Monday, August 17, 2020

கம்ப இராமாயணம் - ஓவலையோ ?

கம்ப இராமாயணம் - ஓவலையோ ?


நமக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்து விட்டால், நாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கண்டவர்கள் மேலேயும் எரிந்து விழுவோம்.

அலுவலகத்தில் ஏதோ ஒரு பிரச்சனை இருந்திருக்கும். அதை நினைத்துக் கொண்டே வந்து, வீட்டில் மனைவியின் மேல் எரிந்து விழுவது. "எல்லாம் உன்னால் தான்" என்று அவள் மேல் பழி போடுவது.

அது இயற்கைதானே.

சீதையை பிரிந்து வாடுகிறான் இராமன்.

கார்காலம். கரிய மேகங்கள் எங்கும் மிதந்து திரிகின்றன. வெயில் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது. அங்கும் இங்கும் மழை பொழிகிறது. தூரத்தில் மின்னல் வெட்டி இடிச் சத்தம் கேட்கிறது.

இராமனுக்கு, அந்த மேகத்தின் மேல் கோபம் வருகிறது.

" கொடிய மேகமே. நீயும் அந்த அரக்கர்களை போலவே இருக்கிறாய். கறுப்பாக இருக்கிறாய். அவர்களின் கோர பற்களைப் போல நீயும் மின்னல் வெட்டுகிறாய். என் உயிரை கொண்டு செல்லும் வரை நீ ஓய மாட்டாய் போலிருக்கிறது"

என்று, மேகத்தின் மேல் சினம் கொள்கிறான்.

பாடல்

வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை; வெகுண்டு,
எப் பாலும், விசும்பின் இருண்டு எழுவாய்;
அப் பாதக வஞ்ச அரக்கரையே
ஒப்பாய்; உயிர் கொண்டு அலது ஓவலையோ?

பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_17.html


வெப்பு = கொடுமையான

ஆர் = ஆர்த்து எழுந்து

நெடு மின்னின் = நீண்ட மின்னல் என்னும்

எயிற்றை; = பல்லை

வெகுண்டு = கோபம் கொண்டு

எப் பாலும் = எல்லா பக்கமும்

விசும்பின் = மலையில்

இருண்டு எழுவாய்; = இருண்டு கரிய நிறத்தில் எழுவாய்

அப் = அந்த

பாதக = கொடுமையான

வஞ்ச = வஞ்ச மனம் கொண்ட

அரக்கரையே = அரக்கர்களை

ஒப்பாய்; = ஒப்பிடும் படியாக இருக்கிறாய்

உயிர் கொண்டு அலது ஓவலையோ? = என் உயிரை கொண்டு போகாமல் நீ அடங்க மாட்டாய் போல் இருக்கிறது. (ஓவுதல் என்றால் நீங்குதல், விலகுதல் )

மனைவி மேல் அவ்வளவு பாசம். அவள் பிரிவு அப்படி வாட்டுகிறது.

சில பேருக்கு மனைவி ஊருக்குப் போனால் மகிழ்ச்சியாக இருக்கும்.  காரணம், வீட்டில் இருக்கும் போது அந்த பாடு படுத்துவது. எப்படா போவாள் என்று கணவன்  காத்து இருப்பான். போனவுடன், ஒரு பெரிய நிம்மதி. அமைதி.

இங்கே, சீதையின் பிரிவு இராமனை தடுமாற வைக்கிறது. காரணம் இல்லமால்  மேகத்தின் மேல் கோபம் கொள்கிறான்.

அன்பு என்றால் அப்படி இருக்க வேண்டும்.  அப்படி ஒரு ஆள் இல்லாவிட்டால் தவித்துப் போக வேண்டும்.

பரம்பொருள்தான்.  காதல் அவரையும் புரட்டிப் போடுகிறது என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம்?




Saturday, August 15, 2020

திருக்குறள் - காலத்தினால் செய்த நன்றி

திருக்குறள் - காலத்தினால் செய்த நன்றி 


ஒருவர் நமக்கு உதவி செய்கிறார். அந்த உதவி எவ்வளவு பெரியது என்று நாம் கொள்வது? உதவியை பணத்தின் மதிப்பு கொண்டு அளக்க முடியுமா? அவர் செய்த உதவி ஒரு பத்தாயிரம் ரூபாய் மதிப்பு பெறும் என்று அளந்து சொல்லலாமா? உலகத்தில் எதைத்தான் அளக்க முடியாது? எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை அளவுகோல் பணம் என்று ஆகி விட்டபடியால், உதவியை பண மதிப்பீடு செய்ய முடியுமா?

முடியாது என்கிறார் வள்ளுவர்.

முதலில் குறளைப் பார்ப்போம்.

பாடல்

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


பொருள்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_15.html

காலத்தி னால் = சரியான காலத்தில்

செய்த நன்றி = செய்த நன்றி

சிறிதுஎனினும் = சிறிது என்றாலும்

ஞாலத்தின் = உலகில்

மாணப் பெரிது = மிகவும் பெரியது

சரி, அது என்ன காலத்தினால் செய்த உதவி?

அதற்கு பரிமேல் அழகர் உரை எழுதுகிறார் எப்படி என்றால்

"ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண்"

அதாவது,  இனி முடியாது. எல்லா இடத்திலும் முயற்சி செய்து பார்த்தாகி விட்டது.  என்று ஒரு கடைசி கட்டத்திற்கு வந்த பின், அங்கு ஒருவன் நமக்குச் செய்த உதவி, இந்த உலகை விட மிகப் பெரியது என்கிறார்.

அப்படி என்ன பெரிய உதவி இருக்க முடியும்?

யோசித்துப் பார்ப்போம்.

நமக்கோ , நம் நெருங்கிய உறவுக்கோ ஒரு அவசர சிகிச்சைக்காக  இரண்டு பாட்டில்  இரத்தம் தேவைப் படுகிறது. அந்த இரத்தம் இருந்தால் தான் பிழைக்க முடியும்  என்ற நிலை.

சாதாரணமாக ஒரு பாட்டில் இரத்தம் ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கலாம்.  இந்த நேரத்தில், ஒருவர் நமக்கு அந்த இரத்தத்தை தந்து உயிர் காப்பார் என்றால், அந்த இரத்தத்துக்கு என்ன விலை போட முடியும்?  சிகிச்சை முடிந்து நல்லபடியாக திரும்பி வந்த பின், "அது என்ன பெரிய உதவி. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இரண்டு பாட்டில் இரத்தம் கிடைத்து விடும்" என்று சொல்வது முறையா?


பெண்ணுக்கு நிச்சயம் பண்ணி ஆகிவிட்டது.  திருமண நாளும் வந்து விட்டது.  கையில் கொஞ்சம் காசு தட்டுப் பாடு. அவசரமாக பணம் வேண்டும்.  தொகை பெரிது இல்லை என்றாலும் அந்த நேரத்தில் வேண்டும். இல்லை என்றால்  எல்லோர் முன்னாலும் அவமானப் பட நேரிடும்.

அந்த நேரத்தில் பணம் கொடுத்து நம் மானம் காப்பாற்றிய உதவியை அந்த பணத்தின் அளவு கொண்டு  நிர்ணயம் பண்ணக் கூடாது. அதன் மதிப்பே தனி.

கொடுத்தவர் பெரிய கோடீஸ்வரராக இருக்கலாம். அந்தப் பணம் அவருக்கு ஒரு பெரிய  விஷயமாக இல்லாமல் இருக்கலாம்.  ஆனால், அது நமக்கு பெரியது. எனவே, அந்த  உதவி, உலகை விடப் பெரியது என்கிறார்.

இப்படி ஆயிரம் உதாரணம் நம்மால் சிந்திக்க முடியும்.

உதவி என்பது பெறுபவனை பற்றி அல்ல, கொடுப்பவனைப் பற்றி அல்ல, கொடுத்த  உதவியின் தன்மை பற்றி அல்ல, எந்த நேரத்தில் கொடுக்கப்பட்டது  என்பது தான் முக்கியம்.

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தரப்பட்ட உதவி இந்த உலகை விட பெரியது என்கிறார்.

முந்தைய குறளில்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

கேட்காமல் செய்த உதவி இந்த உலகம் மற்றும் வானத்தை விடப் பெரியது என்றார்.

கேட்காமல் செய்த உதவி

காலத்தில் செய்த உதவி.

இந்தக் குறளில் பரிமேல் அழகர் ஒரு இலக்கணப்  பிழையை சுட்டிக் காட்டுகிறார்.

அது என்ன?

Friday, August 14, 2020

கம்ப இராமாயணம் - அருள் நின் இலையோ?

கம்ப இராமாயணம் - அருள் நின் இலையோ?


இராமாயணத்தில் எத்தனையோ பகுதிகள் இருக்கின்ற. இராமனின் வீரம், அவன் நடுவு நிலைமை, பெற்றோர் சொல்லுக்கு கீழ் படிதல், சகோதரத்துவம் என்று எவ்வளவோ இருக்கிறது.

இராமனுக்கும் சீதைக்கும் நடுவில் இருந்த அந்த அன்யோன்ய அன்பு, அவர்கள் நடத்திய இல்லறம், அவர்களின் காதல் காவிய ஓட்டத்தில் நாம் காணாமல் விட்டு விட வாய்ப்பு இருக்கிறது.

கதையின் ஓட்டத்தில், அதில் உள்ள சிக்கல்களில், இந்த அன்பு வெளிப்பாடு மறைந்து போகிறது.

நிஜ வாழ்விலும் அப்படித்தானே ?

குடும்ப வாழ்வில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கும். பணக் கஷ்டம், மனக் கஷ்டம், உறவுகளில் குழப்பம், சிக்கல், வேலை செய்யும் இடத்தில் தோன்றும் பிரச்சனைகள், உடல் நலக் குறைவு, பிள்ளைகள் படிப்பு, அவர்கள் வேலை என்று ஆயிரம் பிரச்சனைகள்.

இதற்கு இடையில் கணவன் மனைவி அன்பு செலுத்த, அதை வெளிப்படுத்த நேரம் கிடைக்காமல் போகலாம்.  நேரம் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தகுந்த மன நிலை இல்லாமல் போகலாம்.

அப்படிப் போகக் கூடாது.

எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், அன்பை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை எல்லாம்  பயன் படுத்த வேண்டும். எல்லா பிரச்சனைகளும் தீரட்டும் , அப்புறம் அன்பு செய்யலாம் என்றால், அலை எப்ப ஓய்வது தலை எப்ப முழுகுவது?

கம்ப இராமாயணத்தில் இராமனுக்கும் சீதைக்கும் இடையே இருந்த அந்த அன்பு  பரிமாற்றத்தை  எடுத்துக் காட்ட ஆசை. இனி வரும் சில நாட்களில் அது பற்றிய  பாடல்களை காண இருக்கிறோம்.

படிக்க படிக்க, அவர்கள் இருவர் மேலும் நமக்கு ஒரு பாசம், ஒரு அன்யோன்யம்  வந்து விடும். நம்ம வீடு பிள்ளைகள் மாதிரி, நம் மகன்,மருமகன், மகள், மருமகள் போல ஒரு பாசப் பிணிப்பு வரும்.

காதலைச் சொல்ல, பிரிவைத் தவிர வேறு நல்ல இடம் எது? ஒருவரை ஒருவர் பிரிந்து  இருக்கும் போது தான், அன்பின் ஆழம் புரியும்.  மற்றவரை காண வேண்டும் என்ற ஏக்கம்,  தவிப்பு, உருக்கம் எல்லாம் பிரிவில் தான் வரும்.



கிட்கிந்தை.  கார்காலம். (மழைக் காலம்). இராமன் தனித்து இருக்கிறான். மனைவி எங்கு இருக்கிறாள் என்று கூடத் தெரியாது. தவிக்கிறான் இராமன்.


மழை பொழிகிறது. கானகம். எங்கும் மரங்கள், செடி கொடிகள், பூக்கள், பறவைகள். ஈரம் படிந்து,எங்கும் உயிர் தழைக்கிறது. தாவரங்கள் தளிர் விட்டு நிமிர்கின்றன. பறவைகள் மழையில் நனைந்து சிறகுகளை அடித்து நீர் தெளிக்கின்றன. வனம் எங்கும் பூக்கள். மழை பெய்யும் மெல்லிய ஓசை.

இராமன் அந்த மழையைப் பார்த்து சொல்கிறான்

" என் சீதை எங்கு இருக்கிறாள் என்று கூடத் தெரியவில்லை. இந்த உயிரைச் சுமந்து கொண்டு திரிகிறேன். தண்ணீரே, உனக்கு அருள் இல்லையா ? கார் காலமே, என் உயிரை நீயும் கலக்குவது ஏன் "

என்று உருகுகிறான்.

பாடல்


வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ்
ஊரே அறியேன்; உயிரோடு உழல்வேன்;
நீரே உடையாய், அருள் நின் இலையோ?
காரே! எனது ஆவி கலக்குதியோ?

பொருள்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_14.html

வார் ஏர் முலையாளை  = கச்சணிந்த அழகிய மார்பகங்களை உடைய சீதையை

மறைக்குநர் = மறைத்து வைத்து இருப்பவர்கள்

வாழ் = வாழுகின்ற

ஊரே அறியேன்;  = ஊரை நான் அறியவில்லை

உயிரோடு உழல்வேன் =என் உயிரோடு இருந்து துன்பப் படுகிறேன்

நீரே உடையாய், = ஏய் கார்காலமே , நீ தண்ணீரை நிறைய வைத்து இருக்கிறாய்.

அருள் நின் இலையோ? = உன்னிடம் அருள் இல்லையா ?

காரே! = கார் காலமே

எனது ஆவி கலக்குதியோ? = என் ஆவியை கலங்க வைப்பாயோ?

நீர் என்றால் அருள், என்று ஒரு அர்த்தம் உண்டும். கடின மனம் உள்ளவர்களை, "உனக்கு நெஞ்சில ஈரமே இல்லையா" என்று சொல்வது இல்லையா.

ஒரு நிமிடம் இராமனின் இடத்தில் இருந்து யோசித்துப் பார்ப்போம் .

மனைவியைக் காணோம். காவல் நிலையத்தில சென்று புகார் கொடுக்கலாமா?  செய்தித் தாளில் விளம்பரம் போட முடியுமா?  தொலைக் காட்சியில்  அறிவிக்க முடியுமா?

அவள் எங்கு இருக்கிறாள் என்று கூடத் தெரியவில்லை. எப்படி இருக்கும்?

அவளுடைய அழகிய உருவம் அவன் கண் முன் தோன்றுகிறது. கண் கலங்குகிறது.

தாடகை என்ற அரக்கியை கொன்றவன், ஏழு மரா மரங்களை ஒரே அம்பில் துளைத்தவன்,  வாலியின் மார்பில் ஊடுருவ கணை விடுத்தவன், மனைவியைக் காணாமல்  தவிக்கிறான்.

அது தான்  அன்பு. அது தான் காதல்.

மேலும் சிந்திப்போம்.



Monday, August 10, 2020

திருக்குறள் - செய்யாமல் செய்த உதவி

திருக்குறள் - செய்யாமல் செய்த உதவி 


நாம் யாருக்கு உதவி செய்வோம்? நமக்கு யாராவது உதவி செய்து இருந்தால், அவர்களுக்கு நாம் உதவி செய்வோம்.

முன்ன பின்ன தெரியாத ஒருவர்க்கு நாம் போய் வலிந்து உதவி செய்வோமா?

உலகத்தில் எவ்வளவோ பேருக்கு எத்தனையோ உதவிகள் தேவைப்படும். நம்மால் எல்லாம் செய்ய முடியுமா?

முடியாதுதான். நடைமுறை சாத்தியமும் அல்ல.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நமக்கு ஒரு உதவி தேவைப் படுகிறது. யார் யாரிடமோ கேட்டுப் பார்த்து விட்டோம். யாரும் உதவி செய்யும் நிலையில்  இல்லை. என்ன செய்வது என்று தவித்துக் கொண்டு இருக்கிறோம். ரொம்பவும் தனித்து விடப் பட்டது போல உணர்வோம் இல்லையா? நமக்கு உதவி செய்ய யாருமே இல்லையா இந்த உலகில் என்று ஏங்குவோம் அல்லவா?

அந்த சமயத்தில் நமக்கு முன்னப் பின்ன தெரியாத ஒருவர் வந்து நமக்கு உதவி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது நமக்கு எப்படி இருக்கும்.

எல்லோரும் கை விட்ட நிலையில், யார் என்றே தெரியாத ஒருவர் நமக்கு பரிந்து, நமக்கு உதவி செய்கிறார் என்றால் நமக்கு எப்படி இருக்கும்?

இப்போது மீண்டும் விட்ட இடத்துக்கு வருவோம்.

நாம் யாருக்காவது அப்படி உதவி செய்து  இருக்கிறோமா? முன்ன பின்ன தெரியாத ஒருவருக்கு நாம் உதவி இருக்கிறோமா?

உலகில் ஒவ்வொருவரும், அறிமுகம் இல்லாத ஒருவற்கு உதவி செய்து கொண்டிருந்தால் அந்த  சமுதாயம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

எங்கோ ஒரு  பிள்ளை படித்து நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறது. மேலே படிக்க வசதி இல்லை. உடனே எல்லோரும் தங்களால் முடிந்த உதவியை செய்து அந்த பிள்ளையை மேலே படிக்க வைக்கிறார்கள்.

யாரோ ஒரு ஏழை வீட்டுப் பிள்ளை. ஒரு பெரிய நோயில் விழுந்து விடுகிறது. அதன் பெற்றோரிடம் வைத்தியம் செய்ய வசதி இல்லை. உடனே எல்லோரும் சேர்ந்து, கொஞ்சம் பொருள் உதவி செய்து அந்த பிள்ளையை பிழைக்க வைக்கிறார்கள்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஒரு சமுதாயம் இருந்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு மகிழ்ச்சியான, அமைதியான, சமுதாயமாக அது இருக்கும்?

பாடல்


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_10.html

செய்யாமல் = இதுவரை தனக்கு எந்த உதவியும் செய்யாமல் இருந்த ஒருவருக்கு

செய்த உதவிக்கு = தான் செய்த உதவிக்கு

வையகமும் = இந்த பூலோகமும்

வானகமும் = அந்த விண்ணுலகும்

ஆற்றல் அரிது. = கொடுத்தாலும் ஒப்பாக இருக்காது.

நமக்கு உதவி செய்தவருக்கு நாம் பதில் உதவி செய்வது என்பது ஏதோ வாங்கிய கடனை  திரும்பிச் செலுத்துவது போல.

மாறாக, நமக்கு ஒரு உதவியும் செய்யாத ஒருவர்க்கு நாம் செய்யும் உதவி இருக்கிறதே  அது மண்ணை விட, விண்ணை விட உயர்ந்தது என்கிறார் வள்ளுவர்.

செய்து பாருங்களேன்.

அதன் அருமை தெரிய வரும்.





Sunday, August 9, 2020

ஔவையார் தனிப்பாடல் - உண்டாயின் உண்டென் றறு

ஔவையார் தனிப்பாடல் - உண்டாயின் உண்டென் றறு


பாண்டிய மன்னன் ஒரு பொற்கிழியை ஒரு பெரிய கொடிக் கம்பத்தில் கட்டி தொங்க விட்டு, அவையில் உள்ள புலவர்களளைப் பார்த்துக் "உங்களில் யாராவது பாடல் பாடுங்கள். உங்கள் பாடலுக்கு அந்த கயிறு அறுந்து பொற் கிழி கீழே விழுந்தால் அதை நீங்கள் பரிசாக எடுத்துக் கொள்ளலாம்" என்று அறிவித்து விட்டான். 

புலவர்கள் யாரும் பாடவில்லை. அவர்கள் பாடி, கயிறு அறுந்து விழாவிட்டால் அவர்களுக்கு அது பெரிய அவமானமாகப் போய் விடும். பரிசு கிடைக்காதது ஒரு புறம். அவர்கள் பாடிய பாடல் சரி இல்லை என்று எல்லோர் முன்பும் அவமானம் வேறு வந்து சேரும்.

ஒளவையார் இதை கேள்விப் பட்டு, அவர் இரண்டு பாடல்களைப் பாடினார். அவர் பாடிய முதல் பாடல் கீழே உள்ள link இல் உள்ளது. 



அவர் பாடிய அடுத்த பாடல். 

இரண்டாவது பாடலில் அவர் சொல்கிறார் 

"யுத்தம் வந்து விட்டது, சண்டைக்கு வாருங்கள் என்றால் நூற்றில் ஒருவன் வருவான்.  நல்ல பாடல் எழுது என்றால் ஆயிரத்தில் ஒருவனுக்குத்தான் அது முடியும். படித்ததை எல்லோருக்கும் விளங்கும்படி தெளிவாக எடுத்துச் சொல் என்றால் அது பத்தாயிரத்தில் ஒருவரனுக்குத்தான் முடியும். சம்பாதித்த பொருளை பிறருக்கு தானமாகக் கொடு என்றால் அது கோடியில் ஒருவனுக்குத்தான் முடியும். அது உண்மை என்றால், ஏ பொற்கிழியே நீ அறுந்து விழுவாயாக" என்று பாடினார். 

பொற்கிழி  அறுந்து விழுந்தது. 

பாடல் 

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர் 
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த் 
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர் 
உண்டாயின் உண்டென் றறு. 


பொருள் 

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_9.html

ஆர்த்தசபை = சண்டைக்கு வா என்றால் சபையில் இருந்து 

நூற்றொருவர்  = நூற்றில் ஒருவன் வருவான் 

ஆயிரத்தொன் றாம்புலவர் = பாடல் பாடு என்றால் ஆயிரத்தில் ஒருவனுக்குத் தான் முடியும் 

வார்த்தை பதினா யிரத்தொருவர் = கற்றதை தெளிவாக மற்றவர்களுக்குச் சொல் என்றால், அது பத்தாயிரத்தில் ஒருவனுக்குத்தான் முடியும் 


பூத்தமலர்த்  = பூத்த மலர் 

தண்டா மரைத் = குளிர்ந்த தாமரை மலரில் இருக்கும் 

திருவே  = இலக்குமியே 

தாதா = கொடையாளி 

கோ டிக்கொருவர்  = கோடியில் ஒருவன் 


உண்டாயின் உண்டென் றறு.  = அது உண்மையானால், உண்மை என்று சொல்ல நீ அறுந்து விழுவாயாக 

பாடல் எழுதுவதை விட, படித்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல யாரும் முன் வர மாட்டார்கள்  என்கிறார் ஒளவையார். 

காரணம் 

ஒன்று, சொல்வது  எளிது அல்ல. படித்து புரிந்து கொள்ளலாம். அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் எளிதாக வருவது கிடையாது. 

இரண்டாவது, பொருளைக் கொடுப்பது போல கல்வியைக் கொடுக்கவும் மனம் வராது.   எனக்குத் தெரிந்ததை  மற்றவர்களுக்குச் சொல்லி தந்து விட்டால், என் மதிப்பு என்ன ஆவது.  அவனும் எனக்கு சமமாக ஆகி விடுவானே என்ற எண்ணம். 



கரவா கியகல்வி யுளார் கடைசென்
 றிரவா வகைமெய்ப் பொருள் ஈகுவையோ
 குரவா குமரா குலிசா யுதகுஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

கரவாகிய கல்வி உளார் என்பார் அருணகிரிநாதர்.  கரவு என்றால் மறைத்தல். 

இயல்வது கரவேல் என்பது ஆத்திச் சூடி. 

கல்வி கற்றவர்கள் பிறருக்குச்  சொல்ல மாட்டார்கள். மறைத்து வைத்துக் கொள்வார்கள். 






Friday, August 7, 2020

ஔவையார் தனிப்பாடல் - இறுமேல் இறு

ஔவையார் தனிப்பாடல் - இறுமேல் இறு


ஒரு நூலோ, பாடலோ, கதையோ நல்லது என்று எப்படி அறிந்து கொள்வது?

நல்லது அல்லாதனனவற்றைப் படித்து நம் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பது ஒரு புறம். தீயனவற்றைப் படிப்பதால் நம் மனம் குழம்பும். தீய வழியில் செல்ல முற்பட்டு விடுவோம்.

ஒரு நூல் நல்ல நூல் என்பதற்கு ஒரே சான்று அது காலத்தை வென்று நிற்க வேண்டும்.

நல்லன அல்லாதவற்றை காலம் கழித்து விடும்.

ஒரு நூல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நிற்கிறது என்றால் அதில் ஏதோ ஒரு உண்மை புதைந்து கிடக்கிறது என்றுதான் அர்த்தம்.

ஓலைச் சுவடியில் எழுதி வைத்த பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி வந்திருக்கிறது என்றால் அதன் மகத்துவம் புரிய வேண்டும்.

அந்தக் காலத்தில் ஒரு நூலைச் செய்தால் அதை எளிதில் அங்கீகரிக்க மாட்டார்கள்.

அனல் வாதம், புனல் வாதம் என்றெல்லாம் உண்டு.

நூல் எழுதப் பட்ட ஓலைச் சுவடிகளை தீயில் போடுவார்கள். அது தீயில் கருகாமல் இருந்தால், அது நல்ல நூல் என்று ஏற்றுக் கொள்ளவார்கள்.

அது போல, ஓடுகிற நதியில் அந்த நூலைப் போடுவார்கள். அது ஆற்று நீரில் அடித்துக் கொண்டு செல்லாமல்  எதிர் நீந்தி வந்தால், அந்த நூல் ஏற்றுக் கொள்ளப் படும்.

ஒரு முறை ஒரு (பாண்டிய) மன்னன் ஒரு பெரிய கொம்பில் ஒரு கயிரைக் கட்டி, அதில் ஒரு பொன்னாலான ஒரு பையை கட்டித் தொங்க விட்டான்.

அவன், தன்னை நாடி பரிசு பெற வரும் புலவர்களிடம் சொல்லுவானாம் "நீங்கள்  கவிதை பாடுங்கள். அந்த பொற்கிழி கயிறு அறுந்து விழுந்தால் நீங்கள் அதை  எடுத்துக் கொண்டு செல்லலாம்" என்று.

புலவர்களுக்கு பயம். அவர்கள் பாடி, பொற் கிழி கீழே அறுந்து விழாவிட்டால், அவர்கள் பாட்டு  சிறந்தது அல்ல என்று நகைப்புக்கு இடமாகி விடும் அல்லவா?  எனவே யாரும் பாடல் பாடவில்லை.

மன்னனுக்கு சந்தோஷம்.

ஒளவையார் வந்தார். என்ன அங்கே பொற்கிழி கட்டி தொங்குகிறது என்று கேட்டு அறிந்து கொண்டாள். ஓ  இதுவா சங்கதி என்று இரண்டு பாடல்கள் பாடினாள் . இரண்டு பொற்கிழிகள் கயிறு அறுந்து விழுந்தது என்று கதை.

அதில் முதல் பாடல்.

"ஒருவன் கேட்காமல் அவனுக்கு உதவி செய்வது தான் தாளாண்மை எனப் படுவது. கேட்ட பின் கொடுப்பது வலிமையை காட்டுவது. மீண்டும் மீண்டும் ஒருவனை அலைய விட்டு பின் கொடுப்பது அவன் நடந்ததற்கு தந்த கூலி. அப்படி பல முறை வந்து கேட்ட பின்னும் கொடுக்காமல் இருப்பவன் குலம் வாரிசு அற்றுப் போய் விடும் என்பது உண்மையானால்,ஏ பொற் கிழியே நீ அறுந்து விழுவாய் "

இது முதல் பாடல். அவர் பாடி முடித்தவுடன், அவர் சொன்னது உண்மைதான் எனபதால், பொற் கிழி அறுந்து விழுந்ததாம்.

பாடல்

தண்டாமல் ஈவது தாளாண்மை - தண்டி 
அடுத்தக்கால் ஈவது  வண்மை - அடுத்தடுத்துப் 
பின்சென்றால் ஈவது காற்கூலி - பின்சென்றும் 
பொய்த்தான் இவனென்று போமேல், 
அவன்குடி எச்சம் இறுமேல் இறு.

பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_7.html

தண்டாமல்  = பிச்சை கேட்காமல் (இன்றும் கூட மலையாளத்தில் தெண்டுதல் , தெண்டி என்ற சொற்கள் உண்டு. தெண்டி என்றால் பிச்சைக்காரன்).

ஈவது = கொடுப்பது

தாளாண்மை  = தயவு உள்ள குணம். கருணை.

தண்டி  = பிச்சை

அடுத்தக்கால் =  கேட்ட பின்

ஈவது = கொடுப்பது

வண்மை = வள்ளல் தன்மை

அடுத்தடுத்துப்  = மீண்டும் மீண்டும்

பின்சென்றால் = பின்னும் வந்து கேட்ட பின்

ஈவது =  கொடுப்பது

காற்கூலி = அவன் நடந்து வந்ததற்கு கொடுத்த கூலி

பின்சென்றும்  = அதன் பின்னும்

பொய்த்தான் = கொடுக்காமல் ஏமாற்றினால்

இவனென்று போமேல்,  = அவனை கொடுக்காமல் விட்டால்

அவன்குடி = அப்படிப்பட்டவன் குடும்பத்தில்

எச்சம் = வாரிசு

இறுமேல் = இற்றுப் போய்விடும் என்பது உண்மை ஆனால்

இறு = நீயும் அறுந்து போ (வாரிசு அறுந்து போவது போல)

கதை உண்மையோ பொய்யோ. ஆனால், அது சொல்லும் கருத்து உயர்வானது.

கேட்காமல் கொடுப்பது என்பது எவ்வளவு உயர்ந்த பண்பு.

இன்று பொது உடைமை பற்றி பேசுகிறோம். அன்றே, இதை எல்லாம் தாண்டி வாழ்க்கை முறையை வகுத்து  வைத்து இருக்கிறார்கள்.

விட்டு விட்டோம்.

பெறவும் இல்லை. கொடுக்கவும் இல்லை.

நடுவில் பல தலைமுறைகள் திசை தெரியாமல் தடுமாறி போய் இருக்கின்றன.

பல படையெடுப்புகள், ஆங்கிலேய ஆதிக்க, நம் பாடத்திட்ட முறைமைகளின் மாற்றம்  என்று வந்ததால் நம் அடிப்படை நமக்குத் தெரியாமல் போய் விட்டது.

அவற்றை நாம் புரிந்து கொள்வதுடன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் வேண்டும்.





Saturday, August 1, 2020

திருவருட்பா - கருணை ஈதோ ?

திருவருட்பா - கருணை ஈதோ ?


ஒன்று அழகாக, நன்றாக இருந்தால் கண் பட்டு விடும் என்று சொல்லுவார்கள்.

குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு வைப்பார்கள். பார்ப்பவர் கண்கள், அந்த பொட்டில் போய் நிற்கட்டும் என்று.

கடைகளில் பூசணிக் காய், பெரிய அரக்கன் வடிவம், படிகாரக் கல் என்றல்லாம் வைத்திருப்பார்கள். காரணம் பார்ப்பவர் கண்கள் அவற்றின் மேல் சென்று விடும். அந்தப் பார்வையின் தீய நோக்கம் பாதிக்கப் படாமல் இருக்கட்டும் என்று.

இது நமது ஆழமான நம்பிக்கை.

வள்ளலார் பாடுகிறார்.

"முருகப் பெருமானே , உன்னுடைய அழகான பாதங்களை நான் பார்த்தால், இந்தப் பாவியின் கண் பட்டுவிடும் என்று நினைத்தா உன் பாதங்களை எனக்கு கனவில் கூட காட்டாமல் இருக்கிறாய்? உன்னை எல்லோரும் கருணை உள்ளவன் என்று சொல்கிறார்கள். இதுவா கருணை?"

என்று உருகுகிறார்.


பாடல்

பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்
கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்
காட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
விண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான
விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே
தண்ஏறு பொழில்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

பொருள்

(click the link below to continue reading)


https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post.html

பண் ஏறும்  மொழி = இசையுடன் கூடிய பாடல்

 அடியர் = அடியவர்கள்

பரவி  = போற்றி

வாழ்த்தும் = வாழ்த்தும்

பாதமலர் அழகினை  = அழகான உன் பாத மலர்களை

இப் பாவி பார்க்கில் =இந்தப் பாவி பார்த்தால்

கண் ஏறு படும்என்றோ = கண் பட்டு விடும் என்றா

கனவி லேனும் = கனவில் கூட

காட்டென்றால் = காட்டமாட்டாயா என்றால்

காட்டுகிலாய்  = காட்ட மாட்டேன் என்கிறாய்

கருணை ஈதோ = இதுவா கருணை

விண் ஏறும் = விண்ணகத்தில் உள்ள

அரி முதலோர்க் = திருமால் போன்றவர்களுக்கு

கரிய = அரிய, கடினமான

ஞான விளக்கே  = ஞான விளக்கே

என் கண்ணே = என் கண் போன்றவனே

மெய் வீட்டின் வித்தே = மெய்மையின் மூலமே

தண் ஏறு பொழில் = குளிர்ச்சி மிகுந்த சோலைகள் சூழ்ந்த

தணிகை மணியே  = திருத்தணிகையில் வாழும் மணியே

ஜீவ சாட்சியாய்  = உயிருள்ள சாட்சியாய்

நிறைந்தருளும்  = நிறைந்து அருள் செய்யும்

சகச வாழ்வே =  இயல்பான வாழ்வே

எவ்வளவு இனிமையான பாடல் !