜாதி, குலம் , சமயம் என்று பாகுபாடு பார்ப்பது இல்லை. அவனுடைய அடியார்கள் என்று  சொல்லிக் கொள்பவர்கள்தான் இந்த பாகுபாடு செய்து கொண்டு  பேதைகளாய் மூடர்களாய் திரிகிறார்கள்.

தெய்வம் பலபல சொல்லிப் -பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்-எங்கும்

ஓர்பொரு ளானது தெய்வம்.

என்பார் பாரதியார்.


எலும்பிலும், சதையிலும், தோலிலும் இலக்கம் (number ) போட்டு இருக்கிறதா என்று கேட்கிறார் சிவவாக்கியார் என்ற சித்தர்.

பறைச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ, பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப் பாரும் உம்முளே.

சாதி மத பேதங்களை கடந்து, அன்பை நிலை நாட்ட வந்தது பெரிய புராணம்.

மேலும் சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_28.html


Thursday, September 26, 2019

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் புராணம்

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் புராணம்



அந்தக் காலத்தில், நான் சொல்வது 1960 களில், இளங்கலை (BA ) படிப்புக்கு இளையான்குடிமாற நாயனார் புராணம் இருந்தததாக என் தந்தையார் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அது மட்டும் அல்ல, அதே புராணம்தான் அதற்கு முன்பு இருந்த  P  U  C , SSLC  போன்றவற்றிலும் இருந்ததாம்.

ஒரு இலக்கியத்தை சாரமற்றதாகச் செய்ய வேண்டும் என்றால், அதை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்த்து விட வேண்டும். பின், அதன் மேல் உள்ள மதிப்பு, மரியாதை எல்லாம் அந்த மாணவர்களுக்கு போய் விடும். படித்து மனப்பாடம் செய்து, நாலு மதிப்பெண் பெறுவது ஒன்றே குறிக்கோளாக இருக்கும்.

பெரிய புராணம், 63 நாயன்மார் வரலாற்றை சொல்லுகிறது. அதில் மணிவாசகர் கிடையாது. அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர் தவிர்த்து பல பேருக்கு மற்ற நாயன்மார் பெயர்கள் கூடத் தெரியாது. காரைக்கால் அம்மையார் தெரியும் ஏனென்றால் அவர் மட்டும் தான் ஒரே ஒரு பெண் அந்த நாயன்மார் வரிசையில்.

இந்த நாயன்மார்கள் ஏதோ பக்தி செய்தார்கள், இறைவன் அவர்களை சோதித்தான், பின் முக்தி கொடுத்தான். அவ்வளவுதான். இதைப் படித்து நமக்கு என்ன ஆகப் போகிறது ?

நம்மால் எல்லாம் அப்படி பக்தி செய்ய முடியாது.

இதையெல்லாம் படிப்பது வெட்டி வேலை என்று நாம் நினைக்கலாம்.

கடவுளே இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருக்கும் போது , பக்தி எங்கிருந்து வரும்?  அதிலும் அடியார்கள் வாழ்க்கை வரலாற்றை படித்து என்ன ஆகப் போகிறது  என்றும் தோன்றும்.

ஞாயமான சந்தேகம்தான்.

கடவுளை விட்டு விடுங்கள்.

பக்தியை விட்டு விடுங்கள்.

வீடு பேறு , முக்தி, சுவர்க்கம் இதையெல்லாம் விட்டு விடுங்கள்.

தெய்வப் புலவர் சேக்கிழாரின் தமிழுக்காக அதை படிக்கலாம். அத்தனையும்  தேன் சொட்டும் பாடல்கள்.

தமிழ் கொஞ்சும்.  கிறங்க அடிக்கும்.

தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாட்டை அறிந்து கொள்ள படிக்கலாம்.

எப்பேற்பட்ட பாரம்பரியத்தில் வந்த நாம், இப்போது இப்படி திக்கு திசை தெரியாமல்,  மேலை நாட்டு நாகரிகம், பண்பாடு இவற்றை நோக்கி கையேந்தி நிற்கிறோம் என்பது புரியும்.

நம் பாரம்பரியம் என்ன என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தெரிந்தால், "அட, இப்படியும் கூட வாழ முடியுமா? இப்படி கூட வாழ்ந்திருக்கிறார்களா " என்ற ஆச்சரியம் வரும்.

ஒருவேளை அந்த பாரம்பரியம் பிடித்து கூட போகலாம். நாம் நம் ஆதார நிலை நோக்கி  திரும்பலாம்.

எது எப்படியோ, தமிழுக்காக படிக்கலாம். மற்றவை கிடைத்தால், நல்லது. இலவச இணைப்பாக பெற்றுக் கொள்ளலாம்.

இளையான்குடிமாற நாயனார் பற்றி வரும் நாட்களில் சிந்திக்க இருக்கிறோம்.

இது ஒரு முன்னுரை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_26.html

Wednesday, September 25, 2019

தேவாரம் - வழி வைத்தார்

தேவாரம் - வழி வைத்தார்


உங்களுக்கு விதியின் மேல் நம்பிக்கை இருக்கிறதா ?

உங்களுக்கு கர்ம வினைகளின் மேல் நம்பிக்கை இருக்கிறதா ?

நம் தமிழ் இலக்கியம் கர்மவினையை வெகுவாக நம்பியது என்றே நினைக்கிறேன்.

மனிதர்கள் மட்டும் அல்ல, தெய்வங்களும் இந்த கர்ம வினைக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பது அதன் முடிவு.

சிறு வயதில், கோபிகள் குளிக்கும் போது, அவர்களின் ஆடையை திருடி அவர்களை தவிக்க விட்டான் கண்ணன். அவன் ஆற்றில் குளிக்கும் போது அவன் கட்டியிருந்த கீழாடை நீரோடு போய் விட்டது.

அது அவன் செய்த வினை.

வெளியே வர முடியாமல் நின்ற போது பாஞ்சாலி தன் சேலையின் முந்தானையில் ஒரு நீண்ட பாகத்தை கிழித்து அவனிடம் தூக்கி எறிந்தாள்.
பின் ஒரு காலத்தில், பாஞ்சாலிக்கு கோடிக்கணக்கான புடவைகளை கண்ணன் தந்து அவள் மானம் காத்தான்.

அது அவள் செய்த வினைப் பயன்.

ஒரு முறை, பிரமன் ஏதோ தவறு செய்ய, அவனின் ஒரு  தலையை சிவன் கிள்ளி எடுத்து விட்டார்.  அந்தத் தலை சிவனின் கையோடு ஒட்டிக் கொண்டது. என்ன செய்தும் கையில் இருந்து அந்த மண்டை ஓடு நீங்கவில்லை.  சிவன் செய்த வினைக்கு பரிகாரம், அவர் அந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து  உண்டால் தான் போகும் என்பது.

வினை யாரையும் விடாது.

கடவுள்கள் பாடே அப்படி என்றால்....

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் முன்ன பின்ன தெரியாத ஒரு ஊருக்குப் போகிறோம் என்றால், அந்த ஊருக்குப் போகும் வழிப் படம் (map ) வேண்டும் அல்லவா. எப்படி போவது, எங்கே திரும்புவது, [போகிற வழியில் என்ன என்ன ஊர்கள் வரும் என்றெல்லாம் தெரிந்து இருப்பது நல்லது அல்லவா?

சொர்கத்துக்கு எப்படி போவது? வழிப் படம் இருக்கிறதா ? முன்ன பின்ன போனதும் கிடையாது. போய் வந்தவர்களிடம் கேட்கலாம் என்றால் அப்படி யாரும் இருப்பதாய் தெரியவில்லை.

பின் எப்படி போவது?

வழிப்படம் இருக்கிறது என்கிறார் திருநாவுக்கரசர். அந்த மேப்பை வைத்துக் கொண்டு  அதே வழியில் நாம் போய் விடலாம் என்கிறார்.


பாடல்



ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
    வொள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
    தயக்கம் பலபடைத்தார் தாமரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
    கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
    வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே


பொருள்

ஊனுடுத்தி  = ஆடை உடுத்துவோம். அது போல, இந்த உடம்பு சதையை உடுத்தி இருக்கிறதாம்.

யொன்பது வாசல் வைத்து = ஒன்பது வாசல் வைத்து

வொள்ளெலும்பு தூணா  = வெள்ளை எலும்புகளை தூண் போல வைத்து

வுரோமம் மேய்ந்து = அதற்கு மேல் கூரையாக முடியை வைத்து

தாமெடுத்த  கூரை = அவர் தாமே எடுத்த கூரை வீடு

தவிரப் = நீங்கும்படி ஆகும் சமயத்தில்

போவார் =  தானே வலிந்து போவார்

தயக்கம் பலபடைத்தார் = மயங்கும் படி பல வடிவில் வருவார்

தாமரையினார் = தாவுகின்ற மானை (தா+ மரை ) கையில் கொண்டவர் (சிவன்)


கானெடுத்து = கானகத்தில்

மாமயில்கள் = பெரிய மயில்கள்

ஆலுஞ் சோலைக்  = ஆடும் சோலை

கழிப்பாலை = கழிப்பாலை என்ற ஊரில்

மேய = உள்ள

கபாலப்பனார் = கையில் கபலாத்தைக் கொண்டவர் (மேலே உள்ள கதையைப் படிக்கவும்)

வானிடத்தை = வான் இடத்தில்

ஊடறுத்து = ஊடே அறுத்து

வல்லைச் செல்லும் = விரைந்து செல்லும்

வழிவைத்தார்க் = வழி வைத்தார்

கவ்வழியே போதும் நாமே = அந்த வழியாக நாம் போவோம்



அவன் இருக்கும் இடத்துக்கு செல்லும் வழியை அவன் அமைத்துக் கொடுத்து இருக்கிறான். அந்த வழியில் போனால், சீக்கிரத்தில் அவனை அடையலாம்.

அந்த வழி பற்றி திருப்பாலை தலத்து இறைவன் மேல் நாவுக்கரசர் பத்து பாடல்கள் பாடி இருக்கிறார்.

வேறென்ன சொல்லப் போகிறேன், முடிந்தால், மூலத்தை தேடிப் படியுங்கள்.

ஊன் உருகும். உயிர் உருகும் பாடல்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_25.html

Saturday, September 21, 2019

கம்ப இராமாயணம் - வரும் நாள் அன்றி

கம்ப இராமாயணம் - வரும் நாள் அன்றி 


கம்ப இராமாயணம் போன்ற இலக்கியங்களை ஏன் படிக்க வேண்டும்?

அது ஒரு கதை. அவ்வளவுதானே. உலகில் எத்தனையோ ஆயிரம் கதைகள் இருக்கின்றன. போதா குறைக்கு சினிமா, நாடகம், தொலைக் காட்சி நெடு நாடகங்கள் (சீரியல்) என்று இருக்கின்றன. இதில், இராமாயணம் போன்ற இலக்கியங்களும் ஒன்று. வேறு என்ன இருக்கிறது அதில் ?

இருக்கிறது.

கம்ப இராமாயணம் போன்ற இலக்கியங்கள் வெறும் கதை அல்ல. அவை வாழ்க்கை நெறி முறைகளை சொல்ல வந்தவை.

அறம் , அறம் என்று சதா சர்வகாலமும் அதைப் பற்றியே சிந்தித்து, அதை எப்படி நமக்குச் சொல்லலாம் என்று இப்படிப் பட்ட கதைகளின் ஊடே அவற்றை சொல்ல முயற்சிக்கின்றன.

கதை அல்ல முக்கியம். வாழ்க்கை அறம் தான் முக்கியம்.

நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

அறம் சொல்ல ஒரு இடம் காலம் வேண்டாமா?

கதா நாயகனும், கதா நாயகியும் காதலித்து, ஆடி பாடி மகிழ்ந்தார்கள் என்று சொல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒரு மாலை நேரம் வேண்டும், பூஞ்சோலை வேண்டும் , மஞ்சள் வெயில் வேண்டும்....அல்லவா?

கம்பனுக்கு அதெல்லாம் முக்கியம் இல்லை. அறம் சொல்ல வேண்டும் என்று நினைத்து விட்டால் , இடம் பொருள் ஏவல் பார்ப்பது இல்லை.  எங்கெல்லாம் முடியுமோ, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொல்லி விடுவது என்ற முடிவோடு காப்பியம் செய்கிறான்.

அவன் வாழக்கை தத்துவம் சொல்லும் இடத்தைப் பாருங்கள்....

மூக்கும், காதும், முலையும் அறுபட்டு இரத்தம் சொட்ட சொட்ட, ஊரே பார்த்து  மிரண்டு போக இராவணன் சபையில் வந்து நிற்கிறாள் சூர்ப்பனகை.


அவமானம், வலி, வேதனை, கோபம், கொந்தளிப்பு...

இந்த இடத்தில் அறம் சொல்கிறான் கம்பன்.

சொல்லும் இடமா இது ? சொல்கிறான் கம்பன்

"என்ன தான் முயற்சி செய்தாலும், தவம் செய்தாலும் விதி என்று ஒன்று இருக்கிறது. அதன் படிதான் எல்லாம் நடக்கும். வரும் நாள் அன்றி எதுவும் யாருக்கும் வந்து விடாது. நீ எவ்வளவோ தவம் செய்தாய் அதன் பலன் இப்போதுதான் உனக்கு கிடைக்கப் போகிறது (அதாவது சீதையை அடைவதுதான் உன் தவப் பயன்)" என்கிறாள் சூர்ப்பனகை, இராவணனிடம்.

பாடல்

“தருவது விதியே என்றால்,
    தவம் பெரிது உடையரேனும்,
வருவது வரும் நாள் அன்றி,
    வந்து கைகூட வற்றோ?
ஒருபது முகமும், கண்ணும்,
    உருவமும், மார்பும், தோள்கள்
இருபதும், படைத்த செல்வம்
    எய்துவது, இனி நீ, எந்தாய்!‘‘


பொருள் 

“தருவது விதியே என்றால் = பலன்களை தருவது விதியே

தவம் பெரிது = பெரிய தவம்

உடையரேனும், = செய்தவர்கள் என்றாலும்

வருவது  = வரக்கூடியவை

வரும் நாள் அன்றி = வரக்கூடிய நாள் இல்லாமல்

வந்து கைகூட வற்றோ? = அதற்கு முன்னால் வந்து விடுமா? (வராது)

ஒருபது முகமும் = 10 தலைகளும்

கண்ணும், = கண்களும்

உருவமும் = பலமான உருவமும்

மார்பும் = பரந்த மார்பும்

தோள்கள்  இருபதும் = இருப்பது தோள்களும்

படைத்த செல்வம் = தவம் செய்து நீ படைத்த செல்வம்

எய்துவது = அடைவது

இனி நீ = இனிமேல்தான்

எந்தாய்!‘‘ = என் தந்தை போன்றவனே


நீ இதுவரை  பெற்றது எல்லாம் ஒரு பலன் இல்லை. நீ செய்த தவத்தின் பலன் இப்போதுதான் கிடைக்கப் போகிறது. இத்தனை காலம் நீ பொறுத்து இருக்க வேண்டியது இருந்தது. சீதைதான் உன் தவப் பயன் என்கிறாள் சூர்ப்பனகை.

ஆகும் நாள் அன்றி, ஒன்றும் வந்து சேராது என்று வாழ்க்கை தத்துவம் கூறுவது யார்?  சூர்ப்பனகை என்ற அரக்கி.

கூறியது யாருக்கு? இராவணன் என்ற அரக்கனுக்கு

கூறிய இடம்?  அவன் அரசவை

கூறிய நேரம்? காதும், மூக்கும், முலையும் இழந்து இரத்தம் சொட்ட நின்ற நேரம்.

இதுவா இடம், பொருள், ஏவல் ?

விதி வலியது. எல்லாம் என்னால் ஆனது என்று ஆடாதே. உனக்கு இப்போது செல்வம் வர  வேண்டும் என்று இருந்தால் வரும். நீ என்ன தவம் செய்தாலும், நேரம் சரி  இல்லை என்றால் வராது. ஆடாதே என்று அறம் சொல்கிறான் கம்பன்.

நான் படித்தேன், நான் திறமையாக வேலை செய்தேன், என் சாதுரியம், என்று மார்  தட்டாதே. அடங்கு.

உன்னை விட படித்தவன், உன்னை விட திறமைசாலிகள், உன்னைவிட சாதுரியம் மிக்கவர்கள்  உனக்கு பல படிகள் கீழே இருக்கிறார்கள்.

உன்னை விட குறைவாக படித்தவர்கள், குறைவான திறமை உள்ளவர்கள் உனக்கு பல படி மேலே இருக்கிறார்கள்.

இதை விதி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது என்று கம்பன் கேட்கிறான்.


அறிவோம். ஆணவம் குறைத்து வாழ்வோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_21.html

Friday, September 20, 2019

திருக்குறள் - பொறுமை - ஒருநாளை இன்பம்

திருக்குறள் - பொறுமை - ஒருநாளை இன்பம் 


இன்பமாக வாழ்வதுதானே வாழ்வின் குறிக்கோள்.

இனிப்பு உண்பது இன்பமா? துன்பமா?

இன்பம்தான். இலட்டு , அல்வா, ஐஸ் கிரீம், ஜிலேபி, எல்லாம் சாப்பிட்டால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

தினமும் சாப்பிட்டால் என்ன? இன்பம்தானே ? மகிழ்ச்சிதானே ?

செய்ய மாட்டோம். ஏன் என்றால், அது உண்ணும் போது இன்பம் தந்தாலும், பின்னால் பெரிய துயரைத் தரும். சர்க்கரை வியாதி வரும். உடல் பருமன் கூடும். இல்லாத நோய் எல்லாம் வந்து சேரும்.

எனவே,

உடனடி இன்பத்தை விட, நீண்ட நாள் இன்பம்தான் முக்கியம் என்று நமக்குத் தெரிவதால், அவற்றை நாம் முடிந்தவரை தவிர்க்கிறோம்.

அதே போல், ஓடுவது, பளு தூக்குவது, மாடி ஏறுவது போன்றவை கடினமான செயல்தான். எதுக்கு மூச்சு வாங்க நாலு மாடி ஏறனும் ? மின் தூக்கி (லிப்ட்) இருக்கிறதே என்று அதில் போகலாம்.

உடற் பயிற்சி செய்தால், அப்போது துன்பம் போலத்  தெரிந்தாலும், பின்னால் அது நல்லது செய்யும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். முட்டு , தசை எல்லாம் வலிமையாக இருக்கும்.

எனவே,

உடனடி துன்பம் என்றாலும், நீண்ட நாள் இன்பம் என்றால் அதை நாம் செய்கிறோம். செய்ய விரும்புகிறோம்.

ஒருவன் நமக்கு தீங்கு செய்தால், அவனுக்கு பதிலுக்கு தீங்கு செய்தால் அது அப்போதைக்கு இன்பம்.  பதிலுக்கு பதில் திட்டி விடலாம், முடிந்தால் அடிக்கவும் செய்யலாம்,  இல்லை என்றால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு  பேசாமல் நாலு நாள் இருக்கலாம்...

அப்படி செய்தால், நமக்கு உடனடி இன்பம் கிடைக்கும். அது நீண்ட நாள் இன்பமா?

அந்த உறவு நிலைக்குமா? அன்பு ஆழமாகுமா? நாம் அவவனுக்கு தீங்கு செய்தால் அவன் நமக்கு  அதை விட பெரிய தீங்கு செய்ய மாட்டானா? இது எங்கு போய் முடியும்?

மாறாக, தீங்கு செய்தவனை மன்னித்து பொறுத்துக் கொண்டால் ?

வள்ளுவர் சொல்லுகிறார்,

"நமக்கு தீங்குக்கு செய்தவனுக்கு பதிலுக்கு நாம் தீங்கு செய்தால், அது அந்த ஒரு நாளைக்கு இன்பம். மாறாக, அந்த தீமையை பொறுத்துக் கொண்டால், இறுதி வரை புகழ் நிலைக்கும்" என்று

பாடல்


ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்


பொருள்

ஒறுத்தார்க்கு = தண்டித்தவர்க்கு

ஒருநாளை  = ஒரு நாள்

இன்பம்  = இன்பம்

பொறுத்தார்க்குப் = பொறுத்துக் கொண்டவர்களுக்கு

பொன்றும் = இறுதி வரை

துணையும் = துணையாக நிற்கும்

புகழ் = புகழ்

"இறுதி வரை" என்றால் எதன் இறுதி?

அவனுடைய வாழ் நாள் வரை, இந்த உலகத்தின் இறுதி வரை என்று கூட சொல்லலாம். பொறுமையை கடை பிடித்த மகான்களின் புகழ் அவர்கள் வாழ்நாள் தாண்டியும்  நிலைத்து நிற்கிறது அல்லவா?

தண்டித்தவர்களுக்கு ஒரு நாளுக்கு இன்பம்.

பொறுத்தவர்களுக்கு இறுதி வரை இன்பம் என்று சொல்லவில்லை. இறுதி வரை புகழ்  என்கிறார்.  பெருமை, உயர்வு.

ரொம்ப இல்லாவிட்டாலும்,

கணவன் மனைவி, பிள்ளைகளிடம், நண்பர்களிடம், மருமகளிடம், என்று வீட்டில் நெருங்கிய  உறவில் இருந்து இந்த பொறுமையை ஆரம்பிக்கலாமே?

முடிந்தால் பின்னால் விரிவு பண்ணிக் கொள்ளலாம்.

இது நடை முறை சாத்தியம் தானே? சாதாரண மனுஷன், மனுஷி செய்யக் கூடிய  செயல் தானே?

முயன்று பாருங்கள். நல்லதே நடக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_20.html