Friday, January 17, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - பாகம் 2 - தரித்த வில்லோடு போனான்

வில்லி பாரதம் - சிகண்டி - பாகம் 2 - தரித்த வில்லோடு போனான் 


காசி மன்னனுக்கு மூன்று பெண் குழந்தைகள்.  அம்பை, அம்பிகை மற்றும் அம்பாலிகை என்பது அவர்கள் பெயர். அவர்களுக்கு திருமண வயது வந்ததும், காசி மன்னன், திருமணம் பற்றி அறிவித்தான்.

அழகில் சிறந்த அந்ப் பெண்களை மணந்து கொள்ள பல அரசர்கள் நான் நீ என்று ஆசைப்பட்டார்கள்.

பீஷ்மனும், தன்னுடைய தம்பியான விசித்திர வீரியனுக்கு அந்த பெண்களை மனமுடித்து வைக்க எண்ணினான். எனவே, சுயம்வரத்தில் கலந்து கொள்ள, பீஷ்மரும் வில்லை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்


பாடல்

வரித்தமன்னர் மறங்கெடவன்பினால்
திரித்துமெம்பியைச் சேர்த்துவல்யானெனாத்
தரித்தவில்லொடுந் தன்னிளவேந்தொடும்
வரித்தவெண்குடை வீடுமனேகினான்.

பொருள்

வரித்த மன்னர் = (தங்கள் மனதுக்குள் அந்தப் பெண்களை) வரித்துக் கொண்ட. அதாவது, அந்தப் பெண்கள்தான் என் மனைவி என்று எல்லா அரசர்களும் மனதுக்குள் நினைத்து இருந்தார்கள்.

 மறங்கெட = மறம் + கெட = அவர்களின் வீரம் கெட

வன்பினால் = வன்மையால்

திரித்து = அவர்களை திரும்பி ஓடச் செய்து

மெம்பியைச்  =என் தம்பியிடம்

சேர்த்துவல்யானெனாத் = சேர்த்து வைப்பேன் நான் என்று

தரித்த   வில்லொடுந் = வில்லை எப்போதும் ஆடை போல தரித்து இருக்கும்


தன்னிள வேந்தொடும் = தன்னுடைய இளைய வேந்தனோடும்

வரித்த வெண்குடை = சூடிய வெண் குடை உள்ள

வீடுமனேகினான். = வீடுமன் (பீஷ்மன்) சென்றான்

சுயம்வரத்தில் கலந்து, வீரத்தை நிலை நாட்டி, அந்தப் பெண்களை கொண்டு வந்து தன் தம்பிக்கு மணம் முடிக்க பீஷ்மர் புறப்பட்டார்.

அடுத்து என்ன ஆகப் போகிறதோ ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/2.html

Tuesday, January 14, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - ஒரு முன்னோட்டம்

வில்லி பாரதம் - சிகண்டி  - ஒரு முன்னோட்டம் 


பெண்ணின் மனதை ஆண்கள் புரிந்து கொள்வதே இல்லை.

ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ளாததால் வரும் சிக்கல்களை வைத்துத்தான் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்கள் பின்னப் பட்டு இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.

ஒரு கூனியை, கைகேயியை, சூர்பனகையை புரிந்து கொள்ளாமல் அவர்களின் உணர்சிகளோடு ஆண்கள் தவறாக விளையாடியதால் என்ன நிகழ்ந்தது என்று இராமாயணம் காட்டுகிறது.

பாரதமும் அப்படித்தான்.

அதில் ஒரு மிக மிக சுவாரசியமான பாத்திரம் சிகண்டி.

எனக்குத் தெரிந்து, ஒரு அலியின் மன நிலை எப்படி இருக்கும் என்று எந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லை. ஆணின் மனம் புரிகிறது. பெண்ணின் மனம், சிக்கலாக இருந்தாலும், பின்னால் ஓரளவு புரிகிறது.

இரண்டுக்கும் நடுவில் இருக்கும் அலியின் மனம் எப்படி வேலை செய்யும்.

சிகண்டியை அலி என்று கூட சொல்ல முடியாது. பெண்ணாய் பிறந்து, ஆணாக மாறிய ஒரு பாத்திரம். இதுவரை வேறு எந்த இலக்கியத்திலும் கேள்விப் படாத ஒரு பாத்திர படைப்பு.

காதல் - தோல்வி - பச்சாதாபம் - ஏளனம் - கோபம் - ஆங்காரம் - வன்மம் - விடா முயற்சி - என்று அந்த உணர்சிக்களின் படைப்பு  சிகண்டி.

பாரதத்தின் மிகப் பெரிய பாத்திரமான பீஷ்மரை கொன்ற பாத்திரம்.

சிகண்டி இல்லாவிட்டால், பாண்டவர்கள் போரை வென்றிருக்க முடியாது.

பார்த்ததில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கிய பாத்திரம் சிகண்டி.

எல்லாம் முடிந்த பின்,  சிகண்டி மேல் நமக்கு ஒரு பரிதாபம்தான் வரும். ஒரு பச்சாதாபம்   .தான் வரும். அப்படி ஒரு பாத்திரம்.

தவறு யார் மேல் என்று நம்மால் உறுதி செய்ய முடியாத கதைப் போக்கு.

பீஷ்மர் செய்ததும் சரிதான். சிகண்டி செய்ததும் சரிதான். என்று நம்மை நியாய அநியாயங்களுக்கு நடுவில் நிறுத்தி ஒரு பக்கமும் சாய முடியாமல் செய்கிறது  பாரதக் கதை இந்த சிகண்டி பாத்திரத்தின் மூலம்.

மற்றவர்களின் உணர்ச்சிகளை நாம் எவ்வளவு எச்சரிக்கையாக கையாள வேண்டும்  என்று உணர்த்தும் பாத்திரம்.

யாராலும் வெல்ல முடியாத பீஷ்மரை அம்புப் படுக்கையில் படுக்க வைத்தது  அவரின் மெத்தனப் போக்கு.  அம்பையின் உணர்வுகளை மதிக்காமல் இருந்ததால் , உடல் எல்லாம் சல்லி சல்லியாக துளை பட்டு பீஷ்மர் கிடந்தார்.

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காததால் பீஷ்மரே அந்த பாடு பட்டார் என்றால், நாமெல்லாம் எந்த மூலை?

வர இருக்கும் நாட்களில் சிகண்டி பற்றி காண இருக்கிறோம்.

interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_14.html




Saturday, January 11, 2020

நன்னூல் - நூலின் அழகு

நன்னூல் - நூலின் அழகு 


எப்படி அழகாக எழுதுவது?  ஒரு சிறந்த நூல் எப்படி இருக்க வேண்டும்? அலுவலகத்தில் கூட, நிறைய "presentation" தர வேண்டி இருக்கும். அவை எப்படி இருக்க வேண்டும். இன்று, "Steve Jobs" presentation உலகத் தரம் வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.  நம்மவர்கள், ஒரு சிறந்த நூலோ, அல்லது presentation ஓ எப்படி இருக்க வேண்டும் என்று வரையறை செய்து விட்டுப் போய் இருக்கிறார்கள். நாம் இதைப் படிப்பதை விட்டு விட்டு, "ஆ" என்று மேல்நாட்டாரை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

அழகான எழுத்து, புத்தகம், presentation எப்படி இருக்க வேண்டும்?

பாடல்

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை யாழமுடைத் தாதல்
முறையின் வைப்பே யுலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுத னூலிற் கழகெனும் பத்தே.

பொருள்


சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் = இது முதல் சூத்திரம். எதையும் சுருக்கமாகச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்.  வள வள என்று எழுதிக் கொண்டோ பேசிக் கொண்டோ இருக்கக் கூடாது. அதற்காக, ரொம்பவும் சுருக்கி என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் போகும் படியும் இருக்கக் கூடாது.


நவின்றோர்க் கினிமை = யாருக்கு சொல்கிறோமோ, அவர்களுக்கு அது இனிமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கேட்க மாட்டார்கள்.


நன்மொழி புணர்த்தல் = நல்லவற்றை சொல்ல வேண்டும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போன்றவற்றை சொல்லக் கூடாது.

ஓசை யுடைமை = சந்த நயம் இருக்க வேண்டும். ஒலி அழகு இருக்க வேண்டும்.


யாழமுடைத் தாதல் = ஆழம் உடைத்தாதல். ஆழமான பொருள் இருக்க வேண்டும். சும்மா நுனிப் பபுல் மேயக் கூடாது

முறையின் வைப்பே = சொல்வதை முறைப்படுத்திச் சொல்ல வேண்டும். ஒரு ஒழுங்கு வேண்டும். முன்னுக்கு பின் அலைக்கழிக்கக் கூடாது.  உயர்ந்தவற்றை முதலில் சொல்லி, மற்றவற்றை பின்னால் சொல்ல வேண்டும். ஆசிரியரும் மாணவர்களும் வந்தார்கள் என்று சொல்ல வேண்டும். மாறாக, மாணவர்களும் ஆசிரியரும் வந்தார்கள் என்று சொல்லக் கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முறைமையில் மாதாவுக்கு முதல் இடம், தெய்வத்துக்கு நாலாவது இடம். முதல் அமைச்சர் அவருடைய செயலாளரோடு வந்தார் என்று சொல்ல வேண்டும். செயலாளர், முதலமைச்சரோடு வந்தார் என்று சொல்லக் கூடாது.



யுலகமலை யாமை  = உலகம் மலையாமை?  உலகமே மலைக்கும் படி சொல்லக் கூடாது. மலைத்தல் என்றால் , 'இது எப்படி இப்படி இருக்க முடியும் " என்று திகைக்க வைக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக விளக்கி ஒரு பெரிய பொருளை  விளங்கச் செய்ய வேண்டும்.

விழுமியது பயத்தல்  = சிறப்பானவற்றை சொல்ல வேண்டும். ஒரு நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை சொல்கிறோம் என்றால், இந்த வருடம் என்ன சாதித்தோம் என்று சொல்ல வேண்டும், என்ன புதிதாக செய்தோம் என்று சொலல் வேண்டும்.. ஒரு பொருளை விற்கிறோம் என்றால், அந்தப் பொருளின் சிறப்பு என்ன என்று சொல்ல வேண்டும்.

விளங்குதா ரணத்ததாகுதல்  = விளங்கு உதாரணத்து ஆகுதல். அதாவது, கடினமான ஒன்றை எளிய உதாரணம் மூலம் சொல்லி விளக்க வேண்டும்.

னூலிற் கழகெனும் பத்தே. = நூலினிக்கு அழகெனும் பத்தே. இந்த பத்தும் ஒரு நூலுக்கு அழகு சேர்ப்பவை.

நூல் என்றால் நூலோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. பேச்சு, presentation என்று  அதை நீட்டிக் கொள்ளலாம்.

அடுத்த முறை பேசுவதற்கு முன்போ, ஏதாவது ரிப்போர்ட் அனுப்பும் முன்போ, presentation தருவதற்கு முன்போ, இந்த 10 விதிகளும் கடை பிடிக்கப் பட்டு இருக்கிறதா என்று பாருங்கள்.

ஒவ்வொரு தடவையும் இவற்றைக் கொண்டு சரி  பார்த்துக் கொண்டே இருந்தால், நாளடைவில் அழகாக எழுதுவது என்பது தானே வந்து விடும்.


சொன்னால் மட்டும் போதாது. அழகாகவும் சொல்ல வேண்டும்.

இது நல்லா இருக்கா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_73.html

பெரிய புராணம் - தாங்க ஒண்ணா துன்பம் வந்த போது

பெரிய புராணம் - தாங்க ஒண்ணா துன்பம் வந்த போது 


எப்படியோ துன்பம் வந்து விடுகிறது. நம் பிழை என்று இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு விதத்தில் துன்பம் வந்து நம்மை வேதனை செய்கிறது.

துன்பம் வந்து விட்டால், தளர்ந்து போகிறோம். என்ன செய்யப் போகிறோம், இதில் இருந்து எப்படி மீழ்வது என்று தவிக்கிறோம்.

துன்பமே இல்லாத வாழ்வு இருக்கக் கூடாதா என்று ஏங்குகிறோம்.

இன்பம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை , இந்த துன்பம் வரமால் இருந்தால் சரி என்று நினைக்கிறோம்.

நாமாவது இந்த உலக வாழ்க்கையில் ஈடுபட்டு, ஏதேதோ செய்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ தவறு நிகழ்ந்து விடலாம். தெரியாமல் யாரையாவது மனம் புண்பட பேசி இருப்போம். தெரிந்து அல்ல, தெரியாமல். தெரியாமல் குடித்தால் நஞ்சு நம்மைக் கொல்லாதா. செய்த வினைக்கு மறு வினை வரும் தானே?

அப்பர், சுந்தரர், மணிவாசகர் போன்ற பெரியவர்கள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.

சிறு வயதில், சைவ சமயம் விட்டு, சமண சமயத்தில் சேர்ந்து விட்டார் அப்பர். அவருடைய தமக்கையார், பெயர் திலகவதியார். திலகவதியார் ஒரு நாள் சிவனிடம் முறையிட்டார் ..."என் தம்பி இப்படி போய் விட்டானே, அவனுக்கு நல்ல புத்தியை கொடுத்து நீ தான் அவனை நல் வழிப் படுத்த வேண்டும் " என்று  மனம் உருகி வேண்டினார்.

சிவன், அவருடைய கனவில் வந்து சொன்னார், "உன் தம்பி முன்பே என்னை நோக்கி தவம் செய்திருக்கிறான். அவனுக்கு சூலை நோயை கொடுத்து நல் வழிப் படுத்துவோம்" என்று.

சிவன் நினைத்தால், நாவுக்கரசரை மனம் மாறச் செய்ய முடியாதா? தாங்க முடியாத வயிற்று வலியை கொடுத்தார். நாவுக்கரசர் வலி தாளாமல் துடித்தார்.

அந்த வலி வந்ததால், அவர் தன்னுடைய தமக்கையை நோக்கி வந்தார்.  பின் சைவ சமயத்தை  வந்து அடைந்தார். தேவாரம் பாடினார்.

செய்தி அதுவல்ல.

துன்பம் வரும் போது , தோல்வி வரும் போது தவிக்கிறோம். துவள்கிறோம். அது எல்லாம் சரி.  அந்த துன்பம் கூட, தோல்வி கூட ஏதோ ஒரு பெரிய நன்மைக்கு  என்று நாம் நினைக்க வேண்டும்.

தோல்வியை கண்டு துவண்டு விடக் கூடாது. ஏதோ ஒரு மிகப் பெரிய வெற்றியைத் தரவே  இறைவன்/இயற்கை இந்த தோல்வியை/துன்பத்தை நமக்குத் தந்திருக்கிறது என்று நினைக்க வேண்டும்.

சுடு மணலில் , செருப்பு இல்லாமல் நிற்க வைத்தார்கள் மணி வாசகரை.

தாள முடியாத வயிற்று வலியால் துன்பப் பட வைத்தார் நாவுக்கரசரை.

அந்தத் துன்பங்களுக்கு பின்னால், அவர்கள் பக்தி உலகுக்குத் தெரிந்தது.

ஏதோ ஒன்றை வெளிக் கொணரவே துன்பங்களும், தோல்விகளும், அவமானங்களும்  வருகின்றன என்று நம்ப வேண்டும். அவற்றை வென்று  முன்பு இருந்ததை விட பெரிய  , உயரிய நிலைக்குப் போக வேண்டும்.



பாடல்

மன்னுதபோ தனியார்க்குக் கனவின்கண் மழவிடையார்
"உன்னுடைய மனக்கவலை பொழிநீ;யுன் னுடன்பிறந்தான்
 முன்னமே முனியாகி யெனையடையத் தவமுயன்றான்
 அன்னவனை யினிச்சூலை மடுத்தாள்வ"மெனவருளி,


பொருள்


மன்னு = நிலைத்த

தபோதனியார்க்குக் = தவம் புரிந்த அந்த பெண்மணிக்கு

கனவின்கண் = கனவில்

மழவிடையார் = மழு என்ற ஆயுதத்தைக் கொண்ட சிவனார்

"உன்னுடைய = உன்னுடைய

மனக்கவலை = மனக் கவலையை

பொழிநீ; = ஒழி நீ

யுன்னுடன்பிறந்தான் = உன் உடன் பிறந்தான் (நாவுக்கரசர்)

முன்னமே = முன்பு, முந்தைய பிறவியில்

முனியாகி  = முனிவனாகி

யெனையடையத் = என்னை அடையத்

தவமுயன்றான் = தவ முயற்சிகள் மேற் கொண்டான்

அன்னவனை = அவனை

யினிச் = இனி

சூலை = சூலை நோய் (கொடிய வயிற்று வலி)

மடுத்தாள்வ = மடுத்து ஆள்வோம்

"மெனவருளி, = என்று அருளினார்

பரீட்சை வைத்துதானே மார்க் போட முடியும். மார்க் வாங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஐயோ பரீட்சை வந்து விட்டதே என்று அலறினால் என்ன அர்த்தம்.

கொஞ்சம் படித்தவுடன் , ஒரு பரீட்சை வரும். அதில் தேறினால், மேலும் படிக்கலாம்,  அதில் இன்னொரு பரீட்சை வரும்.

பரீட்சை கொஞ்சம் கடினம் தான். இருந்து படிக்க வேண்டும், எழுத வேண்டும்.

வாழ்க்கையும் அப்படித்தான். அப்பப்ப சோதனைகள் வரும்.

சோதனை வரும் என்று எதிர் பார்த்து அதற்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.

ஒன்றும் படிக்காமல் பரீட்சை எழுதப் போனால், எப்படி. நடுக்கம் வரத்தான் செய்யும்.

அடுத்து என்ன சோதனை வரும் என்று எண்ணிப் பாருங்கள். அதை எப்படி சமாளிப்பது என்று  திட்டம் போடுங்கள்.

நம்மை தினமும் தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி செய்தால், எளிதாக தேர்ச்சி பெற முடியும். இல்லை என்றால், கையில்  வினாத்தாளை வைத்துக் கொண்டு திரு திரு என்று முழிக்க வேண்டியதுதான்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_11.html

Friday, January 10, 2020

திருப்புகழ் - அறநாலைப் புகல்வோனே

திருப்புகழ் - அறநாலைப் புகல்வோனே 


மரணத்தை கண்டு அஞ்சாதவர் யார். வாழ்க்கை எவ்வளவுதான் துன்பம் நிறைந்ததாக இருந்தாலும், சாவதற்கு யாருக்கும் மனம் வருவதில்லை. சாகாமல் இருக்க வழி இருக்கிறதா என்றால் இருக்கிறது.

சாகாமல் இருக்க முடியுமா ? முடியும்.

பிறக்காமல் இருந்தால்.

பிறந்தால்தான் சாக முடியும். இறவா வழி வேண்டும் என்றால், பிறவாமல் இருக்க வேண்டும்.

பிறந்தாகி விட்டது. பிறந்த நாள் தொட்டு இறுதி நாள் வரை, அழியக் கூடிய பொருள்களையே தேடி அலைகிறோம். பொம்மை, பென்சில், சாக்லேட், பூ, சைக்கிள், ரிப்பன், கண் மை, சட்டை, பாவாடை,  எதிர் பாலினர்மேல் ஈர்ப்பு, செல்வம், பிள்ளைகள் என்று அனைத்தும் அழியக் கூடியவை. அவை பின்னால் அலைகிறோம். பின் இறுதி நாளில், என்னத்த செய்தோம் இத்தனை நாள் ...வாழ் நாள் எல்லாம் அலைந்து கண்டது என்ன என்று பச்சாதாபம் வருகிறது. அழியாத பொருள் என்ன என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அருணகிரிநாதர் உருகுகிறார்....

"இறவாமல், பிறவாமல் என்னை ஆட்கொள் குருநாதா. என்றும் நிலைத்து நிற்கும் பெருவாழ்வை எனக்கு அருள்வாய். நான்கு விதமான அறத்தை சொல்லுபவனே, அவிநாசியில் காட்சி தரும் பெருமாளே "

என்று.


பாடல்

இறவாமற் பிறவாமல் எனையாள்சற்  குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத்  தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற்  குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே.



பொருள்

இறவாமற் = இறவாமல்

பிறவாமல் = பிறவாமல்

எனையாள் = என்னை ஆட்கொண்ட

சற்குருவாகிப் = சத்குருவாகி

பிறவாகித்  = மற்றவை யாவும் ஆகி

திரமான  = ஸ்திரமான, நிலையான

பெருவாழ்வைத் = பெரு வாழ்வைத்

தருவாயே = தருவாயே

குறமாதைப் புணர்வோனே = குறவள்ளியோடு சேர்பவனே

குகனே = குகனே

சொற் = பெருமை வாய்ந்த

குமரேசா = குமரேசா

அறநாலைப்  = நான்கு அறங்களை

புகல்வோனே  = போதிப்பவனே

அவிநாசிப் = அவிநாசியில் வீற்றிருக்கும்

பெருமாளே. = பெருமாளே

அது என்ன நான்கு அறம் ?

அறம் , பொருள், இன்பம் , வீடு என்ற நான்கையும் அறமாக கொள்கிறார் அருணகிரி நாதர்.


நாலுதரம் வாசித்தால் மனதுக்குள் ஒட்டிக் கொள்ளும் பாடல்.

திரமான பெருவாழ்வு என்ன என்று சிந்திக்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_10.html

Thursday, January 9, 2020

கம்ப இராமாயணம் - கிண்டல், நக்கல், நையாண்டி

கம்ப இராமாயணம் - கிண்டல், நக்கல், நையாண்டி 


கம்ப இராமாயணம் போன்ற இலக்கியங்களை, ஏதோ அதில் உள்ள கதைக்காக படிக்காமல்,அதில் உள்ள வாழ்வியல் பாடங்களுக்காக படித்ததால் நமது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

என்னைக் கேட்டால், கம்ப இராமாயணத்தின் மிகப் பெரிய பாடம், எளியவர்களை ஏளனம் செய்யாதே என்ற பாடம் தான்.


மற்றவர்களை கிண்டல்  பண்ணுவது,நக்கல், நையாண்டி போன்றவை செய்பவர்களுக்கு வேண்டுமானால்  அது ஒரு விளையாட்டாக, பொழுது போக்காக இருக்கலாம். யாரை நக்கல் பண்ணுகிறார்களோ, பெரும்பாலான சமயங்களில், கிண்டல் பண்ணப்பட்டவரின் மனம் புண் படும் என்பதே உண்மை.

ஒருவரின் உடல்வாகைப் பற்றி, அவர்கள் பேச்சு பற்றி, அவர்கள் செய்த ஏதோ ஒரு தவறு பற்றி கிண்டல் பண்ணுவது எளிது. அதுவும் பலர் முன்னால், அப்படிச் செய்தால், நிச்சயம் அவர்கள் மனம் புண் படும்.

மனைவியை மற்றவர்கள் முன் விமர்சினம் செய்வது, வேலையாட்களை எள்ளி நகையாடுவது, கீழே வேலை பார்ப்பவர்களை கிண்டல் பண்ணுவது போன்றவை மற்றவர்களுக்கு வருத்தம் தரும் செயல் என்று நாம் உணர வேண்டும்.  என் மனைவியை கிண்டல் பண்ண எனக்கு உரிமை இல்லையா என்று மார்தட்டக் கூடாது. இல்லை. அவளின் மனதை புண் படுத்த அதிகாரம் இல்லைதான்.

இராமன், இராசா வீட்டு கன்னுக்குட்டி. அரண்மனையில் ஆடிப் பாடி சுதந்திரமாக திரிந்திருப்பான். அங்கே, கூனி அங்கும் இங்கும் செல்வதைப் பார்த்து இருப்பான். அம்பில் மண் உருண்டையை வைத்து, அவள் கூன் மேல் அடித்து விளையாடி இருக்கிறான். அவனுக்கு அது ஒரு விளையாட்டு. [பொழுது போக்கு. அவள் முதுகில் அடித்து விட்டு,கை கொட்டிச் சிரித்து இருப்பான்.

விளையாட்டுப் பிள்ளைதானே. அதுவும் மூத்த இளவரசன். யாரும் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார்கள்.

ஆனால், அந்த வலி கூனிக்கு இருந்து கொண்டே இருந்தது.

அவள் சமயம் பார்த்து திருப்பி அடித்தாள். அந்த வலியை இராமானாலும் தாங்க முடியவில்லை.  பின்னால், சுக்ரீவனிடம் சொல்லி அங்கலாய்க்கிறான்.

கூனி அடித்த அடி எப்படி இருந்தது ?

தயரதன் இறந்தான், இராமன் கானகம் போனான், இலக்குவன் மனவியைப் பிரிந்து கானகம் போனான்.  பரதன் மனவியைப் பிரிந்து 14 வருடம் அரசை விட்டு விட்டு , நந்திக் கிரமாத்தில் தவம் கிடந்தான். சீதை, இராவணனிடம் சிறை பட்டு  துன்பம் அனுபவித்தாள்.

இராஜ குலத்தையே திருப்பி போட்டது, கூனியின் கோபம்.

இராமன், கூனியை அம்பால் அடித்த போது, யாராவது அவனுக்குச் சொல்லி இருக்க வேண்டும்.  "வயதானவர்களை, உடல் ஊனம் உற்றவர்களை இப்படிச் செய்யக் கூடாது. போ, போய் மன்னிப்பு கேள்" என்று சொல்லி இருக்க வேண்டும்.

அங்கே திருத்தாமல் விட்ட சின்ன தப்பு, எப்படி வளர்ந்து என்ன பாடு படுத்தியது? இராமன் நினைத்து இருப்பானா, இந்த கூனி எனக்கு வரும் அரசையே தடுத்து நிறுத்தி விடுவாள் என்று. இவளால் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக இருந்திருப்பான்.

இப்பவும், வீட்டில் பிள்ளைகள் தவறு செய்வார்கள். மரியாதைக் குறைவாக பேசுவார்கள், மட்டு மரியாதை இல்லாமல் பேசுவார்கள், எளியவர்களை ஏளனம் செய்வார்கள். "ஆஹா, என் பிள்ளை எப்படி பேசுகிறான் பார்...அவங்க அப்பாவை  அவன் குரங்குனு தான் சொல்லுவான், அவருக்கு அறிவே இல்லேனு  அவர் முன்னாலேயே சொல்லுவான்" என்று பிள்ளையின் சாமர்த்தியத்தை  பெருமிதப் படும் தாய்மார்கள், இராமனை நினைக்க வேண்டும்.

அப்பேற்பட்ட இராமனே  அந்த பாடுபட்டான் என்றால், நம் பிள்ளை என்ன பாடு படுவானோ என்று பதற வேண்டும். பிள்ளைகள் தவறு செய்தால் உடனே அதை  திருத்த வேண்டும். மாறாக, "அடடா, வேலைக்காரியின் பிள்ளையை  விட்டான் பாரு ஒரு அடி" என்று சொல்லி மகிழக் கூடாது.

அரண்மைனையில் ஒரு வயதான கிழவிக்கு செய்த சின்ன தீங்கே இவ்வளவு பெரிதாக  முடியும் என்றால், வீட்டில் கணவனை/மனைவியை/ பிள்ளைகளை/பெற்றோரை/ மாமனார்/மாமியாரை/ நண்பர்களை என்று யாரையுமே உதாசீனம் செய்யக் கூடாது.

யாருடைய அறியாமையையோ, இயலாமையையோ கண்டு ஏளனம் செய்யக் கூடாது.

பாடல்

தொண்டை வாய்க் கேகயன்
    தோகை கோயில் மேல்
மண்டினாள், வெகுளியின்
    மடித்த வாயினாள்,
பண்டை நாள் இராகவன்
    பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன்
    உள்ளத்து உள்ளுவாள்.


பொருள்


தொண்டை = கோவை பழத்தைப் போல சிவந்த

வாய்க் = இதழ்களை உடைய

கேகயன்  தோகை  = கேகய மன்னன் மகள் (கைகேயி)

கோயில் மேல் = இருக்கும் அரண்மனைக்கு

மண்டினாள் = வந்து சேர்ந்தாள் (யார்? கூனி)

வெகுளியின் = கோபத்தால்

மடித்த வாயினாள் = உதட்தை கடித்துக் கொண்டு

பண்டை நாள் = முன்பு ஒரு நாள்

இராகவன் = இராமன்

பாணி = கை. பாணி என்றால் கை. பாணி கிரஹணம் என்றால் கையைப் பிடித்தல். சப்பாணி என்றால், சப் சப் என்று கையால் தாளம் போடுதல்

வில் உமிழ் = வில் உமிழ்ந்த

உண்டை = மண் உருண்டை

உண்டதனைத்  = தன் மேல் பட்டு வலி உண்டாக்கியதை

தன் = தன்னுடைய

உள்ளத்து = மனதில்

உள்ளுவாள். = நினைப்பாள்

இராமன், பாடம் படித்தான் இல்லை. பின்னாளில், சூர்பனகையிடமும் கொஞ்சம்  நக்கலும் நையாண்டியுமாக பேசி இருக்கிறான். அது அவனைப் புரட்டிப் போட்டது.

யாரையும் மனம் புண் படும்படி பேசவோ, செய்யவோ கூடாது.

வார்த்தைகளை பண் படுத்த படிக்க வேண்டும்.

மரியாதை, இனிமை, அடக்கம் இவற்றை எப்போதும் கை கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கும் சொல்லித் தர வேண்டும்.

நல்ல பாடம் தானே?


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_9.html

Tuesday, January 7, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம் 



இன்பம் வருதோ இல்லையோ, துன்பம் வராமல் இருந்தால் போதும் என்று தானே எல்லோரும் நினைப்பார்கள். பல கோடி சொத்து வராட்டாலும் பரவாயில்லை, கையில இருக்குற காசும் பறி போய்விடக் கூடாது என்பதில்தான் எல்லோரும் கவனமாய் இருப்பார்கள்.

பணம் இல்லாமையால் வரும் துன்பம், நோய், உறவுகளில் சிக்கல், எதிர்காலம் பற்றிய பயத்தால் வரும் துன்பம், பிள்ளைகளுக்கு ஒன்றுரம் ஆகி விடக் கூடாதே என்ற பயம்...எல்லாம் விட்டு,கடைசியில் நரகத்துக்குப் போவோமோ என்ற பயம். நரகமும் ஒரு கெடுதல் தானே.

துன்பம் பல வழிகளில் வரும். கணவன்/மனைவியினால், பிள்ளைகளால், பெற்றோர்களால், அரசாங்கத்தால், உயர் அதிகாரிகளால், நாட்டின் பொருளாதார நிலமையால், சுற்றுப் புற சூழ்நிலைகளால்...இப்படி பல இடங்களில் இருந்து துன்பம் வருகிறது.

இம்மையிலும், மறுமையிலும் வரும் துன்பங்களில் இருந்து விடுபட ஒரே ஒரு எளிய வழியைச் சொல்கிறார் நம்மாழவார்.

"கேசவா" என்று சொன்னால் போதும். எல்லா இடர்களும் விலகும். கேசவா என்று சொல்லிக் கொண்டே திருவனந்தபுரம் ஒரு நடை போய் வாருங்கள் என்கிறார்.


பாடல்


கெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே.


பொருள்


கெடுமிட ராயவெல்லாம்  = கெடும் + இடர் + ஆன + எல்லாம். இதை கொஞ்சம் மாற்றி போடுவோம். இடர் ஆன எல்லாம் கெடும். அனைத்து துன்பங்களும் கெட்டுப் போகும். விலகிப் போய் விடும்.


கேசவா வெள்ள  = கேசவா என்று சொல்ல

நாளும் = ஒவ்வொரு நாளும்

கொடுவினை = கொடிய வினை செய்யும்

செய்யும் = செய்யும்

கூற்றின் = எம தர்மனின்

தமர்களும் = கூட்டாளிகளும்

குறுககில்லார் = குறுக்கே வர மாட்டார்கள்

விடமுடை = விஷம் உள்ள

யரவில் = அரவில் , பாம்பில்

பள்ளி விரும்பினான் = பள்ளி கொள்ள விரும்பிய

சுரும்பலற்றும் = சுரும்பு + அலற்றும். சுரும்பு என்றால் வண்டு. வண்டுகள் ஆர்ப்பாராம் செய்யும் ரீங்காரமிடும்

தடமுடை வயல் = தடத்தை உடைய வயல்கள் நிறைந்த

அனந்தபுரநகரிப் = திரு அனந்தபுரம்  என்ற நகரம்

புகுதுமின்றே. = புகுத்தும் + இன்றே .இன்னிக்கே போய் வாருங்கள்


108 திவ்ய தேசங்களில் ஒன்று.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_7.html